Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Sunday, January 11, 2015

ஒளி - நிழல் விளையாட்டு

இந்த ஒளி -நிழல் விளையாட்டில் அடிக்கடி மனம் இழப்பவன் நான்.  நேற்று அலுவலகத்தில் கணிணியில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தவன் தற்செயலாக  கண்களை விலக்கி எதையோ எடுக்கப் போன எனக்கு சட்டென்று கண்ணைக் கவர்ந்தது மேசை மேல் என் மூக்குக் கண்ணாடி.  அது சன்னல் வழியே வந்த சூரிய வெளிச்சத்தில் காட்டிய நிழலாட்டத்தைத் தான் கீழே காண்கிறீர்கள்.

பள்ளிகூடப் பாடத்தில், ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்தில் ஒளி பாயும் பொழுது  ஏற்படும் ஒளி விலகல் ஒளிச் சிதறல் போன்றவற்றைப் படித்திருந்தாலும் அவை எல்லாவற்றையும் ஒரு சேர கண்டபோது விஞ்ஞானம் வெளிவரவில்லை. உள்ளே இருந்த ஓவியன் வெளிவந்தான். அதை அப்படியே சில நிமிடங்களுக்குள் பிடித்துவிட வேண்டும் என்று கைகள் பரபரத்து வரையப் பட்ட சித்திரம் இது.

ஃபிரேம், அதனுடைய நிழல் இரண்டும் வெவ்வேறு வகையில் விலகி செல்கின்றன.   நிஜத்தில் இரண்டு பக்க வளைவுகளும் வெவ்வேறு உயரத்தில் விலகி இருப்பினும் நிழலில் அவையிரண்டும் சங்கமித்திருக்கின்றன. அதைப் போலவே   பொதுவாக நாம் டிரான்ஸ்பரண்ட் என்று கருதும் லென்ஸின்   ரீடிங் லென்ஸ் விளிம்புகள் நிழலில் கருப்பாக அரைவட்ட வடிவில் (வெளிச்சத்தை அனுமதிக்காது) இருக்கிறது. ஆனால் கண்ணாடியின் நுனிப் பகுதி அதிக வெளிச்சச் சிதறலை உண்டாக்கி ஒரு ஒளிவட்டத்தை  ஏற்படுத்தி இருப்பதைக் காணலாம். ஃபிரேமும் நிழலும் லென்ஸின் வழியே பார்க்கப்படும் போது ஒளி விலகலால் நேர்கோடாக இல்லாமல் துண்டித்து இருப்பன போல் காணப்படுகின்றன.

படத்தை அலைபேசியில் படம் பிடித்து போட்டிருக்கிறேன்.

பல பெரும் ஓவியர்கள் தண்ணீர் துளி,  கண்ணாடி ஜாடி போன்றவற்றை மிக தத்ரூபமாக வரைந்திருப்பதைப் பார்த்து வியந்திருக்கிறேன். இது எனது முதல் முயற்சி. புது வருடத்தில் புதிய முயற்சியும் வரவேற்கப் படவேண்டிய ஒன்று தானே !
வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்.


Friday, October 24, 2014

க்ரேயான் குமரன்

தீபாவளி என்கிற பெயர் சொல்லி நாலு நாள் தொடர்ந்த விடுமுறை.  என்ன செய்யலாம்னு பார்த்த போது கண்ணிலே பட்டது சண்முகனுடைய வரைபடம்.  ஒரு கதைக்காக நான் வரைந்த ஒரு பென்சில் படத்தை சில மாதிரி பிரிண்ட் போட்டுப் பார்த்து பின் ஒதுக்கப்பட்ட ஒரு A4 தாளில் இருந்த முருகன் ’அருள்’ என் கவனத்தைக் கவர்ந்தது. அதற்கு வர்ணம் தீட்டினால் சண்முகன் எப்படி இருப்பான் என்று பார்க்கும் ஆவல் மேலிட்டதால் வர்ணப் பென்சில்களைத் தேடினேன். கிடைக்கவில்லை. க்ரேயான் வர்ணக் கட்டிகள் சில கிடைத்தன.  க்ரேயான் வர்ணத்தில் அதிகம் ஆர்வமில்லாதவன் நான். ஏனெனில் அதில் தவறு வந்தால் ’அழிப்பானால்’(eraser) சரி செய்ய இயலாது. ஆனாலும் வேறு வழியில்லாமல் பொழுது போக்குவதற்காக அவற்றைக் கொண்டே ஆரம்பித்தேன்.
இந்த நிகழ்ச்சி அகல்கோட் மஹராஜ் என அழைக்கப்படும் சுவாமி சமர்த்தரின் மகிமையை குறிக்க வந்ததாகும். ராமாசாஸ்திரி என்ற பக்தருக்கு ஒரு கார்த்திகை பௌர்ணமியன்று சாட்சாத் சண்முகனாகவே காட்சி தந்து அருள் பாலித்ததை குறிக்க வந்தது. ஒரு கரம் இடுப்பிலும் மற்றொரு தூக்கிய அபயத் திருக்கரமும்  சுவாமி சமர்த்தரின் புகழ் பெற்ற படங்களில் ஒன்று. அதை அந்த அடிப்படையிலேயே சண்முகனின்  பன்னிரு கரங்களில் இரண்டு கரங்களை வரைந்தேன்.  அந்த ஒற்றுமையைக் காட்ட பின்ணணியில் அவருடைய புகைப்படம் ஒன்றை வித விதமாக பொருத்திப் பார்க்க விழைந்து சில பிரிண்ட் எடுத்ததால் வந்த வ்ரைபடம் தான் இது. அவருடைய வயிறு மற்றும் மார்பு பகுதிகளில் அழுத்தமான நிழல் காரணமாக குமரனின் சில கைகளின் வரை பகுதி பாதிக்கப்பட்டதால் இந்த படத்தை தள்ளி வைத்தேன். இப்போது வர்ணம் பூசிப் பார்க்கப் பயன் பட்டது.

சுவாமி சமர்த்தரைப் பற்றிய சில குறிப்புகள்:
இவர் சிரடி பாபாவின் சம காலத்தவர். ஆங்கிலேய அரசாங்கம் இவரை அதிக அளவில் மரியாதையுடன் நடத்தியது. அதனால் கோடக் புகைப் படக்கருவி தயாரிப்பாளர்களால் முதன் முதலாகப் புகைப்படத்தில் தோன்றிய துறவி இவரே என்று கூறுவர். இதைப் பற்றி மிக்க சுவாரசியமான கதையைப் படிக்க இங்கே  சுட்டவும்.  திருவண்ணாமலை இரமணரைப் போல இவரும் கோவணதாரி. பக்தர்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து தரிசனம் செய்து போய் கொண்டிருந்தார்கள். இவர் செய்த லீலைகளுக்கு அளவே இல்லை.  தத்தாத்ரேயரின் அவதாரமாகக் கருதப்படும் இவர் மஹாராஷ்ட்ராவில் 1878-ல் அகல்கோட்  என்ற ஊரில் மஹாசமாதி அடைந்தார்.

Sunday, August 17, 2014

கதைக்கும் சித்திரங்கள்

பொதுவாக சித்திரங்கள் வரையும் ஆவலுக்கு வித்திடுவது பெரிய பத்திரிக்கைகளில் பிரசுரமாகி இருக்கும் கதைச் சித்திரங்களே. அதாவது  இப்போது போல் வர்ணப் புத்தகங்கள் அறியப்படாத எங்கள் காலத்தைப் பற்றிச் சொல்கிறேன். கோபுலு, நடனம், வினு, மணியம், மாருதி, லதா, ஜெயராஜ், மாயா, அம்புலிமாமா சங்கர், வாபா  என்று படம் வரைவதற்கான கையரிப்பை உண்டாக்கியவர்கள் வெகு பேர்.
ஆனால் நான் கதைக்கான சித்திரங்களை வரையக்கூடும் என்று நினைத்துப் பார்த்ததில்லை. திரு சந்தானத்திற்கு திடீரென்று எங்கிருந்தோ அப்படி ஒரு நம்பிக்கை வந்து விட்டது என் மேல். இத்தனைக்கும்  இதை அவர் முன் வைக்கும் போது நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டது கூட இல்லை. இந்த வலைப் பூவைக் காண நேர்ந்ததில் அவருக்கு அப்படி ஒரு நம்பிக்கை.

அவர் மொழி பெயர்ப்பு செய்து கொண்டிருந்த ஸ்ரீபாத ஸ்ரீவல்லப சரிதத்திற்கு என்னை சித்திரங்கள் வரைந்து கொடுக்கும்படிக் கேட்டுக் கொண்டார். தத்தாத்ரேயரின் அவதாரமாகக் கருதப்படும் ஸ்ரீபாதவல்லபரின் சரிதத்தை வெளியிடுவது சம்பந்தமாக தொடர்பில் இருந்தோம். அந்த தொடர்பு ஏற்பட்ட விதம் அதைத் தொடர்ந்த பல சம்பவங்கள் எல்லாம் எழுதுவதற்கு தனி பதிவு இட வேண்டும். அதில் எங்கள் இருவருக்கும் தெளிவாகப் புரிந்த ஒரே விஷயம், நம்மை மீறிய ஒரு சக்தி நம்மை வழி நடத்திச் செல்கிறது என்பதே. 

முதலில் ஓரிரண்டு வரைந்து காட்டினேன். அவரோ படம் எப்படியிருந்தாலும் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதில் கண்ணாக இருந்தார். பின்னர் மேலும் ஓரிரண்டை வரைந்துப் பார்த்தேன். “ சார் ஹிந்தி புஸ்தகத்தில் இருபது படத்திற்கு மேலேயே இருக்கு. நம்ம புஸ்தகத்துக்கு பத்து பன்னிரெண்டாவது வேண்டாமா? “ என்று அன்புக் கட்டளை இட்ட பின்பு இதுவும் “அவன் செயலே” என்று எண்ணி அவர் கொடுத்த டார்கெட்டை பூர்த்தி செய்தேன்.
கதையில் ஒரு நிகழ்வைத் தேர்ந்தெடுத்து அதில் வரும் வர்ணனைகளுக்கு  ஏற்ப சில காட்சிகளைக்  கோர்த்து, கதையிலிருந்து பொருத்தமான சில வரிகளையும் உள்ளடக்கினேன். இதன் மூலம் படிக்க நேரமில்லாமல் வெறும் புரட்டி படம் பார்க்கிறவர்களுக்கும் கூட பின்னால் இதை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டலாம் என்ற எண்ணத்துடன் வடிவமைத்தேன். இது எவ்வளவு தூரம் பயனளித்தது என்பது இன்னமும் எனக்குத் தெரியாது.

[ பெரியதாக்கிப் பார்க்கவும்]

படங்கள் Ink & Pencil மாத்திரமே.   சில உங்களுடைய பார்வைக்கு.  ஒரு சித்திரம் மட்டும்  தனியாகக் கீழே.


ஏற்கனவே ஹிந்தி வடிவில் வெளிவந்திருக்கும் சித்திரங்களை விட தனிப்பட்டதாக இருக்க வேண்டும், கதை நடந்த காலத்தை (கிபி 1320) பிரதிபலிக்க வேண்டும் என்பனவெல்லாம் எழுதப்படாத விதிகள்.   
இப்படி ஒரு மகானுடைய சரிதத்திற்கு கற்பனையில் சித்திரம் வரைவது மிக நல்ல அனுபவம். ஒரு பாக்கியம் கூட.  அதை அளித்த திரு சந்தானம் அவர்களுக்கு எப்போதும் என் நன்றி

[’கதைக்கும்’ சித்திரங்கள் என்ற தலைப்பை இலங்கைத் தமிழின் சிலேடையாக பேசும் சித்திரங்கள் என்று வேண்டுமானாலும் கொள்ளலாம். :)) ]

Sunday, December 22, 2013

2013-ம் முடியப் போகிறதே !!

கேரி ஸோபர்ஸ் படத்தை  2012 -ல் போட்ட பிறகு இந்த வலைப்பூவில் ஒரு படமும் வலையேற்றவில்லை. சித்திரங்கள் வரையாமலில்லை. ஓரளவு வரைந்தேன். ஆனால் வலைப்பக்கந்தான் வரமுடியவில்லை.
அதனால் 2013 முடிவதற்குள்ளாவது, இந்த வருட கணக்குக்காக ஓரிரு சித்திரங்களை வலையேற்றி விடுவோம் என்ற எண்ணத்துடன் வந்தாச்சு.

பென்சில் ஜாமர்ஸ் என்ற கலைஞர்களின் இணைய அமைப்புக் குறித்து தமிழ்பறவை எழுதியதிலிருந்து எனக்கும் ஸ்பாட்-ஸ்கெட்சிங் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் கூடியிருந்தது.

அதன் விளைவாக சில படங்களை வரைந்தேன். இவை நான் வசிக்கும் ரிலையன்ஸ் டவுன்ஷிப்-பின் சில காட்சிகள். எல்லாமே ஞாயிறு காலை வேளை ஆறிலிருந்து எட்டு மணிக்குள்ளான காட்சிகள். அப்போது தான் யாரும் இருக்கமாட்டார்கள்.


 பூங்காவில் காலுடைந்த சிமெண்ட் பெஞ்ச் எதிரும் புதிருமாக நான்கு. அதை எதிரில் அமர்ந்து வரைவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. புகைப்படத்தை வைத்து வரைந்தால் சுலபமாகக் கூடிய காட்சிகள், நம் கண்கள் காணும் முப்பரிமாணக் காட்சியை வரைபடத்திற்கு மாற்றுவது கடினமான காரியம்தான். இது தொடர்ந்து பயிற்சி செய்யாமல் கைவராது.


இலையுதிர்ந்த மரத்தைச் சுற்றி  வளர்ந்திருக்கும் அடர்ந்த இலைகள் கொண்ட செடிகளும் கூட ஒரு சித்திரத்திற்கு கருப் பொருளாகலாம் !!

Sunday, December 30, 2012

கேரி ஸோபர்ஸ்-ஸைத் தெரியுமா ?

சமீபத்தில் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய போது ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. என் நினைவிலிருந்து நழுவிப் போயிருந்த ஒரு வரைபடம் என் மேசை மேல் இருந்தது.
 ஊரிலிருந்து வந்திருந்த என் சகோதரன் அவனது அலுவலக மேசை கண்ணாடி அடியில் அதை பாதுகாத்து வந்திருக்கிறான். சரியாக ஆறு வருடங்கள் !!. வரைவு தேதி 01-01-2006. அவனுக்கு நன்றி.
எனக்கு பரம சந்தோஷம், என் வலைப்பூவில் பதிவதற்கு இன்னொரு மலர்ச்சியான சிரிப்புப் படம் கிடைத்தது பற்றி.

வெற்றிச் சிரிப்பு

என் சிறுவயதில் அடிக்கடி கேட்ட கிரிகெட் விளையாட்டின் ஒரு பெரும் புள்ளி கேரி ஸோபர்ஸ். இன்றும் அவர் கிரிக்கெட் விளையாட்டின் ஒரு சகாப்தம் என்று கொண்டாடப்படுவதற்கு காரணமில்லாமல் இல்லை.
மேற்கிந்திய தீவின் கிரிகெட் குழுவின் கேப்டனாகப் பணியாற்றி 1974 ஓய்வு கொள்ளும் போது அவர் முதல்தர பந்தயங்களில் எடுத்த ஓட்டம் 8064. அன்றைய தேதியில் அதுவே மிக அதிகமான ஓட்ட சாதனையாகும். ஆனால் அவர் மேற்கிந்திய குழுவில் முதலில் இடம் பெற்றது ஒரு பந்து வீச்சாளாராகத்தான். வேகப்பந்து சுழற்பந்து இரண்டிலும் திறம்பட பந்து வீசும் திறமையை காட்டினார். காலப்போக்கில் சிறந்த ’ஆல்ரவுண்டர்’ என்னும் வகையில் மட்டை வீச்சிலும் மைதான சேவையிலும் பரிமளிக்கத் தொடங்கி அணியின் தலைவராக பொறுப்பேற்கும் தகுதியை வளர்த்துக் கொண்டார்.

1954-ல் 16 ஆம் வயதில் அணியில் சேர்த்துக் கொள்ளப் பட்டவர் 1967-ல் தலைமை தாங்க அழைக்கப்பட்டார். ஸோபர்ஸ் தமது மட்டைவீச்சில் கிரிகெட் உலகம் மறக்க முடியாத இரண்டு சாதனைகளை முதன் முதலாக செய்து காட்டியவர். முதலாவது 365 ஓட்டங்கள் எடுத்தும் ஆட்டத்தை இழக்காமல் நின்றது. இரண்டாவது, வேறொரு பந்தயத்தில் ஒரே ஓவரில் ஆறு பந்துகளையும் சிக்ஸர் அடித்து 36 ஓட்டங்களை எடுத்துக் காட்டியது.

இந்த வருடம் ஒரு வரைபடம் கூட வலையேற்ற முடியவில்லையே என்ற ஏக்கத்தை ஸோபர்ஸ் -படத்தின் மூலம்- அதாவது என் சகோதரன் உதவியுடன் போக்கிக் கொள்கிறேன்.

வாசகர்கள் யாவருக்கும் ஆங்கிலபுத்தாண்டு-2013 சிறப்பாக இருக்கட்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். நீங்களும் இந்த வலைப்பூ ஸோபர்ஸ்-ஸின் சுறுசுறுப்பை பெற்று 2013-ல் அதிக இடுகைகளை காண வேண்டும் என வேண்டிக் கொள்ளுங்கள்  :)))

Sunday, November 6, 2011

நெற்றிக்கு ஏன் வெள்ளை அடிக்கிறீர் ?

பட்டை பட்டையாய் நெற்றியில் மற்றும் தலையில் திருநீறு. ஒரு நாத்திக இளைஞன் அவரைப் பார்த்துக் கேட்கிறான் “ பெரியவரே நெற்றிக்கு ஏன் வெள்ளை அடிக்கிறீர் ?”
.
என்ன பதில் சொல்லியிருப்பார் ?
அது கீழே உள்ள சுட்டி ஒன்றில் இருக்கிறது.




இன்னொரு வாரியார் சுவாமிகள் கிடைக்கப் போவதில்லை. இன்று, நவம்பர் 7 ஆம் தேதி அவருடைய நினைவு நாள். மறைவு நாள் ( 07-11-1993 )

அவருடைய சொற்பொழிவில் அருணகிரிநாதர் வரலாறை பள்ளியில் படிக்கும் போது கேட்டிருக்கிறேன். சிரிக்கச் சிரிக்க பேசினார். அவரது நகைச்சுவை உணர்வை தமிழ் மக்கள் யாவரும் அறிவர்.

அவருக்கென்று சில உயர்ந்த உள்ளங்கள் வலைப்பூக்களில் நல்ல பல தகவல்களை கொடுத்துள்ளார்கள். அவற்றைப் படித்து மகிழ இணைப்புகளைச் சுட்டுங்கள்.

1) வாரியார் சுவாமிகள் டாட் காம்

2) வாரியார் பதில்

3) வள்ளல் வாரியார்


மேலே உள்ள படம் என் சிரிப்பு சீரீஸுக்காக வரைந்தது. வர்ணப் பென்ஸில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

ஆன்மிகப் பெரியவர்களின் அருட் சிரிப்பே ஒரு மருந்தாகும்

Sunday, September 18, 2011

மொட்டுகளை மலர வைத்த பை !

இவருடைய சிரிப்பை கண்டதுமே இவர் நம்ம காண்டிடேட் என்று முடிவு செய்து பத்து நிமிடங்களில் கணிணியைப் பார்த்துக் கொண்டே வரைந்தேன் அதுவும் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு ; ))

இந்திய மொழிகளிலே எப்படி அம்புலிமாமா குழந்தைகள் மனதிலே இடம் பிடித்ததோ அதைப் போலவே அமர் சித்ர கதா என்று ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் தொடங்கி பல்வேறு இந்திய மொழிகளிலே வெளி வரும் சித்திரக் கதைகள் பெரும் சரித்திரத்தை படைத்துள்ளது என்றால் மிகையாகாது. இதிகாச, சரித்திர கதைகள் மட்டுமல்லாது பெரும் தியாகிகள் ஞானிகள் வாழ்க்கையையும் சித்திரக் கதையாக வெளியிட்டு வியாபார ரீதியாகவும் வெற்றி கண்டவர் இவர்.



இவர் தான் திரு அனந்த் பை. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விஞ்ஞானியான இவர் அதை விட்டு விட்டு முழுவதுமாக குழந்தை இலக்கியத்திற்கு தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். அமர்சித்ரகதா மட்டுமல்லாது டிங்கிள்( Tinkle) என்ற சஞ்சிகை ஒன்றையும் தொடங்கி வெற்றி கண்டார். அதில் குழந்தைகள் நாடெங்கிலும் அனுப்பிய கதைகள் துணுக்குகள் அனுபவங்கள் எல்லாம் வெளியிட்டார். ஆயிரக்கணக்கான குழந்தைகள் அனுப்பும் கடிதங்கள் யாவற்றையும் படித்ததோடு பெரும்பாலானவற்றுக்கு கை எழுத்து வடிவில் எழுத்துருக் கொண்ட பிரிண்ட் செய்யப்பட்ட அஞ்சல் அட்டையில் பதிலும் அனுப்பி அவர்கள் உள்ளங்களில் மகிழ்ச்சி தந்தார்.

டிங்கிளை படித்து விட்டு என் மகன் ஷிகாரி ஷம்பு, சுப்பாண்டி போன்ற கதாபாத்திரங்களின் நகைக்க வைக்கும் சாகசத் துணுக்குகளை-எனக்கு கேட்கும் விருப்பம் இல்லாவிட்டாலும் வலிந்து-நீ கேளேன்.. நீ கேளேன் என்று என்னை பிடுங்கியது நினைவுக்கு வருகிறது. அந்த படைப்புகள் எந்த அளவுக்கு சிறுவர்களின் மனங்களில் இடம் பிடித்திருக்கிறது என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம்.

காமிக்ஸ் எனப்படும் சித்திரப்படக் கதை படைப்பதற்கு ஒரு திரைப்பட இயக்குனரின் மனோபாவம் வேண்டும். சில நேரங்களில் ஒரு கதாபாத்திரம் பேசும் போது மற்ற கதாபாத்திரங்களின் மன நிலையை காட்டுவதற்கு அவர்களின் முகபாவத்திற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டியிருக்கும். உரையாடலை ஒட்டி ஒவ்வொரு படமும் வெவ்வேறு கோணங்களிலிருந்து வரையப்பட வேண்டும். மிகவும் கடினமான வேலை இது.
இன்று பல கார்டூன் படத் தயாரிப்பாளர்கள் முதலில் எடுத்து பார்ப்பது அனந்த்-பை அவர்களின் அமர் சித்ர கதாவை-தான் என்று சொல்லுகிறார்கள்.

பல்லாயிரக்கணக்கான சிறிய உள்ளங்களிலே சிரிப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்றிய இந்த சிரித்த முகம் இன்று நம்மிடையே இல்லை. மறைவு 24-02-2011

நேற்று அவருடைய 82 ஆவது பிறந்த நாள். கூகிள் இந்தியா இவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவருடைய காமிக்ஸ் பாணியிலேயே அவர் உருவை தன் முகப்பு பக்கத்தில் இட்டிருந்தது.

ஸ்கேனர் இல்லாததால் அலைப்பேசி வழியாகவே சுட்டு பதிகிறேன்.