Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Tuesday, December 7, 2021

வடிவான வண்ண மூக்கான் -டூகான்

 மனிதர்களில் யாராவது  பொறுப்பு இல்லாமல் அதிகம் பேசினால் 'ரொம்ப வாய் நீளம்' என்று சொல்வதுண்டு.  தென் அமெரிக்காவில் ஒரு வகைப் பறவைக்கு  நிஜமாகவே எல்லாவகையிலும் வாய் நீளம்தான். 

டூகான் ( Toucan)  என்றழைக்கப்படும் இப்பறவைகள் மிகவும் இரைச்சல் வாய்ந்தவையாம்.  அதுவும்  பிற பறவைகள் யாவும் அமைதியாக இருக்கும் மதிய  நேரங்களில் தான் இவைகளின் தனிக் கச்சேரி.

ஆப்பிரிக்காவில் காணப்படும் ஹார்ன்பில் பறவைகளைப் போன்றே மிகப் பெரிய எடுப்பான அலகுகள் கொண்டிருந்தாலும் இவைகள் முற்றிலுமாக வேறு பிரிவை சேர்ந்தவை. இவைகளை மரங்கொத்தி பறவைகள் வகையில் சேர்க்கின்றனர். பழங்களை மிகவும் விரும்பி சாப்பிடும் இப்பறவைகள் புழு பூச்சி மாமிசம் போன்றவற்றையும் கூட தின்னும் ஒரு சர்வ பட்சிணி. 

கிளிகளை போலவே இவற்றையும் பிடித்து வந்து வீட்டில் வளர்க்கின்றனர் மேல்நாட்டவர். காடுகளில் இவை சிறு சிறு கூட்டமாக வாழும்.  மரப்பொந்துகளில் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும்.


முழுவதும் வளர்ந்த டூகானின் நீளம் 25 அங்குலம். அதில் மூன்றில் ஒரு பங்கு (7.5 அங்)  அதன் அலகே ஆக்கிரமித்துக் கொள்கிறது. எப்படி இவ்வளவு பெரிய அலகை தூக்கிக் கொண்டு பறக்கிறது என்ற ஆச்சரியம் ஏற்படலாம்.  உண்மையில் அவை மிகவும் எடைகுறைந்த  கெரடின் (keratin) என்கிற பொருளால் ஆனது. நமது உடலில்  நகங்கள், தலைமுடி போன்றவையும்  இதே கெரடினால் வளர்பவை. ஆகையால் தான் அதன் அலகு ஒரு சுமையே அல்ல.

இதன் ஆயுள் சுமார் இருபது வருடங்கள்.

சாதாரணமாக பல வண்ணச் சிறகுகளை பறவைகளில்  காணும் நமக்கு டூகானின் பல வர்ணங்களுடைய அலகுகளே ஒரு புது விஷயம். இந்த விஷயத்தில் முற்றிலும் மாறுபட்டவை இவை. டூகானின் ஒரு அழகிய வண்ணப்புகைப் படத்தை மொபைல் ஸ்க்ரீன்சேவராக கண்ட போது அதை என் வரைபட புத்தகதில் வரைந்து கொண்டேன். வர்ணப்பென்சிலில் வர்ணமும் பூசிப் பார்த்தேன். அதை வலது பக்கத்தில் காண்கிறீர்கள்.

இன்னமும் பளிச்சென்று வரவேண்டும் என்று தோன்றியது. இருக்கவே இருக்கிறது நம் கணினி.

வரைந்த படத்தை ஸ்கேன் செய்து அதில் டிஜிடல் வர்ணத்தை பூசினேன்.  இப்போது குடும்பப் பெண்ணுக்கு நட்சத்திர அலங்காரம் செய்தது போல் பளிச்,பளிச், -காமெரா ரெடி !!!

மனிதர்களுக்குத் தான் அலங்காரம் செய்து அழகு பார்க்க வேண்டியிருக்கிறது, இறைவனின் படைப்பில் வேறு எல்லாமுமே இயற்கையிலேயே மிகவும் அழகு வாய்ந்தவை தான்-காமெரா ரெடி தான்,

இல்லாவிட்டால் அந்த ஸ்க்ரீன்சேவர் என் மனதை கவர்ந்திருக்குமா?

No comments: