Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Sunday, October 8, 2017

அரசமரத்தடி நினைவுகள்

     கிட்டத் தட்ட ஒரு வருடத்திற்கு மேலாகி விட்டது இந்த வலைப்பூவில் பதிவு எழுதி !  அதாவது படம் போடாமலில்லை ஆனால் பதிவுக்கு தகுந்த தகுதி  இருக்கிறதா என்று புரியவில்லை. அதனாலேயே  தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தேன். இனியும் காலம் கடத்தக்கூடாது என்ற ஒரே நோக்கோடு  இப்போது  பதிவிடுகிறேன்

புட்டபர்த்திக்கு செல்லும் வழியில்  லேபாக்ஷி கோவிலுக்கு   சென்றேன்.  எதிரில் பெரிய அரசமரத்தடியில்  இரண்டு  கறிகாய் விற்பவர்கள், வேறு சில பெண்கள் யாரையோ எதிர்பார்த்துக் கொண்டு தம்மளவில் உரையாடிக்கொண்டிருந்த  காட்சி, அங்கிருந்த கிராமிய சூழ்நிலை ரம்மியமாக இருந்தது. உடனே அதை அலை பேசியில் படம் பிடித்து  பின்னர் அதை கோட்டோவியமாக வரைந்து பார்த்தேன். அந்த பெரிய அரசமரத்தின் பரிமாணம்  அதனடியில் அமர்ந்திருப்பவர்களின் அளவைக் கொண்டே புரிந்து கொள்ள முடியும். அது ஓரளவு  சரியாக வந்திருக்கிறது என்று எண்ணுகிறேன்.


இதையே  பின்னர்  டிஜிடல் வர்ணமுறையில்  வர்ணம் செய்ய முயற்சித்தேன். ஆனால் போட்டோஷாப் பழைய வெர்ஷன் ஆனதால் அடிக்கடி முரண்டு பிடித்து வேலை நிறுத்தம் செய்ய ஆரம்பித்தது. எனக்கும்  பொறுமை போய் முடிந்தவரைக்கும் போதும் என்று  வலையேற்ற துணிந்து விட்டேன்.

அதுவே நீங்கள் கீழே காணும் படம்.

லேபாக்ஷி கோவில் கர்நாடகா-ஆந்திர எல்லையில் அமைந்துள்ளது. பெங்களூரிலிருந்து சுமார் 150 கிமி தூரத்தில் உள்ளது.  அதன் வரை படங்களை இன்னொரு பதிவாக வெளியிடுகிறேன்.

மரங்களில் புனிதமாக போற்றப்படும் அரசமரம் எங்கும் வளரக்கூடியது. போதி மரம் எனப்படும் அரசமரத்தடியில்தான் புத்தருக்கு ஞானம் வந்ததாக சொல்வர். இதை அசுவத்த மரம் என்று விஷ்ணு ரூபமாகவும் வழிபடுகிறார்கள்.  விருக்ஷங்களில்  நான் அஸ்வத்தம் என்று கிருஷ்ணர் கீதையில் உரிமை கொண்டாடுகிறார்.
இந்த மரம் மட்டுமே இரவிலும்  கரிமலவாயுவை  எடுத்துக் கொண்டு ஆக்ஸீகரணம் செய்ய வல்லது.  காற்றிலுள்ள கரிமலவாயுவை மீண்டும் பிராணவாயுவாக மாற்றுவதில் பெரும் பங்கு வகிப்பது அரசமரம் என்று சொல்லப்படுகிறது. ஆயுர்வேதத்திலும்  அரசமரத்தின் பாகங்கள் பெரிதும் போற்றப்படுகின்றது

இயற்கையின் முன்னர் மானிடர் என்றும் சிறியவரே.


No comments: