Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Tuesday, December 18, 2007

எல்லாமே வயத்துக்குத்தாண்டா !

'எல்லாமே வயத்துக்குத் தாண்டா, இல்லாத கொடுமைக்குத்தாண்டா ' என்ற பழைய சினிமா பாட்டு ஞாபகம் வந்தது இந்த சர்கஸ் யானையை பார்த்தவுடன். முஞ்சூரின் மேல் பிள்ளையார் போனால் இப்படித்தான் இருக்குமோ. எங்கோ காட்டில் தன்னிச்சையாக திரிய முடியாமல் மனிதர்களின் பிழைப்புக்காக தன் போக்கையும் மாற்றிக்கொண்ட யானைகளை விடவும் தியாகசெம்மல்கள் உண்டோ.


இந்தப் படம் சார்-கோல் எனப்படும் கரித்துண்டு வைத்து வரைந்தது. இப்போதெல்லாம் அடுப்புக்கரி இல்லாததால் artists' charcoal என்று கேட்டு வாங்க வேண்டும். மனிதனுடைய முதல் எழுதுகோல். இதில் என்னப் பிரச்சனை யென்றால் மிக சுலபமாக அங்கங்கே வரைதாளிலும், சட்டையிலும் ஏன் கொஞ்சம் அஜாக்ரதையானால் மூக்கிலும் கன்னத்திலும் கூட ஒட்டிக்கொண் டு பழங்காலத்து ரயில் இஞ்சின் ட்ரைவர் போல காட்சியளிப்போம். இக்குறையைப் போக்க சில பிக்ஸ்ஸேடிவ்ஸ் (fixatives) கிடைக்குமாம். அதை வாங்கலாம் என்று விசாரித்தபோது " ரூபாய் 1200, உங்களுக்காக ரூ. 800க்கு தருகிறேன் என்றதும் பிடித்தேன் ஓட்டம்.
அது சரி அது என்ன மேல ஒரு டைட்டில் என்கிறீர்களா ? இதை உங்கள் அலுவலகத்தில் ஒட்டி வையுங்கள். பல பிரச்சனைகளை வராமல் தடுக்கும் சக்தி அதுக்கு உண்டு. இது அனுபவ பூர்வமான உண்மை. தங்கள் குறைகளை பெரிதாக எடுத்துக் கொண்டு வரும் பலருக்கு பேசாமலே பதில் சொல்லிவிடும் சக்தியை இந்த ஆனைமுகத்தான் தந்து விடுவான்.

Friday, December 14, 2007

ப்ளாக் ஈஸ் ப்யூட்டிஃபுல்

கறுப்பை கறுப்பாகத் தீட்டாதே என்பது வலையுலகில் தெரிந்து கொண்ட ஒரு முக்கியமான பாடம். பொதுவாக கறுப்பு வர்ணம் என்று நாம் நினைப்பதை தூரிகைப் பிடித்தவர்கள், பல அடர் வர்ணங்களின் கூட்டுக்கலவையாக பார்க்கச் சொல்லுகின்றனர். இதனால் ஒளிப் பிரிகை அதன் வேறுபடும் அடர்வுகளுக்கு ஏற்ப கறுப்பை சற்று வித்தியாசமாகக் காட்டுகிறது.

கண்ணன் கறுப்பு. ஆனால் அவனை நீல வண்ணக் கண்ணன் என்கிறோம். நம்மூர் ஓவியர்களும் சினிமாக் காரர்களும் அவனுக்கு நல்ல காப்பர் சல்பேட் நீலத்தை பூசி காட்டுவர். மழை மேகம் போன்றவன் என்ற பெயரும் அவனுக்கு உண்டு. ஆப்பிரிக்க இன மக்களின் சில வண்ண படங்களை கவனித்தால் கறுப்பு எப்படி நீலமாகத் தெரிகிறது என்பது புரியும். கீழே இருக்கும் சிம்பன்ஸியை கவனியுங்கள். நான் கற்ற பாடத்தை பின்பற்ற முயன்றிருக்கிறேன்.

சாதாரண வெள்ளை அட்டையில் பேஸ்டல் கட்டிகளைக் கொண்டு தீட்டப்பட்டது.
இதை வேண்டுமென்றே ஸ்மட்ஜ் செய்யாமல் உடலின் ரோமங்கள் எடுப்பாக தெரியும்படி விட்டுவிட்டேன்.

Monday, December 10, 2007

காக்காய் பள்ளிக்கூடம்

என் முதல் வகுப்பில் முதல் பாடம் காக்காய் பள்ளிக்கூடம்.
வாத்தியார் காக்கை மாணவ காக்கைகள் எல்லாம் கூரை மேல் அமர்ந்திருக்கும் . எல்லா காக்கைகளுக்கும் நீள வாட்ட தொப்பி உண்டு. வாத்தியார் காகம் சற்று பருமனாக புகைக்கூண்டின் மேல் இருப்பது போலவும் எட்டு, பத்து மாணவ காக்கைகள் கூரை மேல் சிலேட்டுடன் அமர்ந்திருக்கும் சித்திரம் மறக்கமுடியாதது. பள்ளிக்கு போவதன் அவசியத்தை அழுகின்ற குஞ்சு காக்கைக்கு அதன் தாய் காகம் புரிய வைப்பது பாடத்தின் மையக் கருத்து என்பதாக ஞாபகம்.
ஒரு பத்திரிக்கையில் இதை நினைவூட்டும் வகையில் ஒரு நிழற்படத்தை பார்த்தவுடன் கை அரிக்கத் தொடங்கியது. கையில் கிடைத்த ஒரு விளம்பரத் தாளின் பின்பக்கத்தில் பேனாவை வைத்து வரைந்த சித்திரம் கீழே.இதில் முக்கியமான சேலஞ்ச் ஓடுகள். அதை ஸ்டிப்லிங் என்ற முறையில் புள்ளிகள் வைத்து அதன் அடர்த்தியை வேறு படுத்துவதன் மூலம் ஓடுகளின் வளைவுகளை காட்ட முயற்சித்திருக்கிறேன். கூரையின் கீழ் நிழல்களின் ஒளி அளவை க்ராஸ் ஹேட்சிங் மூலம் செய்தேன்.

கோட்டை விட்டது ஓடுகளின் நேர்வரிசை. பேனாவில் வரைவதில் உள்ள சிக்கல்களில் இது ஒன்று. சுமார் ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை.

Sunday, December 9, 2007

கறுப்பு -வெள்ளை : காலத்தால் இளமை

என்னதான் சொல்லுங்கள் கறுப்பு வெள்ளைப் படங்கள் தரும் ஒரு நிறைவை வண்ணப்படங்கள் தருவதில்லை. இப்படி சொல்வது நான் இல்லை, ஒரு பெரிய புகைப்பட நிபுணர். பெயர் நாகராஜன் என்று நினைவு. ஒரு ஓவியனின் பார்வையிலும் பெரும் வித்தியாசம் இருக்கமுடியாது.

மைசூர் திப்புசுல்தான் அரண்மனையில் அவருடைய குடும்பத்தை ஒரு ஆங்கிலேய ஓவியன் வரைந்திருந்த கறுப்பு வெள்ளைப் படங்களைப் பார்த்த போது அது உண்மையெனப் புரிந்தது. மிகவும் உயிரோட்ட மிக்க அந்த ஓவியங்களைப் பார்த்தபின் எனக்கும் அது போல வரைய வேண்டும் என்று ஆர்வம் பற்றிக்கொண்டது.

என்னைப் பொருத்தவரை கறுப்பு வெள்ளைப் படங்களில் ஒரு வசதி. வெறும் காகிதமும் பென்ஸிலும் போதும். மன அரிப்பிற்கு உடனடியான நிவாரணம். சமயத்தில் பென்ஸில் இல்லாவிட்டால் பேனாவே துணை.

வேகமாக வரைவதை -sketching- பயிற்சி செய்ய வேண்டுமானால் பேனாவே சிறந்தது. அதில் அழித்து திருத்த முடியாது. பென்சிலில் மீண்டும் மீண்டும் அழித்து மாற்றத் தோன்றும். தூக்கிப் போட்டு விட்டு வேறொன்றை புதிதாக துவங்க மனம் வராது. இது என் பலவீனம். இந்தப் பதிவிற்கான படம் இதோ !!No harsh lines please என்று ஒரு உபதேசத்தை படித்ததன் விளைவு இந்தப் படம். இத்தகைய படங்களை வரைய ஆரம்பித்த பின்தான் பென்ஸிலை விட அதிக பங்கு ரப்பருக்கு உண்டு என்பது புரிந்தது. எப்படியோ அந்த மாடல் பெண் இன்னும் என் வரை புத்தகத்தில் சிரித்துக் கொண்டிருக்கிறாள்.

Thursday, December 6, 2007

இரு பறவைகள்


இது சாதாரண வரைப் படத் தாளில் நீர் வர்ணத்தால் வரையப்பட்டது. இதை வரைய தேவைப் பட்ட நேரம் சுமார் 15 நிமிடங்கள். தொலைக்காட்சியில் சீன பெயிண்டிங்குகள் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார் ஒருவர். அவர்களின் மூங்கில் காடுகளையும், இலைகளையும் வரைதலை தூரிகையை எடுக்காமலேயே போட்டு காட்டியதில் அசந்து போய் அவசர அவசரமாக நானும் ஒரு காலண்டரில் இருந்த படத்தை போட்டு பார்த்ததன் விளைவு. இதை பென்சிலில் வரைந்து கொள்ளாமலே நேரடியாக வரைந்ததும் மிக குறுகிய நேரத்திலே செய்ததும் சிறப்பு அம்சம்.

இத்தகைய படங்களில் perfection ஐ எதிர்பார்க்கக் கூடாது என்பதாகவும், பெரும் கலாவிதர்கள் இம்முறையை on-the-spot notes போல உபயோகிப்பார்கள் என்றும் பின்னர் அறிந்து கொண்டேன்

ஏனோ இதைத் தொடர்ந்து பின்னர் இதே முறையில் வரையவில்லை. :((

Wednesday, December 5, 2007

முதல் வணக்கம்ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தனை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே

இது ஒரு புகைப்பட பத்திரிக்கையில் வெளியான புகைப்படத்தைப் பார்த்து வரையப்பட்டது. பேஸ்டல்கள் எனப்படும் வர்ணக் கட்டிகள் கொண்டு தீட்டப்பட்டது. இப்படத்தில் கற்களின், சிற்பத்தின் நளினமும், ஒளிச் சிதறலும் என்னை வரையத் தூண்டின.

ஆடத் தெரியாத .......... யா மேடை கோணல் ன்னு சொன்னாளாம். பிள்ளையாருக்கு அவனப்பனைப் போல ஆட வராதுங்கிறதால கோணல் மேடையை நீயே போட்டுக் குடுத்துட்டியா அப்படீன்னு ஏற்கனவே ஒரு கமெண்ட் வந்தாச்சு. உங்க கமெண்ட் போடுங்க