Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Tuesday, January 27, 2009

பால் திருடும் பறவை

உணவு பழக்க வழக்கங்கள் ஊருக்கு ஊர், நாட்டிற்கு நாடு மாறுபடும். வளர்ப்பு பிராணிகளும் ஓரளவு மனிதனோடு சேர்ந்து இருப்பதாலோ என்னமோ சில மாற்றங்களை ஏற்றுக் கொள்கின்றன. உதாரணத்திற்கு தில்லியில் அன்னத்தை நாய்களோ பசுவோ எதுவும் சீந்தாது. ஏன் காக்கைக் கூட எட்டி பார்க்காது.

அந்த ஊரில் காலையில் வீதியில் திரியும் பசுவைத் தேடிப்போய் ராத்திரி மிச்சமான ரொட்டியை கொடுத்தால் ஆனந்தமாக சாப்பிடுகிறது. நம்மூர் பசுக்களுக்கு சப்பாத்தி ருசிக்குமா என்று இன்னும் பரிட்சித்து பார்க்கவில்லை.

ஆனால் பறவைகள் புதிய உணவு முறைகளை கண்டறிந்து கொள்வதில் உள்ள வியப்பை கிரேட்-டிட் எனப்படும் இந்த பறவையை வைத்து ஆராய்கிறார்களாம்.

இது இங்கிலாந்தின் குருவி. துருதுருவென்று எப்போதும் கழுத்தையும் வாலையும் இப்படியும் அப்படியுமாக ஆட்டிக்கொண்டு இங்கும் அங்குமாக தவ்வித் திரியும். காலையிலே பால்காரன் வண்டி பின்னாலேயே தொடர்ந்து போகும். வாசலிலே பாட்டிலை வைத்து சென்றவுடனே அதன் மேல் அமர்ந்து மூடியிருக்கும் அலுமினியம் ஃபாயிலை துளையிட்டு பாலை குடிக்க ஆரம்பிக்கும்.

அதனால் அந்நாட்டில் பால் வழங்கும் முறையையே மாற்ற வேண்டியதாகப் போயிற்று!!

இந்த பால் தனக்கும் கூட உணவாகும் என்பதை எப்படி கண்டு கொண்டது ? துளையிட்டால் குடிக்க முடியும் என்பதையும் குறிப்பிட்ட நபர்களின் வருகைக்கும் பால் பாட்டிலுக்கும் உள்ள தொடர்பையும் எப்படி தெரிந்து கொள்கிறது. ? இவையெல்லாம் தான் ஆராய்ச்சியாளர்களின் ஆர்வம்.
நமக்கு இறைவன் படைப்பில் எல்லாமே அதிசயதக்கதுதான். எறும்பு ’சர்க்கரை’ என்ற லேபிளைப் பார்த்தா சர்க்கரை டப்பாவை கண்டுகொள்கிறது ! எல்லா ஜீவன்களுக்கும் படியளப்பவன் அதற்கு தேவையான அறிவையும் கொடுத்தே படைத்திருக்கிறான்.

பறவைகளைப் பற்றிய வர்ணத் தொடர் ஒன்றை செய்யலாம் என்றெண்ணி ஒரே அளவான அட்டையில் செய்த இரண்டாவது (கடைசி)படம் இது.

என்ன காரணத்தினாலோ இதை அப்போது(20 வருடத்திற்கு முன்) தொடர முடியவில்லை. முதலாவது தான் சென்ற பதிவில் பார்த்த மீன்கொத்திப் பறவை. திரும்பவும் அதே வகை அட்டை (அஞ்சல் அட்டை அளவு) கிடைத்தால் செய்யலாம் என்று இருக்கிறேன்.

Thursday, January 1, 2009

புது வருடம் சிறக்க - ஒரு கிரேக்க நாட்டு கதை

காற்றுக் கடவுளுக்கு அல்ஸியோன்( Alcyone) என்றொரு மகள். அவளுடைய கணவன் கடலிலே போனவன் திரும்பவில்லை. அவனுடைய கப்பல் விபத்தில் மூழ்கியது கேட்டு அவளும் கடலில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்கிறாள். ஆனால் வாயுவின் புத்திரி ஆயிற்றே. அவர்கள் இருவரையும் மீன்கொத்திப் பறவைகளாக்கி உயிர்ப்பிக்கிறார்.

நம் ஊர் கதை போலவே, அவர்களுக்கு ஒரு வரமும் அளிக்கப் படுகிறது. அவைகள் கடலில் மிதக்கும் கூடுகள் அமைத்து முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் காலத்தில் கடல் எவ்வித அலைகளும் இல்லாமல் புயல் சூறாவளி இல்லாமல் அமைதி காக்கும். அப்படிப்பட்ட அமைதிக்கு ஹேல்ஸ்யன் (halcyon) என்று பெயர். கதையை முடித்து விடுவோம். அதன் பின்னர் அவைகள் ஆனந்தமாக வாழ்ந்தன.

இந்த கதையை நினைவூட்டூம் வகையில் தான் இந்த பறவைகளுக்கு Alcedo atthis, Halcyon smyrnensis என்ற பலவாறாக பெயர்கள் சூட்டியுள்ளனர் உயிரியல் வல்லுனர்கள்.

இந்த அல்ஸியோன் வகை மீன்கொத்தியைக் கண்டால் (கடலில்)அமைதி வரும் என்ற நம்பிக்கை மாலுமிகளுக்கும் மீனவர்களுக்கும் உண்டாம். இதை ஷேக்ஸ்பியரும் தன்னுடைய ஹாம்லெட் -ல் குறிப்பிட்டிருக்கிறாராம்.

(ஹி..ஹி..நான் அதெல்லாம் படிச்சது இல்லீங்க. நெட்-ல சுட்டினது தான் :-)))

Some say that ever 'gainst that season comes
Wherein our Saviour's birth is celebrated,
The bird of dawning singeth all night long;
And then, they say, no spirit can walk abroad;
The nights are wholesome; then no planets strike,
No fairy takes, nor witch hath power to charm,
So hallow'd and so gracious is the time.

Hamlet, I, i 157


ஆகையினாலே மீன்கொத்தி பறவையை தரிசனம் செய்தால் அமைதி திரும்பும் என்ற நம்பிக்கையொடு, இருபது வருடங்களுக்கு முன்பு ஒரு போஸ்ட் கார்டு அளவிலான அட்டையில் வரையப்பட்ட மீன்கொத்தி பறவையை தரிசனம் செய்து கொள்ளுங்கள்.



இது நீர் வர்ணத்தில் வரையப்பட்டது.

கிங்ஃபிஷர் என்று சொன்னாலும் இங்கே நீங்கள் பார்ப்பது குயின் ஃபிஷர் தான் !

எப்படின்னு கேட்கிறீங்களா ? ராணிக்கு மட்டும் தான் அலகின் அடிபாகத்தில் சிவப்பு வர்ணம் இருக்குமாம்.

எப்படியோ, ஆளாளுக்கு ஒவ்வொரு விதமா வருஷ பலனை கணிச்சுகிட்டிருக்காங்க. நமக்கு Halcyon தரிசனமாயிடுச்சு. எல்லாம் நல்ல படியாகவே நடக்கும்.

God Bless, 2009 be a Halcyon Year.

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.

Tuesday, December 9, 2008

வாழையும் பாக்கும் வழி வழிச் செல்வம்

சமீபத்தில் வாழைப்பட்டை நாரிலிருந்து துணி நெய்யும் யுக்தியை நமது கோவை தொழில்நுட்ப வல்லுனர்கள் வெற்றிகரமாக செய்து காட்டியிருப்பதாக ஒரு செய்தியை கண்டேன். இது எந்த அளவுக்கு நம் நாட்டின் துணிப் பிரச்சனையை -அப்படி ஏதேனும் இருந்தால் -தீர்க்குமோ தெரியாது. ஒரு வேளை சணலுக்கான மாற்றாகப் பயன்படுமா தெரியாது. அப்படியானால் விரைவில் கடையில் துணி வாங்கும் போது வாழைநார் பைகளில் போட்டுத் தந்தாலும் தருவார்கள்.

ஆனால் சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு பாக்கு மரபட்டையை வெற்றிகரமாக disposable plates களாக மாற்றும் CFTRI தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு இப்போது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிக் கொண்டிருக்கிறது. சுற்று சூழலுக்கு ஊறு விளைவிக்காத எளிய சிறு தொழில் முனைவர்களுக்கானது .

இதை முதன்முதல் -அறிமுகப்படுத்திய காலத்தில் -மைசூரில் கண்டபோது சென்னையில் இது ஒரு அரிய பொருள். மைசூரிலிருந்து ஒரு நான்கைந்து தட்டுகளை மாதிரிக்காக கொண்டு சென்றேன்.அப்புறம் சிறிது நாள் அப்படியே இங்குமங்குமாய் கிடந்து சீரழிந்து கொண்டிருந்தது. ”இதை தூக்கிப் போட்டுறேன்” அப்படீன்னு அம்மா பயமுறுத்தியதும், “அதுல வால்-ஹேங் செய்யலாம், தூக்கிப் போடாதே” ன்னு என்னையறியாமல் ஒரு பதில் சொல்லி வைத்தேன். அப்புறம் சொன்னதை நிஜமாக்க வேண்டியக் கட்டாயம். நம்ம கிட்ட இருக்கவே இருக்கு பெயிண்ட் பிரஷ்.
அதைத்தான் கீழே பார்க்கிறீர்கள். எல்லாம் ஆயில் பெயிண்ட்.



இப்போ அதை தொங்க விடுவது எப்படி ? ரொம்ப சிம்பிள். ஒரு கனமான நூல் துண்டை U -வை திருப்பிப் போட்ட மாதிரி வைத்து பின் பக்கத்தில் இன்சுலேஷன் டேப் வைத்து ஒட்டி விட்டேன். இந்த தட்டு ரொம்ப லைட்-வெயிட். அதனாலே எங்க வேணுமானாலும் சுலபமா தொங்க விடலாம்.



ஜப்பானியப் பெண்னோ சீனப்பெண்ணோ துணி தைப்பது போல ஒரு காலண்டர் படம். (படம் கொஞ்சம் அவுட் ஆஃப் ஃபோகஸ், மன்னிக்கவும்)


தென்னாட்டுடைய சிவனே போற்றி- எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

இந்த தட்டுகள் செய்யும் எந்திரத்தை இயக்க மனக்குன்றிய சிறுவர்களும் நல்ல முறையில் கற்று உற்பத்தி செய்யும் முறையை கற்றுக் கொள்ளலாம்.



வாழை மரம், தென்னைமரம் பாக்குமரம் இப்படி எதை எடுத்தாலும் எத்தனை விதமா மனிதனுக்கு பயன்படுது! மனுஷனாகப் பிறந்து நாம் மாத்திரம் சமூகத்துக்கு ஏதாவது விதத்தில் பயன்படுகிறோமா ?

Wednesday, November 12, 2008

குருந்தமலைக் குமரன் காட்டிய காட்சி

முதன் முதலா வாட்டர் கலர் பயன்படுத்தும் போது பிரஷ் ஓட்டம் கோட்டு மேல் ஒழுங்காக வராமல் பிசிறு தட்டும். அந்த குறையை போக்குவதற்கு அந்த கோட்டை திரும்பவும் கறுப்பு பேனாவால் திருத்திவிடுவேன். அதுவும் படம் நன்றாகக் காய்ந்த பிறகு. இல்லாவிட்டால் அது ஈரத்தில் பக்கவாட்டில் படரும். அதனால அதுதான் ஃபினிஷிங் டச்.

பிற்காலத்துல Ink & water color டெக்னிக்-னு ஒண்ணு இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டேன். இது பெரும்பாலும் ஸ்பாட் பெயிண்டிங்கில பயன்படுமாம். முதல்ல தண்ணியிலே கரையாத மையால் படத்தை வரைந்து கொண்டு பிறகு அங்கங்கே வாட்டர்-கலரை வைத்து ஒரு வாஷ் கொடுத்து விடவேண்டும்.

இது நான் ஆரம்பத்துல சொன்னதுக்கு நேர் எதிர். இங்கே முதல்ல இங்க் அப்புறம்தான் வர்ணம். வாட்டர்ஃப்ரூஃப் இங்க் ஆனதுனால தண்ணீர் படும்போது அழியாது,பிசிறடிக்காது. இந்த முறையை பயன்படுத்தி Terry Banderas என்பவர் அமர்களமா போட்டுத் தள்ளறார்.

நாமும் அப்படி ஒரு படத்தை போட்டு பார்க்கலாம் அப்படின்னு வரஞ்சதுதான் இந்த குருந்தமலை(காரமடை அருகே)மேலே உள்ள பாலதண்டாயுத பாணி கோவிலுக்கு சற்று கீழ் மட்டத்தில் இருக்கும் இந்த கங்காதீஸ்வரன் கோயில்.



தண்ணீர்ல கரையாத இங்க் இப்போது பல water-proof ஜெல் பேனாக்களாக வருகிறது. முதலில் அப்படிபட்ட பேனாவில் வரைந்து கொண்டு பின்னர் வர்ணம் கொடுத்தேன். இளம் பச்சை வர்ண ஹாண்ட்-மேட் பேப்பரில் வரையப்பட்டது. அதனால்தான் அந்த சுவற்றின் வெள்ளை மிக எடுப்பாக தெரிகிறது.

இது நேரில் அமர்ந்து வரைந்ததல்ல, புகைப்படத்தின் துணை கொண்டு வரையப்பட்டது. ஹாண்ட்-மேட் வரைதாளானதால் கலர் வாஷ் செய்யும் போது உடனே நீரை உறிஞ்சி வர்ணங்கள் சீராக பரவுவதை தடுத்தது. இந்த பிரச்சனையை wet-in-wet முறையில்-அதாவது முன்பே ஈரப்படுத்தி பின்னர் வர்ணத்தை கொடுப்பது-ஓரளவு சமாளித்தேன்.

ஆனால் ஹாண்ட்-மேட் தாளின் சுர சுரப்புத் தன்மை பாறைகளின் கரடு முரடான தன்மைக்கு உதவி செய்தது என்று நினைக்கிறேன்.

டெர்ரியின் வர்ணக்கலவைகளை பார்க்கும் போது அவர் மிக உயர்ந்த தரமுள்ள வர்ணங்களையும் வரைதாளையும் உபயோகிப்பவர் போல இருக்கு. ஹூம் இன்னும் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு.

அது என்னமோ தெரியவில்லை. e-snip-ல் வலையேற்றிய அன்றைக்கே இந்த படத்தை முதல் பக்கத்தில் (Home-page) போட்டு பெருமை படுத்தி விட்டார்கள். எல்லாம் முருகன் செயல் !

Tuesday, October 28, 2008

சித்திரம் செய்யும் வித்தைகள்

எதையும் வீணாக்க விரும்பாத குணம் மகாத்மா காந்திக்கு ரொம்பவே இருந்ததாம்.

நாம எல்லோரும் பென்ஸிலை சீவினா அதை கூராக்குவோம். ஆனால் காந்தியோ அப்படியே எழுத ஆரம்பிப்பாராம். “குடுங்க கூராக்கி தரேன்” அப்படின்னூ யாராவது சொன்னா “வேண்டாம் கூராக்கும் போது பென்ஸிலோட கரிப் பொடி வீணா போகும்” அப்படின்னு சொல்வாராம்.

வடநாட்டுல உடற்பயிற்சி கூடங்கள் எப்போதும் பிரபலம். ஆனால் காந்தி சொல்வாராம் ‘உடற்பயிற்சியில் மனித சக்தி வீணாகிறது. அதற்கு பதில் தோட்டம் போடுவது, துணி நெய்வது போல உடல் உழைப்புடன் கூடிய செயல்களில் ஈடுபட்டால் மனித சக்தி உற்பத்தியுடன் கூடிய பயனைத் தரும், ஆரோக்கியத்துக்கும் நல்லது’. என்ன நுணுக்கமா யோசனை பண்ணியிருக்காரு அந்த மனுஷன் !

கண்ணுக்கு தெரியற மாதிரி ரொம்ப பேரு வேஸ்ட் பண்றது சாப்பாட்டு விஷயத்துலதாங்க. அதை பத்தி சிந்திக்கற மாதிரி ஒரு பதிவு மஞ்சூரண்ணன் போட்டு இருக்காரு. நேரம் கெடக்கும் போது பாருங்க.

நம்ம விஷயத்திற்கு வருவோம். போன பதிவுல சிலேட்டுல செஞ்ச கைவேலையை பார்த்தோம். இன்னும் ஒண்ணு ரெண்டு இருக்கு. கைவசம் அதனோட படம் இல்லை. அப்புறம் பார்ப்போம்.

கீழே பார்க்கிற பிள்ளையார் படம் எங்கேயோ கெடச்ச ஆஸ்பெஸ்டாஸ் துண்டுல போட்டது. ஆயில் பெயிண்ட்டிங். எனக்கு நினைவு தெரிஞ்சு ரொம்ப வேகமா வரைஞ்சு முடிச்ச படம். ஆஸ்பெஸ்டாஸ் அப்படியே ஆயில் பெயிண்ட்டை உறிஞ்சிடுது. அதனால அதிக நேரம் காய காத்திருக்க வேண்டியதில்லை. ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டை மறைக்கிற மாதிரி பிண்ணணியில நல்லா அழுத்தமா கறுப்பு கலர் பூசி விட்டேன்.


இந்த படத்துல ரொம்ப பிடிச்ச விஷயம் தும்பிக்கைக்கு கீழே நிழலோட போக்கு. அப்படியே வளைஞ்சு பிள்ளையாரோட தொப்பையிலே கீழ் பார்த்த மாதிரி நிழலோட்டம் போகுதே அது தான்.



படம் போடறதுக்கு இப்படிபட்ட பேப்பர், இல்லை, கான்வாஸ்தான் வேணும்னு இல்லை.

நாம நம்ம ஜாலிக்காகத்தான போடறோம். அதனால கையில கிடைச்ச எதில வேணும்னாலும் போட்டு வெளையாடலாம்.

இரண்டரை அடி நீளம் மூணு அங்குலம் அகலத்துல தூக்கிப் போட கெடந்த ஒரு தெர்மோக்கோல் துண்டுல இப்ப எலிகளெல்லாம் ஜாலியா சங்கிலியில ஏறி இறங்கி விளையாடற மாதிரி ஒரு படம் போட்டு வீட்டுல சும்மானுச்சுக்கும் மாட்டி வச்சிருக்கேன்.

நாம நெனச்சா எதுவுமே ஆர்ட்தாங்க ! எப்பவோ காணாம போயிரு்ந்திருக்க வேண்டிய ஆஸ்பெஸ்டாஸ்ஸும் தெர்மோக்கோலும் துண்டெல்லாம் இன்னும் பத்திரமா இருக்குன்னா அது ‘சித்திரம் செய்யும் வித்தை’ தானுங்களே !

மிச்ச சரக்கை அடுத்த பதிவுக்கு ரிசர்வ் பண்ணி வச்சுக்குவோம்.

எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.

Wednesday, October 8, 2008

கிருஷ்ணருக்கு பாலீஷ் போடணும்

பள்ளிகூடத்தில எங்க வாத்தியாரு ஒருத்தரு சொன்னது அப்படியே மனசுல நின்னிடிச்சு.

”உபயோகமில்லாதவன்னு ஒருத்தனும் கிடையாது உபயோகமில்லாத பொருள்-ன்னு ஒண்ணும் கிடையாது.வேணும்னா நமக்கு பயன்படுத்திக்கத் தெரியலேன்னு வைச்சுக்கலாம்”

அப்போதிலிருந்து யாராவது ஏதாவது வேஸ்ட்டானப் பொருளை வச்சு இதை செய்யறாங்க அதை செய்யறாங்கன்னு தெரிஞ்சா அதை ரொம்ப ஆர்வமா பார்த்து, இல்லே படிச்சு தெரிஞ்சுக்குவேன்.

ஒரு தடவை உடைஞ்சு போன சிலேட்டு துண்டு கொஞ்சம் மனுசனோட மூக்கு மாதிரி தோணிச்சு. எங்கம்மா ஏதோ பத்திரிக்கையில வந்த ஒரு கட்டுரையில ஒரு பெண்மணி முட்டை மேல பெயிண்டிங், பழைய துணியில கைப்பை, சிலேட்டுல சிற்பம் எல்லாம் செய்யறாங்கன்னு எப்பவோ படிச்சு சொன்னது ஞாபகம் வந்திருச்சு. அதனால இதை வச்சு எதையாவது செய்யலாமேன்னு நினைச்சேன். சொன்னதுக்கும் நான் செஞ்சதுக்கும் கிட்டத்தட்ட ஏழு எட்டு வருஷ இடைவெளி.

ஒரு சின்ன கத்தி எடுத்து அதை கொஞ்சம் கொஞ்சமா ராவி மூக்குக்கு கீழே வாய்,முகவாய், கழுத்து எல்லாம் வர்ற மாதிரி செஞ்சேன். அப்புறம் தலைப்பக்கத்தை ஜடாமுடிபோல கத்தியோட கூர் பகுதியால கீறிவிட்டேன். முடிமேல ஒரு சின்ன வளைசல் கொடுத்து ஒரு பிறைச் சந்திரன். திருநீறு, கங்கை,கண்,கழுத்தில பாம்பு எல்லாமும் சிம்பிள் கீறல்கள்தான்.

இது சிவன்.கடைசியா நைஸான உப்புத்தாள் வச்சு ஓரத்தையெல்லாம் மழுங்க தேய்ச்சு விட்டேன். அவருடைய தலையில ஒரு சின்ன துளையை போட்டப்புறம் வால்-ஹாங் சிவனாயிட்டார்.


பல ஊர் மாற்றல்கள், வீடு மாற்றல்களுக்கிடையில் அதை பத்திரமா பாதுகாத்தது எங்கம்மாதான். குழந்தைகள் மேல உள்ள பாசம் அப்படி செய்ய வச்சது போலிருக்கு. அதனாலத்தான் முப்பது வருஷத்துக்கு பிறகும் அதை எல்லோருக்கும் காமிக்கிற மாதிரி ஒரு சூழ்நிலை உருவாயிருக்கு. நல்லாயிருக்குன்னு நீங்க நெனச்சா அதோட முழு பெருமையும் அவங்களுக்குதான்.

சிவனார் கொடுத்த தைரியத்தில, சும்மா கிடந்த ஒரு முழு சிலேட்டையே எடுத்து குழலூதும் கிருஷ்ணரா செதுக்கிப் பார்த்தேன். மோசமில்லைன்னு எல்லோரும் சொன்னாங்க. இதுக்கு தேவைப்பட்டது ஒரு அகலமான திருப்புளி. அதுதாங்க ஸ்க்ரூடிரைவர். முளையைத் திருப்புவதற்காக பயன்படுத்தப்படும் உளி போன்ற அடிப்பக்கம் உடையது. அழகான செட்டிநாட்டு சொல்வழக்கு.

திருப்புளி வைத்து சுரண்டினால் சுற்றிலும் சிலேட் தூள் பறக்க, ”வெளியே போய் சுரண்டுடான்னு’ திட்டு வாங்கி வராண்டாவில் கிரிகெட் காமெண்ட்ரி கேட்டுக் கொண்டே சுரண்டி முடிச்சேன். இதிலே கவனிக்க வேண்டியது சுரண்டுற ஆழம் ஒரே அளவா இருக்கணும். ஒரு இடத்துல அதிகம் ஒரு இடத்துல கொறஞ்சு போகாம இருக்கணும்.

சிலேட் மேல் பகுதி ஒரே அளவு கறுப்பாக இல்லாமல் திட்டுத்திட்டா இருந்ததால கிருஷ்ணரையும் மாட்டையும் பார்த்தால் ல்யூகோடெர்மா வந்த மாதிரி இருந்தது.அப்போ தம்பி ஒரு ஐடியா குடுத்தான். ”ப்ளாக் கலர் ஷூபாலிஷ் தேச்சு விடு”. சரின்னு பாலிஷ் எடுத்து நல்லா அழுத்தி தேய்ச்சு ஒருவாட்டி ப்ரஷ்னால பளபளபாக்கி அந்த குறையையும் அட்ஜஸ்ட் பண்ணியாச்சு.
கடைசியா திரும்பவும் நடுவில வர்ற கோடுகளையெல்லாம் கீறி ஓரளவு ஆமா இது கிருஷ்ணர்தான்-ன்னு ஒத்துக்கற மாதிரி செஞ்சு வச்சேன்.

இப்போ படம் பிடிச்சப்பறம் பாத்தா இன்னொரு தடவை பாலிஷ் போடணுமோன்னு தோணுது. முப்பது வருஷம் ஆயிடுச்சே!!

Monday, September 29, 2008

ஜெஸ்ஸோ வாணி!.....நீ அருள்வாய்

அது என்ன ஜெஸ்ஸோ வாணி அப்படின்னு கேக்கறது காதில விழுகுது.

கடந்த பதினைஞ்சு நாளா ஒரே ஜெஸ்ஸோ ஜபம்தான் போங்க!

”கொஞ்சம் ஜெஸ்ஸோ கலக்கிக் குடுங்க”
“இன்னும் கூட ஜெஸ்ஸோ நல்லா போட்டிருக்கணும்”
“பிரஷ் காஞ்சுபோயிடுது. ஜெஸ்ஸோ வளைஞ்சு குடுக்க மாட்டேங்குது”

இதெல்லாம் தினம் நடக்கிற உரையாடல்.

ரொம்ப நாளா டிராயிங் ஸ்கூல்ல சேர்ந்து படிக்கலையேங்கற ஆதங்கம் இருந்தது.

சமீபத்தில ஒரு மைசூர் பெயிண்டிங் பயிற்சி வகுப்புகள் அரசாங்க ஆதரவுல பதினைந்து நாளைக்கு நடத்தினாங்க. “அப்பா நான் சேர்ந்துக்கறேம்பா, 750 ரூபா” அப்படின்னு மகள் கேட்டப்போ “அட! என்னை விட்டு நீ மாத்திரம் போயிடுவியா”ன்னு நானும் களத்துல இறங்கிட்டேன். அப்பாவும் பொண்ணும் ஒரே வகுப்பிலே! தினம் மூணு மணி நேரம்.

பிரஷ் அடிப்பலகை எல்லாம் நாம கொண்டு போகணும். பாக்கி சாமான் எல்லாம் அவங்களே குடுத்தாங்க. என்ன ஒண்ணு ! கையில ”திருவோடு”( செராமிக் டயில்) ஏந்திக்கிட்டு “கொஞ்சம் ப்ளூ குடுங்க, கொஞ்சமா எல்லோ குடுங்க” அப்படின்னு அடிக்கடி பிச்சையெடுக்க வேண்டியிருந்தது.

முதல்ல படம் ட்ரேஸ் பண்ணிக்கணும். அப்புறம் அவங்க ஒரு கோந்து கொடுப்பாங்க. அதை எங்கெல்லாம் தங்கம் வரணுமோ அங்கெல்லாம் பூசணும். அதுக்கு கம் அராபிக் அப்படின்னு சொல்றாங்க. அது ஒண்ணும் பெரிய விஷயமில்லை. ஆனா ட்ரேஸ் பண்ணி கோந்து பூசறதுக்கே முதல் நாள் சரியா போச்சு.


அரபிக்-கோந்து தடவப்பட்ட முதல் நிலை

இரண்டாம் கட்டம் ஜெஸ்ஸோ. அதாவது Gesso. இது தான் ரொம்ப கிரிடிகல் சமாச்சாரம். எவ்வளவு கிரிட்டிக்கல்ங்கறது சொல்லாம விட்டதுனால படத்தை சொதப்பினவங்க ரொம்ப பேரு. அதுல நானும் ஒருத்தன்.

ஜெஸ்ஸோ ஏன் முக்கியம்னா, படத்துல நகை, சிம்மாஸனம், மண்டபம் போல தங்கம் வர்ற இடத்தில எல்லாம் முப்பரிமாண உணர்ச்சியை கொடுக்கிறதுக்கு அதுதான் அடிப்படை. சுண்ணாம்புத்தூள்-கம் அராபிக் ரெண்டையும் குழைச்சு கெட்டியா இருக்கிற சமாச்சாரம் அது. காஞ்சு போச்சுனா கல்லு மாதிரி ஆயிடும் அசைக்க முடியாது.

பல தாய்மார்கள் மருதாணி போட்டு பழகின கைகளோ என்னவோ ரொம்ப அழகா கெட்டியா டிசைன் டிசைனா போட்டிருந்தாங்க. எனக்கு அந்த கெட்டி சரிபட்டு வராததால அதை குறைக்க தண்ணிய தொட்டுத் தொட்டு போட்டேனா, காஞ்ச பிறகு எடுப்பாத் தெரியலை. “பரவாயில்லைவிடுங்க. அதுக்கு லைனிங் குடுத்துறலாம் அப்படின்னு ஆறுதல் சொன்னாங்க சிலர்.


கிரீடம், சிம்மாஸனம் நடுவிலே வெள்ளையாக டிசைன் தெரியுதே அதுதான் ஜெஸ்ஸோ

நாலு நாள் இதிலேயே ஓடிப் போச்சு. அடுத்தது தான் க்ளைமாக்ஸ். தங்கம் பூசணும். கொஞ்சம் வசதிப் பட்டவங்க தங்க சருகு வாங்கி வந்து அதை அப்படியே ஜெஸ்ஸோ மேலே அழுத்தி பதிஞ்சாங்க. இதுக்கு தனியா கையிலேந்து 400 ரூபா செலவழிக்கணும்.

நானும் என்பெண்ணும் அவங்க குடுத்த தங்கப் பொடியிலே பிரஞ்ச் பாலிஷ் கலக்கி ஜெஸ்ஸோ மேலேயே அவங்க சொன்ன மாதிரி பூசி விட்டோம்.
”நீங்க சீக்கிரம் சீக்கிரமா தடவணும். பிரெஞ்ச் பாலிஷ் ஆவியாப் போயிடும். அப்புறம் தங்கம் கறுத்துப் போயிடும் ” அப்படின்னு அவங்க சொல்லப் போயி தடவின அவசரத்துல எங்கே பூசினோம், எதுக்கு பூசினோம் ஒண்ணும் புரியலை.

இதுல பலருக்கும் பல குழப்பங்கள். “அய்யய்யோ அது சாமியோட பின்னாடி இருக்கிற கையிங்க அங்கேயும் கோல்டு போட்டுட்டீங்களே” அப்படின்னு ஒரு கேஸ். இன்னும் சில பேர் அம்மனுக்கு தலைமுடி வர்ற இடத்துல தங்கமுடியாக்கி வச்சிருந்தாங்க.

ஒரு வழியா கிரிடிகல் ஸ்டேஞ் தாண்டி நமக்கு பழக்கமான வர்ணம் பூசுற வேலை
ஆரம்பிச்சுது. அவங்க சொன்ன எடத்துல சொன்ன வர்ணத்தை பூசினேன். நான் ரொம்ப கீழ்படிந்த மாணவன். எதிர் கேள்வியெல்லாம் கேட்க மாட்டேன். அப்புறம் ஒரு மூணு நாள் வகுப்புக்கு மட்டம். கீழ்படிதலுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை. அர்ஜெண்ட் வொர்க் வெளியூர் போகவேண்டியிருந்தது.


வகுப்புக்கு மட்டம் போடுவதற்கு முன்வரை

அப்புறம் சின்னச் சின்ன நுணுக்கமான காரியம். அவங்க அப்பப்போ யோசிச்சு புதுசு புதுசா ஐடியா குடுப்பாங்க. அதை செஞ்சுக்கிட்டே வரணும். இதிலே காத்துக்கிட்டு இருக்கிற நேரம்தான் ஜாஸ்தி. ஒருவழியா கரக்டா பதினைஞ்சு நாளில முடிச்சாச்சு.



நிறைய பேர் பத்து நாளிலேயே முடிச்சுட்டு போயிட்டாங்க. நாற்பது பேர் இருந்த
வகுப்பில கடைசி வரைக்கும் இருந்த பத்து (மக்கு) மாணவர்களில் நானும் ஒருத்தன். கடைசியா ஒரு சர்டிபிகேட்டும் குடுத்தாங்க. அதுல என் மகளுக்கு ஏக சந்தோஷம்.


என் மகள் வரைந்த பிள்ளையார். அதில ஜெஸ்ஸோ நல்லா எடுப்பா தெரியுது பெரிசாக்க்கிப் பாருங்க.






அனைவருக்கும் ஜெஸ்ஸோ ஆனைமுகத்தான் அருளும் ஜெஸ்ஸோ சரஸ்வதியின் அருளும் இந்த நவராத்திரியில் பொங்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன்.