Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Tuesday, August 31, 2010

வீட்டைக் கட்டிப்பார் : மௌஸ்-ல தாங்க!

கூகிள் ஸ்கெட்ச்-அப் (sketch up)அப்படிங்கற மென்பொருளை மேலே இருக்கிற தலைப்புல முத்துலெட்சுமி மேடம் காமிச்சு குடுத்தாலும் குடுத்தாங்க அடுத்த ஒரு வாரம் அதை வச்சு பொழுது போறது தெரியாம படம் படமா போட்டுக்கிட்டிருந்தேன்.

கூகிள் கொடுத்த விளக்கப்படம், மின்புத்தகம் எல்லாம் ரொம்ப சுலபமாக இருந்தது.

கிட்டத்தட்ட முழு கட்டிடம், ஃபினிஷ்ங் எல்லாத்தையும் அச்சா முன்னாடியே எஞ்சினியருக்கும் மேஸ்திரிக்கும் தச்சு வேலைசெய்றவங்களுக்கும் அதுக்கான அளவுகளோட போட்டு காமிக்கலாம்.

எந்த எடத்துல கண்ணாடி வரணும், பளிங்கு ஸ்லாப் வரணும், வெளிப்பக்கத்து சுவர் எப்படி பினிஷ் பண்ணனும் எல்லாத்தையும் முன்னாடியே முடிவு பண்ணிக்கலாம்!! அப்போ சேமிச்சு வச்ச படங்களை இப்ப பாருங்க.



உங்களுக்கு அடி, இன்ச் கணக்குதான் புரியும்னா அதிலேயே மேலே இருக்கிற படத்தை மாதிரி போட்டு காமிக்கலாம். இல்ல மீட்டர் மில்லி மீட்டர் கணக்குனா அதுக்கும் கூகிள் வழி பண்ணியிருக்குது. கீழே பாருங்க.




அது மட்டுமல்ல ஒவ்வொரு கோணத்திலேயும் எப்படி இருக்கும் என்கிறதையும் அப்படியே ஒரு சுழட்டு சுழட்டி காட்டலாம். நான் டிசைன் பண்ண பூஜா ரூமை அப்படியே கீழே ப்ளே பண்ணி பாருங்க.



முத்துலெட்சுமி மேடத்துக்கும் கூகிளுக்கும் இன்னொரு ஸ்பெஷல் டாங்கீஸ்.:)))))

Monday, July 26, 2010

எட்டாவது மாடி ஜன்னல் வழியே

எட்டு மணிக்கு பொருட்காட்சி அரங்குக்கு கிளம்பவேண்டும். ஏழரை மணிக்கே தயாராகி ஆயிற்று. ஜன்னல் வழியே, அருகிலிருந்த ஒரு மொட்டை மாடியில் சீனத்து தொழிலாளர்கள் பாண்ட் சட்டையை கழற்றி யூனிஃபார்ம் மாட்டிக் கொண்டு சுறுசுறுப்பாக வேலைக்குத் தயாராகிக்கொண்டிருந்த காட்சியை நோட்டம் விட்டபடி வேறு பல அடுக்கு மாடிக்கட்டிடங்களையும் பார்த்துக் கொண்டு வந்த எனக்கு சட்டென்று ஒரு வித்தியாசமான கட்டிடம் கண்ணைக் கவர்ந்தது.

என்னுடைய நேர் பார்வையில் வந்ததால் அதுவும் எட்டாவது மாடியாகத்தான் இருக்கவேண்டும். ஏழு மாடிகள் சாதாரணக் கட்டிடமாய் கட்டப்பட்டு எட்டாவது மாடியில் ஒரு மசூதி. நம்மூர் மசூதிகளில் காணப்படும் கும்பம் போன்ற வடிவில்லாமல் நட்சத்திர வடிவிலிருந்து கூம்பாக உயர எழுப்பி அதில் ஒரு பிறைச்சந்திரன்.



உடனே கை பரபரத்தது. நல்லவேளையாக பேஸ்டல் வர்ணங்களை ‘எதுக்கும் இருக்கட்டுமே’ என்று வைத்துக் கொண்டு சென்றிருந்தேன். ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்த ஒரு வெள்ளைத் தாளிலே முடிந்த வரையில் வரைந்து வைத்தேன். பதினைஞ்சு இருபது நிமிஷம் ஆகி இருக்க வேண்டும். எட்டு மணி நண்பர் காலிங்பெல்லை அடித்ததும் எழுந்து போக வேண்டியதாயிற்று.

நட்சத்திர பகுதியில்தான் எத்தனை சந்து பொந்துகள். சற்று கடினமாகத்தான் இருந்தது. ஒவ்வொரு மடிப்புகளையும் முறையாகப் பிரித்துக் காட்டுவது நல்ல வரை பயிற்சியாயிற்று.

இப்போது ஸ்கேன் செய்தபோது சில இடங்களில் - குறிப்பாக கீழ்பாகத்து கட்டிடத்தில் -வர்ண அழுத்தம் சரியாக இல்லை என்று தோன்றியதால் எம்.எஸ்,பெயிண்ட்’-ல் கொஞ்சம் அடர்த்தியாக்கி உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

ஆன் த ஸ்பாட் பெயிண்டிங் செய்வது மிகவும் நல்ல பயிற்சிதான். செய்ய வேண்டும் என்று நினைப்பதுண்டு ஆனால் சோம்பேறித்தனம் ஜாஸ்தி :)))

Sunday, June 27, 2010

உழைக்கும் கரங்கள் -2

தடியெடுத்தவன் தண்டல்காரன் -னு ஒரு பழமொழி. தண்டல் -ன்னா வரி, கடன், பழைய பாக்கி அப்படீன்னு நெனச்சுகிட்டிருக்கேன்.

ஆக, வசூலிப்பவன் தண்டல்காரன். தடி எதுக்கு? பயமுறுத்தலுக்கா இல்லை தற்காப்புக்கா ? எப்படியோ அந்த காலத்திலேந்து மூங்கில் கழி ஒரு நல்ல ஆயுதம்.

வெளியே கிளம்பறவங்களுக்கு தலையில ஒரு முண்டாசும் கையில் ஒரு தடியும் அவசியம் இருக்கணும். காலில் செருப்பு இருக்கோ இல்லியோ கையில ஒரு ஆளுயர கழி ரொம்ப முக்கியம். மாலை அல்லது இரவு நேரங்களில் பாம்பு போன்ற ஜந்துக்கள் தடியை வைத்து தரையில் டக் டகென்று சத்தம் செய்து கொண்டே போனால் பாதையை விட்டு விலகிடுமாம்.

சிலம்பாட்டத்தின் கதாநாயகனே இந்த கெட்டி மூங்கில் கழிதானே.

இந்தியாவில சுமார் 100 விதமான மூங்கில் விளையுதாம். உலகத்துல மிக அதிகமான மூங்கில் காடுகள் பரப்பளவு ( 96 லட்சம் ஹெக்டேர்) நம்ம நாட்டுலதானாம் ! ஆனா உலக சந்தயில நம்ம விற்பனை நாலே சதவீதம் தான்!. மத்ததெல்லாம் உள்நாட்டுலேயே வித்துடும் போல இருக்கு.

மூங்கிலை வைத்து வகைவகையான கைவினை பொருட்கள் செய்யறது, கூடைகள் செய்வது என்கிற வகையில் சுமார் 75 லட்சம் பேர் பிழைப்பு நடத்துறாங்களாம். மூங்கில் காடு வளர்ப்பு பற்றி இப்பதான் கொஞ்சம் கண்முழிச்சு பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க. ஏன்னா பாக்கி மரங்களை விட பத்து மடங்கு வேகமா வளரகூடியது மூங்கில். சீனா வில ஒரு ஹெக்டேருக்கு 3 டன் மூங்கில் வருஷத்துக்கு கெடச்சா நம்மூருல அரை டன்தான் கிடைக்குதாம்.


உழைக்கும் கரங்களுக்கு பொருத்தமான இந்த படம் ஒரு தினப்பத்திரிக்கையின் வாராந்திர மலரில் வெளியாகியிருந்தது. வர்ணப் பென்சிலின் வரைபடம். படம் பெரியதாக போனதால் ஸ்கேனருக்குள் அடங்கவில்லை. காமிராவில் எடுத்தது. ஒளி கொஞ்சம் முன்பின்னாக இருக்குது. ஆனாலும் பரவாயில்லை.

வீட்டிலிருந்து கொண்டே மூங்கில் கழிகளை தயார் செய்யும் வேலை இந்த பெண்மணிக்கு. அதனால் அவளுடைய வாண்டு பையனும் பின்னாலிருந்து எட்டிப்பார்க்கிறான் !:)

Sunday, May 23, 2010

உழைக்கும் கரங்கள்

மனிதர்களின் உடலுழைப்பும் வாழ்வின் வசதிகளும் தலைகீழ் விகிதாசாரத்தில் அமைந்துள்ளதாகக் கூறுவர். அதாவது ஏழைகள் ஒரு நாளில் பத்து பன்னிரெண்டு மணிநேரம் உடலுழைப்பில் ஈடுபட்டால், வசதிக் கூடக்கூட இந்த மணித்துளிகள் குறைந்து கொண்டே வரும். ஒரு நிலையில் உடலுழைப்பு இல்லாது போவதால் வரும் நோய்களைத் தடுக்க உடற்பயிற்சிக் கூடங்களுக்கு வியர்வையை சிந்துவதற்கு பணத்தைக் கொடுத்து போக ஆரம்பிக்கின்றனர். :))

கடுமையான உழைப்பில் ஈடுபட்டிருப்பவர்களைப் பார்ப்பதே ஒரு அனுபவம். தங்களை மறந்த அவர்களுடைய ஒருமுக முனைப்பும், கைகள் லாவகமாக ஒன்றன்பின் ஒன்றாக தவறே இல்லாமல் காரியத்தை நிறைவேற்றும் பாங்கும் அழகே அழகு. அவர் ஒரு ஒரு தையற்காரரோ, காலணி செய்பவராகவோ, தச்சு வேலைக்காரரோ அல்லது கொத்தனாராகவோ இருக்கலாம்.


தரங்கா என்ற கன்னடப் பத்திரிகையில் வெளிவந்திருந்த ஒரு வண்ணப் புகைப்படத்தை பார்த்ததுமே அதை வரைய வேண்டும் என்ற எண்ணம் துளிர் விட்டது. வட கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு கிராமிய தச்சு வேலை செய்பவரது படம். தலையிலே ஒரு குல்லாய், கச்சை வேட்டி, நீண்ட மேலங்கி இவைகளில் மராட்டியரை பெரிதும் ஒத்து இருப்பார்கள் இவர்கள்.

இந்தப் புகைப்படம் வைட் ஆங்கிள் லென்ஸ் (wide angle lens) உபயோகித்து எடுக்கப்பட்டது என்று நினைக்கிறேன். அருகிலிருக்கும் பாகங்கள் நீண்டு பெரிதாகவும் எட்டி இருப்பவை சிறிதாகவும் காணப்படும். அதன்படி இந்த படத்தில் தச்சருடைய கைகால்கள் மிக நீண்டுக் காணப்படுகின்றன.

ஒரு மாறுதலுக்காக போஸ்டர் வண்ணங்களை உபயோகித்துப் பார்த்தேன். இதை நீரின் உதவியால் கரைத்து பூசினாலும் காய்ந்த பிறகு மீண்டும் நீரில் கரையாது. அதற்குக் காரணம் போஸ்டர் வர்ணங்களில் மெட்டல் ஆக்ஸைடுகளின் அளவு அதிகமாக இருக்குமாம். அதனால் தான் அவைகள் மிகவும் எடுப்பாக பிரகாசமாக இருக்கும்.

ஆனால் வர்ணங்களின் பயன்பாட்டில் சற்று கவனம் குறைந்தாலும் பின்னர் சரி செய்வது மிகவும் கடினம். அதன் விளைவை இந்தப் படத்தில் பல இடங்களில் காணலாம்.

இந்தப் படத்தில் எனக்கு பிடித்த அம்சம், கால் மடங்கிய நிலயில் முழுபாதமும் தரையில் படாது சற்றே ஒருக்களித்து தூக்கியிருக்கிறது. வேலையின் போது ஏற்படும் சிறு சிறு அசைவுகளுக்கு ஏற்ப வளைந்து கொடுக்க உடல் தன்னை அனிச்சையாக தளர்த்திக் கொள்வதால் ஏற்படுகிறது. வண்டியில் ஷாக் அப்சார்பர் போல என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

Thursday, April 29, 2010

சித்திரமும் மவுஸ் பழக்கம்

மாசம் ஒரு பதிவாவது பதியணும். கைவசம் வரைபடம் இருக்கு ஆனால் அதை ஸ்கேன் பண்ண முடியாத நிலை.
'டைம் ஈஸ் டிக்க்கிங் அவே' ...........
என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த நிலையில் " சார் கிச்சன் டேபிள் கப்போர்டு அரேன்ஜ்மென்ட் கொஞ்சம் சொல்லிடுங்க, எலக்ட்ரிகல் வைரிங் பண்ணனும்" அப்படீன்னு கான்ட்ராக்டர் கிட்டே இருந்து ஃபோன் வந்தது. நானிருப்பதோ வெளியூர். சரின்னு அவசர அவசரமா MS Paintஐ திறந்து அரைமணி நேரத்தில ரெண்டு படம் போட்டு அனுப்பினேன்.



அப்புறம் ஆற அமர அதை கொஞ்சம் நேரம் அழகு பார்த்துகிட்டே இருந்த போது அந்த அம்மா ஞாபகம் வந்திச்சு. அவங்க பேரு கேதரைன், நாடு அமெரிக்கா. Esnip வலைதளத்துல அவங்க இந்த MS Paint வைச்சு அமர்க்களம் பண்ணியிருக்காங்க பாருங்க!! அங்க போய் பார்த்தாதான் தெரியும் மவுஸுல அவங்க கை வண்ணம். ஒளியும் நெழலும், மலையும் நதியும், பூவும் புலியுமா என்னமா அசத்தியிருக்காங்க !

நம்ம பங்குக்கும் MS Paint-ல ஒண்ணு இருக்கட்டுமே-ன்னு இந்த மொக்கை இடுகை.

பின்குறிப்பு
கான்ட்ராக்டர் நான் போட்டனுப்பிச்ச படம் சரிபட்டு வராதுன்னு சொல்லிட்டு தன் நோக்கம் போலவே செய்யறதா கேள்வி :((

Sunday, March 28, 2010

காஞ்சித் தலைவன்

இந்த மஹானின் படத்தை வரைந்து பார்க்க வேண்டும் என்று பல நாட்களாக ஆசை இருந்தது. குறிப்பாக மணியம் செல்வன் அவரைப் பற்றிய ஒரு தொடரில் காஞ்சி பெரியவரின் வாழ்க்கை சித்திரமாக வரைந்த ஓவியங்கள் மனதில் இடம் பெற்றிருந்தன. அவை பெரும்பாலும் ஹாட்சிங் முறையில் வரையப்பட்டிருந்தன.

சில வருடங்களுக்கு முன் ஒரு பென்சில்-கறுப்பு வெள்ளை- வரை படம் முயற்சித்தேன். ஏனோ மனதிற்கு நிறைவாக வில்லை. மஹான்களுடைய அருள் இல்லாமல் அது முடியாது போலும் என்று நினைத்து விட்டு விட்டேன்.

போன வாரம் அவரது புகைப்படம் தாங்கிய ஒரு பத்திரிக்கை கண்முன்னே கிடந்தது. வாட்டர் கலர் பென்சிலும் கைவசம் தயாராக இருந்தது. கிடைத்த ஒரு அட்டையில் மள மள வென்று வரையத் துவங்கினேன். வழக்கம் போல் வர்ணப் பென்சில் எப்போதுமே ’டல்’ தான்.

அதற்காக வர்ணங்களை பென்சிலில் பூசிய பின் சின்ன பிரஷ்-ஐ தண்ணீரில் தோய்த்து சிறிது வாஷ் எஃபெக்ட் கொடுத்தேன். அது சற்று காய்ந்ததும் மீண்டும் வர்ணங்களை எங்கெங்கு தேவையோ அங்கே சற்று அழுத்தமாக வரைந்தேன். இப்போது முன்பை விட படம் சற்றே பளிச் என்று வந்தது. இதற்கு மேலும் ‘பளிச்’ செய்யப்போனால் கெட்டு போய்விடும் என்ற பயத்தில் அப்படியே விட்டு விட்டேன்.



பெரும்பாலானவர்கள் நன்றாக வந்திருக்கிறது என்று கூறிய தைரியத்தில் வலையேற்றத் துணிந்தேன்.

இம்முறை சற்று குரு அருள் துணை நின்றது போலும் . குறைகளுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும்.

பட்டினத்தார் பாடியது போல “.....எல்லாப் பிழையும் பொறுத்து அருள்வாய் கச்சி ஏகம்பனீரே”

Sunday, February 14, 2010

கொலுசு மாட்ட தெரியலை

காமிரா வாங்கிய புதுசு. அப்போதெல்லாம் இந்தியாவில கோடக், டப்பா காமிரா விட்டா கிடையாது. நான் வாங்கினது யாஷிகா,ஆட்டோ ஷட்டர் ஸ்பீட். வாங்கின சம்பளத்துக்கு கலர் ஃபிலிம் கொஞ்சம் கையை கடிக்ககூடிய நிலைதான். ஆனாலும் உற்சாகம் விடவில்லை. பலமுறை ரோல் ரோலாக வீணாக்கியதும் உண்டு. அப்பப்ப சில நல்ல படங்களும் அமைஞ்சு பல வருஷங்களுக்கு நினைவுல நிக்கிறத பார்க்கும் போது அது இப்ப பெரிசா தோணல.



அதனாலத்தான் அந்த படத்தையும் இணைச்சு இந்த முறை என்னோட வரைதிறன் முயற்சிய காட்டியிருக்கேன்.

பேஸ்டல் கலர் படம் போட ஆரம்பித்த காலம். அதனால தடுமாற்றங்கள் ரொம்பவே உண்டு. [இப்ப மாத்திரம் ரொம்ப ஸ்டெடியான்னு கேக்காதீங்க. இப்ப ரொம்ப முயற்சி செய்யறதே ரொம்ப கம்மி :( ]

குறிப்பா குழந்தையோட காலு கொலுசு என்ன பண்ணினாலும் சரியா வரலை. கொலுசு இந்த பாடு படுத்தினப்பறம் சோபா மெத்தை இன்னமும் பயமுறுத்திச்சு. அடடா ஆழம் தெரியாம காலவுட்டோமே அப்படீன்னு நானாவே ஒரு டிசைன் கற்பனை பண்ணி ஒரு வழியா முடிச்சாச்சுன்னு பேர் பண்ணிட்டேன்.

ஃபோட்டோவ விட வரைபடம் ரொம்ப பெரிசு. படத்தை பார்த்தாலே தெரியும். :))சட்டம் போட்டு அன்பளிப்பா கொடுக்கலாம்னு வரைஞ்சு, சரியா வராததுனால நானே வச்சுகிட்டேன்.

படத்திலிருப்பது என் சகோதரியோட மகள். நான்கு மாத குழந்தையாக இருந்த போது எடுத்த் படம். இன்றைக்கு ஒரு முழுநேர மருத்துவர். :))