மனிதர்களின் உடலுழைப்பும் வாழ்வின் வசதிகளும் தலைகீழ் விகிதாசாரத்தில் அமைந்துள்ளதாகக் கூறுவர். அதாவது ஏழைகள் ஒரு நாளில் பத்து பன்னிரெண்டு மணிநேரம் உடலுழைப்பில் ஈடுபட்டால், வசதிக் கூடக்கூட இந்த மணித்துளிகள் குறைந்து கொண்டே வரும். ஒரு நிலையில் உடலுழைப்பு இல்லாது போவதால் வரும் நோய்களைத் தடுக்க உடற்பயிற்சிக் கூடங்களுக்கு வியர்வையை சிந்துவதற்கு பணத்தைக் கொடுத்து போக ஆரம்பிக்கின்றனர். :))
கடுமையான உழைப்பில் ஈடுபட்டிருப்பவர்களைப் பார்ப்பதே ஒரு அனுபவம். தங்களை மறந்த அவர்களுடைய ஒருமுக முனைப்பும், கைகள் லாவகமாக ஒன்றன்பின் ஒன்றாக தவறே இல்லாமல் காரியத்தை நிறைவேற்றும் பாங்கும் அழகே அழகு. அவர் ஒரு ஒரு தையற்காரரோ, காலணி செய்பவராகவோ, தச்சு வேலைக்காரரோ அல்லது கொத்தனாராகவோ இருக்கலாம்.
தரங்கா என்ற கன்னடப் பத்திரிகையில் வெளிவந்திருந்த ஒரு வண்ணப் புகைப்படத்தை பார்த்ததுமே அதை வரைய வேண்டும் என்ற எண்ணம் துளிர் விட்டது. வட கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு கிராமிய தச்சு வேலை செய்பவரது படம். தலையிலே ஒரு குல்லாய், கச்சை வேட்டி, நீண்ட மேலங்கி இவைகளில் மராட்டியரை பெரிதும் ஒத்து இருப்பார்கள் இவர்கள்.
இந்தப் புகைப்படம் வைட் ஆங்கிள் லென்ஸ் (wide angle lens) உபயோகித்து எடுக்கப்பட்டது என்று நினைக்கிறேன். அருகிலிருக்கும் பாகங்கள் நீண்டு பெரிதாகவும் எட்டி இருப்பவை சிறிதாகவும் காணப்படும். அதன்படி இந்த படத்தில் தச்சருடைய கைகால்கள் மிக நீண்டுக் காணப்படுகின்றன.
ஒரு மாறுதலுக்காக போஸ்டர் வண்ணங்களை உபயோகித்துப் பார்த்தேன். இதை நீரின் உதவியால் கரைத்து பூசினாலும் காய்ந்த பிறகு மீண்டும் நீரில் கரையாது. அதற்குக் காரணம் போஸ்டர் வர்ணங்களில் மெட்டல் ஆக்ஸைடுகளின் அளவு அதிகமாக இருக்குமாம். அதனால் தான் அவைகள் மிகவும் எடுப்பாக பிரகாசமாக இருக்கும்.
ஆனால் வர்ணங்களின் பயன்பாட்டில் சற்று கவனம் குறைந்தாலும் பின்னர் சரி செய்வது மிகவும் கடினம். அதன் விளைவை இந்தப் படத்தில் பல இடங்களில் காணலாம்.
இந்தப் படத்தில் எனக்கு பிடித்த அம்சம், கால் மடங்கிய நிலயில் முழுபாதமும் தரையில் படாது சற்றே ஒருக்களித்து தூக்கியிருக்கிறது. வேலையின் போது ஏற்படும் சிறு சிறு அசைவுகளுக்கு ஏற்ப வளைந்து கொடுக்க உடல் தன்னை அனிச்சையாக தளர்த்திக் கொள்வதால் ஏற்படுகிறது. வண்டியில் ஷாக் அப்சார்பர் போல என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
2 comments:
கிரேட் வொர்க்! கொடுத்திருந்த விளக்கமும் நல்லா இருக்கு!
நல்வரவு ப்ரியா,
Van Gogh இன் ஊரை சுற்றிப்பார்த்து வந்திருக்கிறீர்கள். மிகவும் கொடுத்து வைத்தவர்தான் ஹும். :))
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
Post a Comment