Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Tuesday, January 27, 2009

பால் திருடும் பறவை

உணவு பழக்க வழக்கங்கள் ஊருக்கு ஊர், நாட்டிற்கு நாடு மாறுபடும். வளர்ப்பு பிராணிகளும் ஓரளவு மனிதனோடு சேர்ந்து இருப்பதாலோ என்னமோ சில மாற்றங்களை ஏற்றுக் கொள்கின்றன. உதாரணத்திற்கு தில்லியில் அன்னத்தை நாய்களோ பசுவோ எதுவும் சீந்தாது. ஏன் காக்கைக் கூட எட்டி பார்க்காது.

அந்த ஊரில் காலையில் வீதியில் திரியும் பசுவைத் தேடிப்போய் ராத்திரி மிச்சமான ரொட்டியை கொடுத்தால் ஆனந்தமாக சாப்பிடுகிறது. நம்மூர் பசுக்களுக்கு சப்பாத்தி ருசிக்குமா என்று இன்னும் பரிட்சித்து பார்க்கவில்லை.

ஆனால் பறவைகள் புதிய உணவு முறைகளை கண்டறிந்து கொள்வதில் உள்ள வியப்பை கிரேட்-டிட் எனப்படும் இந்த பறவையை வைத்து ஆராய்கிறார்களாம்.

இது இங்கிலாந்தின் குருவி. துருதுருவென்று எப்போதும் கழுத்தையும் வாலையும் இப்படியும் அப்படியுமாக ஆட்டிக்கொண்டு இங்கும் அங்குமாக தவ்வித் திரியும். காலையிலே பால்காரன் வண்டி பின்னாலேயே தொடர்ந்து போகும். வாசலிலே பாட்டிலை வைத்து சென்றவுடனே அதன் மேல் அமர்ந்து மூடியிருக்கும் அலுமினியம் ஃபாயிலை துளையிட்டு பாலை குடிக்க ஆரம்பிக்கும்.

அதனால் அந்நாட்டில் பால் வழங்கும் முறையையே மாற்ற வேண்டியதாகப் போயிற்று!!

இந்த பால் தனக்கும் கூட உணவாகும் என்பதை எப்படி கண்டு கொண்டது ? துளையிட்டால் குடிக்க முடியும் என்பதையும் குறிப்பிட்ட நபர்களின் வருகைக்கும் பால் பாட்டிலுக்கும் உள்ள தொடர்பையும் எப்படி தெரிந்து கொள்கிறது. ? இவையெல்லாம் தான் ஆராய்ச்சியாளர்களின் ஆர்வம்.
நமக்கு இறைவன் படைப்பில் எல்லாமே அதிசயதக்கதுதான். எறும்பு ’சர்க்கரை’ என்ற லேபிளைப் பார்த்தா சர்க்கரை டப்பாவை கண்டுகொள்கிறது ! எல்லா ஜீவன்களுக்கும் படியளப்பவன் அதற்கு தேவையான அறிவையும் கொடுத்தே படைத்திருக்கிறான்.

பறவைகளைப் பற்றிய வர்ணத் தொடர் ஒன்றை செய்யலாம் என்றெண்ணி ஒரே அளவான அட்டையில் செய்த இரண்டாவது (கடைசி)படம் இது.

என்ன காரணத்தினாலோ இதை அப்போது(20 வருடத்திற்கு முன்) தொடர முடியவில்லை. முதலாவது தான் சென்ற பதிவில் பார்த்த மீன்கொத்திப் பறவை. திரும்பவும் அதே வகை அட்டை (அஞ்சல் அட்டை அளவு) கிடைத்தால் செய்யலாம் என்று இருக்கிறேன்.

Thursday, January 1, 2009

புது வருடம் சிறக்க - ஒரு கிரேக்க நாட்டு கதை

காற்றுக் கடவுளுக்கு அல்ஸியோன்( Alcyone) என்றொரு மகள். அவளுடைய கணவன் கடலிலே போனவன் திரும்பவில்லை. அவனுடைய கப்பல் விபத்தில் மூழ்கியது கேட்டு அவளும் கடலில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்கிறாள். ஆனால் வாயுவின் புத்திரி ஆயிற்றே. அவர்கள் இருவரையும் மீன்கொத்திப் பறவைகளாக்கி உயிர்ப்பிக்கிறார்.

நம் ஊர் கதை போலவே, அவர்களுக்கு ஒரு வரமும் அளிக்கப் படுகிறது. அவைகள் கடலில் மிதக்கும் கூடுகள் அமைத்து முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் காலத்தில் கடல் எவ்வித அலைகளும் இல்லாமல் புயல் சூறாவளி இல்லாமல் அமைதி காக்கும். அப்படிப்பட்ட அமைதிக்கு ஹேல்ஸ்யன் (halcyon) என்று பெயர். கதையை முடித்து விடுவோம். அதன் பின்னர் அவைகள் ஆனந்தமாக வாழ்ந்தன.

இந்த கதையை நினைவூட்டூம் வகையில் தான் இந்த பறவைகளுக்கு Alcedo atthis, Halcyon smyrnensis என்ற பலவாறாக பெயர்கள் சூட்டியுள்ளனர் உயிரியல் வல்லுனர்கள்.

இந்த அல்ஸியோன் வகை மீன்கொத்தியைக் கண்டால் (கடலில்)அமைதி வரும் என்ற நம்பிக்கை மாலுமிகளுக்கும் மீனவர்களுக்கும் உண்டாம். இதை ஷேக்ஸ்பியரும் தன்னுடைய ஹாம்லெட் -ல் குறிப்பிட்டிருக்கிறாராம்.

(ஹி..ஹி..நான் அதெல்லாம் படிச்சது இல்லீங்க. நெட்-ல சுட்டினது தான் :-)))

Some say that ever 'gainst that season comes
Wherein our Saviour's birth is celebrated,
The bird of dawning singeth all night long;
And then, they say, no spirit can walk abroad;
The nights are wholesome; then no planets strike,
No fairy takes, nor witch hath power to charm,
So hallow'd and so gracious is the time.

Hamlet, I, i 157


ஆகையினாலே மீன்கொத்தி பறவையை தரிசனம் செய்தால் அமைதி திரும்பும் என்ற நம்பிக்கையொடு, இருபது வருடங்களுக்கு முன்பு ஒரு போஸ்ட் கார்டு அளவிலான அட்டையில் வரையப்பட்ட மீன்கொத்தி பறவையை தரிசனம் செய்து கொள்ளுங்கள்.இது நீர் வர்ணத்தில் வரையப்பட்டது.

கிங்ஃபிஷர் என்று சொன்னாலும் இங்கே நீங்கள் பார்ப்பது குயின் ஃபிஷர் தான் !

எப்படின்னு கேட்கிறீங்களா ? ராணிக்கு மட்டும் தான் அலகின் அடிபாகத்தில் சிவப்பு வர்ணம் இருக்குமாம்.

எப்படியோ, ஆளாளுக்கு ஒவ்வொரு விதமா வருஷ பலனை கணிச்சுகிட்டிருக்காங்க. நமக்கு Halcyon தரிசனமாயிடுச்சு. எல்லாம் நல்ல படியாகவே நடக்கும்.

God Bless, 2009 be a Halcyon Year.

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.