Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Friday, October 24, 2014

க்ரேயான் குமரன்

தீபாவளி என்கிற பெயர் சொல்லி நாலு நாள் தொடர்ந்த விடுமுறை.  என்ன செய்யலாம்னு பார்த்த போது கண்ணிலே பட்டது சண்முகனுடைய வரைபடம்.  ஒரு கதைக்காக நான் வரைந்த ஒரு பென்சில் படத்தை சில மாதிரி பிரிண்ட் போட்டுப் பார்த்து பின் ஒதுக்கப்பட்ட ஒரு A4 தாளில் இருந்த முருகன் ’அருள்’ என் கவனத்தைக் கவர்ந்தது. அதற்கு வர்ணம் தீட்டினால் சண்முகன் எப்படி இருப்பான் என்று பார்க்கும் ஆவல் மேலிட்டதால் வர்ணப் பென்சில்களைத் தேடினேன். கிடைக்கவில்லை. க்ரேயான் வர்ணக் கட்டிகள் சில கிடைத்தன.  க்ரேயான் வர்ணத்தில் அதிகம் ஆர்வமில்லாதவன் நான். ஏனெனில் அதில் தவறு வந்தால் ’அழிப்பானால்’(eraser) சரி செய்ய இயலாது. ஆனாலும் வேறு வழியில்லாமல் பொழுது போக்குவதற்காக அவற்றைக் கொண்டே ஆரம்பித்தேன்.
இந்த நிகழ்ச்சி அகல்கோட் மஹராஜ் என அழைக்கப்படும் சுவாமி சமர்த்தரின் மகிமையை குறிக்க வந்ததாகும். ராமாசாஸ்திரி என்ற பக்தருக்கு ஒரு கார்த்திகை பௌர்ணமியன்று சாட்சாத் சண்முகனாகவே காட்சி தந்து அருள் பாலித்ததை குறிக்க வந்தது. ஒரு கரம் இடுப்பிலும் மற்றொரு தூக்கிய அபயத் திருக்கரமும்  சுவாமி சமர்த்தரின் புகழ் பெற்ற படங்களில் ஒன்று. அதை அந்த அடிப்படையிலேயே சண்முகனின்  பன்னிரு கரங்களில் இரண்டு கரங்களை வரைந்தேன்.  அந்த ஒற்றுமையைக் காட்ட பின்ணணியில் அவருடைய புகைப்படம் ஒன்றை வித விதமாக பொருத்திப் பார்க்க விழைந்து சில பிரிண்ட் எடுத்ததால் வந்த வ்ரைபடம் தான் இது. அவருடைய வயிறு மற்றும் மார்பு பகுதிகளில் அழுத்தமான நிழல் காரணமாக குமரனின் சில கைகளின் வரை பகுதி பாதிக்கப்பட்டதால் இந்த படத்தை தள்ளி வைத்தேன். இப்போது வர்ணம் பூசிப் பார்க்கப் பயன் பட்டது.

சுவாமி சமர்த்தரைப் பற்றிய சில குறிப்புகள்:
இவர் சிரடி பாபாவின் சம காலத்தவர். ஆங்கிலேய அரசாங்கம் இவரை அதிக அளவில் மரியாதையுடன் நடத்தியது. அதனால் கோடக் புகைப் படக்கருவி தயாரிப்பாளர்களால் முதன் முதலாகப் புகைப்படத்தில் தோன்றிய துறவி இவரே என்று கூறுவர். இதைப் பற்றி மிக்க சுவாரசியமான கதையைப் படிக்க இங்கே  சுட்டவும்.  திருவண்ணாமலை இரமணரைப் போல இவரும் கோவணதாரி. பக்தர்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து தரிசனம் செய்து போய் கொண்டிருந்தார்கள். இவர் செய்த லீலைகளுக்கு அளவே இல்லை.  தத்தாத்ரேயரின் அவதாரமாகக் கருதப்படும் இவர் மஹாராஷ்ட்ராவில் 1878-ல் அகல்கோட்  என்ற ஊரில் மஹாசமாதி அடைந்தார்.