சென்ற பதிவில் பேஸ்டல் வர்ணங்கள் பற்றி சிறிது சொல்லியிருந்தேன். மிக அற்புதமான உபகரணம் ஆயினும் எனக்கிருந்த சின்ன பிரச்சனை இடையிடையே படத்தை சரி செய்துகொள்வதில் ஏற்பட்ட சிரமங்கள்தான்
அதாவது அழிச்சு அழிச்சு திரும்ப வரைஞ்சு சரி செய்யணும். ஆயில் வர்ணம் ஆனால் நன்றாக காய விட்டு திருத்த வேண்டிய பகுதி மேல் சுலபமாக மீண்டும் வேண்டிய வர்ணத்தை அப்பி
சரி செய்து கொள்ளலாம்.பேஸ்டலில் என்னதான் அழித்துவிட்டு பின்னர் அதன் மேல் பூசினாலும் பழைய வர்ணத்தின் தாக்கம் சற்று தெரியத்தான் செய்தது. அது சில சமயம் படத்தின் அழகை கெடுத்துவிடக் கூடும் !
இதை எப்படி தீர்ப்பது என்று யோசித்தபோதுதான் “கண்டு பிடித்து விட்டனர் விஞ்ஞானிகள்” என்ற விக்ஸ் விளம்பரம் போல் உதித்தது ஒரு ஐடியா ! அந்த முறையில் வரைந்தது தான் கீழே உள்ள படம். பலரும் கபில்தேவ் என்று அடையாளம் கண்டு விட்டார்கள். உங்களுக்கும் அதில் கருத்து வேறுபாடு இருக்காது என்று நினைக்கிறேன்.
இங்கே நான் பயன்படுத்திய ஐடியா,முதலில் படம் முழுவதையும் பேஸ்டல் வரைதாளில் கலர் பென்ஸில்களை கொண்டு வரைந்து விடுவது. கலர் பென்ஸில்களின் வரைவை சுலபமாக அழித்து திருத்த முடியும். கிட்டத்தட்ட 80 சதம் படம் முற்றுப் பெற்றுவிடும். உங்களுக்கு முழு திருப்தி வந்த பின்னர் பேஸ்டல் வர்ணங்களைக் கொண்டு அதன் மேலேயே தேவைகேற்றபடி அழுத்தம் கொடுத்து மீண்டும் வரையவும்.
இப்போது மங்கலான கலர் பென்ஸிலின் வர்ணங்களை விட பேஸ்டல் வர்ணங்கள் பளிச் என்று தெரிய ஆரம்பிக்கும். தேவையானால் சில பகுதிகளை, ஷேடிங்-கை அனுசரித்து,பென்ஸில் கலர்களிலே விட்டு விடலாம். முடித்த பின்னர் கிட்டத்தட்ட ஆயில் வர்ணங்களைப் போலவே எடுப்பாக இருக்கும்.
கூடுதல் வசதி என்னவென்றால் நுணுக்கமான கண் போன்ற பகுதிகளை வரையும் போது இந்த யுக்தி நன்றாக பயன்பட்டது.
இப்படி வெவ்வேறு இனத்தை சேர்ந்த வர்ணங்களை கொண்டு வரைவதை மிக்ஸ்ட்-மீடியா என்பார்கள். இவைகளை சுத்த பென்ஸில்காரர்களும் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள், பேஸ்டல்காரர்களும் தள்ளி வைப்பார்கள். சுத்த கர்னாடக ச்ங்கீதமும் இல்லை, ஹிந்துஸ்தானியும் இல்லை. சினிமா பாட்டு போல ரெண்டும் கெட்டான்.
படத்தைப் பார்த்த நண்பர் கொடுத்த ஒரு கமெண்ட்: ”கபிலுக்குத்தான் கழுத்தே கிடையாதே, நீ என்ன இவ்வளவு நீளமா வரைஞ்சிருக்கே”
நான் சொன்னேன் “கபிலா கொக்கா !”
4 comments:
சோதனை ஓட்டம்
படம் சூப்பர் சார்..
கபில் தேவிற்கு கழுத்து இருக்கா இல்லையான்னு கவனித்து இல்லை... :)
நன்றி தர்ஷிணி,
///கபில் தேவிற்கு கழுத்து இருக்கா இல்லையான்னு கவனித்து இல்லை... ///
:))))
வலைச்சர அறிமுகத்தைத் தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி
@ முனைவர் ஜம்புலிங்கம் ஐயா
@ரூபன் அவர்களே மற்றும்
@ யாதவன் நம்பி அவர்களே.
தங்கள் உற்சாகத்திற்கு பெரிதும் தலை வணங்குகிறேன்.
நன்றி
Post a Comment