Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Saturday, June 27, 2009

செய்யும் தொழிலே தெய்வம்

இவர் தன் திரை அனுபவங்களை வாரப் பத்திரிக்கை ஒன்றில் தொடராக எழுதி வந்த பொழுது படித்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது.

எல்லோரையும் விட படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வந்து விடும் இவருக்கு ஒருமுறை கூட நடிகர் சிவகுமாரை முந்திக் கொண்டு வர முடியவில்லை. எப்பவுமே அவர்தான் முந்தி.

ஒருமுறை எப்படியாவது சிவகுமாரைவிட முன்னதாகப் போய் சேர்ந்துவிட வேண்டும் என்ற முனைப்போடு (யாருக்கும் அது பற்றி மூச்சு விடாமல்) வழக்கத்தை விட எல்லா வேலைகளையும் சீக்கிரமாகவே முடித்துக்கொண்டு அரைமணி நேரம் முன்னதாகப் படபிடிப்பு தளத்துக்குப் போய் சேர்ந்தார். இவர் எண்ணங்களை டெலிபதியில் தெரிந்து கொண்டாரோ என்னவோ மேக்கப் மேன் நாற்காலியிலிருந்தபடியே வணக்கம் சொல்லி இவரை வரவேற்றார் சிவகுமார்.


வாழ்க்கையில் இவர்கள் பெற்ற வெற்றிகளுக்கு வேறு காரணமே தேவையில்லை.

செய்யும் தொழிலே தெய்வம்.

Tuesday, June 2, 2009

அச்சச்சோ ரெட்டையா !!

ஹாங்காக் நகரத்தில் வசிக்கும் ஒரு ஓவியரைப் பற்றிய ஒரு குறிப்பு ஆங்கிலக் கட்டுரை ஒன்றில் சில வருடங்களுக்கு முன் படிக்க நேர்ந்தது.

அவருடைய தனித்தன்மை என்னவென்றால் எந்த ஓவியத்தைக் காட்டினாலும் அதை அச்சு அசலாக மூலத்தைப் போலவே வரைந்து கொடுத்துவிடுவாராம். அதை ஒரு தொழிற்சாலை போலவே உதவி ஆட்கள் வைத்துக் கொண்டு செய்து வருகிறாராம். அவரை போலவே அந்நகரில் மிகப் பலரும் வெற்றிகரமாக தொழில் நடத்தி வருவதாகவும் சொல்லியிருந்தார். ஆனால் அது மிக டென்ஷனான வேலையென்றும் அகில உலக சந்தையில் மூலப்பிரதிகளுக்கு லட்சக்கணக்கான டாலர்கள் விலை கிடைப்பதால் நகல் ஓவியங்களை ”புராதனமான ஓவியர்களின் மூலம்” என்று விற்கக் கூடிய கள்ளச் சந்தை உருவாகி இருப்பதால் அதிக சட்டத் தொல்லைகளுண்டு என்றும் குறிப்பி்ட்டிருந்தார்.

நமக்கு அது மிகப் பெரிய விஷயம். சமயங்களில் நாம் வரைந்த சில ஓவியங்களையே யாராவது மீண்டும் வரைந்து கொடுக்கச் சொன்னால் நம்மால் அதே ஈடுபாட்டுடன் திரும்பவும் செய்ய முடியுமா என்பது சந்தேகமே. அதைத் தீர்க்க இன்று ஒரு வழியை காண்போம். இது ஏற்கனவே பழைய பதிவு ஒன்றில் குறிப்பிட்டது தான்.

சென்ற பதிவில் வ்ரையப்பட்டிருந்த மழலையே இம்முறை வண்ண வடிவில்.

மிக மங்கலாக ஜெராக்ஸ் செய்யப்பட்ட நகல் படத்தில் வெவ்வேறு விதமாக பென்சில் மற்றும் பேஸ்டல் வர்ணம் பூசினேன். சாதாரண பாண்ட் தாளில் எடுக்கப்பட்டத்தால் வர்ணங்கள் பரவுவதில் சற்று வித்தியாசம் இருந்தது. பரீட்சார்த்தமானதாகையால் பரவாயில்லை என்று வர்ணம் பூசுவதை தொடர்ந்தேன்.

வேண்டுமென்றே தலை முடிக்கான வர்ணத்தையும், பூவாலைத் துண்டுகளின் வர்ணத்தையும் மாற்றினேன். விளைவு இரட்டைக் குழந்தைகள். இன்னும் முனைப்பாக செயலாற்றினால் ஒரே மாதிரியான படங்களை இன்னும் நல்ல விதமாக உருவாக்க முடியும் எனத்தோன்றுகிறது.

அதாவது நல்ல நகல்களை உருவாக்க முடியும் :))

யாருக்காவது அன்பளிப்பாக கொடுக்க இயலும்.

நகல் எடுக்கும் பொழுது நல்ல வரைதாளில், எண்ணெய் பிசுக்கு இல்லாமல் பார்த்து செய்தால் உங்களுடைய மூலப் பிரதிக்கும் நகலுக்கும் யாராலும் வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு செய்ய முடியும். ( விரல்களில் இருக்கும் எண்ணெய் பசை தாளில் ஒட்டிக்கொண்டால் பின்னர் அந்த இடங்களில் வர்ணங்களை ஒட்டவிடாமல் செய்யும். அப்போது அவை திட்டுத்திட்டாகத் தெரியும்.)

கொசுறு : ஜெராக்ஸ் எடுக்கப் போன இடத்தில் மூன்று பிரதிகளை எடுக்கச் சொன்னேன். அந்த பெண் செட்டிங்கை மாற்றி நாலாவது பிரதி எடுக்க முற்பட்டபோது வேண்டாம் தேவையில்லை என்று தடுத்தேன். அவள் புன்னகையுடன் “எனக்கும் ஒரு காப்பி” என்று தனியே எடுத்து வைத்துக் கொண்டாள்.

நல்ல ஓவியத்திற்கு இதைவிட என்ன அங்கீகாரம் வேண்டும் !!