Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Monday, March 17, 2025

ஒரு கரி ஈடழித்து உரித்தனை.....

 சில வருடங்களுக்கு முன்  ஹளேபீடு சென்றபோது உலக புகழ் பெற்ற அந்த சிற்பங்களை நிறைய படம் எடுத்து வைத்திருந்தேன்.

சமீபத்தில் தேவாரப் பாடல் ஒன்றில்  "யானையின் தோல் அழல் திகழ் மேனியில் அணிந்தவனே"  என்ற வரிகள் ஹளேபீடில் கண்ட ஒரு சிற்பத்தை நினைவு படுத்தியது. 

நிழல் திகழ் மழுவினை! யானையின் தோல்

அழல் திகழ் மேனியில் அணிந்தவனே!

கழல் திகழ் சிலம்பு ஒலி அலம்ப, நல்ல

முழவொடும் அருநடம் முயற்றினனே!

முடிமேல் மதி சூடினை! முருகு அமர் பொழில் புகலி

அடியார் அவர் ஏத்து உற, அழகொடும் இருந்தவனே!

டிஜிடல் வரைவு முறையில்  இது வரை எந்த சிற்பத்தையும் வரைந்ததில்லையாதலால் இதை முயற்சிக்கலாம் என்று தோன்றியது. அதன் விளைவாக வரைந்ததே கீழே உள்ள படம்.


(Click the picture for enlarged view)

 கஜ சம்ஹார மூர்த்தி என்று வணங்கப்படும்  சிவனை  "கரி உரித்த சிவன்" என்று சைவ சமயம் போற்றுகிறது.   ஆனையின் தலைமேல் சிவன் நடனம் புரிகிறான். வழக்கமாக காணப்படும் நான்கு கைகளுக்கு பதிலாக எட்டு கைகள். அவைகளில் நடுவே உள்ள நான்கும் ஆயுதம், சூலம், திருவோடு, உடுக்கைகளுடன் சிவ சின்னமாகத் திகழ்கின்றன. முன்னிரண்டு கைகள் நாட்டிய பங்கியில் ஆடலழகை சிறப்பிக்கின்றன. மேலிரண்டு கைகள் தோலை உரித்து போர்வையாக போர்த்திக் கொள்ளும் வகையில் சித்தரிக்கப்படுகின்றன.  இதனால் இவர் அஷ்டபுஜ கஜசம்ஹார மூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார். 

சிற்பத்தின் அழகை அப்படியே வடிவெடுப்பது மிகவும் கடினமானதை ஒட்டி மென்பொருள் மூலம் இன்னொரு முயற்சியை கையாண்டேன். அதை சுருக்கமாக சொல்ல வேண்டுமானாலதை நகலெடுத்தல் ( Tracing technique) எனலாம்.

ADOBE, KRITA போன்ற  மென்பொருட்களில் இதற்கான வசதி இருக்கிறது. நாம் எந்த படத்தை நகலெடுக்க வேண்டுமோ அதை அடிப்படை சித்திரமாக வைத்துக் கொண்டு அதன் மேல் பிரதிக்கான லேயரை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதன் மேல் நமக்கு வேண்டிய வர்ணத்தில் வரி வடிவமாக வரைந்து  கொண்டு அடிச் சித்திரத்தை பின்னர் டிலீட் செய்து விட வேண்டும்.

இதற்கு மேல் விளக்க முற்பட்டால் சாதாரண வாசகர்களுக்கு   குழப்பம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். 

நான் நகலெடுக்க பயன்படுத்திய மென்பொருள் KRITA. பின்னர் வர்ணம் பூச  Paint 3D. 

கஜசம்ஹார மூர்த்திக்கு மாயவரம் அருகே உள்ள திருவழுவூரில் பிரத்யேக கோவில் உள்ளது.  மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை சொடுக்கவும்.

தலைப்பு : இதே கதையை குறிப்பிட்டு சிவனைப் போற்றும் சம்பந்தரின் திருவெழுக்கூற்றிருக்கை யில் வருகின்ற வரி

Saturday, June 29, 2024

தவிக்கிற வாய்க்குத் தண்ணீர்....

     நாட்டின் தலைநகர், யமுனைக் கரையில் அமைந்திருக்கும், டில்லி நகரமே தண்ணீர் பிரச்சனையால் அல்லாடுகிறது.  இது வரலாறு காணாதது.  இதுவரையில் தென்னகத்தில்தான் தண்ணீரை வைத்து அரசியல் செய்து வந்தார்கள் என்று நினைத்தோம். இப்போது வடக்கிலும் ஆரம்பித்துவிட்டது.

 கோடை காலம்  வந்துவிட்டது.  விலங்குகளுக்கும் பறவைகளுக்கும்  கூட குடி நீர் பிரச்சனை. பலர் வீட்டுத் தோட்டங்களில் அல்லது மாடிகளில்  அகலமான பாத்திரங்களில்  வைத்து சுலபமான சேவையை செய்து வருகின்றனர்.

இதோ இந்த குருவி எப்படி கழுத்தை வளைத்து தொண்டைக்குள்  நீரை இழுத்துக் கொள்கிறது பாருங்கள்


  கோழி போன்ற சில பறவைகளுக்கு நீரை உறிஞ்சிக் குடிக்க முடியாது. கழுத்தை மேலே திருப்பி  நீரை உணவுக் குழாய்க்குள் இறக்குகின்றன.  புராணங்களில் சொல்லப்படும் சகோர பட்சியும் அப்படிப்பட்டது தானோ? அதனால்தான்  மழைத்துளியை மேலிருந்து விழும் போதே அருந்திவிடுகிறதோ!!

 சமீபத்தில் அப்படி மேலிருந்து விழும் துளிக்கென காத்திருக்கும் ஒரு பறவையைக் கண்டேன்.

 இரண்டு மாதங்களுக்கு முன்பு தஞ்சை சென்றபோது ஒரு அபூர்வமான சிற்பத்தை  கண்டேன். இடம், பெரிய கோயிலில் அம்மன் சன்னதி.

  ஊருக்கு திரும்பி வந்து தேடிய போது வலைத்தளம் எதிலும் அச்சிற்பத்தைப் பற்றிய குறிப்பு  கிடைக்கவில்லை. தமிழ் சங்க இலக்கியங்களில்  அப்படி ஒரு காட்சி வர்ணிக்கப்பட்டிருக்கிறதா என்றும் தேடினேன், அதிலும் தோல்வி. தமிழறிஞர்களுக்கு இதைப் பற்றி தெரிய வாய்ப்புண்டு.  அந்த சிற்பத்தை புகைப்படம் எடுத்து அதை சித்திரமாக வரைந்ததைத்தான் கீழே காண்கிறீர்கள்.


 ஒரு  அசாதாரண நிகழ்ச்சியை கண்டு சிற்பி இதை வடிக்க முயன்றாரா அல்லது ஒரு கவிஞனின் கற்பனைக்கு உயிர் கொடுக்கும் வகையில் வடித்தாரா என்பது கேள்விக்குரியதாகிறது.  

அதற்கானக் கவிதையை யாராவது எடுத்துக் கொடுக்கும் வரையில் எனக்குத் தோன்றிய வகையில் நான் ஒரு கவிதை எழுதி வைக்கிறேன்.

புள்ளுக்கு கூந்தல் வடி நீரும் குடிநீராமோ

உளிவடித்த சிலையும் உயிர்த்து வருமோ

வெளிவரும் ஆயிரம் ஆண்டுகள் சரிதம்

      களித்துப் போற்றவே,  தமிழரின்  பெருமை

                                                               ( புள் = பறவை )

குருவி நீர் குடிப்பது என் வரைப்புத்தகத்தில் பென்சில் கலரால் வரையப்பட்டது.

மங்கை கூந்தலை உலர வைப்பது டிஜிடல் முறையில் வரையப்பட்டது

Wednesday, June 12, 2024

லாந்தருக்கு 'லாந்தர் கவிதை'

 ஆங்கிலத்தில் Lantern என்பது தமிழில் லாந்தர் ஆகிவிட்டது.  அதை அரிக்கேன் விளக்கு என்றும் சொல்வதுண்டு.

அது என்ன லாந்தர் கவிதை ?

 Lantern Poem  என்று வகைப்படுத்தப்பட்டுள்ள கவிதைகள் ஜப்பானிய லாந்தர் விளக்கின் அமைப்பை ஒத்து இருக்கும்.  மூன்று வரி ஹைகூ கவிதைகள் போல இவைகள் ஐந்து வரிகள் கொண்டவையாக இருக்கவேண்டும்.  முதல் வரியில் ஒரு மாத்திரை ( syllable) அளவில் துவங்கி அடுத்தடுத்த வரிகளில் ஒவ்வொன்றாகக் கூட்டி மீண்டும் ஐந்தாவது வரியில் ஒரு மாத்திரையில் முடியும்.  உதாரணத்திற்கு ஒரு கவிதை.  

Fruit

Are yum

Are tasty

And healthy for

you

(மூன்றாம் வரியில்  tasty    மற்றும்  நான்காம் வரியில்  healthy  இரண்டும் இரண்டு மாத்திரைகள் எனக் கொள்வதால் விதி சரிபட்டு வருகிறது.)

இது என்ன புதுசா ஆங்கில பாடம் எடுக்க ஆரம்பிச்சுட்டே என்று வாசகர் நினைப்பது புரிகிறது.

நான் புதிதாக வாங்கிய சாம்சங்க் வரைபட டாப்லெட்டில் வரைந்த  லாந்தர் விளக்குக்காக எதையோ தேடப்போய் மேற்கொண்ட புதிய விஷயங்களை தெரிந்து கொண்டேன். அதை உங்களிடமும் பகிர்ந்து கொண்டேன்.  

 இந்த லாந்தர் விளக்கு  சாம்சங் -கில் கொடுக்கப்பட்டிருக்கும் மென்பொருளைக் கொண்டே வரையப்பட்டது. வேறெந்த விசேஷ மென்பொருளும் உபயோகிக்கவில்லை. 

இரவில் வழித்துணைக்கு பயன்பட்ட இந்த லாந்தர் விளக்குகள்  சந்தையிலிருந்து திரும்பும் மாட்டு வண்டிகளின் அடிப்பக்கத்தில் மாட்டப்பட்டு,  வண்டியின் போக்கிற்கு ஏற்ப அசைந்தாடும் அழகை கண்டு ரசித்திருக்கிறேன். அவைகள் வண்டி மாடுகளுக்கு போதிய வெளிச்சம் கொடுத்தனவோ இல்லையோ,  பின்னால் வரும் வேறு வாகனங்களுக்கு எச்சரிக்கையாக செயல்பட்டன. இப்பொழுதும் கிராம பக்கங்களில் ஓரளவு பயன்பாட்டில் இருக்கக் கூடும்.  விரைவிலேயே இவைகளின் சகாப்தம் காட்சிப் பொருளகங்களில் முடிவடையும்.

அடேயப்பா இந்த சின்ன விளக்கில் எவ்வளவு நுணுக்கமான பொறியியல் விஷயங்கள்!!  காற்று உள்ளே போவதற்கும் வெளியேறுவதற்கும் வழிகள், காற்றில் அணையாமல் காப்பதற்கு ஒரு கண்ணாடி புட்டி, அது அசையாமல் இருக்க  சுற்றி இறுகப் பிடிக்கும் கம்பிகளின் அமைப்பு, கூடவே  ஒரு கொக்கியின் பாதுகாப்பு  என்று வியக்க வைக்கிறது. சுமார் ஒரு நூற்றாண்டுக்கும் மேல் பயன்பட்டிருக்கும் இந்த விளக்குகளைக் கேட்டால் எவ்வளவு சரித்திரம் கிடைக்கும்.

லாந்தர் விளக்குக்கு ஒரு லாந்தர் கவிதை :

நீ

கண்ட வரலாறு

எல்லாம் அடங்குமோ இந்த

லாந்தர் கவிதையின் உள்ளே,  சொல்லிடு

அரிக்கேனே !

( இதில் மாத்திரை கணக்குப் பார்க்காமல் சொற்களின் கணக்குப்படி  அமைத்துள்ளேன்.)

Wednesday, September 13, 2023

இந்த புன்னகை என்ன விலை -2

 படம் பார்த்து கதை சொல்


அம்மாவுக்கு செல்லம் 

 என் செல்ல அம்மா, தங்கக் கட்டி அம்மா ...... 

 டேய் ! என்ன விஷயம் சொல்லு ... 

 என் ஆசை அம்மா ...உனக்கு என்னை ரொம்பப் பிடிக்கும் தானே ? 

 என்னடா ? என்ன வேணும் இப்போ ? 

 என் பிரண்ட்ஸ் எல்லோரும் கபடி மேட்ச் பார்க்க போறாங்க, நானும் போகட்டுமா? 

 எந்த பிரண்ட்ஸ் ? 

 சாமி, தில்லை, நாகு ..... 

 எங்க ? எவ்வளவு தூரம் ? 

 இங்கதாம்மா, மேட்டுத் தெரு கோடியில, முள்ளியாத்து மணல்ல 

 இருட்டுறதுக்குள்ள வந்திடுவியா ?

 ஓ ...! 

 சரி  சரி , நல்லா சட்டையா பாத்து போட்டுக்கிட்டு போ, பரண் மேல பொரி உருண்டை இருக்கு. பிரண்ட்ஸ்க்கும் சேர்த்து கொண்டு போ.

 சரிம்ம்மா ......என் செல்ல அம்மா ... 

 சிட்டென பறக்கிறான் குட்டிப்பையன்.

சிறுவனின் முகத்தில் ஒரு கொஞ்சலான புன்னகை.

அதே சமயம்   வேலையில் ஆழ்ந்திருக்கும்  அன்னையின் முகத்தில் ஒரு  சந்தோஷமான  நமட்டு சிரிப்பு   இரண்டையும் ஒரு சேர கொண்டுவர வேண்டும் என்பதே  இந்த படத்தின் பெரிய சவால்.  

அதனால் படத்தில்  பின்னணி  போன்ற வேறு பல விஷயங்களில்  அதிக கவனம் காட்டவில்லை. 

முழு படமும் கீழே .

Sunday, June 18, 2023

இந்தப் புன்னகை என்ன விலை?

 பேரனுக்கு  விளையாடப் போகணும்.

அன்பான தாத்தா பிடிச்சு வைச்சுப் பேச்சுக் கொடுக்க ஆரம்பிக்கிறார்.

அவனுக்கோ தன் நிலைமையை சொல்லி புரிய வைக்க முடியாத நிலையில் சிறிது பொறுமை காட்டுகிறான். அப்போது அவன் முகபாவம் எப்படி இருக்கும் ?

இப்படி இருக்குமா ?

பெரியவருக்கான ஒரு மரியாதை கலந்த அன்பை அச்சிறுவனின் முகத்தில் காண்பிக்க தனி முயற்சி எடுத்த சித்திரம் இது.

வெளிநாட்டு ஓவியங்களில் மோனலீசா வின் ( லியானார்டோ-டாவின்சி ) படத்தில் இருக்கும் -மர்மமான- புன்னகையை சிலாகித்து பல விற்பன்னர்களும் பாராட்டியிருக்கிறார்கள்.

அப்படி  ஒரு புன்னகையை ஏன் முயன்று பார்க்கக் கூடாது என்பதன் வெளிப்பாடுதான் இது. 

மோனாலீசா போல் இதில் ஏதும் மர்மம் இல்லை.  தாத்தா பேச்சைத் தட்டமுடியாமல்  ஒரு அசட்டு சிரிப்புடன் அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருக்கிறான். அவ்வளவு தான்.

முழுப்படமும் கீழே .




தாத்தாவின் கண்களில் உள்ள எதிர்பார்ப்பும் ஆளுமையும்,   சிறுவனின் மனநிலையை  பார்க்க விடாமல் செய்து விடலாம் என்ற எண்ணத்தோடு முதலில் சிறுவனைத் தனியாக  zoom- in  செய்து பின்னர் முழு படத்தையும் போட்டிருக்கிறேன். 

இவர்கள் குஜராத் ராஜாஸ்தான் மாநிலங்களில் ஒட்டகங்களை மேய்ப்பவர்கள்  'ராய்கா' எனப்படும் குடியை சேர்ந்தவர்கள். சுமார் பத்து லட்சம் ஜனத்தொகையாக இருந்த இந்த குடியினர் கடந்த முப்பது ஆண்டுகளில் இரண்டு லட்சமாக சிறுத்து விட்டனராம். இதனால் ஒட்டகப் பராமரிப்பு குன்றி ஒட்டகங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறதாம். தற்போது 2019 கணக்கின்படி ராஜாஸ்தானில் 21000 ஒட்டகங்களே உள்ளன.

இந்த சீரழிவைத் தடுக்க ராஜாஸ்தானில் ஒட்டக மேம்பாட்டு ஆராய்ச்சி ஏற்படுத்தப்பட்டு இறைச்சிக்காக  செய்யப்படும்  ஒட்டக வதைக்கும்  தடை விதிக்கப்பட்டுள்ளதாம்.  ஒட்டகத்தின் பால் மிக விசேஷமான மருத்துவ குணம் கொண்டது. மனநலம் குன்றிய குழந்தைகளுக்கும் நீரிழிவு நோய் கொண்டவர்களுக்கும் மிகுந்த பயன் உடையது.  மேலும் படிக்க...

ஹூம் !  இந்த  கதையெல்லாம் கேட்க விளையாடப் போகும் சிறுவனுக்கு ஏது நேரம் ?

 

Monday, May 29, 2023

கண்ணனை நினைக்காத நாளிலில்லையே...

 தமிழ் நாட்டில்  மாணிக்கவாசகர் சிவபெருமானை தலைவனாக வைத்து நாயகி பாவத்தில் திருக்கோவையார் பாடியுள்ளார். இது ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைவதற்கான  ஏக்கப்பொருளாகும். இறைவனைத் தேடுதலால் தமிழ் இலக்கியத்தில் அகப்பொருள் எனப்படும்.  

அவர் போலவே கலிங்கப் பகுதியான ஒடிஷாவில் வாழ்ந்த ஜெயதேவரும் கண்ணனை நினைத்து உருகி பாடிய பாடல்கள் "கீதகோவிந்தம் " என்ற பெயரில் வடமொழி பக்தி இலக்கியத்தில் மிகவும் புகழ் பெற்றது.

அவருடைய பாடல்கள் சிலவற்றுக்கு உருவகம் கொடுத்து நாற்பது அல்லது நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நாட்காட்டி வெளிவந்திருந்தது.

வெறும் கோட்டு ஓவியமான அச்சித்திரங்களின் அழகில் மயங்கி  ஒரு சிலவற்றை  நான் ஒரு வரைபுத்தகத்தில் என் விடுமுறை நாட்களின் போது வரைந்திருந்தேன்.  அப்புறம் அது எங்கு போயிற்றோ, மறந்தே போனேன்.

சென்ற ஆண்டு திடீரென்று என் சகோதரிக்கு அப்புத்தகம் கிடைத்து அதிலிருந்த சில படங்களை வாட்ஸ்-ஆப் மூலம் அனுப்பி வைத்தாள். மிகவும் கசங்கிப் போயிருந்த தாள்கள், கோணலான காமிரா கோணம்   ஆனாலும் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. 

உடனே அதை மடிக்கணினிக்கு மாற்றி அதை சீர் செய்யும் முயற்சியில் ஈடுபட்டேன்.  அதன் விளைவே கீழே உள்ள படங்கள். மென்பொருள்  Paint 3D.






எனக்கு வாட்ஸ்-ஆப்பில் வந்த வடிவம் மேலே !!!   வலதுபுற மூலையில் ஜெயதேவரின் பாடல் ஆங்கில மொழிபெயர்ப்பில் கொடுக்கப்பட்டிருந்தது.

அதன் சாரம்,  'கண்ணன் தன் காலிற்கு மருதாணி இட்டு அழகு பார்க்கும் பாங்கை   ராதை வியந்து போற்றுவது' எனக் கொள்ளலாம்.

மெஹந்தி அல்லது மருதாணி  மிகப்பழமையான அலங்காரப் பொருளாக உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. எகிப்தியர்களின் பயன்பாட்டிற்கும் பழமையான ராமாயண காலத்திலிருந்தே மருதாணியின் பயன்பாட்டின் குறிப்பு நம் இலக்கியங்களில் காணப்படுகிறது. தற்காலத்தில் தென்னிந்திய திருமணங்களிலும் "மெஹந்தி" விழாவாகவே இடம் பெற்று விட்டது. அதற்காக ஏராளமாக பணம் செலவழிக்கிறார்கள்.

பாரம்பரியத்தில் பணத்தைத் தேடுவதே மனிதரின் குணமாய் போயிருப்பது கலியின் பிரபாவம். !!






Tuesday, November 1, 2022

எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு

 பல சமயங்களில் நாம் பெறும் சில உணர்வுகளை  நம்மால் சொல்லில் வடிக்க முடியாத போது  அதை அப்படியே படம் பிடித்தது போல் ஒருவர் வார்த்தைகளில் உருவகித்து விட்டால் நம்முடைய இயலாமை என்ன என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது தமிழ் பழமொழி. ஆங்கிலத்தில் இதை " Face is the index of the mind' என்பர். ஆனால் பிராணிகளின் கண்களில் நாம் காணும் உணர்வுகளை எப்படி உள் வாங்குகிறோம்?

ஒரு பசுவின் கண்களில் இருக்கும் அமைதி, மானின் கண்களில் உள்ள மிரட்சி, புலி அல்லது சிங்கத்தின் கண்களில் காணப்படும் தன்னம்பிக்கை  என்று சொல்லிக் கொண்டே போகலாம்.  அவைகளுடைய குட்டிகளின் கண்களில் தெரியும் ஒரு அப்பாவியான கண்ணோட்டத்தை எப்படியெல்லாம் கார்ட்டூன் படங்களில் சித்தரிக்கின்றனர் என்பதை பார்க்கும் போது ஆச்சரியம் மேலிடுகிறது.

சரி விஷயத்திற்கு வருவோம்.

சமீபத்தில் ஒரு சிம்பன்சி குரங்கை கணினியில் வரைந்து பல வாட்ஸாப் குழுமங்களில் பகிர்ந்து கொண்டேன்.  பலரும்  அதன் கண்களை மிகவும் சிலாகித்து நல்ல உயிரோட்டத்துடன் இருக்கிறது என்று பாராட்டினர்.  இதற்கான காரணம் கீழ்கண்ட  மேற்கோளை கண்டபின் தான் நமக்குள் எழுகின்ற உணர்வுக்கு  எப்படி உருவகம் கொடுத்துள்ளார் என்பது புரிந்தது.

If we look straight and deep into a chimpanzee's eyes, an intelligent self-assured personality looks back at us. If they are animals, what must we be?”
― Frans de Waal


மனிதர்களின் மரபணுக்களில் 98 விழுக்காடு ஒத்துபோகும் மனிதக் குரங்குகளின் வாழ்க்கைமுறையும் கூட்டுக் குடும்பமாகவே காணப்படுகின்றன. அவைகளின் ஆயுளும் 60 வயது வரை நீடிக்கும்.

மனிதர்களுக்கும் சிம்பன்சி குரங்களுக்கும் சில பொதுவான குணங்கள் உண்டு என்கின்றனர்.  

 அனுதாபம் :  சிம்பன்சிகளுக்கும் சந்தோஷம், குறும்பு, விளையாட்டு போன்ற குணங்கள் உண்டு. கூடவே  பிறனுடைய கஷ்டத்தை தம்முடையதாக பாவிக்கும் பண்பும் உண்டு.  உதாரணத்திற்கு அனாதரவான இளம் குட்டிகளை தத்து எடுத்து தம் அரவணைப்பில் வளர்க்கும் குணமுடையன இவை. ஆபத்துகாலத்தில் மனிதர்களின் உதவிக்கும் விரைந்து செயலாற்றக் கூடியன.

பெரியோருக்கு மரியாதை : கூட்டுக்குடும்பம்  நிலைத்து நிற்க இது மிகத் தேவை போலும். மூத்த உறுப்பினர்கள் இளம் தலைமுறைக்குத் தேவையான வாழ்க்கை முறை அனத்தையும் கற்றுத்தருகின்றன. பிறந்ததிலிருந்து சில வருடங்கள் வரை தாயினுடைய அணைப்பிலேயே வளருகின்றன. 

இவைகளின் முகம் மற்றும் கைகளின் உரோம வளர்ச்சி அல்லது வர்ண மாற்றங்களைக் கொண்டு அவைகளின் வயது வித்தியாசப்படுவதை அறிந்து கொள்ள முடிகிறதாம். முக்கியமாக தக்க வயதினரிடையே இனச்சேர்க்கைக்கு இது ஒரு முக்கிய அளவுகோலாகக் கொள்ளப்படுகிறதாம்.

பிரச்சனைக்குத் தீர்வு காண்பதிலும் மிக புத்திசாலித்தனமாகவும் கூட்டு முடிவு எடுப்பதிலும் மனித குரங்குகள் தம் தனித்தன்மையை வெளிப்படுத்துகின்றன. பல சமயங்களில் தேவைப்படும் போது காட்டில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே பிரத்யேக சாதனங்களை உருவாக்கும் திறமை வாய்ந்தவை அவை. 

இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது  Frans de Waal  சொல்வது போல் " .....if they are animals what must we be? " என்று கேட்கத்தான் தோன்றுகிறது. 

 [- இவரைப் பற்றி அறிய   இங்கே சுட்டவும்   ] 

நம்ம ஊர் பழைய திரைப்படப் பாடலையும் நினைவூட்டுகிறது. " எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு"