Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Tuesday, July 2, 2019

மேபிள் சருக்கரை சுவைத்துள்ளீர்களா?

இந்த பதிவில் இரண்டு விஷயங்களைப் பார்ப்போம். ஒன்று வலைப்பூவிற்கு சம்பந்த்தப்பட்ட சித்திரம். இரண்டாவது சித்திரத்திற்கு காரணமான பொருள்.

புதிதாக ஒரு கணினி வரைபட தகடு (graphic tablet) ஒன்றை வாங்கினேன்.  அதைப்பற்றிய சற்று விவரம் :

கணினியின் உதவியுடன் நான் பலநாட்களாக வரைபடங்களுக்கு வர்ணம் பூசி வந்தாலும் நேரடியாக படம் வரைவதில் அதிகம் வெற்றி பெறவில்லை. இதற்குக் காரணம்  காகிதத்தில் வரையும் போது பென்சிலில் கிடைக்கும் விரல்களின் வீச்சு (strokes) கணினியில் இல்லாமல் போனதால் தான். இது எனக்கு மட்டுமில்லை, உலகில் உள்ள ஓவியர்கள் அனைவரின் மனக்குறையாகவும் இருந்து வந்தது.

இந்த குறையை போக்குவதற்காக வந்ததே வரைபடத் தகடு.   இதில் நாம் Stylus  அல்லது எழுத்தாணி [இங்கே வரையாணி ]  கொண்டு கணினியுடன் இணைக்கப்பட்ட ஒரு தகட்டில் படம் வரையும் போது கணினியின் திரையில் படம் தெரிகிறது.  ஆனால் தகட்டில் ஏதும் இருக்காது !
நாம் தரும் அழுத்தத்திற்கு ஏற்ப கோடுகளின் பரிமாணமும் வர்ண அழுத்தமும் மாறுபட்டு தூரிகைளைக் கொண்டு வரையும் அனுபவத்தை தருகிறது. பல யூ டியூப் காணொளிகளில் அவற்றைக் காணலாம். இதற்கு பல வித மென்பொருட்களில் பயிற்சி வேண்டும்.  வரைப்படத்தகட்டின் வேலை வெறும் காகிதத்தையும் பென்சில் அல்லது தூரிகைகளின் இடத்தை நிரப்புவதுவே. 

நான் இதைப் பற்றி சிந்தித்ததற்குக்  காரணம் முக்கியமாக
1.எந்த அளவில் (Canvas size) வேண்டுமானாலும் படம் வரையலாம். அதற்கு வர்ணங்கள் வாங்காமலே வர்ணம் பூசலாம். 
2. பென்சில், சார்கோல், நீர்வர்ணம், ஆயில் வர்ணம், பேஸ்டல், அக்ரிலிக் என பலவகையான வர்ண முறைகளையும் முயன்று பார்க்கலாம்.
3. எத்தனை நாட்களுக்குப் பிறகும் சித்திரங்களை சரிசெய்யலாம். 
4..படத்தை வரைந்து முடித்த பிறகு அதை பாதுகாத்து வைப்பதற்கு (இடம் தேடி) சிரமப்பட வேண்டாம். 
5.எப்பொழுது வேண்டுமானாலும் எந்த அளவிற்கு வேண்டுமானாலும் கணினியிலிருந்து பிரிண்ட் செய்து கொள்ளலாம். அல்லது 
6 சட்டம் போட்டு சுவரில் மாட்டாமல் Slide Show ஆக நம் வீட்டு தொலைக்காட்சி திரையில் பிறருக்குக் காட்டலாம்.  சிறிய படமாயினும் திரையில் பெரிதாகத் தெரியும் !

     இப்படியாக, இதையும் சற்று பயின்றால் உபயோகமாக இருக்கும் என்ற எண்ணம்  சில நாட்களாகவே  மனதில் ஓடிக் கொண்டிருந்தது.  Wacom, Huion  என்கிற இரண்டு நிறுவனங்கள் இதில் பலத்த முன்னேற்றம் கண்டுள்ளன. இதில் Huion 610 என்னும்  தகடு சற்றே மலிவான விலையில் கிடைத்ததால் ($ 60) உடனே ஒன்றை வாங்கிவிட்டேன். இதற்கு ஏழெட்டு மாதங்களுக்கு முன் சுமார் ரூ.6500 க்கும் அதிகமாக இருந்தது.

அதில் வரையப்பட்ட முதல் பயிற்சிப் படம்தான் நீங்கள் இங்கே பார்ப்பது. இது கணினியிலே ஆரம்பிக்கப்பட்டு கணினியிலேயே முடிக்கப்பட்ட சித்திரம். 

    இதில் வரையப்பட்டுள்ள மரம் மேபிள் ( Maple).   மேபிள் மரம் குளிர் அதிகமாக நிலவும்  கனடா, வட அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் போன்ற  பூமியின் வட பாதியிலும் ஆஸ்திரேலியா போன்ற தென் பாதியிலும் அதிகமாக காணப்படுகிறது.  இது அப்பகுதிகளில் வசந்த காலத்தில் தளிர்விட்டு கோடையில் முழுவதும் பச்சையாக காட்சியளிக்கும். பின்னர் பருவமாற்றங்களுக்கு ஏற்ப இலைகள் பழுத்து மஞ்சள் ஆரஞ்சு பின்னர் சிவப்பு வர்ணத்திற்கு மாறி  பனி பொழியும் போது இலைகளை உதிர்த்து விடும். 


    சாலைகளில் இருபுறமும் இவைகள் காட்டும் வர்ணஜாலம் ஓவியர்களுக்கும் புகைப்பட ஆர்வலர்களுக்கும் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கும் கண்ணுக்கு விருந்தாகும். 10 மீ உயரத்திலிருந்து 30 மீ உயரம் வரை வளரும் இம்மரங்கள் இதற்காக எடுத்துக் கொள்ளும் காலம் 25லிருந்து 30 வருடங்கள் வரை ஆகும்.

   பனைமரத்தில் நுங்கு பிஞ்சை கீறி  பதநீரை வடித்தெடுப்பதைப் போல
மேபிள் சருக்கரை என்பது அதன் காய்கள் மூலம் பிரித்தெடுப்பது என்று நினைத்திருந்தேன். ஆனால் அது முற்றிலும் தவறு.

    மேபிள் அடிமரத்தை  துளையிட்டால் அதிலிருந்து இனிப்பான நீர் வடிகிறது. அது 2% சருக்கரை அளவு கொண்டது. அதாவது இதற்காக மரம் ஏறி இறங்க வேண்டியதில்லை.
   இதை நன்றாகக் காய்ச்சி பாகு வடிவில் விற்பதை ஒரு முக்கியத் தொழிலாக பலர் இந்நாடுகளில் செய்து வருகின்றனர். ஏறக் குறைய நம் நாட்டில் ரப்பர் தோட்டங்களில் ரப்பர் பாலை வடித்தெடுப்பது போலத்தான் இது.

மேபிள் மரம் நல்ல மரச்சாதனங்கள்,  இசைக்கருவிகள் தயாரிக்கப் பயன்படுகிறது.  கனடா தேசத்தின் கொடியில் இம்மரத்தின் இலையை பொறித்துள்ளனர். அந்நாட்டின் உயர்ந்த ராணுவபதக்கங்களிலும் இதன் இலச்சினை உள்ளதென்றால் இம்மரத்தை எவ்வளவு உயர்வாகப் போற்றுகின்றனர் என்பதை அறியலாம்.
.
இந்த மரம் இந்தியாவில் இருப்பதாக தகவல் இல்லை.

Thursday, May 16, 2019

மாயப்புள்ளி மறையுமிடம் எது?

Spot sketching என்பதற்கு தமிழில் சரியான வார்த்தை இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஒரு வேளை ‘நேரடி வரைவு (அ) வரைதல்” என்பது பொருத்தமாக இருக்கலாம்.

ஆனால் அதில் தேர்ச்சி பெற்ற கலைஞர்களுக்கு பஞ்சமில்லை. சில்பி போன்ற பெரும் ஓவிய விற்பன்னர்கள் தமிழகத்தில் எல்லா ஆலயங்களுக்கும் சென்று அற்புதமான ஓவிய களஞ்சியங்களை வழங்கியுள்ளனர்.

புகைப்படக்கருவிகள் முன்னேற்றமில்லாத காலத்தில் - ஐம்பது அல்லது அறுபது வருடங்களுக்கு முன்பு - அவர்களுடைய உழைப்பினால்தான் வெளிச்சமில்லாத கோவில் உட்பிராகரங்களின் சிற்ப அழகும் தூண்கள் தாங்கியிருக்கும் அழகிய விதானங்களின் சிறப்பும் பத்திரிக்கை வாசகர்களுக்கு தெரிய வந்தது.

அதை முயற்சி செய்து பார்ப்போம் என்று  சமீபத்தில் வரைந்தது தான் கீழே உள்ள படங்கள்.


அமெரிக்காவின்  ஃபினிக்ஸ் நகரில் உள்ள பெரும் கள்ளிகள் 300 முதல் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. மண் வளம் குறைந்த இந்த பாலைப் பகுதியில் முட்புதர்களும் இவ்வகை கள்ளிகளுமே வறட்சியைத் தாக்குப் பிடித்து இந்நிலத்தை சற்று பசுமையாக வைத்திருக்க உதவுகின்றன. அதனால் இங்கு வீடு கட்டி குடியேற வருபவர்களும் அவைகளை பாதுகாக்கின்றனர். இது என் மைத்துனர் வீட்டின் நீச்சல் குளம். அங்குள்ள பாறைகளையும் கள்ளி முட்புதர்களை அப்படியே வைத்துக்கொண்டு அழகை கூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டது மனதைக் கவர்ந்தது.

நோட்டில் வரைந்த பென்சில் வரைபடத்தை  அலைபேசியின் ஸ்கேனர் மூலம் கணினிக்கு மாற்றி பின்னர்  Paint 3D மூலம் வர்ணம் பூசினேன்.

இயற்கை காட்சிகளை வரைவதற்கும் கட்டிடங்களை வரைவதற்கும் பெருத்த வேறுபாடு உண்டு என்பதை ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டு இருந்தேன்.

இது முக்கியமாக மாயப்புள்ளி ( vanishing point ) ஓவியம் வரைபவர்க்கு சரியாக பிடிபடவில்லை என்றால்  படம் தாறுமாறாகப் போய்விடும்.

அவர் வீட்டுக் கட்டிடத்தின் வெளி வராண்டாவைத் தேர்ந்தெடுத்து  அதை வரை புத்தகத்துள் அடக்க முயற்சித்தேன். அதன் விளைவே கீழேயுள்ள கறுப்பு வெள்ளை வரைபடம்.


வளைந்து செல்லும் விதானத்தின் முப்பரிமாண காட்சியே இதை வரைந்து பார்க்கத்தூண்டியது.  முக்கியமாக தூண்களின் நிலைகளும் அவற்றிற்கிடையே உள்ள இடைவெளியையும் புகைப்படத்தின் துணையில்லாமல் வரைவது என்பது பெரும் சவாலாகவே இருந்தது.

படத்தை வரைந்த பின் அதை மைத்துனருக்குக் காட்டியபோது சிறிது நேரம் உற்றுப்பார்த்து “அங்கே ஒரு  ஃபேன்  தொங்குமே அதைக் காணோமே” என்றார். “அது தூணுக்குப் பின்னால்  மறைஞ்சு இருக்கு” என்று விளக்கினேன். பின்னர் அவருடைய திருப்திக்காக வர்ணம் பூசும் போது  மின்விசிறியின் இறக்கைப் பகுதிகளை காட்டியிருக்கிறேன்.

உங்களுக்குத் தெரிகிறதா? 

மேலே காணும் படத்தில் மாயப்புள்ளி மறையும் இடம் எது?
Saturday, February 23, 2019

பனை ஓலையில் சித்திரங்கள்-ஒடிஷா

சமீபத்தில் பூரி ஜகன்னாத் தரிசனத்திற்கு ஒடிஷா சென்றிருந்தேன்.  அதையொட்டி அருகிலுள்ள கோனாரக் சூரியன் கோவில், சில்கா கடற்பகுதி என்று சிறிது சுற்றினோம். அப்போது எனக்குப் பிடித்தது பிப்பலி என்ற கிராமப் பகுதியில் பல நூறு குடும்பங்கள் பல தலைமுறைகளாக தொடர்ந்து செய்து வரும் கைவினைப் பொருட்களாகும்.

இதில் குறிப்பிடத்தக்கது பனை ஓலையில் அங்குள்ள மக்கள் வரைந்து வரும் ஓவியங்கள் ஆகும். சிறிய ஓலைகள் பலவற்றை கூட்டி பெரிய பெரிய ஓவியங்களை வரைவது வேறெங்கும் காணமுடியாத தனிச் சிறப்பு.

ஏன் பனை ஓலைகள் ? காலங்காலமாக பதப்படுத்தப்பட்ட  பனை ஓலைகளிலேயே  அனைத்து நூல்களும் எழுதப்பட்டு வந்தது.  அவற்றை கறையான் அத்துப் பூச்சி முதலியவை தாக்காதவாறு மஞ்சள், வேப்பெண்ணெய் போன்ற காப்பு முறைகளையும் முன்னோர் அறிந்திருந்தனர். இதனால் பல நூற்றாண்டு காலம் இவைகள் சேதமுறாமல் பயனளித்தன.
இதனால் ஓவிய ஆர்வம் உள்ள மனிதன் பனை ஓலைகளிலும் தன் முயற்சியைக் காட்டத் தவறவில்லை.  நான் கண்டவற்றை காணொளியாக பதிவு செய்து அதை பின்னர் தொகுத்து யூட்யூபில்  வலையேற்றிருக்கிறேன்.  பன்னாட்டவருக்கும் நம் நாட்டின் பாரம்பரியம் தெரியட்டுமே என்று ஆங்கிலத்தில் விளக்கமும் சேர்த்திருக்கிறேன். அதை நீங்களும் கீழே கண்டு மகிழலாம். ஓவிய நுணுக்கத்தை பாரட்ட வேண்டுமானால் முழுத்திரை வடிவில் காண வேண்டும்.எவ்வளவு தொன்மையான கலை! பாகவதக் கதைகளை இந்த ஓலகள் மூலம் சித்திரக் கதைகளாக சொல்லும் பழக்கம் அந்த காலத்திலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது. காமிக்ஸ் என்று புதிதாக வந்தது போல் நினைக்கின்றனர் பலர். இதிலும் பாரதம் முன்னோடியாக இருந்திருக்கிறது என்பதற்கு இந்த ஓவியச் சுவடிகளே சாட்சி.

இந்த பதிவிற்கு என் பங்கையும் எதையாவது சேர்க்க வேண்டுமே!

எனக்கு பனையோலை கிடைக்கவில்லை, பாக்குப்பட்டை கிடைத்தது. Disposable plates செய்யப்படும் இந்த பாக்குப்பட்டையால் செய்யப்பட்ட ஒரு 8”x6" டிரே ஒன்று வீணாகப் போவதைக் கண்டேன். அதன் விளிம்புகள் முறையாகக் கத்தரிக்கப்படாததால் தரக் கட்டப்பாட்டு இலாகா அதை கழிவாக ஒதுக்கி விட்டிருந்தனர்.  அதில் ஒரு எளிமையான ஓவியம் ஒன்றை அக்ரிலிரிக் வர்ணம் கொண்டு தீட்டினேன்.  பச்சை, சிவப்பு, நீலம் மூன்றும் பளிச்சென்று வரவேண்டும் என்பதற்காக  கடலோரத்தில் குடைபிடித்திருக்கும் ஒரு (ஆப்பிரிக்க) பெண்மணியின் படத்தை தீட்டினேன்.

தூக்கிப் போடக் கிடந்த  ஒரு பொருள் இப்போது  வரவேற்பறை காட்சிப் பெட்டிக்குள் சேர்ந்து விட்டது.தற்செயலாக இந்த படத்தை பார்த்த போது இதில் பஞ்ச பூத தத்வங்களுக்கும் மனித உடலுக்கும் உள்ள தொடர்பு என்னையறியாமலே வெளிப்பட்டுள்ளதோ என்று வியக்க வைத்தது.  மேலும் விவரங்களுக்கு அரவிந்த அன்னையின் இந்தக் கட்டுரையில் விளக்கத்தைக் காணவும்.


Thursday, August 2, 2018

அக்ரிலிக்கில் சிரிக்கும் புத்தர்

அக்ரிலிக் வர்ணங்கள் பொதுவாக  கண்ணைக் கவரும் வகையில்  மிகப் பளிசென்று இருக்கும். இது ஃபேபரிக் கலர்ஸ் ( Fabric colours) என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும்.

ஆனால் இதில் வர்ணம் பூச சற்று பொறுமையும்  திட்டமிடுதலும் அவசியம்.

ஏனப்படி என்றால் ஆயில் வர்ணம் போலல்லாது மிக வேகமாக உலர்ந்து விடும் தன்மை உடையது. ஒருமுறை உலர்ந்து போனால் அது மீண்டும் நீரில் கரையாது. இதனால்  அடுக்கு முறையில் வர்ணம் ( Layering technique) பூச முயலும் போது பூசப்பட்ட வர்ணம் புது வர்ணத்தோடு குழைந்து ஒன்றாக இணையாது. தனித்தனியாகத் தெரியும்.

எதனாலோ இது எனக்கு சுகப்பட்டு வரவில்லை. என் திட்டமிடும் தன்மை மிக மிக பலஹீனமானதாக இருக்கலாம். எப்படியோ கஷ்டப்பட்டு  என் முதல் முயற்சியாக ஆரம்பித்த இரண்டு சிங்கங்களின் ஓவியத்தை  முடித்தேன்.

இதன் பின்னர் அந்த  அக்ரிலிக் டப்பாவை மூடி வைத்ததுதான், ஒன்றரை வருடம் அதை திரும்பிப் பார்க்கவில்லை.

ஆனால் வேளை வந்தால் யார் காலை வேண்டுமானாலும் பிடிக்க வேண்டி வரலாம் !
( நான் கர்நாடகா அரசியல் நிலவரம் பற்றிச் சொல்லவில்லை :)))

என்னுடைய  மொபைல் ஃபோன் மேலுறையின் மேலிருந்த மெல்லிய தாள் பூச்சு சிறிது சிறிதாய் உரிந்து போய் பார்ப்பதற்கு அகோரமாய் எல்லோரிடமும் எனக்கு திட்டு வாங்கித்தந்தது. புதிதாக ஒன்றை வாங்கிக்கொள்ளலாம் என்று கடை கடையாய் ஏறி இறங்கினேன் ( பிறத்தியாரை திருப்தி படுத்தத்தான்!) எங்கும் என்னுடைய மாடலுக்கு இல்லை என்றே பதில் வந்தது.

அந்த மேலுறை இன்னமும் திடமாகத்தான் இருக்கிறது. அதனால் அதை தூக்கிப்போடவும் மனம் வரவில்லை. அதன் மேல் ஏதேனும் Vinyl Sticker படம் ஒன்றை ஒட்டி விடலாம் என்று பார்த்தால் எதுவும் சரியாக அமையவில்லை. அப்போது தான் நினைவுக்கு வந்தது அக்ரிலிக் கலர் டப்பா !!

வேகமாக உலரும், உலர்ந்தபின் ஒட்டாது, கரையாது; பார்ப்பதற்கும் பளிச் என்றிருக்கும். இது தானே வேண்டும். தேடி எடுத்தேன் அந்த டப்பாவை.

வர்ணங்கள் யாவும் சற்றே காய்ந்து சீக்கிரத்திலேயே பயனிழந்து விடும் நிலை அடைந்திருந்தது. பச்சை வெள்ளை இரண்டையும் கலந்து உடனே இரண்டு பக்கங்களுக்கும் பூசினேன். பின்பக்கத்தை சற்று அடர் பச்சையாகவும் முன்பக்கத்தில் வெளிர் பச்சையாகவும் தயார் செய்து  அதன் மேல்  ஒரு சிரிக்கும் புத்தனை  மார்க்கர் பேனாவால் வரைந்து விட்டேன்.


Laughing Buddha  அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் அள்ளித் தருபவராம்.  தாமரை பூ, செல்வம், பெரிய காது, தொப்பை,  கையில் ஜெபமாலை, ஆனந்த நிலை எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும் போது நம்முடைய விநாயகரை அவர்கள் நாட்டிற்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டு விட்டார்களோ என்று தோன்றுகிறது. சில படங்களில் அவர் கைக்கு ஒரு குடையை கொடுத்து ஒரு காலை தூக்கியவண்ணம் வரைந்திருப்பது வாமன அவதாரத்தை நினைவூட்டுகிறது.

எப்படியோ தூக்கிபோட இருந்த மேலுறைக்கு இன்னமும் சிறிது நாள் ஆயுள் அக்ரிலிக் வர்ணத்தால் கிடைத்திருக்கிறது.


Friday, January 12, 2018

ஆதி ஜோதி, அருட்பெருஞ்சோதி


    ஆயில் பெயிண்ட் நல்ல நல்ல விதமாக செய்ய வேண்டும் என்ற  ஆர்வத்தில் பலவிதமான கேன்வாஸுகளை வாங்கினேன். அது 25 வருடங்களுக்கு முன்பு. அதில் Streched canvass  என்பது ஒரு வகை. இது எடை குறைவான சட்டத்தில் நன்றாக இழுத்து பொடி ஆணிகளினால் பொருத்தப்பட்ட கெட்டியான துணி.

ஒரு பத்திரிக்கையில் வந்த புகைப்படத்தில் மேகங்கள், நீரில் கதிரவன் பிரதிபலிப்பு இவற்றின் அழகைக் கண்டு அதை முயற்சித்துப் பார்க்கலாம் என்று ஆரம்பித்தேன்.  அதன் பின்னர் வேறொரு புகைப்படத்தில் கண்ட  ஒரு நாட்டியக் குழுவின் அபிநய  பங்கியை  நிழற்படமாக  மாற்றி வரைந்து அவர்கள் சூரிய வணக்கம் செய்வதாக முடித்து கொஞ்சம் நாட்கள் வரவேற்பு அறையில் மாட்டி வைத்திருந்தேன்.  பல முறை வீடுகளை மாற்றியதில் அதற்கு முக்கியத்துவம் குறைந்து எங்கோ கேட்பாரின்றி  பெட்டி அடிக்கு சென்று விட்டது. சமீபத்தில் அதை பார்த்த போது பொங்கலுக்கு ஏற்ற படம் என்று தோன்றியதால் அதை பிரசுரிக்கிறேன்.

இதற்குப் பொருத்தமாக சூரிய காயத்ரி மந்திரத்தை  படத்தின் அடிப்பக்கத்தில் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன் 

பாஸ்கராய வித்மஹே, மஹத் த்யுதிகராய தீமஹி
தந்நோ ஆதித்யப் பிரசோதயாத்


ஆனால் கோணல்மானலாகப் போய்விட்டால் படத்தின் அழகு போய்விடும் என்ற பயத்தால் அதை எழுத தைரியம் வரவில்லை. இந்த பதிவின் மூலம் அந்த ஆசையை நிறைவு செய்து கொள்கிறேன்.

பாரதியாரும்   ஞாயிறு வணக்கம் என்ற நல்லதொரு கவிதையை செய்திருக்கிறார். அதன் வரிகளும் இதற்கு பொருத்தமானதே.

என்றனுள்ளே கடலினைப் போலே
எந்த நேரமும் நின்னடிக் கீழே
நின்று  தன்னகத்து ஒவ்வோர் அணுவும்
நின்றன் ஜோதி நிறைந்தது வாகி
நன்று வாழ்ந்திட செய்குவை யையா
...........................................................
--------------------------------------------
ஆதித்  தாய் தந்தை நீவிர் உமக்கே
ஆயிரம்தரம் அஞ்சலி செய்வோம்

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்

இன்று ( 12 ஜனவரி) வீரத் துறவி விவேகானந்தரின் ஜயந்தியும் ஆகும்.  பாரதமாதாவை மிக உயர்ந்த அரியணையில், குமரி முனைப் பாறையில் தவத்தில் கண்டு உலகிற்கு பறை சாற்றியவர். அவருக்கு ஏதாவது வகையில் அஞ்சலி செய்வோம் என்ற எண்ணத்தில் எழுந்த முயற்சியே கீழே காணும் போட்டோஷாப் செய்யப்பட்ட படம்.

( படத்தை சுட்டினால்  எழுதியிருப்பதை படிக்க முடியும்)

அவர் கன்னியாக்குமரி பாறையில் அமர்ந்து மூன்று நாள் தியானத்தில் கண்ட காட்சியே அவர் வார்த்தைகளில் வெளிப்பட்டுள்ளது.   போட்டோ ஷாப்பில்  அதற்கு உரு கொடுக்க என்னுடைய ஓவியத்தையே பயன்படுத்திக் கொண்டேன்.  உங்களால் விவேகானந்தர் சூட்சும வடிவில் அமர்ந்திருப்பதை காண முடிகிறதா ?  _/\_

Thursday, January 4, 2018

காந்தீய சிக்கனம் -குறைவில் நிறைவு

அனைவருக்கும் 2018-ன் புத்தாண்டு வாழ்த்துகள்.

இந்த பதிவில் சொல்லப்படுவது பரிட்சார்த்தமான முயற்சி இங்கே சித்திரத்தின் வரைபடத்தை விட இங்கே முயற்சி செய்யப்பட்ட மையக்கருத்து எவ்வளவு தூரம் வெற்றிப் பெற்றுள்ளது என்பதே முக்கியம்.

மகாத்மா காந்தி  எழுதுவதற்கு பென்சிலை சீவினால் அதனை கூராக்க மாட்டாராம். ‘கூராக்கினால் கரித்துகள் வீணாகுமே. அதை வைத்து எவ்வளவோ எழுதுவது பயன்படாமல்  போகுமே” என்று சொல்வாராம்.

குறைவில் நிறைவை கண்டவர் அவர் !

நேற்று சில வர்ண பென்ஸில்களை சீவிக் கொண்டிருக்கும் போது அதன் சீவல்களோடு வெளிப்பட்ட  வர்ணப் பொடிகள் காந்திஜியை நினைவு படுத்தியது. மீதியை கீழே உள்ள படத்தை சுட்டினால் விவரமாகப் படிக்கலாம்.ஓரளவு  தாளின் மடிப்புப் பகுதியை வர்ணத்தின் மூலமாக மறைக்க  முடிந்தாலும் பென்சில் வர்ணத்தின் அடர்த்தி குறைவாகவே பட்டது. அதனால் ஒரு சிறிய தூரிகை உதவியால் அங்கங்கே சற்று நீர் வர்ணத்தில் அலைகளை வரைந்து  அங்கே ஒரு மீன்பிடிப்பவரின் வலை வீசும் காட்சியையும் சேர்த்தேன். இப்போது படம்  சற்று பரவாயில்லை என்று தோன்றியது.


இதில் என்ன பரிட்சார்த்தம் என்று தோன்றலாம். 

முதலாவது, வீணாகக் கிடந்த ( ஒருபக்கமே பயன்பட்ட ) வெள்ளைத்தாள்  தூக்கி எறியப்படக் கிடந்த பென்ஸிலின் வர்ணத் துகள்கள்  இரண்டும்சேர்ந்து ஒரு சித்திரமாகியது.  எனக்கு நேரமும் உபயோகமாகக் கழிந்தது.

   இரண்டாவதாக,  மூன்று சித்திரங்களை தனித்தனியாக   வலையேற்றி  இணைப்பதற்கு பதிலாக ஒரே சித்திரமாக  மாற்றி அதன் தொடர்பான விஷயத்தையும் - சித்திரக் கதையாக- சொல்ல முயற்சித்திருக்கிறேனே அது மகாத்மா காந்தி வழியில் சிக்கனத்தை நானும்  சிந்திக்கிறேன் என்பதை காட்டுகிறதல்லவா :)))))

Sunday, December 17, 2017

ஹொய்சளர் கற்தூண்களும் என் சிலேட்டு சிற்பமும்.


சில நாட்களுக்கு முன், பேலூர் ஹளேபீடு போன்ற ஹொய்சளர்கள் கட்டிய கோவிலில் இருக்கும் தூண்களைப் பற்றி பெரும் ஆச்சரியத்தை வெளிபடுத்திய வீடியோ படம் ’வாட்ஸ்-ஆப்’ ல் வலம் வந்து கொண்டிருந்தது.

அது என்ன ஆச்சரியம்?

 பல டன்கள் எடையுள்ள பெரும் பாறைகளை எப்படி கடைந்து வேலைப்பாடுடைய தூண்களாக மாற்றியுள்ளார்கள் , அதுவும் 900 வருடங்களுக்கு முன்பு? அதற்கான இயந்திரங்கள் இருந்தனவா? அந்த தொழில் நுட்பம் (machining technology) பற்றிய தகவல்கள் எதுவும் இல்லையே ஏன்? இப்படி பல கேள்விகளை முன் வைக்கும் வீடியோ விற்கு இங்கே சுட்டவும்.மரத்தில் கட்டில் நாற்காலி போன்றவற்றிற்கு சிறிய கடைசல்-பொறி சட்டத்தில் மரத் துண்டைப் பொருத்தி, சுழல விட்டு கூரிய உளி நுனியால் சிறிது சிறிதாக சீவி எடுத்து வேலைப்பாடு மிக்க கால்களை தயாரிக்கும் திறமை காலங்காலமாக தெரிந்து வந்திருக்கிறது. இதை தற்காலத்தில் லேத் எந்திரங்களில் துல்லியமாகச் செய்யலாம்.

ஆனால் பல டன் எடையுள்ள பத்து பன்னிரண்டு அடிக்கும் உயரமான பெரும் பாறாங்கல்லை சுழற்றுவது என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

இதைப்பற்றியே இரண்டு நாட்களாக சிந்தித்துக் கொண்டிருந்த போது ஒன்று தோன்றியது. கல்லை ஏன் சுழற்ற வேண்டும்? அதற்கு பதிலாக அந்த கல்-உளியை சுற்றி வரத் தேய்த்தால் ? உடனே நினைவிற்கு வந்தது செக்கு ஆட்டி எண்ணெய் எடுக்கும் முறைதான். அதனை சற்றே மாற்றி அமைத்தால் பெரும் கல்லையும் கடைந்து தூண்கள் செய்யலாம். கீழே உள்ள படம் அந்த முறையை கோடிட்டு காட்டுகிறது.


( Click on the figure to view larger picture)

 கல்லைத் தாங்கும் மேடை  ( pedastal) பெரிய மரத்தின் அடிப்பாகமாக இருக்கலாம் அல்லது இன்னொரு செம்மை படுத்தப்பட்டகல்லாகவும் இருக்கலாம். சுற்றிவரும் மரச்சட்டம் அதன் உரல் போன்ற சிறுத்த இடைப்பகுதியில் சுழற்சிக்கு ஏதுவாக தளர்வாக வில் போன்ற அமைப்பில் பொருத்தப்பட்டிருக்கும். எண்ணெய் செக்குகளின் படத்தைப் பார்த்தால் புரியும்.

 கல்லுளியைக் கொண்டு சுற்றிச் சுற்றி தேய்க்க வேண்டுமானால் அதற்கு ஏதேனும் சக்தி வாய்ந்த காளை, குதிரை யானை போன்ற மிருகங்களால்தான் முடியும். மேலும் அவ்வளவு பெரிய கற்களை இடம் விட்டு இடம் நகர்த்தவும், தூண்களைத் தூக்கி நிறுத்தவும் யானைகள் கண்டிப்பாக பயன்பட்டிருக்கும். சோழர்கள் காலத்தில் யானையைக் கட்டி போரடித்ததாக (நெற்கதிர் பிரித்தல் ) வழக்குண்டு. அதனால் தான் கல்லை சுரண்டி எடுக்கும் வேலைக்கும் யானையை மிருகங்களின் பிரதிநிதியாக வரைந்தேன்.

 இந்த விளக்கப்படம் Paint-3D ல் வரையப்பட்டது.

 கல்லைத் தேய்ப்பது அவ்வளவு சுலபமா? இதற்கு விடை ஏற்கனவே என் பேலூர் சிற்பங்கள் பதிவில்  சொல்லியிருக்கிறேன்(Click the 'Label' word below the article). Soap stone எனப்படும் இவைகளை கூரிய நுனியால் எப்படி வேண்டுமானாலும் செதுக்கலாம். நம் காலத்தில் ஆரம்பப் பள்ளியில் பயன் படுத்திய சிலேட் பலகையும் இந்த வகையை சேர்ந்து தான்.

 சுமார் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் சும்மா கிடந்த சிலேட்டுப் பலகையில் நான் செதுக்கிய சிற்பத்தைத் தான் கீழே பார்க்கிறீர்கள். வீட்டில் கிடந்த சிலேட்டை ஒரு கலைப் பொருளாக மாற்றுவதற்கு பயன்பட்டது ஒரு screw driver. அந்த மயில் படம், அந்த காலத்து இன்லேண்ட் லெட்டரில் காணப்பட்ட தபால் தலை சித்திரமாகும்.
எப்படியோ ஹொய்சளர்கள் புதிர் ஒன்றை விடுவித்தாயிற்று.  இதற்காக யாரும் பரிசுத் தரப் போவதில்லை என்பது வேறு விஷயம். வாசகர்களின் பாராட்டுகளே பெரிய பரிசு :))