Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Monday, May 17, 2021

மயிரிழையில் ஊசலாடும் திறமை

 நாம் வரைகின்ற ஒரு ஓவியத்தின் சிறப்பே அதில் காணப்படும் நுணுக்கங்களில் அடங்கி இருக்கிறது. இதை ஆங்கிலத்தில் detailing என்று சொல்கிறார்கள். அது  பறவைகளின் சிறகாகவோ  மரம் செடிகளின் இலை வடிவங்களோ, துணியின் இழைகளோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 

இதில் வெள்ளைத்தாளில் வரையும் படங்களில் வெள்ளை வர்ணங்களை பிரித்துக் காட்ட  முயலும் போதுதான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. குறிப்பாக நரை முடி, தாடி போன்றவை சரியாக வராது. அப்போது அதன் உயிரோட்டமே குன்றி விட்ட மாதிரி தோன்றும். 

இந்த  குறையை, என்  திணறலை, என்னுடைய பழைய பதிவுகளில்- பாலசந்தர்   பிஸ்மில்லாக்கான்     காஞ்சி பெரியவர்  போன்றவர்களின் படங்களைப் பார்த்தால்    வாசகர்களுக்குப் ஓரளவு புரியும்.

சமீபகால சில யூட்யூப் காணொளிகளில், பின்னணியில் சற்றே grey shade காட்டி  அதன் மேல் வெள்ளை வர்ணத்தை தூரிகையால் காட்ட வேண்டும் என்று சொல்கிறார்கள்.  பென்சில் வரைபடமானால் -சில சித்திர விற்பன்னர்களின் முறைப்படி - ஊசி முனையினால் கீறிக் கொண்டு வரையும் விதத்தை  வெளிப்படுத்தியுள்ளார்கள்.  பயன்படுத்தும் வரைதாள் சற்று தடிமனாக இருக்க வேண்டும்..

   


இன்னும் விவரமான காணொளி ( https://www.youtube.com/watch?v=RQ1rdwMycy4)

ஆனால் இதில் ஒரு விஷயம் என்ன புரிந்தது என்றால் இதற்கு பயன்படுத்தப்படும் வரைதாள் மற்றும் பென்சில்களின் -சார்கோல்- தரம் இவற்றைப் பொருத்து வரைபடத்தில் அதன் பரிமாணம் வெளிப்படும்.

சமீபகாலமாக நான் கணினி முறையில்  படம் வரைதலை பழகி வருவதால் இதையும் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம் என்று தோன்றியது. அதன் விளைவே கீழே காணும் படம்.



இதற்கு நான் பயன்படுத்திய மென்பொருள் Krita மற்றும் Paint 3D .

Krita வில் முக்கியமாக படம் வரைவதற்கும் பின்னர்  3D வர்ணம் பூசுவதற்கும் பயன்படுத்தினேன். நரைமுடி தாடி விஷயத்திற்கு வருவோம். இந்த மென்பொருட்களில் இருக்கும்  நீர்வண்ண பிரஷ் , பென்சில் , ஆயில் கலர், கிரேயான், போன்றவற்றுடன் Fine tip pen என்ற ஒன்றையும் கொடுத்திருக்கிறார்கள். அதை பயன் படுத்தியே மேலே காணும் மயிரிழைகளை ஓரளவு இயற்கையாக கொண்டு வர முடிந்தது. 


இதிலிருந்து என்ன தெரிகின்றது என்றால் நல்ல உபகரணங்கள் இருந்தால் கிட்டத்தட்ட பாதி வேலை முடிந்த மாதிரிதான்.  என்னுடைய பழைய முயற்சிகளை விட இம்முறை சற்று முன்னேற்றம் கண்டிருக்கிறேன்  என்ற மன நிறைவும் வருகிறது. 

இதைத்தான் மயிரிழையில் ஊசலாடும் திறமை என்கிறேன் :)))

No comments: