இந்திய மொழிகளிலே எப்படி அம்புலிமாமா குழந்தைகள் மனதிலே இடம் பிடித்ததோ அதைப் போலவே அமர் சித்ர கதா என்று ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் தொடங்கி பல்வேறு இந்திய மொழிகளிலே வெளி வரும் சித்திரக் கதைகள் பெரும் சரித்திரத்தை படைத்துள்ளது என்றால் மிகையாகாது. இதிகாச, சரித்திர கதைகள் மட்டுமல்லாது பெரும் தியாகிகள் ஞானிகள் வாழ்க்கையையும் சித்திரக் கதையாக வெளியிட்டு வியாபார ரீதியாகவும் வெற்றி கண்டவர் இவர்.
இவர் தான் திரு அனந்த் பை. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விஞ்ஞானியான இவர் அதை விட்டு விட்டு முழுவதுமாக குழந்தை இலக்கியத்திற்கு தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். அமர்சித்ரகதா மட்டுமல்லாது டிங்கிள்( Tinkle) என்ற சஞ்சிகை ஒன்றையும் தொடங்கி வெற்றி கண்டார். அதில் குழந்தைகள் நாடெங்கிலும் அனுப்பிய கதைகள் துணுக்குகள் அனுபவங்கள் எல்லாம் வெளியிட்டார். ஆயிரக்கணக்கான குழந்தைகள் அனுப்பும் கடிதங்கள் யாவற்றையும் படித்ததோடு பெரும்பாலானவற்றுக்கு கை எழுத்து வடிவில் எழுத்துருக் கொண்ட பிரிண்ட் செய்யப்பட்ட அஞ்சல் அட்டையில் பதிலும் அனுப்பி அவர்கள் உள்ளங்களில் மகிழ்ச்சி தந்தார்.
டிங்கிளை படித்து விட்டு என் மகன் ஷிகாரி ஷம்பு, சுப்பாண்டி போன்ற கதாபாத்திரங்களின் நகைக்க வைக்கும் சாகசத் துணுக்குகளை-எனக்கு கேட்கும் விருப்பம் இல்லாவிட்டாலும் வலிந்து-நீ கேளேன்.. நீ கேளேன் என்று என்னை பிடுங்கியது நினைவுக்கு வருகிறது. அந்த படைப்புகள் எந்த அளவுக்கு சிறுவர்களின் மனங்களில் இடம் பிடித்திருக்கிறது என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம்.
காமிக்ஸ் எனப்படும் சித்திரப்படக் கதை படைப்பதற்கு ஒரு திரைப்பட இயக்குனரின் மனோபாவம் வேண்டும். சில நேரங்களில் ஒரு கதாபாத்திரம் பேசும் போது மற்ற கதாபாத்திரங்களின் மன நிலையை காட்டுவதற்கு அவர்களின் முகபாவத்திற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டியிருக்கும். உரையாடலை ஒட்டி ஒவ்வொரு படமும் வெவ்வேறு கோணங்களிலிருந்து வரையப்பட வேண்டும். மிகவும் கடினமான வேலை இது.
இன்று பல கார்டூன் படத் தயாரிப்பாளர்கள் முதலில் எடுத்து பார்ப்பது அனந்த்-பை அவர்களின் அமர் சித்ர கதாவை-தான் என்று சொல்லுகிறார்கள்.
பல்லாயிரக்கணக்கான சிறிய உள்ளங்களிலே சிரிப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்றிய இந்த சிரித்த முகம் இன்று நம்மிடையே இல்லை. மறைவு 24-02-2011
நேற்று அவருடைய 82 ஆவது பிறந்த நாள். கூகிள் இந்தியா இவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவருடைய காமிக்ஸ் பாணியிலேயே அவர் உருவை தன் முகப்பு பக்கத்தில் இட்டிருந்தது.
ஸ்கேனர் இல்லாததால் அலைப்பேசி வழியாகவே சுட்டு பதிகிறேன்.
No comments:
Post a Comment