Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Wednesday, October 25, 2017

மேய்ப்பவர் அவரே உலகையெல்லாம்....


        என்னுடைய பழைய தினக் குறிப்பேட்டில் பொழுது போகாதபோது எதையாவது டூடுல் (doodle) செய்வது வழக்கம். இதை சிலர் Scrap book என்பர். பெரிய சித்திரக்காரர்கள் அதற்கென தனியாக படங்கள் வரைவதற்கேற்ற -acid free, 110 GSM, lignin free, pure cellulose- காகிதம் கொண்ட பெரியதும் சிறியதுமாகிய பல அளவுகளில் புத்தகங்கள் வைத்திருப்பார்கள். நானோ கத்துகுட்டி.
 யாரோ கொடுத்து பயனில்லாமல் கிடந்த 2010 டைரி இப்போது என்னுடைய Scrap Book.  ஏழைக்கேத்த எள்ளுருண்டை !!

எதற்காக இவ்வளவு பில்டப் என்றால் கீழே உள்ள பட த்தைப் பார்த்து ஏன் இப்படி ஏனோ தானோவென்று படம் போட்டிருக்கிறீரென்று யாரும் கேட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான்.


 யோகானந்த பரமஹம்ஸர், விவேகானந்தருக்கு அடுத்து மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில், நமது தேசத்தின் புராதன தியான யோக பெருமைகளை நிலைநாட்டியவர். அவர் அங்கேயே முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தங்கியிருந்து யோகதா சத்சங்கம் என்பதை நிறுவி தற்போது அது நூற்றாண்டு விழா உலகெங்கும் கொண்டாடி வருகிறது. ( https://www.yogananda-srf.org/ )

 அவருடைய சீடர் டிகின்ஸன் ( Dickinson ) என்பவர் வாழ்வில் ஒரு நிகழ்ச்சி.

டிகின்ஸன் ஐந்து வயது சிறுவனாக இருக்கும் போது விளையாட்டாக அவருடைய அண்ணன் அவரை பதினைந்து அடி ஆழ நீர் நிலையில் தள்ளி விடுகிறார். நீச்சல் தெரியாத சிறுவன் ஒரு முறை மேல் வந்து திரும்பவும் மூழ்கும் சமயம் வானில் ஒரு பேரொளி அதன் நடுவில் அருளே வடிவான ஒருவர் முகம் தெரிகிறது.

 இரண்டாம் முறை மேலெழும் போது பல சிறுவர்கள் சேர்ந்து அவரை காப்பாற்றுகின்றனர். பன்னிரெண்டு ஆண்டுகள் கழித்து, 1893-ல், சிகாகோ நகரில் தன் தாயாருடன் நடந்து செல்லும் போது தனக்கு முன் அதே பேரொளி செல்வதை காண்கிறார். அதை தொடர்ந்து சென்றால் அந்த மனிதர் மேடை மேல் பல்வேறு சமயத் தலைவர்களுடன் வீற்றிருந்தார். சொற்பொழிவுகள் முடிந்ததும் அவர் விவேகானந்தர் என்பதை அறிந்து கொள்கிறார். அவர் அருகே தன் தாயாருடன் சென்றார். அவரை கண்டதுமே அன்பு பொங்க “இளைஞனே நீரிலிருந்து தூர இரு “ என்று அறிவுறுத்துகிறார்.

 ‘ஓ இவர் எனக்கு வழிகாட்டமாட்டாரா’ என்ற எண்ணம் ஓடியது டிகின்ஸன் மனதில். அதைப் பற்றி எதுவும் சொல்லாமலே விவேகானந்தர் ‘உன்னுடைய குரு உனக்கு வெள்ளிக் கிண்ணம் ஒன்றை பரிசாக அளிப்பார். உன்னால் பிடிக்க முடியாத அளவுக்கு அவர் அருள் பொங்கி வழிந்து கொண்டே இருக்கும்’ என்று அவருடைய ஆன்மீக வாழ்க்கை தடைபடாது என்பதை முன்கூட்டியே உரைத்தார். அவருடைய ஒவ்வொரு சொல்லும் டிகின்ஸன்னின் எண்ணத்தில் ஆழப்பதிந்தன.

ஆண்டுகள் பல உருண்டன. யோகதா சத்சங்கத்தில் உறுப்பினராகி பதினோரு ஆண்டுகள் மூன்று வேளையும் விடாது தியானம் பயின்று வந்தார். யோகானந்த பரமஹம்ஸருக்கு நெருங்கியவராக இருந்த போதும் விவேகானந்தருடன் தன்னுடைய அனுபவத்தை சொல்ல நினைவே எழவில்லை. 1936-ல் கிருஸ்மஸ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சந்தாகிளாஸ் வேடம் பூண்டு அனைவருக்கும் புத்தாண்டு பரிசுகளை வழங்கிக் கொண்டிருந்தார் சுவாமி யோகானந்தா. மீண்டும் அதே பேரொளி! “டிகின்ஸன் இது உனக்கு” என்று கொடுத்த பரிசு பொட்டலத்தை பிரித்தால் அதனுள் ஒரு வெள்ளிக் கிண்ணம்.

    டிகின்ஸனுக்கு பழைய நிகழ்வுகள் மீண்டும் மனதில் நிழலாடியது. யோகானந்தரே தனது குரு என்பதை அவருடனேயே இருந்தும் அறியாமல் போனேனே என்ற பச்சாதாபம் மனதில் எழுந்தது.

 நாற்பத்தி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சுவாமி விவேகானந்தரின் வாக்கு பலித்தது கண்டு ஆச்சரியம் அடைந்தார்.

(Autobiography of a YOGI, ISBN 978-81-89535-51-3, Indian ed. 2016; chapter 47) 

ஆன்மீக உலகம் என்பது விஞ்ஞான உலகத்திற்கு எதிர் துருவம் என்பர். தனிபட்டவரின் வாழ்வில் ஆன்மீக முன்னேற்றம் போல சமூகத்தில் ஆன்மீக முன்னேற்றத்திற்கு யோகிகளும் ஞானிகளும் அவதரித்துக் கொண்டே இருக்கின்றனர். இயேசு சொல்வது போல ’ நல்ல ஆயர்கள் அவர்களே’(John 10:11)

   "நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார் நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன் என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன். இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்லவேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவி சாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஓரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும். தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார். ஏனெனில் நான் என் உயிரைக் கொடுக்கிறேன் அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவே கொடுக்கிறேன்."

இன்றும் யோகதா சத்சங்கங்களில் ஏசுவின் படமும் கிருஷ்ணரின் படமும் யோகதா குருமார்களின் படமும் தியான அறையில் ஒரு சேர வழிபடப்படுகின்றன. பிரிந்து கிடக்கும் சமுதாயங்களை ஒன்று படுத்தும் பாலமாக அவதாரங்களின் முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

1 comment:

nananth50 said...

Thanks for the info. Never knew about him so far
Good work Umesh