சுமார் 25 வருஷங்களுக்கு முன்னால் ஃபிளிக்கர் வலைதளத்தில் கண்ட ஒரு அழகான புகைப்படைத்தைக் கண்டு ஆயில் பெயிண்டிங் ஒன்றை விலையுயர்ந்த கான்வாஸ் ஒன்றில் ஆரம்பித்தேன். அப்போதெல்லாம் 512 k modem Pentium III கணினி தான். பெருவழிப்பாதை எனப்படும் Broad Band எல்லாம் வெறும் பேச்சளவில் இருந்தது.
ஆயில் பெயிண்டிங் உலர்வதற்கு நேரம் எடுத்துக் கொள்வதால் அதை விறுவிறுவென்று தொடர முடியவில்லை. இதனிடையே வேலை பளு, ஊர் மாற்றம், புதுக் கணினி வாங்குதல் போன்ற காரணங்களால் அந்த படம் காணாமல் போய் விட்டது. முடிக்கப்படாத அந்த கான்வாஸும் எங்களுடனேயே பல ஊர்களுக்கும் பயணித்தது. அவ்வப்போது கண்ணில் பட்டு 'இதை முடிக்க வேண்டும்' என்ற எண்ணம் தோன்றும்.
காலசுழற்சியில் பல வேகமான மாறுதல்கள். கணினி மென்பொருள் வளர்ச்சியினாலும் புதுப்புது கண்டுபிடிப்புகளாலும் டிஜிடல் வரைதலில் நாட்டம் அதிகமாகி தூரிகை பிடித்து படம் வரைதல் பல வருடங்களாக இல்லாமலே போயிற்று. சென்ற மாதம் இந்த அரைகுறை படமுள்ள கான்வாஸ் மீண்டும் கண்ணில் பட்டு ஒரு குற்ற உணர்ச்சியை தூண்டியது.
அந்த ஒரிஜினல் படம் இருந்தாலல்லவா படத்தை முடிக்க முடியும்? இது எந்த ஊர், எந்த நாடு என்று தெரியாத நிலையில் இணையத்தில் தேடுவது எப்படி?
புது மென்பொருட்களில் கூகிள் லென்ஸ் என்று ஒன்றுள்ளது. அதில் என் அரைகுறை வரைபடத்தை படம் பிடித்து அதை தேடச் சொன்னேன். பல ஐரோப்பிய நாடுகளின் படங்களுக்கு இடையே நான் தேடிய படத்தை போலவே ஒன்று இருந்தது. அதை Lanterman's Mill என்று குறிப்பிட்டிருந்தது. அந்த பெயரை வைத்து தேடியபோது நூற்றுக்கணக்கான புகைப்படங்களை பல கோணங்களிலும் அள்ளித் தந்தது. இதுவே நான் தேடிய இடம், படம்.
உடனே விரைவில் காயக்கூடிய அக்ரிலிக் வர்ணப்பெட்டியை எடுத்து பெயிண்டிங்கை ஒருவாறு முடித்தேன்.
மேலே காணும் படம் நீரின் ஆற்றலால் இயங்கும் ஒரு எந்திர அரவை கூடம். இது இப்பொழுதும் செயல்பாட்டிலுள்ள 170 வருட பழைய அரவைக் கூடமாகும். ஆனால் தற்போது ஒரு காட்சியகமாகவும், கல்விச் சுற்றுலா தலமாகவும் அமெரிக்காவின் ஓஹாயோ மாகாணத்தில் உள்ளது.
நீரினால் சுழலும் டர்பைன் கட்டிடத்தின் உட்பகுதியில் உள்ளது. ஆற்றில் ஒரு தடுப்பு சுவர் கட்டப்பட்டு (check dam) நீரின் ஒரு பகுதி டர்பைனுக்காகத் திருப்பி விடப்படுகிறது. மிகுதியான பெருக்கையே தடுப்புச் சுவரை தாண்டி வரும் நீர் வீழ்ச்சியாக வெளியே காண்கிறோம். கட்டிடத்தை ஒட்டிக் காணப்படும் சிறிய வீழ்ச்சியே உள்ளே டர்பனை சுழலச் செய்து வெளியேறுகின்ற நீராகும். பொதுவாக வருடம் முழுவதும் இயங்கும் விதமாக கணக்கிடப்பட்டு தடுப்புச் சுவரின் உயரம் தீர்மானிக்கப்படுகிறது. இதனால் நீரின் வரத்து குறையும் பருவங்களில் வெளியே பெருகி வழியும் நீர் குறையுமே ஒழிய இயந்திர இயக்கத்திற்கு தேவையான நீர் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
இதே முறையை கடைபிடித்து தற்காலத்தில் மின் உற்பத்தி செய்யும் கூடங்கள் (mini hydro electric units) நம் நாட்டிலும் பல மாகாணங்களில் பரவலாக செயல்பட்டு வருகின்றன.
இதையெல்லாம் படத்தை வரைய ஆரம்பித்த காலத்திலேயே முடித்திருந்தால் தெரிந்து கொண்டிருப்பேனா என்பது சந்தேகமே.
எல்லாத்துக்கும் ஒரு வேளை வரணும்.
அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்தக் கருமங்கள் ஆகா- தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்க ளெல்லாம்
பருவத்தால் அன்றி பழா
அப்படீன்னு சும்மாவா சொல்லி வைச்சிருக்காங்க ஔவையார் !
No comments:
Post a Comment