Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Monday, April 13, 2009

திகில் படங்களின் நாயகன்

இந்த மனிதரின் கண்களில் தெரிவது என்ன ?

ஆழ்ந்த சிந்தனையா ?

அல்லது எதிரே பேசுகிறவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை உன்னிப்பாக கவனிக்கும் நிலையா?

இப்படத்திற்கு ஆதாரமான புகைப்படத்தை பிரசுரித்த பத்திரிக்கைக்கு அந்த சமயம் பேட்டி அளித்துக் கொண்டிருந்தபடியால் இரண்டாவதே சரி.

கண்களில் தெரிகின்ற நிலைக் குத்தான பார்வையும், அதற்குத் துணை போகும் வகையில் அழுத்தமாக முகவாய்கட்டையை தாங்கும் கைகளும் மற்றும் கன்னத்தை அழுத்தி இருக்கும் விரல்களும் ஒரு நல்ல படத்தை முயற்சித்துப் பார்ப்பதற்கு போதுமான விஷயங்கள் என்று தோன்றியது.

முதலில் படம் முழுவதையும் வர்ண பென்சிலில் வரைந்து கொண்டு பின்னர் வர்ண அழுத்தம் தேவைப்படும் இடங்களில் பேஸ்டல் வர்ணத்தில் பூர்த்தி செய்தேன். அந்த வகையில் இது ஒரு mixed media படம் என்று சொல்லலாம். இதற்கானக் காரணத்தை கபில் தேவ் பற்றிய பதிவில் விளக்கி யுள்ளேன்.



(பிற்சேர்க்கையில் விவரம் அறிக)

சரி யாரிந்த மனிதர் என்று கேட்கிறீர்களா; இவர் பெயர் ராம் கோபால் வர்மா.

ராம்கோபால் வர்மா பற்றிய சிறு குறிப்பு

நிசப்த், ஜபர்தஸ்த், ராத், பூத்,சர்கார் ராஜ் போன்ற திகில் படங்களை ஹிந்தி திரைக்கு கொடுத்தவர்.நாற்பதுக்கும் மேலான ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களை தயாரித்திருக்கும் இவர் இயக்குனரும் ஆவார். அமிதாப், அபிஷேக் ஐஸ்வர்யா ராய் போன்றவர்களை வைத்து படம் எடுப்பது மட்டுமல்லாமல் அதிகம் அறிந்திராத கலைஞர்களையும் வைத்து படம் எடுப்பவர். ஹிந்தி திரை உலகில் மிக முக்கிய புள்ளிகளில் ஒருவர்.

பின் குறிப்பு:
வரைபடத்தை முறையாக பாதுகாக்காமையால் சில இடங்களில் மடிப்புகளும் சுருக்கங்களும் ஸ்கேனரிலும் விடாமல் ஒட்டிக்கொண்டு வந்துள்ளன. ஆகையால் உங்கள் படங்களை நல்ல முறையில் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை புரிந்து கொள்ளலாம் :))


பிற்சேர்க்கை :
வடுவூர் குமார் அவர்களின் பின்னூட்டத்தைக்கண்ட பின் அவர் சொல்வதில் உள்ள உண்மை புரிந்தது. உடனே என்னோட குறுக்கு மூளை சும்மா இருக்குமா ! எப்படி கஷ்டபடாமல்  வர்ண அழுத்தத்தைக் கூட்டுவது என்று யோசித்தேன். அப்படியே பிக்காஸாவில் படத்தை திறந்து  Auto contrast ஐ கூட்டிப் பார்த்தேன். ஓரளவு திருப்தியாக இருந்தது.  உடனே வலையேற்றி விட்டேன். :)))

நன்றி குமார் !
!

Wednesday, April 1, 2009

தாயும் சேயும் : மகிழ்ச்சிக்கு ஏது தடை ?

இன்று Slide Share என்கிற வலை தளத்திலிருந்து வந்த ஒரு மின்னஞ்சல் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது.

Hi Kabeeranban,

We've noticed that your slideshow on SlideShare has been getting a LOT of views in the last 24 hours. Great job ... you must be doing something right. ;-)

Why don't you tweet or blog this? Use the hashtag #bestofslideshare so we can track the conversation.

Congratulations,
-SlideShare Team


ஒரே நாளில் வந்த பார்வையாளர்கள் சுமார் 20000. பின்னூட்டம் 0 !! : )))

ஆனால் slide share தளத்தினர் இதை best of slide share வகையில் சேர்க்க விழைந்துள்ளனர் என்பது ஆறுதலான விஷயம்.

கடந்த நான்கு மாதங்களாக ஆயிரத்துக்கும் குறைவாக பார்வையிடப்பட்ட அந்த விளக்கப்படம் எந்த புண்ணியவான் (களின்) ட்வீட்டர் தயவாலோ என்னவோ ஒரே நாளில் பெருமளவில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்திருகிறது.

அந்த விளக்கப் படத்தை ’தாயின் அன்பு’ என்கிற தலைப்பில் கற்கை நன்றே வலைப்பூவில் இடுகையாக்கி இணைப்பும் கொடுத்திருந்தேன்.

அந்த விளக்கப்படத்தில் நான் பயன்படுத்தியது என்னுடைய கீழ்கண்ட ஓவியத்தைதான்.


இந்த படத்தை ஹிந்து பத்திரிக்கையில் வந்திருந்த ஒரு புகைப்படத்தை பார்த்து வரைந்திருந்தேன்.

முக்காடிட்டிருக்கும் தாயின் துணியில் தெரியும் மடிப்புகளும் தாயும் சேயும் தம்மை மறந்த களங்கமற்ற சிரிப்பும் இதை வரையத் தூண்டியது.

தாயின் அன்பை கற்கை நன்றே வலைப்பூவில் படிக்க இங்கே .

ஸ்லைடு ஷேர் வலைத்தளத்தில் காண இங்கே

Saturday, March 14, 2009

பிஸ்மில்லா கான் - இசை முனி

மார்ச் 21, 1916 ல் பீஹாரில் பிறந்த பிஸ்மில்லா கான், கங்கா மாயி என்று கங்கை கரையை போற்றியபடி தன் வாழ்நாளெல்லாம் காசியிலேயே கழித்தவர். இவரதுமுன்னோர்கள் போஜ்பூர் அரசவை கலைஞர்கள். ஆனால் ஷெனாய் வாத்தியத்தை உலக அளவில் பிரபலமாக்கிய பெருமை பிஸ்மில்லா கான் என்ற தனி மனிதனையே சேரும்.

1947-ல் இந்திய சுதந்திரம் இவரது இசையுடனே செங்கோட்டையில் பிறந்தது.

அவர் கால் வைக்காத முக்கிய தலைநகரங்களே உலகில் இல்லை எனலாம்.

இந்தியா அரசாங்கத்தின் மிகப் பெரிய விருதான பாரத் ரத்னா வழங்கப்பெற்று கௌரவிக்கப் பட்டவர்.

வேண்டிய அளவு செல்வம் சேர்ந்த போதும் தனிப்பட்ட வசதிகளை அவர் பெருக்கிக் கொள்ளவில்லை.

”பக்கத்து வீட்டிலே ரம்ஜான் அலி பக்கெட் பக்கெட்டாக தண்ணீரை ஊற்றி சூட்டைத் தணிக்க கஷ்டப்படும் போது எனக்கு ஏ.ஸி அறையில் தூக்கம் எப்படி வரும் ?” என்பாராம்.

காசி நகரத்து தெருக்களிலே சைக்கிள் ரிக்‌ஷாவிலேயே போய்வருவார். இசைக் கச்சேரிகளுக்காக எங்கு சென்றாலும் எளிமையான விருந்தோம்பலையே ஏற்றார். ஐந்து நட்சத்திர விடுதிகளை வெறுத்தார். எந்நேரத்திலும் வீடு தேடி வருபவர்களுக்கு் அவர் வீட்டில் உணவு இருக்கும்.

இவர் ஒரு குழந்தை உள்ளம் படைத்த கலைஞர். பணிவு குணத்திற்கு அவர் யாவருக்கும் எடுத்துக்காட்டு.

1971 -ல் நாட்டின் பெரும் கலைஞர்களைக் கூட்டி டெல்லி விஞ்ஞான் பவனில் ஒரு பெரும் இசைவிழா நடத்தியது அரசு. விழாவிற்கு பிறகு அதை ஏற்பாடு செய்தவர்களுக்கு பலரும் பாராட்டு கடிதம் எழுதி வாழ்த்து தெரிவித்தனர். அவற்றின் இடையில் உருது மொழியில் பணிவான ஒரு வேண்டுகோள் கடிதம்.

”ஐயன்மீர்! வரும் வருடங்களில் இவ்விழாவை வேறு ஏதேனும் அரங்கத்தில் வைத்துக் கொண்டால் சந்தோஷப்படுவேன். ஒவ்வொரு வரிசையிலும் பார்வையாளர்களின் முன் போடப்பட்டிருக்கும் மேஜைகள் கலைஞனுக்கும் இரசிகனுக்கும் உள்ள இடைவெளியை அதிகரிக்கிறது”

பிஸ்மில்லாக் கான் அவர்களின் அந்த கடிதத்தை கண்ட பின் விழா காமினி அரங்கத்திற்கு மாற்றப்பட்டது.


அவருடைய கண்களில் ஒரு முனிவனின் தவம் தெரியும். அவர் செய்தது இசைத் தவம். அதை ஓவியத்தில் பிடிக்க முயற்சித்தேன். மிகவும் கஷ்டமாய் போனது. காரணத்தை வெகு காலம் யோசித்தேன்.

கழுத்தை திருப்பியிருக்கும் விதமா?

மூக்கு தூக்கியிருக்கிறதா ?

நெற்றிக்கும் தொப்பிக்கும் உள்ள இடைவெளியா ? தாடியா ?

கடைசியாக எனக்குத் தோன்றியது அவருடைய கண்கள். அவருக்கு சற்றே பூனைக் கண்கள். பலமுறை திருத்தி ஓரளவு பூனைக்கண் போல கொண்டு வர முயற்சித்திருக்கிறேன்.

மிச்சத்தை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

Monday, February 23, 2009

உள்ளும் புறமும் -ஒரு கட்டிடம்

ஒரு மனிதனையோ, மிருகத்தையோ வரையும் போது அதை உயிரோட்டமுள்ளதாக ஆக்குவது ஈடுபட்டுள்ள செயல் மற்றும் கண்கள்.ஆனால் ஒரு கட்டிடத்திற்கு உயிரூட்டுவது பெரும்பாலும் ஒளி-நிழல் விளையாட்டுதான்.

கட்டிடங்களை வரையும் போது மட்டும் 3D வடிவமைப்பு மிகச் சரியாக வரவேண்டும். இயற்கை காட்சிகளானால் அங்கே ஒரு புதரோ, மேகமோ மலையோ வரைந்து ஒப்பேற்றி விடலாம். ஆனால் கட்டிடங்கள் விஷயம் அப்படியல்ல. கொஞ்சம் பிசகினாலும் நன்றாகவே காட்டிக் கொடுத்துவிடும்.

அதற்குக் காரணம் இணைக்கோடுகள் படத்தில் இணையாக வராது. ஆனால் அவை இணைக்கோடுகள்தான் என்பதை நமது மூளை சொல்லுகிறது.படத்தில் தண்டவாளங்கள் தூரத்தில் இணைவதை போலக் கண்டாலும் இணையாது என்பது மூளைக்குத் தெரியும்.இதை vanishing point effect என்று கூறுவார்கள்.

பழைய கோவில்கள்,புராதன கட்டடங்கள் வரையும் போது இந்த வானிஷிங் பாயிண்ட் சரியாக அமையாவிட்டால் பார்ப்பவர்களுக்கு அதை சுட்டிக் காட்டத் தெரியாவிட்டாலும் ”என்னமோ சரியில்லை” என்று கூறுவார்கள். ஜன்னல்கள்,கதவுகள் விளிம்புகள் இப்படி ஒவ்வொரு சிறு விஷயத்திலும் அது சரியாக அமைய வேண்டும்.

பெங்களூரில் உள்ள ஜவஹர்லால் நேரு ஆராய்ச்சி மையத்தின் ஒரு புகைப்படத்தை கணிணியில் கண்டபோது அதன் ஒளி-நிழல் அமைப்பு, உள்ளும் புறமும் ஒரே சமயத்தில் காட்டப்பட்டிருந்தவிதம், நவீன வடிவமைப்பு எல்லாம் சேர்ந்து இந்தப் படத்தை வரையத் தூண்டியது.


Ink and color முறையில் வரைந்தது.

உட்பக்கமும் வானம் நோக்கிய ஒரு புல்தரை, வெளிப்பக்கமும் ஒரு புல்தரை. தூரத்தில் இருக்கும் திறந்த ஒரு கதவில்லா சாளரம். அதிலிருந்து பரவும் ஒளி, அங்கே ஒரு கல் பெஞ்சு, வெளிப்பக்கம் வளைந்து செல்லும் கல் கட்டிட வடிவமைப்பு, முகப்பில் ஒரு தகவல் பலகை இப்படி பல ருசிகரமான விவரங்கள் எப்படி வடிவெடுக்கும் என்பதை காணவே வரைந்து பார்த்தேன்.

கருப்பு வர்ண -நீரில் கரையாத- மையினால் படத்தை வரைந்து கொண்டு பின்னர் வர்ணம் தீட்டப்பட்டது.

வானிஷிங் பாயிண்ட் தெரிகிறதா சொல்லுங்கள் :)

Tuesday, January 27, 2009

பால் திருடும் பறவை

உணவு பழக்க வழக்கங்கள் ஊருக்கு ஊர், நாட்டிற்கு நாடு மாறுபடும். வளர்ப்பு பிராணிகளும் ஓரளவு மனிதனோடு சேர்ந்து இருப்பதாலோ என்னமோ சில மாற்றங்களை ஏற்றுக் கொள்கின்றன. உதாரணத்திற்கு தில்லியில் அன்னத்தை நாய்களோ பசுவோ எதுவும் சீந்தாது. ஏன் காக்கைக் கூட எட்டி பார்க்காது.

அந்த ஊரில் காலையில் வீதியில் திரியும் பசுவைத் தேடிப்போய் ராத்திரி மிச்சமான ரொட்டியை கொடுத்தால் ஆனந்தமாக சாப்பிடுகிறது. நம்மூர் பசுக்களுக்கு சப்பாத்தி ருசிக்குமா என்று இன்னும் பரிட்சித்து பார்க்கவில்லை.

ஆனால் பறவைகள் புதிய உணவு முறைகளை கண்டறிந்து கொள்வதில் உள்ள வியப்பை கிரேட்-டிட் எனப்படும் இந்த பறவையை வைத்து ஆராய்கிறார்களாம்.

இது இங்கிலாந்தின் குருவி. துருதுருவென்று எப்போதும் கழுத்தையும் வாலையும் இப்படியும் அப்படியுமாக ஆட்டிக்கொண்டு இங்கும் அங்குமாக தவ்வித் திரியும். காலையிலே பால்காரன் வண்டி பின்னாலேயே தொடர்ந்து போகும். வாசலிலே பாட்டிலை வைத்து சென்றவுடனே அதன் மேல் அமர்ந்து மூடியிருக்கும் அலுமினியம் ஃபாயிலை துளையிட்டு பாலை குடிக்க ஆரம்பிக்கும்.

அதனால் அந்நாட்டில் பால் வழங்கும் முறையையே மாற்ற வேண்டியதாகப் போயிற்று!!

இந்த பால் தனக்கும் கூட உணவாகும் என்பதை எப்படி கண்டு கொண்டது ? துளையிட்டால் குடிக்க முடியும் என்பதையும் குறிப்பிட்ட நபர்களின் வருகைக்கும் பால் பாட்டிலுக்கும் உள்ள தொடர்பையும் எப்படி தெரிந்து கொள்கிறது. ? இவையெல்லாம் தான் ஆராய்ச்சியாளர்களின் ஆர்வம்.
நமக்கு இறைவன் படைப்பில் எல்லாமே அதிசயதக்கதுதான். எறும்பு ’சர்க்கரை’ என்ற லேபிளைப் பார்த்தா சர்க்கரை டப்பாவை கண்டுகொள்கிறது ! எல்லா ஜீவன்களுக்கும் படியளப்பவன் அதற்கு தேவையான அறிவையும் கொடுத்தே படைத்திருக்கிறான்.

பறவைகளைப் பற்றிய வர்ணத் தொடர் ஒன்றை செய்யலாம் என்றெண்ணி ஒரே அளவான அட்டையில் செய்த இரண்டாவது (கடைசி)படம் இது.

என்ன காரணத்தினாலோ இதை அப்போது(20 வருடத்திற்கு முன்) தொடர முடியவில்லை. முதலாவது தான் சென்ற பதிவில் பார்த்த மீன்கொத்திப் பறவை. திரும்பவும் அதே வகை அட்டை (அஞ்சல் அட்டை அளவு) கிடைத்தால் செய்யலாம் என்று இருக்கிறேன்.

Thursday, January 1, 2009

புது வருடம் சிறக்க - ஒரு கிரேக்க நாட்டு கதை

காற்றுக் கடவுளுக்கு அல்ஸியோன்( Alcyone) என்றொரு மகள். அவளுடைய கணவன் கடலிலே போனவன் திரும்பவில்லை. அவனுடைய கப்பல் விபத்தில் மூழ்கியது கேட்டு அவளும் கடலில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்கிறாள். ஆனால் வாயுவின் புத்திரி ஆயிற்றே. அவர்கள் இருவரையும் மீன்கொத்திப் பறவைகளாக்கி உயிர்ப்பிக்கிறார்.

நம் ஊர் கதை போலவே, அவர்களுக்கு ஒரு வரமும் அளிக்கப் படுகிறது. அவைகள் கடலில் மிதக்கும் கூடுகள் அமைத்து முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் காலத்தில் கடல் எவ்வித அலைகளும் இல்லாமல் புயல் சூறாவளி இல்லாமல் அமைதி காக்கும். அப்படிப்பட்ட அமைதிக்கு ஹேல்ஸ்யன் (halcyon) என்று பெயர். கதையை முடித்து விடுவோம். அதன் பின்னர் அவைகள் ஆனந்தமாக வாழ்ந்தன.

இந்த கதையை நினைவூட்டூம் வகையில் தான் இந்த பறவைகளுக்கு Alcedo atthis, Halcyon smyrnensis என்ற பலவாறாக பெயர்கள் சூட்டியுள்ளனர் உயிரியல் வல்லுனர்கள்.

இந்த அல்ஸியோன் வகை மீன்கொத்தியைக் கண்டால் (கடலில்)அமைதி வரும் என்ற நம்பிக்கை மாலுமிகளுக்கும் மீனவர்களுக்கும் உண்டாம். இதை ஷேக்ஸ்பியரும் தன்னுடைய ஹாம்லெட் -ல் குறிப்பிட்டிருக்கிறாராம்.

(ஹி..ஹி..நான் அதெல்லாம் படிச்சது இல்லீங்க. நெட்-ல சுட்டினது தான் :-)))

Some say that ever 'gainst that season comes
Wherein our Saviour's birth is celebrated,
The bird of dawning singeth all night long;
And then, they say, no spirit can walk abroad;
The nights are wholesome; then no planets strike,
No fairy takes, nor witch hath power to charm,
So hallow'd and so gracious is the time.

Hamlet, I, i 157


ஆகையினாலே மீன்கொத்தி பறவையை தரிசனம் செய்தால் அமைதி திரும்பும் என்ற நம்பிக்கையொடு, இருபது வருடங்களுக்கு முன்பு ஒரு போஸ்ட் கார்டு அளவிலான அட்டையில் வரையப்பட்ட மீன்கொத்தி பறவையை தரிசனம் செய்து கொள்ளுங்கள்.



இது நீர் வர்ணத்தில் வரையப்பட்டது.

கிங்ஃபிஷர் என்று சொன்னாலும் இங்கே நீங்கள் பார்ப்பது குயின் ஃபிஷர் தான் !

எப்படின்னு கேட்கிறீங்களா ? ராணிக்கு மட்டும் தான் அலகின் அடிபாகத்தில் சிவப்பு வர்ணம் இருக்குமாம்.

எப்படியோ, ஆளாளுக்கு ஒவ்வொரு விதமா வருஷ பலனை கணிச்சுகிட்டிருக்காங்க. நமக்கு Halcyon தரிசனமாயிடுச்சு. எல்லாம் நல்ல படியாகவே நடக்கும்.

God Bless, 2009 be a Halcyon Year.

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.

Tuesday, December 9, 2008

வாழையும் பாக்கும் வழி வழிச் செல்வம்

சமீபத்தில் வாழைப்பட்டை நாரிலிருந்து துணி நெய்யும் யுக்தியை நமது கோவை தொழில்நுட்ப வல்லுனர்கள் வெற்றிகரமாக செய்து காட்டியிருப்பதாக ஒரு செய்தியை கண்டேன். இது எந்த அளவுக்கு நம் நாட்டின் துணிப் பிரச்சனையை -அப்படி ஏதேனும் இருந்தால் -தீர்க்குமோ தெரியாது. ஒரு வேளை சணலுக்கான மாற்றாகப் பயன்படுமா தெரியாது. அப்படியானால் விரைவில் கடையில் துணி வாங்கும் போது வாழைநார் பைகளில் போட்டுத் தந்தாலும் தருவார்கள்.

ஆனால் சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு பாக்கு மரபட்டையை வெற்றிகரமாக disposable plates களாக மாற்றும் CFTRI தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு இப்போது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிக் கொண்டிருக்கிறது. சுற்று சூழலுக்கு ஊறு விளைவிக்காத எளிய சிறு தொழில் முனைவர்களுக்கானது .

இதை முதன்முதல் -அறிமுகப்படுத்திய காலத்தில் -மைசூரில் கண்டபோது சென்னையில் இது ஒரு அரிய பொருள். மைசூரிலிருந்து ஒரு நான்கைந்து தட்டுகளை மாதிரிக்காக கொண்டு சென்றேன்.அப்புறம் சிறிது நாள் அப்படியே இங்குமங்குமாய் கிடந்து சீரழிந்து கொண்டிருந்தது. ”இதை தூக்கிப் போட்டுறேன்” அப்படீன்னு அம்மா பயமுறுத்தியதும், “அதுல வால்-ஹேங் செய்யலாம், தூக்கிப் போடாதே” ன்னு என்னையறியாமல் ஒரு பதில் சொல்லி வைத்தேன். அப்புறம் சொன்னதை நிஜமாக்க வேண்டியக் கட்டாயம். நம்ம கிட்ட இருக்கவே இருக்கு பெயிண்ட் பிரஷ்.
அதைத்தான் கீழே பார்க்கிறீர்கள். எல்லாம் ஆயில் பெயிண்ட்.



இப்போ அதை தொங்க விடுவது எப்படி ? ரொம்ப சிம்பிள். ஒரு கனமான நூல் துண்டை U -வை திருப்பிப் போட்ட மாதிரி வைத்து பின் பக்கத்தில் இன்சுலேஷன் டேப் வைத்து ஒட்டி விட்டேன். இந்த தட்டு ரொம்ப லைட்-வெயிட். அதனாலே எங்க வேணுமானாலும் சுலபமா தொங்க விடலாம்.



ஜப்பானியப் பெண்னோ சீனப்பெண்ணோ துணி தைப்பது போல ஒரு காலண்டர் படம். (படம் கொஞ்சம் அவுட் ஆஃப் ஃபோகஸ், மன்னிக்கவும்)


தென்னாட்டுடைய சிவனே போற்றி- எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

இந்த தட்டுகள் செய்யும் எந்திரத்தை இயக்க மனக்குன்றிய சிறுவர்களும் நல்ல முறையில் கற்று உற்பத்தி செய்யும் முறையை கற்றுக் கொள்ளலாம்.



வாழை மரம், தென்னைமரம் பாக்குமரம் இப்படி எதை எடுத்தாலும் எத்தனை விதமா மனிதனுக்கு பயன்படுது! மனுஷனாகப் பிறந்து நாம் மாத்திரம் சமூகத்துக்கு ஏதாவது விதத்தில் பயன்படுகிறோமா ?