Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Sunday, November 6, 2011

நெற்றிக்கு ஏன் வெள்ளை அடிக்கிறீர் ?

பட்டை பட்டையாய் நெற்றியில் மற்றும் தலையில் திருநீறு. ஒரு நாத்திக இளைஞன் அவரைப் பார்த்துக் கேட்கிறான் “ பெரியவரே நெற்றிக்கு ஏன் வெள்ளை அடிக்கிறீர் ?”
.
என்ன பதில் சொல்லியிருப்பார் ?
அது கீழே உள்ள சுட்டி ஒன்றில் இருக்கிறது.
இன்னொரு வாரியார் சுவாமிகள் கிடைக்கப் போவதில்லை. இன்று, நவம்பர் 7 ஆம் தேதி அவருடைய நினைவு நாள். மறைவு நாள் ( 07-11-1993 )

அவருடைய சொற்பொழிவில் அருணகிரிநாதர் வரலாறை பள்ளியில் படிக்கும் போது கேட்டிருக்கிறேன். சிரிக்கச் சிரிக்க பேசினார். அவரது நகைச்சுவை உணர்வை தமிழ் மக்கள் யாவரும் அறிவர்.

அவருக்கென்று சில உயர்ந்த உள்ளங்கள் வலைப்பூக்களில் நல்ல பல தகவல்களை கொடுத்துள்ளார்கள். அவற்றைப் படித்து மகிழ இணைப்புகளைச் சுட்டுங்கள்.

1) வாரியார் சுவாமிகள் டாட் காம்

2) வாரியார் பதில்

3) வள்ளல் வாரியார்


மேலே உள்ள படம் என் சிரிப்பு சீரீஸுக்காக வரைந்தது. வர்ணப் பென்ஸில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

ஆன்மிகப் பெரியவர்களின் அருட் சிரிப்பே ஒரு மருந்தாகும்

Sunday, September 18, 2011

மொட்டுகளை மலர வைத்த பை !

இவருடைய சிரிப்பை கண்டதுமே இவர் நம்ம காண்டிடேட் என்று முடிவு செய்து பத்து நிமிடங்களில் கணிணியைப் பார்த்துக் கொண்டே வரைந்தேன் அதுவும் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு ; ))

இந்திய மொழிகளிலே எப்படி அம்புலிமாமா குழந்தைகள் மனதிலே இடம் பிடித்ததோ அதைப் போலவே அமர் சித்ர கதா என்று ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் தொடங்கி பல்வேறு இந்திய மொழிகளிலே வெளி வரும் சித்திரக் கதைகள் பெரும் சரித்திரத்தை படைத்துள்ளது என்றால் மிகையாகாது. இதிகாச, சரித்திர கதைகள் மட்டுமல்லாது பெரும் தியாகிகள் ஞானிகள் வாழ்க்கையையும் சித்திரக் கதையாக வெளியிட்டு வியாபார ரீதியாகவும் வெற்றி கண்டவர் இவர்.இவர் தான் திரு அனந்த் பை. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விஞ்ஞானியான இவர் அதை விட்டு விட்டு முழுவதுமாக குழந்தை இலக்கியத்திற்கு தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். அமர்சித்ரகதா மட்டுமல்லாது டிங்கிள்( Tinkle) என்ற சஞ்சிகை ஒன்றையும் தொடங்கி வெற்றி கண்டார். அதில் குழந்தைகள் நாடெங்கிலும் அனுப்பிய கதைகள் துணுக்குகள் அனுபவங்கள் எல்லாம் வெளியிட்டார். ஆயிரக்கணக்கான குழந்தைகள் அனுப்பும் கடிதங்கள் யாவற்றையும் படித்ததோடு பெரும்பாலானவற்றுக்கு கை எழுத்து வடிவில் எழுத்துருக் கொண்ட பிரிண்ட் செய்யப்பட்ட அஞ்சல் அட்டையில் பதிலும் அனுப்பி அவர்கள் உள்ளங்களில் மகிழ்ச்சி தந்தார்.

டிங்கிளை படித்து விட்டு என் மகன் ஷிகாரி ஷம்பு, சுப்பாண்டி போன்ற கதாபாத்திரங்களின் நகைக்க வைக்கும் சாகசத் துணுக்குகளை-எனக்கு கேட்கும் விருப்பம் இல்லாவிட்டாலும் வலிந்து-நீ கேளேன்.. நீ கேளேன் என்று என்னை பிடுங்கியது நினைவுக்கு வருகிறது. அந்த படைப்புகள் எந்த அளவுக்கு சிறுவர்களின் மனங்களில் இடம் பிடித்திருக்கிறது என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம்.

காமிக்ஸ் எனப்படும் சித்திரப்படக் கதை படைப்பதற்கு ஒரு திரைப்பட இயக்குனரின் மனோபாவம் வேண்டும். சில நேரங்களில் ஒரு கதாபாத்திரம் பேசும் போது மற்ற கதாபாத்திரங்களின் மன நிலையை காட்டுவதற்கு அவர்களின் முகபாவத்திற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டியிருக்கும். உரையாடலை ஒட்டி ஒவ்வொரு படமும் வெவ்வேறு கோணங்களிலிருந்து வரையப்பட வேண்டும். மிகவும் கடினமான வேலை இது.
இன்று பல கார்டூன் படத் தயாரிப்பாளர்கள் முதலில் எடுத்து பார்ப்பது அனந்த்-பை அவர்களின் அமர் சித்ர கதாவை-தான் என்று சொல்லுகிறார்கள்.

பல்லாயிரக்கணக்கான சிறிய உள்ளங்களிலே சிரிப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்றிய இந்த சிரித்த முகம் இன்று நம்மிடையே இல்லை. மறைவு 24-02-2011

நேற்று அவருடைய 82 ஆவது பிறந்த நாள். கூகிள் இந்தியா இவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவருடைய காமிக்ஸ் பாணியிலேயே அவர் உருவை தன் முகப்பு பக்கத்தில் இட்டிருந்தது.

ஸ்கேனர் இல்லாததால் அலைப்பேசி வழியாகவே சுட்டு பதிகிறேன்.

Sunday, August 28, 2011

பாரத் மாதா கீ ஜெய் !!

கள்ளம் கபடமில்லா சிறுவர்களை சேவை மனப்பான்மையோடும் தியாக புத்தியுடனும் வளர்த்தால் நற்சிந்தனையுடன் கூடிய குடிமக்கள் உருவாவர் என்ற எண்ணத்துடன் 1909-ல் துவங்கப்பட்டது சாரணர் இயக்கம். இன்று ஏனோ தானோவென நடந்து வருகிறது.

முதன்முறையாக சாரணச் சிறுவர்களை நான் கண்டது திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு பலவிதமான சேவைகள் செய்யும் போது தான். அப்போது நானும் அவர்களைப் போன்ற சிறுவன். ஆதலால் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கழுத்தில் மஞ்சள் வர்ணத்தில் ஸ்கார்ஃப் போட்டுக் கொண்டு காக்கி உடையில் அவர்கள் சுறுசுறுப்பாக கூட்டத்தை இயக்கிய விதம் மனதில் நின்று விட்டது.

நான் படித்த ஆறு பள்ளிக்கூடங்கள் எதிலும் சாரணர் திட்டம் இடம் பெறவில்லை. ஒரே வருடம் NCC-ல் பொறுப்பில்லா முறையில் நான்கு அல்லது ஐந்து வகுப்புகளே நடந்தன. அப்போதே டிபன் காப்பி கள்ளக் கணக்கு எழுதவதற்கு நடத்தப்படும் வகுப்புகள் என்ற பேச்சு பரவலாக அடிபட்டதுண்டு. இந்த சூழ்நிலையில் நல்ல குடிமக்கள் உருவாகுவதெங்கே ? :(காலண்டரில் கண்ட சாரணச் சிறுவனின் கள்ளமில்லா சிரிப்பிற்கு விழுந்து போன பல்லினால் உண்டாகிய இடுக்கு மேலும் அழகு கூட்டுவது போல் தோன்றியது.

உடனே என்னுடைய சிரிப்பு சீரீஸ்-க்கு சேர்த்து விடுவது என்று முடிவு கட்டி வரைந்து முடித்தேன். சாரணர்களைப் பற்றி சிறு குறிப்பு சேர்க்கலாம் என்று எண்ணி வலைப்பக்கங்களைப் படித்து முடிக்கும் தருவாயில் படம் தரும் திருப்தியை விட நாடு ஏன் இப்படி தர்மத்தின் வலுவின்றி குன்றிக் கிடக்கிறது என்ற நிராசையே மேலோங்கி நிற்கிறது.

உண்மையான சாரணர்களை உருவாக்கி இருந்தால் நம் நாடு இப்படி அதர்மத்தின் பால் சிக்கிக் கொண்டு தவிக்குமா ! இதோ அவர்களுக்கான கொள்கையும் விதிமுறைகளையும் பாருங்கள்.

சாரணர் உறுதி மொழி:
என் முழு மூச்சுடன் இறைவனுக்கும் என் தேசத்திற்கும் உரிய கடமைகளை தவறாது செய்யவும் அனைத்து மக்களுக்கு உதவி செய்யவும், எல்லா நேரங்களிலும் சாரணர் விதிகளை கடைபிடிக்கவும் சத்தியப் பிரமாணம் செய்கிறேன்.

சாரணர் விதிகள்:
1) சாரணன் நம்பிக்கைக்குரியவன்
2) சாரணன் உண்மையுள்ளவன்
3) சாரணன் யாவருக்கும் நண்பன்; பிற சாரணர்க்கு சகோதரன்
4) சாரணன் பணிவுடையவன்
5) சாரணன் பிற ஜீவராசிகளுக்குத் துணைவன், இயற்கையை நேசிப்பவன்
6) சாரணன் கட்டுப்பாடு மிக்கவன், பொது நலச் சொத்துகளைக் காக்க துணை செய்பவன்
7) சாரணன் அஞ்சாநெஞ்சன்
8) சாரணன் சிக்கனமானவன்
9) சாரணன் எண்ணத்தில்,சொல்லில் மற்றும் நடத்தையில் பரிசுத்தமானவன்


பல நல்ல விஷயங்கள் திட்டங்கள் இருந்தும் ஏன் செயற்படுத்துவதில் தவறி விடுகிறோம் ? டிபனுக்கு கள்ளக் கணக்கு எழுதுவதால் இருக்குமோ!

வேலியே பயிரை மேயுது.

பாரத் மாதா கீ ஜெய் !!

Thursday, March 31, 2011

அம்மாவின் சிரிப்பு

அம்ருதானந்தமயீ அம்மா அவர்களின் மலர்ந்த சிரிப்பில் மயங்கி என்னுடைய சிரிப்பு சீரீஸ்-க்காக போடலாம் என்று சுமார் நாலு வருஷங்களுங்கு முன் வரைந்த படம். அளவு 2x2 அடி. கலர் பென்சிலும் பேஸ்டலும் காம்பினேஷன்.

படம் ரொம்ப பெரிசா போயி ஸ்கேனருள்ளே அடங்க மாட்டேன்னுடுச்சு.


(Close up)

2மெகா பிக்ஸல் காமிரா ஆனதினால அவ்வளவு தெளிவா இல்லை. மன்னிக்கணும்.

எனக்கு அந்த சிரிப்பு ரொம்ப பிடிச்சு இருக்கிறதால இதை வெளியிட்டிரலாம்-ன்னு நினைச்சு மொபைல் காமிராவில சுட்டு இப்போ போட்டாச்சு. பெருமையெல்லாம் அம்மாவிற்கு. குறைகளெல்லாம் அடியேனை சேர்ந்தது.

(Full size )


Sunday, February 13, 2011

பேனாவிலிருந்து பேஸ்டல் வரை

அமைதியான ஏரிக்கரை. அங்கே கேட்பாரற்ற ஓர் படகு. அந்த தீவு மாதிரி புல் வளர்ந்திருப்பதைப் பார்த்தால் ஆழம் கூட அதிகம் இருக்காது என்று தோன்றுகிறது. உண்மையிலே விடுமுறையை அனுபவிக்கணும்னா அப்படி ஒரு இடத்துக்கு போகணும்.

விடுமுறையா ? மூச் ! இருக்கிற வேலையை முடிச்சுக் குடுத்துட்டு அப்புறம் கேளு-ன்னு சொல்லுகிற ஒரு அடிமைத்தன வேலை. சரி படமாக வரைஞ்சாவது திருப்தி பட்டுக்கலாம்-ன்னு போட்ட படம்.பேனாவில் ஆரம்பிச்சு அப்புறம் பேஸ்டல் கட்டியையும் தேச்சு ஒரு வழியா கிடைச்ச கொஞ்ச நேரத்தை ஏரிக்கரைக் கிட்ட போகாமலே அனுபவிச்சாச்சு.ஆரம்பிக்கும் போது பேஸ்டலை பயன்படுத்த நினைக்கவில்லை, அப்படி இருந்திருந்தா பென்ஸிலிலேயே ஆரம்பித்திருந்திருப்பேன். விதி வலியது. எப்படியெல்லாம் புத்தியை இழுத்துகிட்டு போகுது பாருங்க :))

[ஸ்கேனர் இல்லாமல் போனதால் மொபைல் கேமிராவில் சுட்டது]

Monday, January 24, 2011

பாரத ரத்னா- பீம்ஸேன் ஜோஷி

இசைத் துறையின் ஒரு பெரும் ரத்தினத்தை இன்று (24-01-2011) பாரதம் இழந்து விட்டது. மகான் பாடகர் பீம்சேன் ஜோஷி இன்று அமரரானார். இன்று தியாகராஜ ஆராதனை. சங்கீதத்தையே மூச்சாகக் கொண்டு 88 வருட வாழ்வில் 77 வருடங்களை அதிலேயே ஊறிப்போன ஒரு ஆத்மா தியாகராஜரைப் போலவே நாதோபாசனை செய்தது என்றால் மிகையில்லை.

1972 ல் பத்ம ஸ்ரீ விருது பெற்ற அவருக்கு 1985 ல் பத்மபூஷண், 1999 -ல் பத்ம விபூஷண் மற்றும் 2008-ல் பாரத் ரத்னா விருதுகளை மேலும் வழங்கி இந்திய அரசாங்கம் அவரை கௌரவித்தது.

கர்நாடக ராஜ்ஜியத்தின் தார்வாட் ஜில்லாவை சேர்ந்த ஜோஷி சங்கீதப் பித்து பிடித்து பதினோரு வயதிலேயே வீட்டை விட்டு குருவைத் தேடி குவாலியர், கல்கத்தா டில்லி என்று அலைந்தவர். மூன்று வருடங்களுக்குப் பின் ஜலந்தரில் அவர் இருப்பதை கண்டுபிடித்து அவரது தந்தையார் அவரை திரும்பவும் அழைத்து வந்து அவரது ஊருக்கு அருகிலேயே சங்கீதப் பயிற்சிக்கு ஸவாய் காந்தர்வ் என்னும் குருவிடம் சேர்த்து விட்டார். குருகுல முறையில் முறையாகப் பயிற்சி பெற்ற அவருக்கு விரைவிலேயே பெயரும் புகழும் தேடி வரலாயிற்று. எச்.எம்.வி நிறுவனத்திற்காக பாடப்பெற்ற ஹிந்துஸ்தானி இசைவழிப் பாடல்களும் கன்னட தாஸரபதங்களும் மக்களிடையே மிகவும் பிரபலமாயின.


[சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் வரையப்பட்ட பீம்ஸேன் ஜோஷி அவர்களின் பென்சில் வரைபடம்]

புரந்தரதாஸரை கர்நாடக இசைமுறைக்கு தந்தை என்று சொல்வார்கள். அதற்கு இலக்கணம் வகுத்தவரே அவர். ஆனால் அவரது பல புகழ் பெற்ற பாடல்களை ஹிந்துஸ்தானி முறையில் பாடி இசைப் பிரியர்களின் மனதை கொள்ளை கொண்டவர் திரு ஜோஷி.
சில ஹிந்தி மற்றும் கன்னட திரைப்படங்களுக்கும் பின்ணணி குரல் கொடுத்திருக்கிறார்.

பொதுவாக நமக்கு ஹிந்துஸ்தானி இசையை ரசிப்பதில் சற்று சிரமம் உண்டு என்பதால் யாவரும் நன்கு அறிந்த ’பாக்கியதலக்ஷ்மி பாரம்மா’ என்ற பாடலை எளிமையாக அவர் குரலில் திரையிசையாக இங்கே காணலாம். இதில் நடித்திருப்பவர்கள் திரைப் பிரபலங்கள் அனந்த் நாக், சங்கர்நாக் மற்றும் லக்ஷ்மி.