Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Thursday, April 24, 2008

இந்த புலியும் நீர் குடிக்குமா ?

Pastels எனப்படும் வர்ணக் கட்டிகள் உபயோகிப்பதற்கு சுலபமானவை.வர்ணப் பென்சில்கள் போலல்லாது இவற்றில் வர்ண அடர்த்தி அதிகம். கிட்டத்தட்ட ஆயில் வர்ணங்களின் அடர்த்தி கிடைக்கும். பேஸ்டலுக்கு தூரிகைகளின் அவசியம் இல்லை. இதனால் பல இடங்களுக்கும் எளிதாக எடுத்துச் செல்ல முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக இதனை போற்றுபவர்கள் கூறும் காரணம் எத்தனை வருடங்கள் ஆனாலும் வர்ணங்கள் மங்காமல் புதுபொலிவுடன் இருக்கும் என்பதுதான்.

இப்படி பல விஷயங்களைப் பற்றி படித்தபின்னர், சரி இதையும் தான் பார்த்து விடுவோமே என்று இருபத்தி நான்கு வர்ணங்கள் உள்ள ஒரு பெட்டியை வாங்கிவந்தேன்.பார்ப்பதற்கு குழந்தைகளுக்கு தரும் plastic crayon போலவே இருந்தது. முதல் முயற்சி ஒரு பஞ்சவர்ணக் கிளி. அதை ஆரம்பித்து விட்டு முழி முழி யென்று முழித்தேன். ஏனெனில் அதில் வர்ணக்கலவைகளை பெறுவதற்கு ஒன்றின் மேல் ஒன்றாக செய்து கொண்டு போக வேண்டுமாம். அதை ஒரு சாதாரண வரைதாளில் வரைய ஆரம்பித்து விழி பிதுங்கிவிட்டது.வர்ணங்கள் பூசுவதில் சற்று முன் பின் ஆகிவிட்டால் சரி செய்வது மிகக் கடினமாக பட்டது. அளிப்பான் கொண்டு அளித்து விட முயன்றால் தாளுடன் பிடிமானம் அதிகமாகி மேலும் உறுதியாக தாளில் பரவிக் கொண்டது.

பேஸ்டல்களுக்கென்றே தனியாக ஒரு வரைதாள் உண்டு. அது சற்று சுர சுரப்பாக இருக்கும். இதை tooth அல்லது grain என்று கூறுவார்கள். அப்படி இருந்தால்தான் வர்ணத்திற்கு பிடிமானம் இருக்கும்.உதிர்ந்து விழாமல் இருக்குமாம். நான் எப்போதும் படுக்கை வாட்டில் வைத்து வரைவதால் உதிர்ந்து விழும் என்ற கவலை வரவில்லை.:))

எப்படியோ கிளியை (இப்போ கணிணி பிரதி இல்லை. கிடைத்ததும் வலையேற்றுகிறேன் ) ஒரு வழியாக முடித்து பேஸ்டல் வரைதாளை வாங்கி வந்தேன். அதில் அடுத்ததாக ஒரு வரிப்புலியை துவக்கினேன்.இதில் மூன்று வர்ணங்களே பிரதானமாகப் பயன் படுத்தப்பட்டுள்ளன. ஆரஞ்சு,ப்ரௌன் மற்றும் கறுப்பு. இதில் முக்கியமாக வரைய விரும்பியது புலியினுடைய வரிகள், நீரில் காணும் பிரதிபலிப்பு. 2004-ல் வரைந்தது. லேமினேஷன் செய்து கொஞ்சம் மங்கிப் போன படத்தில் இதுவும் ஒண்ணு.

படத்தை முடித்த பிறகு பார்த்த என் பெண் சொன்னது “இதுக்கு தண்ணி குடிக்கிறதுல இண்ட்ரெஸ்ட் இல்ல போலிருக்கே. குடிக்கிற மாதிரி பாசாங்கு பண்ணுது”

உங்களுக்கு என்ன தோணுது?

4 comments:

ஓவியா said...

புலியார் தண்ணி எப்படி இருக்குமோ என்று யேசனை செய்வது போல இருக்கிறார். :)

அழகாக வரைந்திருக்கிறீர்கள்!

கபீரன்பன் said...

வாங்க ஓவியா.

//தண்ணி எப்படி இருக்குமோ //

உண்மைதான். மாசுக் கட்டுப்பாடு இல்லா ஜனங்கள் விலங்குகளை அப்படி கவலைப்பட வைத்தாலும் ஆச்சரியமில்லை :))
உங்கள் வலைப்பக்கத்தை பார்த்தேன். கலையுணர்வோடு நன்றாக துவக்கியுள்ளீர்கள். வாழ்த்துகள்

வசந்தன்(Vasanthan) said...

புலியின் பார்வை நீரைப் பார்ப்பதாக இல்லாமல் எம்மைப் பார்ப்பதைப்போலத் தோன்றுகிறது. அப்படி வரவேண்டுமென்றுதான் நினைத்தீர்களா?
அப்படிப் பார்ப்பதால்தான் பாசாங்கு செய்வதாக உங்கள் பெண்ணுக்குத் தோன்றியதோ?

ஆனால் எனக்கு இந்தப்பார்வை பிடித்திருக்கிறது. தான் தாகம் தீர்ப்பதைக் குழப்பும் புகைப்படப்பிடிப்பாளனைப் பார்ப்பதைப் போல இருக்கிறது.

கபீரன்பன் said...

உண்மைதான் வசந்தன். பார்த்து வரைந்த, அந்த புகைப்படம் இருந்ததும் அப்படித்தான். ஒருவேளை புகைப்படக்காரர் இருந்ததனால் அதன் கவனம் திசை திரும்பியதோ என்னவோ.

உங்களுக்கு பிடித்திருப்பதில் எனக்கு மிக்க மகிழ்சி. வருகைக்கு நன்றி.