Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Saturday, August 13, 2016

சித்திரமும் மவுஸ் பழக்கம்-4


சமீபத்தில் நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்டதன் பேரில் ஒரு பள்ளி மாணவர்களுக்கான கதைக்கு சித்திரம் வரைந்து கொடுத்தேன்.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதே அதன் தாத்பரியம்.

தம்பி மீது அபாண்டமாக பழி சுமத்திய அண்ணனுக்கு  அன்றே பள்ளியில் ஒரு அபாண்டமான பழி வந்து சேர்கிறது. தாயின் அன்பு போதனையால் அண்ணன் தவறை உணர்ந்து மன்னிப்பு கோருகிறான். இது தான் கதை.

இதற்கான படங்களை ஒரு காமிக் ஸ்டிரிப் வடிவத்தில் கறுப்பு வெள்ளையில் வரைந்து அனுப்பிய பிறகு அதற்கு  ஃபோட்டோ ஷாப்-பில் வர்ணம் பூசி பார்க்கலாமே என்று தோன்றியது. எனக்கு புதியது அதனால் ஆர்வம் அதிகம். அதில் பல ஜித்தர்கள் whatsapp--ல் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்.

இது வரை M S Paint-ல்  மட்டும்  கொஞ்சம் பழகியிருந்தேன். ஆனால் வித விதமான பிரஷ்கள், எளிமையான நுட்பங்கள், பல படங்களை ஒன்றாக்கி செய்யும் வித்தைகள் எல்லாவற்றையும் போட்டோ ஷாப்பில் செய்யலாம் என்று கேள்விப்பட்டு அதை ஒருவர் மூலம் என் கணினியில் தரவிறக்கம் செய்து கொண்டேன்.

முதலில் கறுப்பு வெள்ளைப் படம் :


பின்னர் இதே படத்தை பிரித்து தனித்தனி படங்களாக  ஃபோட்டோ ஷாப் மூலம்  வர்ணம் பூசினேன். அதன் விளைவுஓவியம் வரையத் தெரியாது  ஆனால் நல்ல வர்ண ரசனை உண்டு     என்பவர்களுக்கும் கூடவே பொறுமையும் இருப்பவர்களுக்கு  இது ஒரு நல்ல தொழில் நுட்பம். குறிப்பாக விளம்பரத்துறையில் இருப்பவர்களுக்கு இதன் தேவை அதிகம் என்று நினைக்கிறேன்.  


( click the pictures  in larger size)

எனக்கு இதில் தென்பட்ட வசதிகள் என்ன வென்றால்  சுலபமாக  வேண்டாத பகுதிகளை வெட்டி எடுப்பது, எல்லைகளை குறிப்பிட்டு அதனுள் வர்ணங்களை நிரப்புவது,  வர்ணத்தை வெவ்வேறு அடர்த்தியில் பூச முடிவது போன்ற இவ்வசதிகள் MS Paint -ல் கிடையாது. கூடவே cloning smudging  போன்ற வசதிகளும் உண்டு.

ஆனால் ஒரு கிரேயான் அல்லது வர்ண பென்சில் துணையுடன் 10 அல்லது 15 நிமிடங்களுக்குள் முடிய வேண்டிய காரியத்திற்கு மணிக்கணக்காக  மெனக் கெட வேண்டுமா என்று தோன்றுகிறது.

ஏதேனும் காரணத்தால் மூலப்பிரதி கெட்டுப் போயிருந்தால் அதை சீர்திருத்துவதற்கு இதைப் போன்ற மென்பொருட்கள் கண்டிப்பாக பயன்படும்.


Saturday, February 20, 2016

சீனத்துத் துரகம்

சுமார் பத்து வருடங்களுக்கு முன் வரையப்பட்ட ஒரு சித்திரம்  பழைய புத்தகங்ளை புரட்டிய வேளையில்  கையில் அகப்பட்டது. ஹாங்காங் ஓட்டல்  அறையில்  பேஸ்டல் வர்ணத்தினால் வரையப் பட்டது. ஒரு சீனத்து பத்திரிக்கை  கை வினைத் தாெழில் பற்றிய விளம்பரம் ஒன்றின் படம் என்று நினைக்கிறேன்.


சீனாவின் சரித்திரத்தில் குதிரைகளுக்கு தனி இடம் உண்டு. கிமு 104 ல் வூ என்ற அரசன்  2000 மைல்களுக்கப்பால் படைகளை அனுப்பி சுமார் 3000 குதிரைகளை மத்திய ஆசியாவிலிருந்து பிடித்து வர செய்தான்.  அவைகளில் பாதிக்கும் மேலே வழியிலே இறந்து விட்டன. இந்த வெற்றியும் இரண்டாம் முயற்சியில் தான் கிட்டியது. உலகத்தில் குதிரைகளுக்கான    பாேர் இது ஒன்றுதானாக இருக்கும்.
குதிரையின் பெயரில் ஆண்டுகளுக்கு பெயரிடுகையில் ஒரு ஆண்டை ஒதுக்கி உள்ளனர் சீனர்கள். கடந்த 2014 ஆம் ஆண்டு Year of Horse ஆகும். இனி மீண்டும் 2026 ல் தான் அடுத்து வரும்.

இனி  குதிரைகளுக்கே உரிய சில விஷயங்கள்.

பிராணிகளிலே மிகப்பெரிய கண்கள் குதிரைகளுடையதாம். அவைகளால் தம்மைச் சுற்றி 360 டிகிரியிலும் பார்க்க முடியும்.

அவற்றின் ஆயுள் சராசரியாக 20 முதல்  25 ஆண்டுகள். ஆனால் அறுபது வயது வரை வாழ்ந்த குதிரைகளும் உண்டு.

அவைகளின் குளம்புகள் ஏற்பட காரணமாயிருக்கும் புரதங்களும் மனிதர்களின் நகங்களில் உள்ள புரதமும் ஒரே வகையை சேர்ந்தவை.

நின்று   காெண்டே தூங்கும் பழக்கமுடைய குதிரைகள் ஓட ஆரம்பித்தால் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் ஓட வல்லவையாகும்.

நம்பிக்கைக்கும் ஞாபக சக்திக்கும்  உடல் வலிமைக்கும் பெயர் வாங்கிய குதிரைகள் ஒரு வகையில் ஏமாளிகளும் கூட. அதனால் தான் சீனத்துக் கதைப்படி  தேவ லாேகத்து பெரும் ஆற்றை கடக்கும்   பாேட்டியில் ஏழாவது இடத்திற்கு அதுத் தள்ளப்பட்டது.

ஹும்  ! மனித உண்மைகள் பிராணிகளை காரணப் படுத்தி நமக்கு உணர்த்தப் படுகின்றன.

Monday, January 4, 2016

நம்பிக்கை தான் விளக்கு

2015 கழிந்து 2016 வந்தாயிற்று. சென்ற ஜுலை மாதம் தலையில் எதிர்பாராத ஒரு சிறு அறுவை சிகிச்சை. விளைவு , வலது கை பேனா அல்லது பென்சில் பிடித்து எழுதும் திறனைசற்று இழந்து விட்டது. கையெழுத்து கூட போட இயலாமை. நான் எழுதுவதை என்னாலேயே படிக்க முடியவில்லை. சிறு குழந்தையின் கிறுக்கல்கள் போலக் காணப்பட்டது. குடும்பத்தினருக்கு உடல் நலமானதில் மகிழ்சி. எனக்கோ பெரும் மனவாட்டம். ஓவியம் வரைய முற்பட்டாலும் அதே பிரச்சனை. சிறிய வளைவு சுளிவுகளுக்கு விரல்கள் ஒத்துழைக்க மறுத்தன. ஆனால் வேறு எல்லா செயல்களும் - சாப்பிடுவது, சட்டை அணிவது, தட்டச்சு செய்வது போன்றவை- எல்லாம் இயல்பாகவே நடந்தது. மருத்துவர் நாளடைவில் இந்தக் குறை சரியாகி விடும் என்று தைரியம் அளித்தார்.
தன் முயற்சியில் சற்றும் தளரா விக்கிரமன் போல நான் கணினி உதவியால் படம் வரைந்தேன். பயன்படுத்தப்பட்ட மென்பொருள் MS  Paint brush.

கைகளே இல்லாதவர்கள் வாயினாலும் காலினாலும் அற்புதமான ஓவியங்களை வரைந்து சரித்திரம் படைக்கும் கலாவிதர்களை போற்றி அவர்களால் உற்சாகம் அடையும் ஆண்டாக 2016 மலரட்டும்.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.