Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Sunday, August 17, 2014

கதைக்கும் சித்திரங்கள்

பொதுவாக சித்திரங்கள் வரையும் ஆவலுக்கு வித்திடுவது பெரிய பத்திரிக்கைகளில் பிரசுரமாகி இருக்கும் கதைச் சித்திரங்களே. அதாவது  இப்போது போல் வர்ணப் புத்தகங்கள் அறியப்படாத எங்கள் காலத்தைப் பற்றிச் சொல்கிறேன். கோபுலு, நடனம், வினு, மணியம், மாருதி, லதா, ஜெயராஜ், மாயா, அம்புலிமாமா சங்கர், வாபா  என்று படம் வரைவதற்கான கையரிப்பை உண்டாக்கியவர்கள் வெகு பேர்.
ஆனால் நான் கதைக்கான சித்திரங்களை வரையக்கூடும் என்று நினைத்துப் பார்த்ததில்லை. திரு சந்தானத்திற்கு திடீரென்று எங்கிருந்தோ அப்படி ஒரு நம்பிக்கை வந்து விட்டது என் மேல். இத்தனைக்கும்  இதை அவர் முன் வைக்கும் போது நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டது கூட இல்லை. இந்த வலைப் பூவைக் காண நேர்ந்ததில் அவருக்கு அப்படி ஒரு நம்பிக்கை.

அவர் மொழி பெயர்ப்பு செய்து கொண்டிருந்த ஸ்ரீபாத ஸ்ரீவல்லப சரிதத்திற்கு என்னை சித்திரங்கள் வரைந்து கொடுக்கும்படிக் கேட்டுக் கொண்டார். தத்தாத்ரேயரின் அவதாரமாகக் கருதப்படும் ஸ்ரீபாதவல்லபரின் சரிதத்தை வெளியிடுவது சம்பந்தமாக தொடர்பில் இருந்தோம். அந்த தொடர்பு ஏற்பட்ட விதம் அதைத் தொடர்ந்த பல சம்பவங்கள் எல்லாம் எழுதுவதற்கு தனி பதிவு இட வேண்டும். அதில் எங்கள் இருவருக்கும் தெளிவாகப் புரிந்த ஒரே விஷயம், நம்மை மீறிய ஒரு சக்தி நம்மை வழி நடத்திச் செல்கிறது என்பதே. 

முதலில் ஓரிரண்டு வரைந்து காட்டினேன். அவரோ படம் எப்படியிருந்தாலும் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதில் கண்ணாக இருந்தார். பின்னர் மேலும் ஓரிரண்டை வரைந்துப் பார்த்தேன். “ சார் ஹிந்தி புஸ்தகத்தில் இருபது படத்திற்கு மேலேயே இருக்கு. நம்ம புஸ்தகத்துக்கு பத்து பன்னிரெண்டாவது வேண்டாமா? “ என்று அன்புக் கட்டளை இட்ட பின்பு இதுவும் “அவன் செயலே” என்று எண்ணி அவர் கொடுத்த டார்கெட்டை பூர்த்தி செய்தேன்.
கதையில் ஒரு நிகழ்வைத் தேர்ந்தெடுத்து அதில் வரும் வர்ணனைகளுக்கு  ஏற்ப சில காட்சிகளைக்  கோர்த்து, கதையிலிருந்து பொருத்தமான சில வரிகளையும் உள்ளடக்கினேன். இதன் மூலம் படிக்க நேரமில்லாமல் வெறும் புரட்டி படம் பார்க்கிறவர்களுக்கும் கூட பின்னால் இதை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டலாம் என்ற எண்ணத்துடன் வடிவமைத்தேன். இது எவ்வளவு தூரம் பயனளித்தது என்பது இன்னமும் எனக்குத் தெரியாது.

[ பெரியதாக்கிப் பார்க்கவும்]

படங்கள் Ink & Pencil மாத்திரமே.   சில உங்களுடைய பார்வைக்கு.  ஒரு சித்திரம் மட்டும்  தனியாகக் கீழே.


ஏற்கனவே ஹிந்தி வடிவில் வெளிவந்திருக்கும் சித்திரங்களை விட தனிப்பட்டதாக இருக்க வேண்டும், கதை நடந்த காலத்தை (கிபி 1320) பிரதிபலிக்க வேண்டும் என்பனவெல்லாம் எழுதப்படாத விதிகள்.   
இப்படி ஒரு மகானுடைய சரிதத்திற்கு கற்பனையில் சித்திரம் வரைவது மிக நல்ல அனுபவம். ஒரு பாக்கியம் கூட.  அதை அளித்த திரு சந்தானம் அவர்களுக்கு எப்போதும் என் நன்றி

[’கதைக்கும்’ சித்திரங்கள் என்ற தலைப்பை இலங்கைத் தமிழின் சிலேடையாக பேசும் சித்திரங்கள் என்று வேண்டுமானாலும் கொள்ளலாம். :)) ]