இசைத் துறையின் ஒரு பெரும் ரத்தினத்தை இன்று (24-01-2011) பாரதம் இழந்து விட்டது. மகான் பாடகர் பீம்சேன் ஜோஷி இன்று அமரரானார். இன்று தியாகராஜ ஆராதனை. சங்கீதத்தையே மூச்சாகக் கொண்டு 88 வருட வாழ்வில் 77 வருடங்களை அதிலேயே ஊறிப்போன ஒரு ஆத்மா தியாகராஜரைப் போலவே நாதோபாசனை செய்தது என்றால் மிகையில்லை.
1972 ல் பத்ம ஸ்ரீ விருது பெற்ற அவருக்கு 1985 ல் பத்மபூஷண், 1999 -ல் பத்ம விபூஷண் மற்றும் 2008-ல் பாரத் ரத்னா விருதுகளை மேலும் வழங்கி இந்திய அரசாங்கம் அவரை கௌரவித்தது.
கர்நாடக ராஜ்ஜியத்தின் தார்வாட் ஜில்லாவை சேர்ந்த ஜோஷி சங்கீதப் பித்து பிடித்து பதினோரு வயதிலேயே வீட்டை விட்டு குருவைத் தேடி குவாலியர், கல்கத்தா டில்லி என்று அலைந்தவர். மூன்று வருடங்களுக்குப் பின் ஜலந்தரில் அவர் இருப்பதை கண்டுபிடித்து அவரது தந்தையார் அவரை திரும்பவும் அழைத்து வந்து அவரது ஊருக்கு அருகிலேயே சங்கீதப் பயிற்சிக்கு ஸவாய் காந்தர்வ் என்னும் குருவிடம் சேர்த்து விட்டார். குருகுல முறையில் முறையாகப் பயிற்சி பெற்ற அவருக்கு விரைவிலேயே பெயரும் புகழும் தேடி வரலாயிற்று. எச்.எம்.வி நிறுவனத்திற்காக பாடப்பெற்ற ஹிந்துஸ்தானி இசைவழிப் பாடல்களும் கன்னட தாஸரபதங்களும் மக்களிடையே மிகவும் பிரபலமாயின.
[சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் வரையப்பட்ட பீம்ஸேன் ஜோஷி அவர்களின் பென்சில் வரைபடம்]
புரந்தரதாஸரை கர்நாடக இசைமுறைக்கு தந்தை என்று சொல்வார்கள். அதற்கு இலக்கணம் வகுத்தவரே அவர். ஆனால் அவரது பல புகழ் பெற்ற பாடல்களை ஹிந்துஸ்தானி முறையில் பாடி இசைப் பிரியர்களின் மனதை கொள்ளை கொண்டவர் திரு ஜோஷி.
சில ஹிந்தி மற்றும் கன்னட திரைப்படங்களுக்கும் பின்ணணி குரல் கொடுத்திருக்கிறார்.
பொதுவாக நமக்கு ஹிந்துஸ்தானி இசையை ரசிப்பதில் சற்று சிரமம் உண்டு என்பதால் யாவரும் நன்கு அறிந்த ’பாக்கியதலக்ஷ்மி பாரம்மா’ என்ற பாடலை எளிமையாக அவர் குரலில் திரையிசையாக இங்கே காணலாம். இதில் நடித்திருப்பவர்கள் திரைப் பிரபலங்கள் அனந்த் நாக், சங்கர்நாக் மற்றும் லக்ஷ்மி.
No comments:
Post a Comment