Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Thursday, March 31, 2011

அம்மாவின் சிரிப்பு

அம்ருதானந்தமயீ அம்மா அவர்களின் மலர்ந்த சிரிப்பில் மயங்கி என்னுடைய சிரிப்பு சீரீஸ்-க்காக போடலாம் என்று சுமார் நாலு வருஷங்களுங்கு முன் வரைந்த படம். அளவு 2x2 அடி. கலர் பென்சிலும் பேஸ்டலும் காம்பினேஷன்.

படம் ரொம்ப பெரிசா போயி ஸ்கேனருள்ளே அடங்க மாட்டேன்னுடுச்சு.


(Close up)

2மெகா பிக்ஸல் காமிரா ஆனதினால அவ்வளவு தெளிவா இல்லை. மன்னிக்கணும்.

எனக்கு அந்த சிரிப்பு ரொம்ப பிடிச்சு இருக்கிறதால இதை வெளியிட்டிரலாம்-ன்னு நினைச்சு மொபைல் காமிராவில சுட்டு இப்போ போட்டாச்சு. பெருமையெல்லாம் அம்மாவிற்கு. குறைகளெல்லாம் அடியேனை சேர்ந்தது.

(Full size )


Sunday, February 13, 2011

பேனாவிலிருந்து பேஸ்டல் வரை

அமைதியான ஏரிக்கரை. அங்கே கேட்பாரற்ற ஓர் படகு. அந்த தீவு மாதிரி புல் வளர்ந்திருப்பதைப் பார்த்தால் ஆழம் கூட அதிகம் இருக்காது என்று தோன்றுகிறது. உண்மையிலே விடுமுறையை அனுபவிக்கணும்னா அப்படி ஒரு இடத்துக்கு போகணும்.

விடுமுறையா ? மூச் ! இருக்கிற வேலையை முடிச்சுக் குடுத்துட்டு அப்புறம் கேளு-ன்னு சொல்லுகிற ஒரு அடிமைத்தன வேலை. சரி படமாக வரைஞ்சாவது திருப்தி பட்டுக்கலாம்-ன்னு போட்ட படம்.



பேனாவில் ஆரம்பிச்சு அப்புறம் பேஸ்டல் கட்டியையும் தேச்சு ஒரு வழியா கிடைச்ச கொஞ்ச நேரத்தை ஏரிக்கரைக் கிட்ட போகாமலே அனுபவிச்சாச்சு.



ஆரம்பிக்கும் போது பேஸ்டலை பயன்படுத்த நினைக்கவில்லை, அப்படி இருந்திருந்தா பென்ஸிலிலேயே ஆரம்பித்திருந்திருப்பேன். விதி வலியது. எப்படியெல்லாம் புத்தியை இழுத்துகிட்டு போகுது பாருங்க :))

[ஸ்கேனர் இல்லாமல் போனதால் மொபைல் கேமிராவில் சுட்டது]

Monday, January 24, 2011

பாரத ரத்னா- பீம்ஸேன் ஜோஷி

இசைத் துறையின் ஒரு பெரும் ரத்தினத்தை இன்று (24-01-2011) பாரதம் இழந்து விட்டது. மகான் பாடகர் பீம்சேன் ஜோஷி இன்று அமரரானார். இன்று தியாகராஜ ஆராதனை. சங்கீதத்தையே மூச்சாகக் கொண்டு 88 வருட வாழ்வில் 77 வருடங்களை அதிலேயே ஊறிப்போன ஒரு ஆத்மா தியாகராஜரைப் போலவே நாதோபாசனை செய்தது என்றால் மிகையில்லை.

1972 ல் பத்ம ஸ்ரீ விருது பெற்ற அவருக்கு 1985 ல் பத்மபூஷண், 1999 -ல் பத்ம விபூஷண் மற்றும் 2008-ல் பாரத் ரத்னா விருதுகளை மேலும் வழங்கி இந்திய அரசாங்கம் அவரை கௌரவித்தது.

கர்நாடக ராஜ்ஜியத்தின் தார்வாட் ஜில்லாவை சேர்ந்த ஜோஷி சங்கீதப் பித்து பிடித்து பதினோரு வயதிலேயே வீட்டை விட்டு குருவைத் தேடி குவாலியர், கல்கத்தா டில்லி என்று அலைந்தவர். மூன்று வருடங்களுக்குப் பின் ஜலந்தரில் அவர் இருப்பதை கண்டுபிடித்து அவரது தந்தையார் அவரை திரும்பவும் அழைத்து வந்து அவரது ஊருக்கு அருகிலேயே சங்கீதப் பயிற்சிக்கு ஸவாய் காந்தர்வ் என்னும் குருவிடம் சேர்த்து விட்டார். குருகுல முறையில் முறையாகப் பயிற்சி பெற்ற அவருக்கு விரைவிலேயே பெயரும் புகழும் தேடி வரலாயிற்று. எச்.எம்.வி நிறுவனத்திற்காக பாடப்பெற்ற ஹிந்துஸ்தானி இசைவழிப் பாடல்களும் கன்னட தாஸரபதங்களும் மக்களிடையே மிகவும் பிரபலமாயின.


[சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் வரையப்பட்ட பீம்ஸேன் ஜோஷி அவர்களின் பென்சில் வரைபடம்]

புரந்தரதாஸரை கர்நாடக இசைமுறைக்கு தந்தை என்று சொல்வார்கள். அதற்கு இலக்கணம் வகுத்தவரே அவர். ஆனால் அவரது பல புகழ் பெற்ற பாடல்களை ஹிந்துஸ்தானி முறையில் பாடி இசைப் பிரியர்களின் மனதை கொள்ளை கொண்டவர் திரு ஜோஷி.
சில ஹிந்தி மற்றும் கன்னட திரைப்படங்களுக்கும் பின்ணணி குரல் கொடுத்திருக்கிறார்.

பொதுவாக நமக்கு ஹிந்துஸ்தானி இசையை ரசிப்பதில் சற்று சிரமம் உண்டு என்பதால் யாவரும் நன்கு அறிந்த ’பாக்கியதலக்ஷ்மி பாரம்மா’ என்ற பாடலை எளிமையாக அவர் குரலில் திரையிசையாக இங்கே காணலாம். இதில் நடித்திருப்பவர்கள் திரைப் பிரபலங்கள் அனந்த் நாக், சங்கர்நாக் மற்றும் லக்ஷ்மி.

Sunday, October 31, 2010

கண்டெடுக்கப்பட்டக் கல்வெட்டு


[கல்வெட்டைப்படிக்கப் படத்தைச் சுட்டவும் ]

Monday, September 27, 2010

சித்திரமும் மவுஸ் பழக்கம் -3

அப்பாடா ! ஒருவழியா ரொம்ப நாளா ஆசைப்பட்டதை இந்த படத்தில ஒரு மாதிரியா தீர்த்துக்கிட்டேன். அதாங்க கணிணியில MS Paint வைச்சு முழுக்க முழுக்கப் பயன்படுத்தி ஒரு நல்ல படத்த (அதாவது மனுசன், பறவை, பிராணி) வரையணும்னு முயற்சி பண்ணி பண்ணி திருப்தி இல்லாம விட்டுடறதே வழக்கமா இருந்தது. மவுஸ் கண்ட்ரோல் எப்படின்னு பிடிபடாமலே இருந்திச்சு.

தொழில் ரகசியம் பிடிபட்டவுடனே உற்சாகம் வந்திடிச்சு. நான் ரகசியம்-ன்னு சொல்றத கேட்டு ‘பூ இது தானா எங்களுக்கு எப்பவோ தெரியுமே’ன்னு சிரிக்காதீங்க. நான் கொஞ்சம் ட்யூப் லைட்.



தொழில் ரகசியம்ன்னு சொன்னதை இப்ப போட்டு ஒடச்சுடறேன்.
ரெடி ஒன் டூ த்ரீ...
Z O O M ..... Z O O M
ஆமாங்க. MS Paint -ல ZOOM மெனுவை பயன்படுத்தி மைன்யூட்டா படத்தோட லைன் எல்லாம் கண்ட்ரோல் பண்ணலாம். அதுல கலர் ஷேட் கன்ட்ரோல், அழிச்சு சின்னச் சின்ன மாற்றமெல்லாம் பண்றது எல்லாம் நல்லா செய்யலாம்.

அதாவது அடிப்படை அவுட்லைன்-ஐ ஸ்க்ரீன் அளவே வச்சுகிட்டு அப்புறம் தேவைப்பட்ட இடத்தை அப்பப்ப zoom பண்ணி கொஞ்சம் கொஞ்சமா வழிக்கு கொண்டு வந்துடலாம்.

இந்த முதல் முயற்சியில மூத்த குடிமகனார் ஓரளவு எனக்கு பிடிச்ச மாதிரி போஸ் குடுத்துட்டார். அடுத்து என்ன முயற்சிங்கறத இனிமே தான்யோசனை பண்ணணும். அது வரைக்கும் bye bye. :)))

Tuesday, August 31, 2010

வீட்டைக் கட்டிப்பார் : மௌஸ்-ல தாங்க!

கூகிள் ஸ்கெட்ச்-அப் (sketch up)அப்படிங்கற மென்பொருளை மேலே இருக்கிற தலைப்புல முத்துலெட்சுமி மேடம் காமிச்சு குடுத்தாலும் குடுத்தாங்க அடுத்த ஒரு வாரம் அதை வச்சு பொழுது போறது தெரியாம படம் படமா போட்டுக்கிட்டிருந்தேன்.

கூகிள் கொடுத்த விளக்கப்படம், மின்புத்தகம் எல்லாம் ரொம்ப சுலபமாக இருந்தது.

கிட்டத்தட்ட முழு கட்டிடம், ஃபினிஷ்ங் எல்லாத்தையும் அச்சா முன்னாடியே எஞ்சினியருக்கும் மேஸ்திரிக்கும் தச்சு வேலைசெய்றவங்களுக்கும் அதுக்கான அளவுகளோட போட்டு காமிக்கலாம்.

எந்த எடத்துல கண்ணாடி வரணும், பளிங்கு ஸ்லாப் வரணும், வெளிப்பக்கத்து சுவர் எப்படி பினிஷ் பண்ணனும் எல்லாத்தையும் முன்னாடியே முடிவு பண்ணிக்கலாம்!! அப்போ சேமிச்சு வச்ச படங்களை இப்ப பாருங்க.



உங்களுக்கு அடி, இன்ச் கணக்குதான் புரியும்னா அதிலேயே மேலே இருக்கிற படத்தை மாதிரி போட்டு காமிக்கலாம். இல்ல மீட்டர் மில்லி மீட்டர் கணக்குனா அதுக்கும் கூகிள் வழி பண்ணியிருக்குது. கீழே பாருங்க.




அது மட்டுமல்ல ஒவ்வொரு கோணத்திலேயும் எப்படி இருக்கும் என்கிறதையும் அப்படியே ஒரு சுழட்டு சுழட்டி காட்டலாம். நான் டிசைன் பண்ண பூஜா ரூமை அப்படியே கீழே ப்ளே பண்ணி பாருங்க.



முத்துலெட்சுமி மேடத்துக்கும் கூகிளுக்கும் இன்னொரு ஸ்பெஷல் டாங்கீஸ்.:)))))

Monday, July 26, 2010

எட்டாவது மாடி ஜன்னல் வழியே

எட்டு மணிக்கு பொருட்காட்சி அரங்குக்கு கிளம்பவேண்டும். ஏழரை மணிக்கே தயாராகி ஆயிற்று. ஜன்னல் வழியே, அருகிலிருந்த ஒரு மொட்டை மாடியில் சீனத்து தொழிலாளர்கள் பாண்ட் சட்டையை கழற்றி யூனிஃபார்ம் மாட்டிக் கொண்டு சுறுசுறுப்பாக வேலைக்குத் தயாராகிக்கொண்டிருந்த காட்சியை நோட்டம் விட்டபடி வேறு பல அடுக்கு மாடிக்கட்டிடங்களையும் பார்த்துக் கொண்டு வந்த எனக்கு சட்டென்று ஒரு வித்தியாசமான கட்டிடம் கண்ணைக் கவர்ந்தது.

என்னுடைய நேர் பார்வையில் வந்ததால் அதுவும் எட்டாவது மாடியாகத்தான் இருக்கவேண்டும். ஏழு மாடிகள் சாதாரணக் கட்டிடமாய் கட்டப்பட்டு எட்டாவது மாடியில் ஒரு மசூதி. நம்மூர் மசூதிகளில் காணப்படும் கும்பம் போன்ற வடிவில்லாமல் நட்சத்திர வடிவிலிருந்து கூம்பாக உயர எழுப்பி அதில் ஒரு பிறைச்சந்திரன்.



உடனே கை பரபரத்தது. நல்லவேளையாக பேஸ்டல் வர்ணங்களை ‘எதுக்கும் இருக்கட்டுமே’ என்று வைத்துக் கொண்டு சென்றிருந்தேன். ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்த ஒரு வெள்ளைத் தாளிலே முடிந்த வரையில் வரைந்து வைத்தேன். பதினைஞ்சு இருபது நிமிஷம் ஆகி இருக்க வேண்டும். எட்டு மணி நண்பர் காலிங்பெல்லை அடித்ததும் எழுந்து போக வேண்டியதாயிற்று.

நட்சத்திர பகுதியில்தான் எத்தனை சந்து பொந்துகள். சற்று கடினமாகத்தான் இருந்தது. ஒவ்வொரு மடிப்புகளையும் முறையாகப் பிரித்துக் காட்டுவது நல்ல வரை பயிற்சியாயிற்று.

இப்போது ஸ்கேன் செய்தபோது சில இடங்களில் - குறிப்பாக கீழ்பாகத்து கட்டிடத்தில் -வர்ண அழுத்தம் சரியாக இல்லை என்று தோன்றியதால் எம்.எஸ்,பெயிண்ட்’-ல் கொஞ்சம் அடர்த்தியாக்கி உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

ஆன் த ஸ்பாட் பெயிண்டிங் செய்வது மிகவும் நல்ல பயிற்சிதான். செய்ய வேண்டும் என்று நினைப்பதுண்டு ஆனால் சோம்பேறித்தனம் ஜாஸ்தி :)))