ஆயில் பெயிண்ட் நல்ல நல்ல விதமாக செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் பலவிதமான கேன்வாஸுகளை வாங்கினேன். அது 25 வருடங்களுக்கு முன்பு. அதில் Streched canvass என்பது ஒரு வகை. இது எடை குறைவான சட்டத்தில் நன்றாக இழுத்து பொடி ஆணிகளினால் பொருத்தப்பட்ட கெட்டியான துணி.
ஒரு பத்திரிக்கையில் வந்த புகைப்படத்தில் மேகங்கள், நீரில் கதிரவன் பிரதிபலிப்பு இவற்றின் அழகைக் கண்டு அதை முயற்சித்துப் பார்க்கலாம் என்று ஆரம்பித்தேன். அதன் பின்னர் வேறொரு புகைப்படத்தில் கண்ட ஒரு நாட்டியக் குழுவின் அபிநய பங்கியை நிழற்படமாக மாற்றி வரைந்து அவர்கள் சூரிய வணக்கம் செய்வதாக முடித்து கொஞ்சம் நாட்கள் வரவேற்பு அறையில் மாட்டி வைத்திருந்தேன். பல முறை வீடுகளை மாற்றியதில் அதற்கு முக்கியத்துவம் குறைந்து எங்கோ கேட்பாரின்றி பெட்டி அடிக்கு சென்று விட்டது. சமீபத்தில் அதை பார்த்த போது பொங்கலுக்கு ஏற்ற படம் என்று தோன்றியதால் அதை பிரசுரிக்கிறேன்.
இதற்குப் பொருத்தமாக சூரிய காயத்ரி மந்திரத்தை படத்தின் அடிப்பக்கத்தில் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன்
பாஸ்கராய வித்மஹே, மஹத் த்யுதிகராய தீமஹி
தந்நோ ஆதித்யப் பிரசோதயாத்
ஆனால் கோணல்மானலாகப் போய்விட்டால் படத்தின் அழகு போய்விடும் என்ற பயத்தால் அதை எழுத தைரியம் வரவில்லை. இந்த பதிவின் மூலம் அந்த ஆசையை நிறைவு செய்து கொள்கிறேன்.
பாரதியாரும் ஞாயிறு வணக்கம் என்ற நல்லதொரு கவிதையை செய்திருக்கிறார். அதன் வரிகளும் இதற்கு பொருத்தமானதே.
என்றனுள்ளே கடலினைப் போலே
எந்த நேரமும் நின்னடிக் கீழே
நின்று தன்னகத்து ஒவ்வோர் அணுவும்
நின்றன் ஜோதி நிறைந்தது வாகி
நன்று வாழ்ந்திட செய்குவை யையா
...........................................................
--------------------------------------------
ஆதித் தாய் தந்தை நீவிர் உமக்கே
ஆயிரம்தரம் அஞ்சலி செய்வோம்
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்
இன்று ( 12 ஜனவரி) வீரத் துறவி விவேகானந்தரின் ஜயந்தியும் ஆகும். பாரதமாதாவை மிக உயர்ந்த அரியணையில், குமரி முனைப் பாறையில் தவத்தில் கண்டு உலகிற்கு பறை சாற்றியவர். அவருக்கு ஏதாவது வகையில் அஞ்சலி செய்வோம் என்ற எண்ணத்தில் எழுந்த முயற்சியே கீழே காணும் போட்டோஷாப் செய்யப்பட்ட படம்.
( படத்தை சுட்டினால் எழுதியிருப்பதை படிக்க முடியும்)
No comments:
Post a Comment