Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Tuesday, December 9, 2008

வாழையும் பாக்கும் வழி வழிச் செல்வம்

சமீபத்தில் வாழைப்பட்டை நாரிலிருந்து துணி நெய்யும் யுக்தியை நமது கோவை தொழில்நுட்ப வல்லுனர்கள் வெற்றிகரமாக செய்து காட்டியிருப்பதாக ஒரு செய்தியை கண்டேன். இது எந்த அளவுக்கு நம் நாட்டின் துணிப் பிரச்சனையை -அப்படி ஏதேனும் இருந்தால் -தீர்க்குமோ தெரியாது. ஒரு வேளை சணலுக்கான மாற்றாகப் பயன்படுமா தெரியாது. அப்படியானால் விரைவில் கடையில் துணி வாங்கும் போது வாழைநார் பைகளில் போட்டுத் தந்தாலும் தருவார்கள்.

ஆனால் சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு பாக்கு மரபட்டையை வெற்றிகரமாக disposable plates களாக மாற்றும் CFTRI தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு இப்போது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிக் கொண்டிருக்கிறது. சுற்று சூழலுக்கு ஊறு விளைவிக்காத எளிய சிறு தொழில் முனைவர்களுக்கானது .

இதை முதன்முதல் -அறிமுகப்படுத்திய காலத்தில் -மைசூரில் கண்டபோது சென்னையில் இது ஒரு அரிய பொருள். மைசூரிலிருந்து ஒரு நான்கைந்து தட்டுகளை மாதிரிக்காக கொண்டு சென்றேன்.அப்புறம் சிறிது நாள் அப்படியே இங்குமங்குமாய் கிடந்து சீரழிந்து கொண்டிருந்தது. ”இதை தூக்கிப் போட்டுறேன்” அப்படீன்னு அம்மா பயமுறுத்தியதும், “அதுல வால்-ஹேங் செய்யலாம், தூக்கிப் போடாதே” ன்னு என்னையறியாமல் ஒரு பதில் சொல்லி வைத்தேன். அப்புறம் சொன்னதை நிஜமாக்க வேண்டியக் கட்டாயம். நம்ம கிட்ட இருக்கவே இருக்கு பெயிண்ட் பிரஷ்.
அதைத்தான் கீழே பார்க்கிறீர்கள். எல்லாம் ஆயில் பெயிண்ட்.இப்போ அதை தொங்க விடுவது எப்படி ? ரொம்ப சிம்பிள். ஒரு கனமான நூல் துண்டை U -வை திருப்பிப் போட்ட மாதிரி வைத்து பின் பக்கத்தில் இன்சுலேஷன் டேப் வைத்து ஒட்டி விட்டேன். இந்த தட்டு ரொம்ப லைட்-வெயிட். அதனாலே எங்க வேணுமானாலும் சுலபமா தொங்க விடலாம்.ஜப்பானியப் பெண்னோ சீனப்பெண்ணோ துணி தைப்பது போல ஒரு காலண்டர் படம். (படம் கொஞ்சம் அவுட் ஆஃப் ஃபோகஸ், மன்னிக்கவும்)


தென்னாட்டுடைய சிவனே போற்றி- எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

இந்த தட்டுகள் செய்யும் எந்திரத்தை இயக்க மனக்குன்றிய சிறுவர்களும் நல்ல முறையில் கற்று உற்பத்தி செய்யும் முறையை கற்றுக் கொள்ளலாம்.வாழை மரம், தென்னைமரம் பாக்குமரம் இப்படி எதை எடுத்தாலும் எத்தனை விதமா மனிதனுக்கு பயன்படுது! மனுஷனாகப் பிறந்து நாம் மாத்திரம் சமூகத்துக்கு ஏதாவது விதத்தில் பயன்படுகிறோமா ?

Wednesday, November 12, 2008

குருந்தமலைக் குமரன் காட்டிய காட்சி

முதன் முதலா வாட்டர் கலர் பயன்படுத்தும் போது பிரஷ் ஓட்டம் கோட்டு மேல் ஒழுங்காக வராமல் பிசிறு தட்டும். அந்த குறையை போக்குவதற்கு அந்த கோட்டை திரும்பவும் கறுப்பு பேனாவால் திருத்திவிடுவேன். அதுவும் படம் நன்றாகக் காய்ந்த பிறகு. இல்லாவிட்டால் அது ஈரத்தில் பக்கவாட்டில் படரும். அதனால அதுதான் ஃபினிஷிங் டச்.

பிற்காலத்துல Ink & water color டெக்னிக்-னு ஒண்ணு இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டேன். இது பெரும்பாலும் ஸ்பாட் பெயிண்டிங்கில பயன்படுமாம். முதல்ல தண்ணியிலே கரையாத மையால் படத்தை வரைந்து கொண்டு பிறகு அங்கங்கே வாட்டர்-கலரை வைத்து ஒரு வாஷ் கொடுத்து விடவேண்டும்.

இது நான் ஆரம்பத்துல சொன்னதுக்கு நேர் எதிர். இங்கே முதல்ல இங்க் அப்புறம்தான் வர்ணம். வாட்டர்ஃப்ரூஃப் இங்க் ஆனதுனால தண்ணீர் படும்போது அழியாது,பிசிறடிக்காது. இந்த முறையை பயன்படுத்தி Terry Banderas என்பவர் அமர்களமா போட்டுத் தள்ளறார்.

நாமும் அப்படி ஒரு படத்தை போட்டு பார்க்கலாம் அப்படின்னு வரஞ்சதுதான் இந்த குருந்தமலை(காரமடை அருகே)மேலே உள்ள பாலதண்டாயுத பாணி கோவிலுக்கு சற்று கீழ் மட்டத்தில் இருக்கும் இந்த கங்காதீஸ்வரன் கோயில்.தண்ணீர்ல கரையாத இங்க் இப்போது பல water-proof ஜெல் பேனாக்களாக வருகிறது. முதலில் அப்படிபட்ட பேனாவில் வரைந்து கொண்டு பின்னர் வர்ணம் கொடுத்தேன். இளம் பச்சை வர்ண ஹாண்ட்-மேட் பேப்பரில் வரையப்பட்டது. அதனால்தான் அந்த சுவற்றின் வெள்ளை மிக எடுப்பாக தெரிகிறது.

இது நேரில் அமர்ந்து வரைந்ததல்ல, புகைப்படத்தின் துணை கொண்டு வரையப்பட்டது. ஹாண்ட்-மேட் வரைதாளானதால் கலர் வாஷ் செய்யும் போது உடனே நீரை உறிஞ்சி வர்ணங்கள் சீராக பரவுவதை தடுத்தது. இந்த பிரச்சனையை wet-in-wet முறையில்-அதாவது முன்பே ஈரப்படுத்தி பின்னர் வர்ணத்தை கொடுப்பது-ஓரளவு சமாளித்தேன்.

ஆனால் ஹாண்ட்-மேட் தாளின் சுர சுரப்புத் தன்மை பாறைகளின் கரடு முரடான தன்மைக்கு உதவி செய்தது என்று நினைக்கிறேன்.

டெர்ரியின் வர்ணக்கலவைகளை பார்க்கும் போது அவர் மிக உயர்ந்த தரமுள்ள வர்ணங்களையும் வரைதாளையும் உபயோகிப்பவர் போல இருக்கு. ஹூம் இன்னும் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு.

அது என்னமோ தெரியவில்லை. e-snip-ல் வலையேற்றிய அன்றைக்கே இந்த படத்தை முதல் பக்கத்தில் (Home-page) போட்டு பெருமை படுத்தி விட்டார்கள். எல்லாம் முருகன் செயல் !

Tuesday, October 28, 2008

சித்திரம் செய்யும் வித்தைகள்

எதையும் வீணாக்க விரும்பாத குணம் மகாத்மா காந்திக்கு ரொம்பவே இருந்ததாம்.

நாம எல்லோரும் பென்ஸிலை சீவினா அதை கூராக்குவோம். ஆனால் காந்தியோ அப்படியே எழுத ஆரம்பிப்பாராம். “குடுங்க கூராக்கி தரேன்” அப்படின்னூ யாராவது சொன்னா “வேண்டாம் கூராக்கும் போது பென்ஸிலோட கரிப் பொடி வீணா போகும்” அப்படின்னு சொல்வாராம்.

வடநாட்டுல உடற்பயிற்சி கூடங்கள் எப்போதும் பிரபலம். ஆனால் காந்தி சொல்வாராம் ‘உடற்பயிற்சியில் மனித சக்தி வீணாகிறது. அதற்கு பதில் தோட்டம் போடுவது, துணி நெய்வது போல உடல் உழைப்புடன் கூடிய செயல்களில் ஈடுபட்டால் மனித சக்தி உற்பத்தியுடன் கூடிய பயனைத் தரும், ஆரோக்கியத்துக்கும் நல்லது’. என்ன நுணுக்கமா யோசனை பண்ணியிருக்காரு அந்த மனுஷன் !

கண்ணுக்கு தெரியற மாதிரி ரொம்ப பேரு வேஸ்ட் பண்றது சாப்பாட்டு விஷயத்துலதாங்க. அதை பத்தி சிந்திக்கற மாதிரி ஒரு பதிவு மஞ்சூரண்ணன் போட்டு இருக்காரு. நேரம் கெடக்கும் போது பாருங்க.

நம்ம விஷயத்திற்கு வருவோம். போன பதிவுல சிலேட்டுல செஞ்ச கைவேலையை பார்த்தோம். இன்னும் ஒண்ணு ரெண்டு இருக்கு. கைவசம் அதனோட படம் இல்லை. அப்புறம் பார்ப்போம்.

கீழே பார்க்கிற பிள்ளையார் படம் எங்கேயோ கெடச்ச ஆஸ்பெஸ்டாஸ் துண்டுல போட்டது. ஆயில் பெயிண்ட்டிங். எனக்கு நினைவு தெரிஞ்சு ரொம்ப வேகமா வரைஞ்சு முடிச்ச படம். ஆஸ்பெஸ்டாஸ் அப்படியே ஆயில் பெயிண்ட்டை உறிஞ்சிடுது. அதனால அதிக நேரம் காய காத்திருக்க வேண்டியதில்லை. ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டை மறைக்கிற மாதிரி பிண்ணணியில நல்லா அழுத்தமா கறுப்பு கலர் பூசி விட்டேன்.


இந்த படத்துல ரொம்ப பிடிச்ச விஷயம் தும்பிக்கைக்கு கீழே நிழலோட போக்கு. அப்படியே வளைஞ்சு பிள்ளையாரோட தொப்பையிலே கீழ் பார்த்த மாதிரி நிழலோட்டம் போகுதே அது தான்.படம் போடறதுக்கு இப்படிபட்ட பேப்பர், இல்லை, கான்வாஸ்தான் வேணும்னு இல்லை.

நாம நம்ம ஜாலிக்காகத்தான போடறோம். அதனால கையில கிடைச்ச எதில வேணும்னாலும் போட்டு வெளையாடலாம்.

இரண்டரை அடி நீளம் மூணு அங்குலம் அகலத்துல தூக்கிப் போட கெடந்த ஒரு தெர்மோக்கோல் துண்டுல இப்ப எலிகளெல்லாம் ஜாலியா சங்கிலியில ஏறி இறங்கி விளையாடற மாதிரி ஒரு படம் போட்டு வீட்டுல சும்மானுச்சுக்கும் மாட்டி வச்சிருக்கேன்.

நாம நெனச்சா எதுவுமே ஆர்ட்தாங்க ! எப்பவோ காணாம போயிரு்ந்திருக்க வேண்டிய ஆஸ்பெஸ்டாஸ்ஸும் தெர்மோக்கோலும் துண்டெல்லாம் இன்னும் பத்திரமா இருக்குன்னா அது ‘சித்திரம் செய்யும் வித்தை’ தானுங்களே !

மிச்ச சரக்கை அடுத்த பதிவுக்கு ரிசர்வ் பண்ணி வச்சுக்குவோம்.

எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.

Wednesday, October 8, 2008

கிருஷ்ணருக்கு பாலீஷ் போடணும்

பள்ளிகூடத்தில எங்க வாத்தியாரு ஒருத்தரு சொன்னது அப்படியே மனசுல நின்னிடிச்சு.

”உபயோகமில்லாதவன்னு ஒருத்தனும் கிடையாது உபயோகமில்லாத பொருள்-ன்னு ஒண்ணும் கிடையாது.வேணும்னா நமக்கு பயன்படுத்திக்கத் தெரியலேன்னு வைச்சுக்கலாம்”

அப்போதிலிருந்து யாராவது ஏதாவது வேஸ்ட்டானப் பொருளை வச்சு இதை செய்யறாங்க அதை செய்யறாங்கன்னு தெரிஞ்சா அதை ரொம்ப ஆர்வமா பார்த்து, இல்லே படிச்சு தெரிஞ்சுக்குவேன்.

ஒரு தடவை உடைஞ்சு போன சிலேட்டு துண்டு கொஞ்சம் மனுசனோட மூக்கு மாதிரி தோணிச்சு. எங்கம்மா ஏதோ பத்திரிக்கையில வந்த ஒரு கட்டுரையில ஒரு பெண்மணி முட்டை மேல பெயிண்டிங், பழைய துணியில கைப்பை, சிலேட்டுல சிற்பம் எல்லாம் செய்யறாங்கன்னு எப்பவோ படிச்சு சொன்னது ஞாபகம் வந்திருச்சு. அதனால இதை வச்சு எதையாவது செய்யலாமேன்னு நினைச்சேன். சொன்னதுக்கும் நான் செஞ்சதுக்கும் கிட்டத்தட்ட ஏழு எட்டு வருஷ இடைவெளி.

ஒரு சின்ன கத்தி எடுத்து அதை கொஞ்சம் கொஞ்சமா ராவி மூக்குக்கு கீழே வாய்,முகவாய், கழுத்து எல்லாம் வர்ற மாதிரி செஞ்சேன். அப்புறம் தலைப்பக்கத்தை ஜடாமுடிபோல கத்தியோட கூர் பகுதியால கீறிவிட்டேன். முடிமேல ஒரு சின்ன வளைசல் கொடுத்து ஒரு பிறைச் சந்திரன். திருநீறு, கங்கை,கண்,கழுத்தில பாம்பு எல்லாமும் சிம்பிள் கீறல்கள்தான்.

இது சிவன்.கடைசியா நைஸான உப்புத்தாள் வச்சு ஓரத்தையெல்லாம் மழுங்க தேய்ச்சு விட்டேன். அவருடைய தலையில ஒரு சின்ன துளையை போட்டப்புறம் வால்-ஹாங் சிவனாயிட்டார்.


பல ஊர் மாற்றல்கள், வீடு மாற்றல்களுக்கிடையில் அதை பத்திரமா பாதுகாத்தது எங்கம்மாதான். குழந்தைகள் மேல உள்ள பாசம் அப்படி செய்ய வச்சது போலிருக்கு. அதனாலத்தான் முப்பது வருஷத்துக்கு பிறகும் அதை எல்லோருக்கும் காமிக்கிற மாதிரி ஒரு சூழ்நிலை உருவாயிருக்கு. நல்லாயிருக்குன்னு நீங்க நெனச்சா அதோட முழு பெருமையும் அவங்களுக்குதான்.

சிவனார் கொடுத்த தைரியத்தில, சும்மா கிடந்த ஒரு முழு சிலேட்டையே எடுத்து குழலூதும் கிருஷ்ணரா செதுக்கிப் பார்த்தேன். மோசமில்லைன்னு எல்லோரும் சொன்னாங்க. இதுக்கு தேவைப்பட்டது ஒரு அகலமான திருப்புளி. அதுதாங்க ஸ்க்ரூடிரைவர். முளையைத் திருப்புவதற்காக பயன்படுத்தப்படும் உளி போன்ற அடிப்பக்கம் உடையது. அழகான செட்டிநாட்டு சொல்வழக்கு.

திருப்புளி வைத்து சுரண்டினால் சுற்றிலும் சிலேட் தூள் பறக்க, ”வெளியே போய் சுரண்டுடான்னு’ திட்டு வாங்கி வராண்டாவில் கிரிகெட் காமெண்ட்ரி கேட்டுக் கொண்டே சுரண்டி முடிச்சேன். இதிலே கவனிக்க வேண்டியது சுரண்டுற ஆழம் ஒரே அளவா இருக்கணும். ஒரு இடத்துல அதிகம் ஒரு இடத்துல கொறஞ்சு போகாம இருக்கணும்.

சிலேட் மேல் பகுதி ஒரே அளவு கறுப்பாக இல்லாமல் திட்டுத்திட்டா இருந்ததால கிருஷ்ணரையும் மாட்டையும் பார்த்தால் ல்யூகோடெர்மா வந்த மாதிரி இருந்தது.அப்போ தம்பி ஒரு ஐடியா குடுத்தான். ”ப்ளாக் கலர் ஷூபாலிஷ் தேச்சு விடு”. சரின்னு பாலிஷ் எடுத்து நல்லா அழுத்தி தேய்ச்சு ஒருவாட்டி ப்ரஷ்னால பளபளபாக்கி அந்த குறையையும் அட்ஜஸ்ட் பண்ணியாச்சு.
கடைசியா திரும்பவும் நடுவில வர்ற கோடுகளையெல்லாம் கீறி ஓரளவு ஆமா இது கிருஷ்ணர்தான்-ன்னு ஒத்துக்கற மாதிரி செஞ்சு வச்சேன்.

இப்போ படம் பிடிச்சப்பறம் பாத்தா இன்னொரு தடவை பாலிஷ் போடணுமோன்னு தோணுது. முப்பது வருஷம் ஆயிடுச்சே!!

Monday, September 29, 2008

ஜெஸ்ஸோ வாணி!.....நீ அருள்வாய்

அது என்ன ஜெஸ்ஸோ வாணி அப்படின்னு கேக்கறது காதில விழுகுது.

கடந்த பதினைஞ்சு நாளா ஒரே ஜெஸ்ஸோ ஜபம்தான் போங்க!

”கொஞ்சம் ஜெஸ்ஸோ கலக்கிக் குடுங்க”
“இன்னும் கூட ஜெஸ்ஸோ நல்லா போட்டிருக்கணும்”
“பிரஷ் காஞ்சுபோயிடுது. ஜெஸ்ஸோ வளைஞ்சு குடுக்க மாட்டேங்குது”

இதெல்லாம் தினம் நடக்கிற உரையாடல்.

ரொம்ப நாளா டிராயிங் ஸ்கூல்ல சேர்ந்து படிக்கலையேங்கற ஆதங்கம் இருந்தது.

சமீபத்தில ஒரு மைசூர் பெயிண்டிங் பயிற்சி வகுப்புகள் அரசாங்க ஆதரவுல பதினைந்து நாளைக்கு நடத்தினாங்க. “அப்பா நான் சேர்ந்துக்கறேம்பா, 750 ரூபா” அப்படின்னு மகள் கேட்டப்போ “அட! என்னை விட்டு நீ மாத்திரம் போயிடுவியா”ன்னு நானும் களத்துல இறங்கிட்டேன். அப்பாவும் பொண்ணும் ஒரே வகுப்பிலே! தினம் மூணு மணி நேரம்.

பிரஷ் அடிப்பலகை எல்லாம் நாம கொண்டு போகணும். பாக்கி சாமான் எல்லாம் அவங்களே குடுத்தாங்க. என்ன ஒண்ணு ! கையில ”திருவோடு”( செராமிக் டயில்) ஏந்திக்கிட்டு “கொஞ்சம் ப்ளூ குடுங்க, கொஞ்சமா எல்லோ குடுங்க” அப்படின்னு அடிக்கடி பிச்சையெடுக்க வேண்டியிருந்தது.

முதல்ல படம் ட்ரேஸ் பண்ணிக்கணும். அப்புறம் அவங்க ஒரு கோந்து கொடுப்பாங்க. அதை எங்கெல்லாம் தங்கம் வரணுமோ அங்கெல்லாம் பூசணும். அதுக்கு கம் அராபிக் அப்படின்னு சொல்றாங்க. அது ஒண்ணும் பெரிய விஷயமில்லை. ஆனா ட்ரேஸ் பண்ணி கோந்து பூசறதுக்கே முதல் நாள் சரியா போச்சு.


அரபிக்-கோந்து தடவப்பட்ட முதல் நிலை

இரண்டாம் கட்டம் ஜெஸ்ஸோ. அதாவது Gesso. இது தான் ரொம்ப கிரிடிகல் சமாச்சாரம். எவ்வளவு கிரிட்டிக்கல்ங்கறது சொல்லாம விட்டதுனால படத்தை சொதப்பினவங்க ரொம்ப பேரு. அதுல நானும் ஒருத்தன்.

ஜெஸ்ஸோ ஏன் முக்கியம்னா, படத்துல நகை, சிம்மாஸனம், மண்டபம் போல தங்கம் வர்ற இடத்தில எல்லாம் முப்பரிமாண உணர்ச்சியை கொடுக்கிறதுக்கு அதுதான் அடிப்படை. சுண்ணாம்புத்தூள்-கம் அராபிக் ரெண்டையும் குழைச்சு கெட்டியா இருக்கிற சமாச்சாரம் அது. காஞ்சு போச்சுனா கல்லு மாதிரி ஆயிடும் அசைக்க முடியாது.

பல தாய்மார்கள் மருதாணி போட்டு பழகின கைகளோ என்னவோ ரொம்ப அழகா கெட்டியா டிசைன் டிசைனா போட்டிருந்தாங்க. எனக்கு அந்த கெட்டி சரிபட்டு வராததால அதை குறைக்க தண்ணிய தொட்டுத் தொட்டு போட்டேனா, காஞ்ச பிறகு எடுப்பாத் தெரியலை. “பரவாயில்லைவிடுங்க. அதுக்கு லைனிங் குடுத்துறலாம் அப்படின்னு ஆறுதல் சொன்னாங்க சிலர்.


கிரீடம், சிம்மாஸனம் நடுவிலே வெள்ளையாக டிசைன் தெரியுதே அதுதான் ஜெஸ்ஸோ

நாலு நாள் இதிலேயே ஓடிப் போச்சு. அடுத்தது தான் க்ளைமாக்ஸ். தங்கம் பூசணும். கொஞ்சம் வசதிப் பட்டவங்க தங்க சருகு வாங்கி வந்து அதை அப்படியே ஜெஸ்ஸோ மேலே அழுத்தி பதிஞ்சாங்க. இதுக்கு தனியா கையிலேந்து 400 ரூபா செலவழிக்கணும்.

நானும் என்பெண்ணும் அவங்க குடுத்த தங்கப் பொடியிலே பிரஞ்ச் பாலிஷ் கலக்கி ஜெஸ்ஸோ மேலேயே அவங்க சொன்ன மாதிரி பூசி விட்டோம்.
”நீங்க சீக்கிரம் சீக்கிரமா தடவணும். பிரெஞ்ச் பாலிஷ் ஆவியாப் போயிடும். அப்புறம் தங்கம் கறுத்துப் போயிடும் ” அப்படின்னு அவங்க சொல்லப் போயி தடவின அவசரத்துல எங்கே பூசினோம், எதுக்கு பூசினோம் ஒண்ணும் புரியலை.

இதுல பலருக்கும் பல குழப்பங்கள். “அய்யய்யோ அது சாமியோட பின்னாடி இருக்கிற கையிங்க அங்கேயும் கோல்டு போட்டுட்டீங்களே” அப்படின்னு ஒரு கேஸ். இன்னும் சில பேர் அம்மனுக்கு தலைமுடி வர்ற இடத்துல தங்கமுடியாக்கி வச்சிருந்தாங்க.

ஒரு வழியா கிரிடிகல் ஸ்டேஞ் தாண்டி நமக்கு பழக்கமான வர்ணம் பூசுற வேலை
ஆரம்பிச்சுது. அவங்க சொன்ன எடத்துல சொன்ன வர்ணத்தை பூசினேன். நான் ரொம்ப கீழ்படிந்த மாணவன். எதிர் கேள்வியெல்லாம் கேட்க மாட்டேன். அப்புறம் ஒரு மூணு நாள் வகுப்புக்கு மட்டம். கீழ்படிதலுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை. அர்ஜெண்ட் வொர்க் வெளியூர் போகவேண்டியிருந்தது.


வகுப்புக்கு மட்டம் போடுவதற்கு முன்வரை

அப்புறம் சின்னச் சின்ன நுணுக்கமான காரியம். அவங்க அப்பப்போ யோசிச்சு புதுசு புதுசா ஐடியா குடுப்பாங்க. அதை செஞ்சுக்கிட்டே வரணும். இதிலே காத்துக்கிட்டு இருக்கிற நேரம்தான் ஜாஸ்தி. ஒருவழியா கரக்டா பதினைஞ்சு நாளில முடிச்சாச்சு.நிறைய பேர் பத்து நாளிலேயே முடிச்சுட்டு போயிட்டாங்க. நாற்பது பேர் இருந்த
வகுப்பில கடைசி வரைக்கும் இருந்த பத்து (மக்கு) மாணவர்களில் நானும் ஒருத்தன். கடைசியா ஒரு சர்டிபிகேட்டும் குடுத்தாங்க. அதுல என் மகளுக்கு ஏக சந்தோஷம்.


என் மகள் வரைந்த பிள்ளையார். அதில ஜெஸ்ஸோ நல்லா எடுப்பா தெரியுது பெரிசாக்க்கிப் பாருங்க.


அனைவருக்கும் ஜெஸ்ஸோ ஆனைமுகத்தான் அருளும் ஜெஸ்ஸோ சரஸ்வதியின் அருளும் இந்த நவராத்திரியில் பொங்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

Monday, August 25, 2008

சித்திரமும் (தும்பிக்) கைப் பழக்கம்

ஒரு யானை பிரஷ் எடுத்து தும்பிக்கையால் படம் பொடும் செய்தியை டெக்கான் ஹெரால்ட் பத்திரிக்கையில் பார்த்தபோது அதை பத்திரப்படுத்தி வைத்தேன். ஏதோ ஒரு வித்தியாசமான யானை போல இருக்கு என்று நினைத்தேன்.அப்புறம் அதை யூ ட்யூபில் தேடினால் அங்கே பெரிய யானைப் பள்ளிக்கூடமே இருக்கு.

அங்கேன்னு சொன்னது தாய்லாந்துலே.

பத்திரிக்கையில் வந்திருப்பது சின்ன துக்கடாதான். கீழே பாருங்க. ஒரு யானை எவ்வளவு அழகா படம் போடுது.இதைப் பார்த்தப்புறம் யூ.ட்யூப் க்கு போனா இன்னும் நெறைய யானைங்க படம் போடுறதை பார்க்கலாம்.

Wednesday, August 6, 2008

நான் வரைந்த பச்சைக்கிளி வாராதினி கச்சேரிக்கு

கௌரவம் படத்தில் 'பாலூட்டி வளர்த்த கிளி' அப்படீன்னு ஒரு பாட்டுல ‘நான் வளர்த்த பச்சைக்கிளி நாளை வரும் கச்சேரிக்கு' ன்னு ஒரு லைன் வருமே அதை நெனச்சு பாடினது தான் இந்த தலைப்பு. ஏனப்படிங்கிறத அப்புறம் சொல்றேன்.

முதல் முதலா பேஸ்டல் கலரில் கைவச்சபோது ரொம்ப திண்டாடி போயிட்டேன் அப்படின்னு சொன்னது சில பேருக்கு நினைவிருக்கலாம். கிட்டத்தட்ட ஒரு மாசம் கஷ்டப்பட்டு தேறினப் படம். அப்போ அந்த கிளி படம் கைவசம் இருக்கவில்லை. இதோ இப்ப போட்டாச்சு. லேமினஷனால் கொஞ்சம் மங்கிப் போனாலும் அதுக்கு ஒரு இடம் வீட்டில கொடுத்திருக்கோம்.கொஞ்சம் நாள் கழித்து ஒரு புகைப்பட சஞ்சிகையில் மூன்று கிளிகள் மரப் பொந்திலிருந்து எட்டிப் பார்க்கிற படம் உடனேயே நச்சுன்னு மனதிற்குள் புகுந்து கொண்டது. கிட்டத்தட்ட ஒன்றைரை மணி நேரத்திற்குள் அதை பேஸ்டல் வர்ணத்தில வரைந்து விட்டேன்.

ஒரு மாசம் எங்கே ஒன்றரை மணி எங்கே!

இந்த முறை வேண்டுமென்றே வர்ணத்தையெல்லாம் ஸ்மட்ஜ் எல்லாம் செய்யவில்லை. வர்ணம் எப்படி இயற்கையாக கை அழுத்தத்திற்கு ஏற்ப வரைதாளில் பற்றிக்கொண்டதோ அதன் போக்கில் விட்டு விட்டேன்.

படம் பத்தடி தூரத்திலிருந்து பார்த்தபோது எடுப்பாக இருந்தது. மீண்டும் லேமினஷன் செய்ய தைரியமில்லை. ”இத்தாலிய கோல்டு” சட்டம் வாங்கி அந்த கிளிகளை அடைத்து வைத்தேன். பலருக்கும் பிடித்த படமாயிருந்தது.

கூண்டில் அடைத்தாலும் வேளை வந்தால் பறந்து போயிடும்.

அமெரிக்காவிலிருந்து புதிதாக கல்யாணமான தம்பதிகள் வீட்டுக்கு வந்திருந்தனர். அவர்களுக்கு பரிசு என்ன தருவதென்று குழம்பிய போது இந்த படத்தை பாராட்டியதைக் கண்டு அதையே தூக்கி கொடுத்து விட்டாள் என் சகதர்மிணி. 'அப்பா! ஒண்ணை ஒளிச்சு கட்டியாச்சு'னு சந்தோஷமோ என்னமோ அவளுக்கு. :-)

அந்த கிளிகள் அமெரிக்காவிற்கு பறந்து போயாச்சு. என் வீட்டுக் 'கச்சேரி'யில் இனிமே கிடையாது. அதை நினைத்து சோகத்தோட நான் பாடிய வரிதான் நீங்க தலைப்பில் பார்த்தது.

Saturday, July 12, 2008

பென்ஸிலினுள் அடங்கிய நீர் வர்ணம்

இந்திய பொருளாதாரம் திறந்து விடப்பட்டதிலிருந்து பல அரிய தொழில் நுட்பங்கள் நம் நாட்டிற்குள் வர முடிந்தது. Faber Castle கம்பெனி அறிமுகப் படுத்தியிருந்த பென்சில் வர்ணமும் நீர் வர்ணமும் இணைந்த ஒரு தொழில் நுட்பத்தை கடையில் கண்டபோது அதைப் பரிசோதிக்கத் தூண்டியது. வாங்கி வந்தேன், ஆனால் அதை எப்போது எப்படி என்று முடிவு செய்திருக்கவில்லை.

ஃபிளிக்கரில் கண்ட ஒரு மலைக் குன்றின் படத்தை பார்த்த போது அதை கணிணியில் சேமித்து வைத்துத்திருந்தேன். பின்னர் அதைப் பார்த்து ஒரு 25cm x12 cm அட்டையில் வர்ணப் பென்ஸிலை வைத்து வரைந்து பார்த்தேன். என்னதான் விரலால் ஸ்மட்ஜ் செய்தாலும் அங்கங்கே பென்ஸில் கோடுகள் குச்சி குச்சியாய் கண்ணை உறுத்தியது. இதற்கு நான் பயன் படுத்திய அட்டையும் ஒரு காரணமாயிருக்கலாம்.அப்போது இதையே நீர் வர்ணத்திற்கு மாற்றிப் பார்த்தால் என்ன என்று தோன்றியது. ஒரு சின்ன ப்ரஷ்ஷில் நீரைத் தொட்டுக் கொண்டு வேண்டிய இடங்களிலெல்லாம் ஒரு வாஷ் கொடுத்தேன். இப்போது வர்ணங்களெல்லாம் கரைந்து ஒன்றோடொன்று கலந்து ஒரு புது தோற்றம் வந்தது. குறிப்பாக இந்த மாற்றத்தை குன்றின் பின் பக்கத்தில் இருக்கும் மலைப் பகுதியில் காணலாம்.

கணிணியில் சேமிக்கப்பட்டப் படத்தையும் ஸ்கேன் செய்த படத்தையும் அருகருகே காணும் வகையில் இணைத்து கீழே காட்டியுள்ளேன். நீர் வர்ணத்திற்கு மாற்றிய பிறகு வர்ணங்கள் மூலப் படத்தை ஓரளவு பிரதிபலிப்பதைக் காணலாம். கற்பாறைகளை வேண்டுமென்றே கான்ட்ராஸ்ட்டிற்காக கொஞ்சம் செவ்வர்ணமாக விட்டுவைத்தேன்.


இந்த வகை தொழில் நுட்பத்தில் இன்னொரு வசதி, நீர் காய்ந்த பிறகு மீண்டும் பென்ஸிலினால் இன்னொரு வர்ணத்தை தேய்த்து வர்ணத்தின் அடர்த்தியைக் கூட்டலாம். ஆனால் வர்ணம் அடர்த்தியான பிறகு அதை குறைக்க முடியாது. அதனால் படிப்படியாக அடர்த்தியை கூட்ட வேண்டும். பொதுவாக வெள்ளை வர்ணப்பென்ஸில் இந்த பெட்டிகளில் இல்லாமல் போவதே குறைக்க முடியாமல் போவதற்குக் காரணம்.

இந்த மலை மஹாராஷ்ட்ராவில் எங்கோ உள்ளது என்று படித்ததாக நினைவு. ஆகவே குன்றின் மேலிருப்பது குமரன் அல்ல. அனேகமாக அவன் அன்னை, சிவாஜி போற்றிய பவானி.

Friday, June 6, 2008

எல்லாமே வயத்துக்குத் தாண்டா -2

"உன்னாலே நான் கெட்டேன், என்னாலே நீ கெட்டே " என்று பள்ளியில் சண்டைப் போட்டுக் கொண்டவனுடன் -ஒருவன் காதை மற்றவன் பிடித்துக் கொண்டு- வாத்தியார் முன் தோப்புகரணம் போட்டதுண்டு. இந்த குரங்காட்டியும் குரங்கும் வாழ்க்கை பூராவுமே அப்படித்தானோ ?

அவனுக்கு குரங்கை விட்டால் வழியில்லை, குரங்குக்கும் அவனை விட்டால் கதியில்லை.

பாழும் வயிறு படுத்தும் பாடு யானையை சைக்கிள் ஓட்டச் சொல்கிறது. குரங்கை நாட்டியமாட வைக்கிறது. மனிதனை இவைகளை ஆட்டிப் படைக்கச் சொல்கிறது.

எல்லாமே வயத்துக்குத் தாண்டா! இல்லாத கொடுமைக்கு தாண்டா!!முதலில் புகைப் படத்தைப் பார்த்ததும் வெயிலில் வாடிய குரங்காட்டியின் முகம் மேற்கண்ட பல உணர்வுகளைத் தூண்டியது. அவனது முகத்தின் சுருக்கங்களும், பெரிய அழுக்கு மூட்டையும் (அதற்குள் என்னென்ன இருக்குமோ ?) தோள் மேல் குரங்கும் அதை கட்டிப்பிடிக்கும் ஒரு தடித்த சங்கிலி கோர்த்த வார் என வண்ணக் களஞ்சியமாக காட்சியளித்தது.

எங்கோ, போன இடத்தில் கண்ட அப்படத்தை ஒரு கையில் கிடைத்த ஒரு சிறிய அட்டையில் வண்ண பென்ஸில் கொண்டு வரைந்து விட்டேன். ஊர் திரும்பிய பின் அதையே சற்று பெரிதாக்கி செய்யலாமே என்று தோன்றியது.

உடனே அதை ஸ்கானரில் போட்டு கறுப்பு வெள்ளையில் A4 தாளில் ட்ராஃப்ட் பிரதி எடுத்திக்கொண்டு வர்ணங்களை பேஸ்டல் கட்டிகளை வைத்து செய்தேன். இப்போது பென்ஸிலில் வரைந்த மூலத்தை விட பளிச்சென்று காட்சியளித்தது. அட! இதுவும் ஒரு நல்ல டெக்னிக் போல இருக்கே என்று தோன்றியது.

படத்தில் சரியாக வருமோ வராதோ என்று நான் கவலைப் பட்ட விஷயம் எது தெரியுமா ?

குரங்காட்டியின் காதில் சொருகியுள்ள பீடித்துண்டு !

Friday, May 9, 2008

சித்திரப் பெண்ணே சித்திரப் பெண்ணே கோபம் கொள்ளாதே

காதலியையோ, (புது) மனைவியையோ “நீ கோபிச்சுக்கிட்டாலும் அழகாத்தான் இருக்கே' அப்படீன்னு பொய் சொல்லி சமாதானம் செய்ய பாக்கறது எல்லாருக்கும் பழகிபோன ஒண்ணு. ஆனா குழந்தைங்க கோபிச்சுக்கிட்டாலும் அழகாத்தான் இருக்கும். அதுக்கு காரணம் அவங்க கள்ளமறியா மனசு.

1896-ல மேரி கெஸாட்டி ங்கறவங்க பேஸ்டல் வர்ணத்துல வரைஞ்ச ஒரு படத்த பார்க்கும் போதெல்லாம் எனக்கு சின்ன வயதில் சொல்லிக் கேட்ட பாட்டொண்ணு ஞாபகம் வருது.

சித்திரப் பெண்ணே சித்திரப் பெண்ணே
கோபம் கொள்ளாதே
அம்மா வர நேரமானா சண்டை போடாதே !

அது சினிமா பாட்டா, இல்ல சும்மா உள -உளாகாட்டி பாட்டான்னு தெரியாது. ஆனா அந்த குட்டி பொண்ணுக்கு அது பொருத்தமா இருக்கும்ன்னு தோணுச்சு.

அம்மா அவளை விட்டு விட்டு வெளியே எங்கேயோ போயிட்டதால துக்கமும் கோபமும் கொள்ளும் சின்ன பெண்ணை அவளுடைய தாதி சமாதானபடுத்த முயலுகிறாள். அதை நானும் வரைஞ்சு பார்க்கணும் அப்படீன்னு நெனச்சுக்குவேன். எல்லாத்துக்கும் ஒரு டைம் வரணும் இல்லையா !

சமீபத்துல வீட்டுல அலமாரி பண்ணி முடிச்சப்புறம் சில ப்ளைவுட் துண்டு மிச்சம் கெடந்தது. அதை ஒரளவு சரியான அளவுக்கு அறுத்து கொடுக்கச் சொல்லி பத்திரம் பண்ணி வச்சுக்கிட்டேன். அப்போ அந்தம்மா மேரி வரஞ்ச படம் நெனப்புக்கு வந்துச்சு. ப்ளைவுட் மேல பேஸ்டல் எடுபடாதுன்னு தோணிச்சு. அதனால அந்த படத்தை ஆயில் வர்ணத்துலேயே முயற்சி பண்ணினேன். இன்னும் கூட பெயிண்ட் கொஞ்சம் காயணும், ஆன அதுக்குள்ள உங்க எல்லார்கிட்டேயும் காட்டிடணும்ங்கற அவசரம்.


பட அளவு 35 cm X 25 cm

அந்த படத்துல அந்த சின்ன பொண்ணோட முகத்துல இருக்கிற கோவம் கலந்த துக்கம் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது. கூடவே அதை முத்தம் கொடுத்து சமாதானப்படுத்தும் போது குழந்தையோட கன்னம் லேசாக நசுங்கி கண் கொஞ்சம் இடுங்கி போவது வரைதலில் முக்கியமான சேலஞ்ச். முடிவு உங்க கையில.

Wednesday, April 30, 2008

கபிலா, கொக்கா !

சென்ற பதிவில் பேஸ்டல் வர்ணங்கள் பற்றி சிறிது சொல்லியிருந்தேன். மிக அற்புதமான உபகரணம் ஆயினும் எனக்கிருந்த சின்ன பிரச்சனை இடையிடையே படத்தை சரி செய்துகொள்வதில் ஏற்பட்ட சிரமங்கள்தான்

அதாவது அழிச்சு அழிச்சு திரும்ப வரைஞ்சு சரி செய்யணும். ஆயில் வர்ணம் ஆனால் நன்றாக காய விட்டு திருத்த வேண்டிய பகுதி மேல் சுலபமாக மீண்டும் வேண்டிய வர்ணத்தை அப்பி
சரி செய்து கொள்ளலாம்.பேஸ்டலில் என்னதான் அழித்துவிட்டு பின்னர் அதன் மேல் பூசினாலும் பழைய வர்ணத்தின் தாக்கம் சற்று தெரியத்தான் செய்தது. அது சில சமயம் படத்தின் அழகை கெடுத்துவிடக் கூடும் !

இதை எப்படி தீர்ப்பது என்று யோசித்தபோதுதான் “கண்டு பிடித்து விட்டனர் விஞ்ஞானிகள்” என்ற விக்ஸ் விளம்பரம் போல் உதித்தது ஒரு ஐடியா ! அந்த முறையில் வரைந்தது தான் கீழே உள்ள படம். பலரும் கபில்தேவ் என்று அடையாளம் கண்டு விட்டார்கள். உங்களுக்கும் அதில் கருத்து வேறுபாடு இருக்காது என்று நினைக்கிறேன்.
இங்கே நான் பயன்படுத்திய ஐடியா,முதலில் படம் முழுவதையும் பேஸ்டல் வரைதாளில் கலர் பென்ஸில்களை கொண்டு வரைந்து விடுவது. கலர் பென்ஸில்களின் வரைவை சுலபமாக அழித்து திருத்த முடியும். கிட்டத்தட்ட 80 சதம் படம் முற்றுப் பெற்றுவிடும். உங்களுக்கு முழு திருப்தி வந்த பின்னர் பேஸ்டல் வர்ணங்களைக் கொண்டு அதன் மேலேயே தேவைகேற்றபடி அழுத்தம் கொடுத்து மீண்டும் வரையவும்.

இப்போது மங்கலான கலர் பென்ஸிலின் வர்ணங்களை விட பேஸ்டல் வர்ணங்கள் பளிச் என்று தெரிய ஆரம்பிக்கும். தேவையானால் சில பகுதிகளை, ஷேடிங்-கை அனுசரித்து,பென்ஸில் கலர்களிலே விட்டு விடலாம். முடித்த பின்னர் கிட்டத்தட்ட ஆயில் வர்ணங்களைப் போலவே எடுப்பாக இருக்கும்.

கூடுதல் வசதி என்னவென்றால் நுணுக்கமான கண் போன்ற பகுதிகளை வரையும் போது இந்த யுக்தி நன்றாக பயன்பட்டது.

இப்படி வெவ்வேறு இனத்தை சேர்ந்த வர்ணங்களை கொண்டு வரைவதை மிக்ஸ்ட்-மீடியா என்பார்கள். இவைகளை சுத்த பென்ஸில்காரர்களும் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள், பேஸ்டல்காரர்களும் தள்ளி வைப்பார்கள். சுத்த கர்னாடக ச்ங்கீதமும் இல்லை, ஹிந்துஸ்தானியும் இல்லை. சினிமா பாட்டு போல ரெண்டும் கெட்டான்.

படத்தைப் பார்த்த நண்பர் கொடுத்த ஒரு கமெண்ட்: ”கபிலுக்குத்தான் கழுத்தே கிடையாதே, நீ என்ன இவ்வளவு நீளமா வரைஞ்சிருக்கே”

நான் சொன்னேன் “கபிலா கொக்கா !”

Thursday, April 24, 2008

இந்த புலியும் நீர் குடிக்குமா ?

Pastels எனப்படும் வர்ணக் கட்டிகள் உபயோகிப்பதற்கு சுலபமானவை.வர்ணப் பென்சில்கள் போலல்லாது இவற்றில் வர்ண அடர்த்தி அதிகம். கிட்டத்தட்ட ஆயில் வர்ணங்களின் அடர்த்தி கிடைக்கும். பேஸ்டலுக்கு தூரிகைகளின் அவசியம் இல்லை. இதனால் பல இடங்களுக்கும் எளிதாக எடுத்துச் செல்ல முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக இதனை போற்றுபவர்கள் கூறும் காரணம் எத்தனை வருடங்கள் ஆனாலும் வர்ணங்கள் மங்காமல் புதுபொலிவுடன் இருக்கும் என்பதுதான்.

இப்படி பல விஷயங்களைப் பற்றி படித்தபின்னர், சரி இதையும் தான் பார்த்து விடுவோமே என்று இருபத்தி நான்கு வர்ணங்கள் உள்ள ஒரு பெட்டியை வாங்கிவந்தேன்.பார்ப்பதற்கு குழந்தைகளுக்கு தரும் plastic crayon போலவே இருந்தது. முதல் முயற்சி ஒரு பஞ்சவர்ணக் கிளி. அதை ஆரம்பித்து விட்டு முழி முழி யென்று முழித்தேன். ஏனெனில் அதில் வர்ணக்கலவைகளை பெறுவதற்கு ஒன்றின் மேல் ஒன்றாக செய்து கொண்டு போக வேண்டுமாம். அதை ஒரு சாதாரண வரைதாளில் வரைய ஆரம்பித்து விழி பிதுங்கிவிட்டது.வர்ணங்கள் பூசுவதில் சற்று முன் பின் ஆகிவிட்டால் சரி செய்வது மிகக் கடினமாக பட்டது. அளிப்பான் கொண்டு அளித்து விட முயன்றால் தாளுடன் பிடிமானம் அதிகமாகி மேலும் உறுதியாக தாளில் பரவிக் கொண்டது.

பேஸ்டல்களுக்கென்றே தனியாக ஒரு வரைதாள் உண்டு. அது சற்று சுர சுரப்பாக இருக்கும். இதை tooth அல்லது grain என்று கூறுவார்கள். அப்படி இருந்தால்தான் வர்ணத்திற்கு பிடிமானம் இருக்கும்.உதிர்ந்து விழாமல் இருக்குமாம். நான் எப்போதும் படுக்கை வாட்டில் வைத்து வரைவதால் உதிர்ந்து விழும் என்ற கவலை வரவில்லை.:))

எப்படியோ கிளியை (இப்போ கணிணி பிரதி இல்லை. கிடைத்ததும் வலையேற்றுகிறேன் ) ஒரு வழியாக முடித்து பேஸ்டல் வரைதாளை வாங்கி வந்தேன். அதில் அடுத்ததாக ஒரு வரிப்புலியை துவக்கினேன்.இதில் மூன்று வர்ணங்களே பிரதானமாகப் பயன் படுத்தப்பட்டுள்ளன. ஆரஞ்சு,ப்ரௌன் மற்றும் கறுப்பு. இதில் முக்கியமாக வரைய விரும்பியது புலியினுடைய வரிகள், நீரில் காணும் பிரதிபலிப்பு. 2004-ல் வரைந்தது. லேமினேஷன் செய்து கொஞ்சம் மங்கிப் போன படத்தில் இதுவும் ஒண்ணு.

படத்தை முடித்த பிறகு பார்த்த என் பெண் சொன்னது “இதுக்கு தண்ணி குடிக்கிறதுல இண்ட்ரெஸ்ட் இல்ல போலிருக்கே. குடிக்கிற மாதிரி பாசாங்கு பண்ணுது”

உங்களுக்கு என்ன தோணுது?

Tuesday, April 8, 2008

கண்ணார கண்டேன் என் கண்ணனை

காணாமல் போயிருந்த கிருஷ்ணன் படம் கிடச்சிருச்சு. போன பதிவுல 'கிடைத்தால் வலையேற்றுவேன்' என்று சொன்னேன் இல்லையா அந்த கிருஷ்ணரத்தாங்க சொல்றேன். மூக்கு மேல விரல் வைக்கிற மாதிரியெல்லாம் இல்லே. ஒரு ஸ்கூல் குழந்தை போட்ட படம் மாதிரிதான் இருக்குன்னாலும் அதுக்கு பின்னாடி இருக்கிற செண்டிமெண்ட் பாருங்க அதுதான் அடிச்சுக்குது. என்னோட முதல் ஆயில் பெயிண்டிங் ஆச்சே!

ராஜீவ் காந்தி நினைவகத்தில அவரு நர்சரில போட்ட ட்ராயிங்கெல்லாம் எல்லாரும் பார்க்கிறதுக்காக வைச்சிருக்காங்கன்னா காரணம் செண்டிமெண்ட்தாங்க. அதனால நம்ம வீட்டு குழந்தைங்க போட்ட படத்தையெல்லாம் தூக்கி போட்டுடாதீங்க. எந்த புத்துல எந்த பாம்பு
இருக்குமோ யாரு கண்டா! இன்னொரு கலாமோ ஆனந்தோ அவங்களுக்குள்ள ஒளிஞ்சிருக்கலாம். அவங்களே தீர்மானம் பண்ணி தூக்கி போடற வரைக்கும் பாதுகாப்பா வச்சிருந்து குடுத்துடுங்க.நம்ம கடமை முடிஞ்சுது.

எப்படி கெடச்சதுன்னு சொல்லலையே. ஒரு மாசமா ஊரு மாத்திப்போற காரணத்துல எல்லாத்தையும் இழுத்துப்போட்டு பெரட்டி,மாத்தி பாக்கிங் பண்ணும் போது “கண்ணாரக் கண்டே உடுப்பி கிருஷ்ணனா ” KV. நாரயணசாமியெ பாட்டு பாடச் சொல்ற ஒரு சந்தோஷம்.

ஆயில் பேப்பர் ரொம்ப பழசா போயி இங்கேயும் அங்கேயுமா டேமேஜ். ஓரங்களெல்லாம் நைந்து பொடியாகி விழுகிற ஒரு ரிஸ்க். ஜாக்கிரதையா ஸெல்லோ டேப் ஒட்டி ஸ்கேன் பண்ணி பத்திரப் படுத்தினப்புறம் தான் திரும்பவும் பாக்கிங் வேலைய பாக்க ஆரம்பிச்சேன்.

இப்போ மைசூர் வாசி. எவ்வளவு நாளைக்குன்னு தெரியாது. இன்னும் ப்ராட் பேண்ட் வரவில்லை. கை ஒடிஞ்ச மாதிரிதான் இருக்கு.

பதிவுகள் எதையும் படிக்க முடிவதில்லை. 38.6 kbps வேகத்துல என்னன்னு பிரிக்கிறது படிக்கிறது. ஒரு பதிவு திறப்பதற்கு 15 நிமிஷமாகுது :(

மைசூர் வந்த கையோட இன்னொரு ஸர்ப்ரைஸ். நமது உறவினர் வீடுகளுக்கெல்லாம் ஒரு மரியாதை நிமித்தம் ஹலோ சொல்ல போயிருந்தோம். அப்ப ஒரு வீட்டுலே நான் எந்த காலத்திலோ அவங்களுக்கு வரைஞ்சு குடுத்திருந்த ஒரு சிறுத்தை படத்தை எடுத்து காண்பித்தார்கள். அட! இப்படி ஒண்ணு வரஞ்சிருந்தேனா ? எப்போ ? அப்படீன்னு முடியை பிச்சுக்கிற மாதிரி ஆயிடுச்சு. சுமார் இருபது வருஷத்துக்கு முந்தி அவங்க வீட்டுல ஒரு அரைநாள் தங்கும்படி ஆச்சு. அப்போ வரஞ்சுதாம். படம் கிருஷ்ணர் அளவுக்கு நைந்து
போகாமல் ஓரளவு நல்ல கண்டிஷன்-ல இருந்ததற்கு அவங்களுக்கு நன்றி சொன்னேன்.


ஆஹா நம்ம வலைப்பூவுக்கு இன்னொரு படம் கிடைச்சதுங்கற சந்தோஷத்துல அவங்க கிட்ட கேட்டு ஸ்கேன் பண்ணி வச்சு கிட்டேன்.

இதுவும் ஆயில் பெயிண்டிங்தான். ஆயில் பேப்பர்-ல போட்டது 30 cm x 20 cm அளவு.

Tuesday, February 19, 2008

ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு .......

உலகின் மிகப் பிரசித்தி பெற்ற ஒவியங்கள் யாவுமே ஆயில் பெயிண்டிங் எனப்படும் 'எண்ணெயில் கரையும்' வர்ணங்கள்தான். இந்தியாவில் இராஜா ரவி வர்மா இதனை புகுத்தியதன் மூலமாகத்தான் நமது தெய்வங்களுக்கே ஒரு பொலிவும் புது மவுசும் வந்தது.

சித்தன்ன வாசல் குகை ஓவியங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டதுண்டு. ஆயிரம் ஆண்டுகளானாலும் வர்ணங்கள் மங்காமல் இருக்கும் முறையை அவர்கள் இயற்கையில் கிடைக்கும் பொருட்களை வைத்தே சாந்து தயாரித்து உபயோகித்துள்ளனர் என்பதை எண்ணும் போது பெருமையாக இருக்கிறது. ஆனால் அந்த தொழில்நுட்பம் என்ன ஆனது?

நான் முதன்முதலில் எண்ணெய்-வர்ணப் பெட்டி வாங்கியது கல்லூரி முடித்த பின்னரே.அதுவரையில் வெறும் நீர்வண்ணக் கலவைதான். சொல்லிக் கொடுக்க யாருமில்லை.
“ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம்” என்ற வகையில் பக்கத்தில் ஒரு கிண்ணத்தில் கலப்படமில்லா தேங்காய் எண்ணெய்,நீருக்குப் பதிலாக.தூரிகையை அதில் ஒரு முக்கு முக்கி பின்னர் நீலவர்ணத்தை துளியூண்டு ஒரு பீங்கான் தட்டில் பிதுக்கி,நன்றாக குழைத்து ஆகாயத்தின் நீலவர்ணத்தை பூச ஆரம்பித்தேன். அதற்கென்றே ஒரு தனி வரைதாள். இரண்டு நாட்கள் ஆனாலும் எண்ணெய் காய்வதாய் காணோம். நீர்-வர்ணமானால் பத்து நிமிடத்தில் காய்ந்து அடுத்த பகுதியை பூச ஆரம்பித்து விடலாம்.ஆனால் அந்த எண்ணெய் ஊறிப் போய் வரைதாளின் பின்புறமெல்லாம் தெரிய ஆரம்பித்து விட்டது.

ஓஹோ இந்த ரூட் சரியில்லை என்பதை புரிந்து கொண்டு பிதுக்கிய வர்ணங்களை நேரடியாகவே-தூரிகையின் நுனியில் மட்டும் சிறிது எண்ணெய் தொட்டுக் கொண்டு பரப்பத் துவங்கினேன். ஓரளவுக்கு செய்ய முடியும் என்ற நம்பிக்கை வந்ததது. முதலில் வரைந்தது மேக மண்டலத்தின் நடுவே கிருஷ்ணன் குழல் ஊதுவது போல ஒரு படம். ஆரம்பத்தில் செய்த தவறு காரணமாக அது முழுவதும் காய்வதற்கு எடுத்துக் கொண்ட காலம் ஆறு மாதங்களுக்கு மேலே. எத்தனையோ வருடங்கள் அதை பாதுகாத்து வைத்திருந்தேன். இப்போது எங்கே என்று தேட வேண்டிய நிலை. கிடைத்தால் வலையேற்றுவேன்.

அதன் பின்னர் பல படங்கள் வரைந்து வேண்டியவர்களுக்கு பரிசாகக் கொடுத்து வந்தேன். காலப்போக்கில் சொல்லிக் கொள்ளும்படியாக எதுவும் கையில் நிற்கவில்லை, இந்த நாயைத் தவிர.இது கணிணியில் கண்ட ஒரு 'ஸ்க்ரீன் ஸேவர்' நாய். அதன் கண்களில் தெரிந்த ஒரு சோகம் அல்லது தனிமை மனதை மிகவும் தொட்டது. அந்த உணர்வை தூரிகையில் கொண்டு வரச் செய்த முயற்சிதான் இந்த ஓவியம்.

இது தொலைந்து போகாததற்கு ஒரு காரணம் இதை வரைதாளில் செய்யாமல், வெள்ளை காலிகோ ஒட்டப்பட்ட அட்டையின் மேல் செய்யப்பட்டது. இது எல்லா ஆர்ட் ஸ்டோரிலும் கிடைக்கும். Canvas Board என்று கேட்டால் கிடைக்கும். அதிலும் பல அளவுகள் உண்டு. இந்த ஓவியம் 25 X 30 cm அளவிலானது.

ஓவியத்தை முடித்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு அதன் மேல் வார்னீஷ் தேய்த்து விட்டால் அதை நீண்ட காலம் பாதுகாக்கலாம். இந்த படம் சுமார் எட்டு வருடங்கள் பழையது.

Thursday, January 17, 2008

கல்லிலே கலைவண்ணம் கண்டான்

சமீபத்தில் கர்நாடகத்தில் உள்ள பேலூருக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. வெகு நாட்களுக்கு முன் அங்கிருக்கும் சிற்பம் ஒன்றை சித்திரமாக வரைந்திருந்தேன்.அந்த சிற்பத்தைத் தேடிப்பிடித்து புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டேன். சிவனும் பார்வதியும் ஒயிலாக இடுப்பை வளைத்து நிற்கும் அந்த படத்தை பத்து வருடங்களுக்கு முன் ஒரு பத்திரிக்கையில் பார்த்த போது வரைந்தது இது. பேலூரில் இருக்கும் நூற்றுக்கணக்கான கண்கவரும் சிற்பங்களில் இதுவும் ஒன்று.

ஹொய்சள மன்னர்களின் இந்த மாபெரும் முயற்சியின் முன்னால் பல்லவர்களின் மாமல்லபுர சிற்பங்கள் மிக சாதாரணம். ஒருவகையில் இந்த ஒப்புமை பொருந்துமா என்பது சந்தேகமே.மாமல்லபுரம் குடைவரை கோவில்கள் எனப்படும் வகையை சேர்ந்தன. பாறையை குடைந்து செய்யப்பட்டன. வெட்டுதல் உண்டு, ஒட்டுதல் கிடையாது.

அதிகம் அறியப்படாத, நான் பார்த்த இன்னொரு குடைவரை கோவில் புதுக்கோட்டை அருகே இருக்கும் திருமயம் பெருமாள் கோவில்.அரங்கநாதர் என்று நினைவு.மேலே கோட்டை,கீழே கோவில். உண்மையிலேயே மிக அழகான அமைதியான கோவில் அது. வருமானமில்லாத ஏழை ரங்கநாதர்,பாவம்.

பேலூர் சிற்பங்களின் சிறப்பிற்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது.பேலூர் ஹளேபீடு-ல் பயன்படுத்தப்பட்ட கற்களை மிருது பாறைகள் (soap stones)என்று சொல்கின்றனர். ஆகவே அதில் நுணுக்கமான வேலைப்பாடுகளை சுலபமாக செய்ய முடியும். அதுவே கடினப் பாறைகளாகி விட்டால் சிற்பிகள் மிக அதிகமான பொறுமையுடன் வேலைத்திறனைக் காட்ட வேண்டியிருக்கும்.பெரும்பாலான தமிழக கோவில்களில் காணப்படும் சிற்பங்களும் granite எனப்படும் கடினப்பாறை வகையை சேர்ந்தது.மீனாட்சி அம்மன் கோவில்,ஆவுடையார் கோவில் சிற்பங்களை கண்டவர் நம்மூர் சிற்பிகளையும் குறைத்து மதிப்பிட மாட்டார்கள்.மேலே உள்ள படம் இண்டியன் இங்க் உபயோகித்து வரையப்பட்டது. இதற்கு ஸ்டீல் பென் எனப்படும் நிப் மட்டும் உள்ள பேனாவில் தொட்டுத் தொட்டு வரைய வேண்டும். வரைந்து முடிக்கும் வரையில் இங்க் புட்டி திறந்தே வைத்திருக்க வேண்டும். ஓரிரு முறை கவிழ்ந்து பேப்பரும் படமும் சட்டையும் கறுப்பாக அலங்கோலமானதும் உண்டு. இதனாலேயே இதை விட்டு விட்டேன். வசதி என்னவென்றால் மை காய்ந்த பிறகு தண்ணீர் விழுந்தாலும் மை கரையாது.
மூல சிற்பத்தின் புகைப்படம் இதோ :

Wednesday, January 2, 2008

ஓ ! மானே ..மானே ..மானே........

கறுப்பு வெள்ளைப் படங்களுக்கு அடுத்த படியாக சுலபமான பயிற்சி வர்ண பென்ஸில்கள் தான். என் மனதில் எப்போதுமே இந்த கலர் பென்ஸில்களைப் பற்றி ஒரு அலட்சியம். அதெல்லாம் வெறும் ஸ்கூல் பசங்களுக்கான வெளயாட்டு. நாம தான் பெரும் ஆர்டிஸ்ட் ஆச்சே. பிரஷ் இல்லாமே ஆர்ட்டா?

அந்த அலட்சியத்திற்கு இன்னொரு காரணம் நான் எதிர்பார்க்கும் வர்ண அழுத்தம் அதில் கிடைக்காமல் போவது தான்.

அதென்ன வர்ண அழுத்தம் ?

அதாவது சட்டம் போட்டு வைத்தால் குறைந்தது பத்தடி தூரத்திலிருந்து கண்ணைக் கவர்வதாக இருக்க வேண்டும். இது நானாகவே மனதில் வளர்த்துக்கொண்டஒரு எதிர்பார்ப்பு. கலர் பென்ஸில் சமாசாரமெல்லாம் மூன்று அல்லது ஐந்தடிக்குள்ளாக இருந்து பார்த்தால்தான் ஓரளவு முழுவிவரமும் தெரியும். இதனாலேயே இதைக் கண்டுக்கொள்ளாமல் இருந்தேன்.

ஆனால் வலையுலகம் தன் கதவுகளை திறந்த பின்பு தான் புரிந்தது கலர் பென்ஸில்களால் முடியாத காரியமே கிடையாது என்பது. பெரிய பெரிய ஜாம்பவான்களின் கைத்திறனைப் பார்த்ததும் உடனே போய் வாங்கினேன் ஒரு கலர் பென்ஸில் பெட்டி. அதிலும் மிக காஸ்ட்லியான Faber-Castell நூத்தி ஐம்பது ரூபாய் கொடுத்து! ஏன்னா அவங்க அதைத்தானே பயன் படுத்தறாங்க!! அதையும் தான் பார்த்துடலாமே.

அப்படி உருவான முதல் சித்திரந்தான் இந்த மான் படம்.இதை வரையத் தூண்டியது அதன் வளைந்து மேலேறும் கொம்புகளின் வரிகள், அதில் தெரியும் முப்பரிமாணம், மூக்கு நுனியில் வெளிச்சத்தின் பிரதிபலிப்பு’, அதன் தீர்க்கமான பார்வை இப்படி பல. சுமார் ஒருவார காலம் நேரம் கிடைக்கும் போதெல்லம் கொஞ்சம் கொஞ்சமாக செய்து முடித்தேன்.

கடைசியாக செய்த தவறு அதை கொண்டு போய் லேமினேட் செய்தது. யார் சட்டம் போடுவதற்கு இருநூறும் முன்னூறும் செலவழிக்கிறது :(

லேமினேட் செஞ்சா ரொம்ப சீப். அறுபது ரூபாய்ல வேலை முடிஞ்சுரும். கண்ணாடி உடையும் பயமும் கிடையாது இப்படியெல்லாம் கணக்கு போட்டு லேமினேஷன் போர்டு மவுண்டிங் ஆர்டர் பண்ணியாயிற்று.

இரண்டு நாள் கழித்து வாங்கி வந்து பார்த்தால் உடைந்து போனது என் மனது. பளிச்சென்று இருந்த படம் லேமினேஷனுக்குப் பிறகு மங்கிப் போய் கிடந்தது. காரணம் சரியாகத் தெரியவில்லை. ஃபோட்ட கடைக்காரன், தில்லியில், ஒரு ஞான சூனியம். அவன் வெறும் ஏஜென்ட். லேமினேட் செய்யும் இடம் வேறெங்கோ. ஒரு சிலர் லேமினேஷனில் பயன்படுத்தப்படும் ரஸாயனத்தினால் என்றனர். இன்னொருவர் லேமினேஷன் செய்யும் போது உண்டாகும் சூட்டினால் ஆகியிருக்கும் என்றார். வெறும் இது மட்டுமல்ல இதனோடு கொடுக்கப்பட்ட பேஸ்டல் வர்ணப் படைப்புகளின் கதியும் அப்படியே. ஆனால் அவைகள் இதைவிட கொஞ்சம் பரவாயில்லை.

உங்களுக்கு யாராவது லேமினேஷன் யோசனைக் கொடுத்தால் தீர விசாரித்து முடிவெடுக்கவும். என் கண்ணான கலைமானுக்கு வந்த கதி வேறு எதற்கும் வந்து விடக்கூடாது.