Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Thursday, August 13, 2009

கொப்பரை மேல் வெளிப்படும் கலையார்வம்

கர்நாடகத்தில் விழாக்களில், குறிப்பாக திருமணங்களில், கைவினைக் கலைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவது இப்பொழுதும் பரவலாகக் காணப்படுகிறது. அதில் வகை வகையான மஞ்சள் பொட்டலங்கள், கொப்பரைக் கிள்ளல்கள் மிகவும் பிரபலமானவை. சுப சடங்குகள் நிறைவேறியதும் சுமங்கலிகள் அனைவருக்கும் மஞ்சளும் குங்குமமும் அடங்கிய சிறு பொட்டலங்கள் வினியோகிக்கப்படும். இந்த வழக்கம் நாசூக்கான பல வித உருவகங்களோடு கைவினைப் பொருளாக தத்தம் திறமைகளையும் ஈடுபாட்டையும் உற்சாகத்துடன் காட்டுவதற்கான சாதனம் ஆகியுள்ளது.

என்னை மிகவும் கவர்ந்தது கொப்பரைக் கிள்ளல் தான். சுமார் இருபது வருடம் முன்பு வரையிலும் அவரவர் குடும்ப உறுப்பினர்களாலே செய்யப்பட்டு வந்தது. தற்போது வணிக ரீதியாக கடைகளிலே கிடைக்கிறது. இதை ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் யாவரும் செய்கின்றனர். சில மாதிரிகளை இங்கே பாருங்கள்.




ஒரு கொப்பரைக்கு மூன்று முகங்கள். ஒவ்வொரு முகத்திலும் ஒரு படம் இருக்கும். ஏழுமலையான், சங்கு, சக்கரம் என ஒரு காம்பினேஷன்; சிவன் பார்வதி, நந்தி, ஒரு மலர் என்று இன்னொரு காம்பினேஷன் இப்படி எந்த பக்கத்தை திருப்பினாலும் ஒரு நல்ல வேலைப்பாடு கண்ணில் படும் படியாக வடித்திருப்பார்கள்.

கொப்பரையின் மேல் பக்கத்தில் உள்ள தோலை மெல்லியதாக சீவி எடுக்கும் போது அடிப்பாகத்தில் வெள்ளைப் பகுதி வெளிப்படும். தக்க வைக்கப்படும் தோலே படத்தின் வரைவடிவம் ஆகிறது. அடிப்பக்கமான வெள்ளை வர்ணம் பின்ணணி ஆகிறது.

தோலை மிக நுணுக்கமாக ஒரே அளவில் எடுக்க வேண்டும். படங்களில் மிக மெல்லிய கோடுகள் தெரியும்படி மற்ற பகுதிகளை கிள்ள வேண்டுமானால் எவ்வளவு ஜாக்கிரதையாக செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்ளலாம்.

புலிகளை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டது.

நானும் இதை முயற்சித்துப் பார்த்தேன். மிக மிக எளிமையான படத்தை (சிவலிங்கம், திரிசூலம்) வரைந்து கொண்டு ஒரு பிளேடின் நுனியால் கிள்ள ஆரம்பித்தேன். சிறிது நேரத்திலே எலி கொறித்தது போல் தெரிய ஆரம்பித்தது. மனம் தளராத விக்கிரமன் போல் மீண்டும் தொடர்ந்தேன். கிள்ளுவதற்காக பிளேடில் கொடுக்கப்படும் அழுத்தம் மறுபக்கத்தில் விரல் சதையையும் பதம் பார்த்தது. ரத்தம் வருவதுதான் பாக்கி. உப்பும் புளியும் உள்ள சாம்பார் (அ) ரசம் சேர்த்து சாப்பிடும் போது விரல் எரிச்சல் எடுத்தது.

ஒருவழியாக சிவலிங்கம் ஒரு வடிவம் பெற்றதும் திரிசூலத்திற்குத் தாவினேன். விரலைக் காப்பாற்றிக் கொள்ள பேனாக் கத்தியை வைத்து கிள்ளத் தொடங்கினேன். அதன் நுனி ப்ளேடை போல மென்மையாக இல்லாதததால் கிள்ளலும் வன்மையாகப் போயிற்று. வெள்ளை பின்ணணி குண்டும் குழியுமாக காட்சியளித்தது. அதைத் தான் கீழே பார்க்கிறீர்கள்:))


எப்படியோ ஒரு வழியாக திரிசூலமும் உடுக்கும் தெரியும்படியாகச் செய்து விட்டேன். உடுக்கு, கம்பத்தில் கட்டியிருக்கும் ஒலிபெருக்கி மாதிரி தெரியுது என்கிற கிண்டலையும் கேட்டாச்சு. :)))

தங்கமணி இந்த கொப்பரையை சமையலுக்கு எடுத்துக் கொள்கிறேன் என்று பலமுறைக் கேட்டும் மறுத்து வந்த நான் இப்போது கொடுத்து விடலாம் என்று நினைக்கிறேன்.

நமக்கு ஒரு இடுகைக்கான மேட்டர் முடிஞ்சுதே !

[இந்த இடுகை தர்ஷிணி அவர்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன் :) ]

Thursday, July 23, 2009

ஹைதர்- திப்பு- கோட்டை

கோவையிலிருந்து குருவாயூர் திருச்சூர் செல்ல விரும்புவோர் பாலக்காடு வெளிப்பாதையில் சென்று விட வாய்ப்புகள் அதிகம். அப்படி செல்லாது சற்று உள்ளே சென்றால் ஒரு அழகிய கோட்டையைக் காணலாம். இதை திப்புசுல்தான் கோட்டை என்றும் ஹைதர் அலி கோட்டையென்றும் கூறுகின்றனர்.

பொதுவாகவே கோட்டை என்றால் கவனிப்பாரற்று இடிபாடுகள் நிறைந்ததாகக் காணப்படும் என்ற என் எண்ணம் இந்த கோட்டையை கண்டதும் மாறியது. இதற்காக இந்திய தொன்பொருள் மேம்பாட்டுக் கழகம் (ஆர்கியாலிஜிகல் ஸர்வே ஆஃப் இண்டியா) பாராட்டப் படவேண்டும்.

1766ல் ஹைதர் அலியால் கட்டப்பட்டக் கோட்டை பல கடுமையான போர்களை கண்டது. ஆங்கிலேயருக்கும் ஹைதர் அலி மற்றும் அவன் மகன் திப்புவுக்கும் இடையே பலமுறை கைமாறியது. இன்று இதனுள்ளே சில அரசாங்க அலுவலகங்கள், ஒரு அருங்காட்சியகம், சிறைச்சாலை என பல நடவடிக்கைகளுக்கு மையமாகி இருக்கிறது. கோட்டையின் வெளியே அகழிகள் மிக சுத்தமாகக் காணப்பட்டது. சுற்றிலும் புல்தரை பூங்கா என சுற்றுலா வருகையாளர்களை கவரும் வகையில் பராமரித்து வருகின்றனர்.

இந்த படம் ஃப்ளைவுட் பலகையில் ஆயில் வர்ணத்தில் வரையப்பட்டது. மேல் பக்கத்திலிருந்து கீழே வந்திருக்கும் போகன்வில்லா என்னுடைய சேர்க்கை. உண்மையில் அங்கே ஒரு பெரிய மரத்தின் கிளைகள் தாழ்வாக வந்து கோட்டையின் மேல்பக்கத்தை மறைத்துக் கொண்டிருந்தது. அது போலவே பாலத்தின் இருதூண்களும் நன்றாக தெரியும்படி வெளிர்நிறமாக மாற்றினேன். புகைப்படத்தில் அவை கோட்டையின் பின்னணியில் மறைந்து விட்டிருந்தன.


அந்த மரத்தை கூகிள் செயற்கைக்கோள் படத்தில் குறிப்பிட்டுக் காட்டியுள்ளேன். அதிலே அந்த மதில் சுவர் பாலம் இவற்றையும் காணலாம். சுற்றிலும் அகழி நீரால் சூழப்பட்ட எவ்வளவு அழகாக அமைக்கப்பட்டக் கோட்டை இது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

போய்க் காண ஆசையாயிருக்கிறதா? இங்கே இநத சலனப் படத்தின் இணைப்பில் கோட்டைக்குள்ளே ஒரு சுற்று சுற்றி வரலாம்

Thursday, July 9, 2009

சின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தை சொல்லுதம்மா

காஞ்சுபோன கருவேலங்காடு, பச்சை-ங்கறது மருந்துக்கு கூட இல்லை அதுக்கு நடுவிலே இப்படி கலர் கலரா ஒரு பறவை.

இந்த படத்தை ஃபிளிக்கரில் பார்த்த உடனே வரைந்து பார்க்கவேண்டும் என்று தோன்றிவிட்டது. இந்த குருவி காணப்படுவது தென் ஆப்பிரிக்காவிலாம். நம்மூர் குருவி போலத்தான் இருக்கு ஆனா மல்டி கலர்.



சாதாரணமா என்னுடைய படமெல்லாம் A4 சைஸ்குள்ளே தான் இருக்கும். கொஞ்சம் பேராசைப்பட்டு பெரிய அளவில் ஆரம்பித்து விட்டேன். அதுவும் பேஸ்டல் வர்ணம். கடைசியில் அது ஸ்கேனருக்குள்ளே அடங்கவில்லை.

எவ்வளவுதான் முயற்சி பண்ணினாலும் பேஸ்டல் வர்ணத்தில் வெள்ளை வர்ணம் முழுமையாக ஒத்துழைக்கவில்லை. இதனால் வெளிச்சத்தினால் வரும் ஒளியூட்டல் சரியாக எடுபடவில்லை. குறிப்பாக கழுத்தின் அடிப்பக்கம், பிண்ணணியில் தெரியும் வெளிச்சம் போன்றவற்றை எடுத்துக் காட்ட இயலவில்லை.

ஹும்ம்ம்ம்... கத்துகிறதுக்கு நெறைய இருக்கு

Saturday, June 27, 2009

செய்யும் தொழிலே தெய்வம்

இவர் தன் திரை அனுபவங்களை வாரப் பத்திரிக்கை ஒன்றில் தொடராக எழுதி வந்த பொழுது படித்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது.

எல்லோரையும் விட படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வந்து விடும் இவருக்கு ஒருமுறை கூட நடிகர் சிவகுமாரை முந்திக் கொண்டு வர முடியவில்லை. எப்பவுமே அவர்தான் முந்தி.

ஒருமுறை எப்படியாவது சிவகுமாரைவிட முன்னதாகப் போய் சேர்ந்துவிட வேண்டும் என்ற முனைப்போடு (யாருக்கும் அது பற்றி மூச்சு விடாமல்) வழக்கத்தை விட எல்லா வேலைகளையும் சீக்கிரமாகவே முடித்துக்கொண்டு அரைமணி நேரம் முன்னதாகப் படபிடிப்பு தளத்துக்குப் போய் சேர்ந்தார். இவர் எண்ணங்களை டெலிபதியில் தெரிந்து கொண்டாரோ என்னவோ மேக்கப் மேன் நாற்காலியிலிருந்தபடியே வணக்கம் சொல்லி இவரை வரவேற்றார் சிவகுமார்.


வாழ்க்கையில் இவர்கள் பெற்ற வெற்றிகளுக்கு வேறு காரணமே தேவையில்லை.

செய்யும் தொழிலே தெய்வம்.

Tuesday, June 2, 2009

அச்சச்சோ ரெட்டையா !!

ஹாங்காக் நகரத்தில் வசிக்கும் ஒரு ஓவியரைப் பற்றிய ஒரு குறிப்பு ஆங்கிலக் கட்டுரை ஒன்றில் சில வருடங்களுக்கு முன் படிக்க நேர்ந்தது.

அவருடைய தனித்தன்மை என்னவென்றால் எந்த ஓவியத்தைக் காட்டினாலும் அதை அச்சு அசலாக மூலத்தைப் போலவே வரைந்து கொடுத்துவிடுவாராம். அதை ஒரு தொழிற்சாலை போலவே உதவி ஆட்கள் வைத்துக் கொண்டு செய்து வருகிறாராம். அவரை போலவே அந்நகரில் மிகப் பலரும் வெற்றிகரமாக தொழில் நடத்தி வருவதாகவும் சொல்லியிருந்தார். ஆனால் அது மிக டென்ஷனான வேலையென்றும் அகில உலக சந்தையில் மூலப்பிரதிகளுக்கு லட்சக்கணக்கான டாலர்கள் விலை கிடைப்பதால் நகல் ஓவியங்களை ”புராதனமான ஓவியர்களின் மூலம்” என்று விற்கக் கூடிய கள்ளச் சந்தை உருவாகி இருப்பதால் அதிக சட்டத் தொல்லைகளுண்டு என்றும் குறிப்பி்ட்டிருந்தார்.

நமக்கு அது மிகப் பெரிய விஷயம். சமயங்களில் நாம் வரைந்த சில ஓவியங்களையே யாராவது மீண்டும் வரைந்து கொடுக்கச் சொன்னால் நம்மால் அதே ஈடுபாட்டுடன் திரும்பவும் செய்ய முடியுமா என்பது சந்தேகமே. அதைத் தீர்க்க இன்று ஒரு வழியை காண்போம். இது ஏற்கனவே பழைய பதிவு ஒன்றில் குறிப்பிட்டது தான்.

சென்ற பதிவில் வ்ரையப்பட்டிருந்த மழலையே இம்முறை வண்ண வடிவில்.

மிக மங்கலாக ஜெராக்ஸ் செய்யப்பட்ட நகல் படத்தில் வெவ்வேறு விதமாக பென்சில் மற்றும் பேஸ்டல் வர்ணம் பூசினேன். சாதாரண பாண்ட் தாளில் எடுக்கப்பட்டத்தால் வர்ணங்கள் பரவுவதில் சற்று வித்தியாசம் இருந்தது. பரீட்சார்த்தமானதாகையால் பரவாயில்லை என்று வர்ணம் பூசுவதை தொடர்ந்தேன்.

வேண்டுமென்றே தலை முடிக்கான வர்ணத்தையும், பூவாலைத் துண்டுகளின் வர்ணத்தையும் மாற்றினேன். விளைவு இரட்டைக் குழந்தைகள். இன்னும் முனைப்பாக செயலாற்றினால் ஒரே மாதிரியான படங்களை இன்னும் நல்ல விதமாக உருவாக்க முடியும் எனத்தோன்றுகிறது.

அதாவது நல்ல நகல்களை உருவாக்க முடியும் :))

யாருக்காவது அன்பளிப்பாக கொடுக்க இயலும்.

நகல் எடுக்கும் பொழுது நல்ல வரைதாளில், எண்ணெய் பிசுக்கு இல்லாமல் பார்த்து செய்தால் உங்களுடைய மூலப் பிரதிக்கும் நகலுக்கும் யாராலும் வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு செய்ய முடியும். ( விரல்களில் இருக்கும் எண்ணெய் பசை தாளில் ஒட்டிக்கொண்டால் பின்னர் அந்த இடங்களில் வர்ணங்களை ஒட்டவிடாமல் செய்யும். அப்போது அவை திட்டுத்திட்டாகத் தெரியும்.)

கொசுறு : ஜெராக்ஸ் எடுக்கப் போன இடத்தில் மூன்று பிரதிகளை எடுக்கச் சொன்னேன். அந்த பெண் செட்டிங்கை மாற்றி நாலாவது பிரதி எடுக்க முற்பட்டபோது வேண்டாம் தேவையில்லை என்று தடுத்தேன். அவள் புன்னகையுடன் “எனக்கும் ஒரு காப்பி” என்று தனியே எடுத்து வைத்துக் கொண்டாள்.

நல்ல ஓவியத்திற்கு இதைவிட என்ன அங்கீகாரம் வேண்டும் !!


Monday, May 25, 2009

கண்ணால் பேசும் மழலை

குழந்தைகளால் ஈர்க்கப்படாதவர்கள் இருக்க முடியாது.

பிராணிகளின் குட்டிகளாகட்டும், பறவைகளாகட்டும் அவற்றின் கவர்ச்சியே பெரிய்ய்ய்ய்ய கண்கள்தாம். கார்ட்டூன் படங்களிலும் உயிரோட்டம் தருவது பெரிய கண்களை உருட்டி உருட்டிக் காட்டப்படும் பலவிதமான உணர்ச்சிகளே.

பல சிறப்பான வரைபடங்களை பார்க்கும் போது கண்களை வரைவதில் அவர்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சியே தனித்து தெரியும். அப்படி ஒரு வலைப்பூ வை சமீபத்தில் பார்த்த தாக்கம் தான் கீழே காணும் குழந்தையின் படம்.

அவர்களின் உழைப்பு மலைக்க வைக்கிறது. அவர்களின் தரத்தை எட்டிப்பிடிக்க முடியுமா என்பது சந்தேகமே :(

ஆயினும் நமக்கு படம் வரைவதில் உற்சாகம் குன்றாமல் இருக்கிறதே அதற்காக சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியது தான்.

குழந்தையின் கன்னம் வழ வழ என்று வர வேண்டுமானால் அழுத்தமான கோடுகள் தவிர்க்கப்பட வேண்டும். இந்த படம் முழுக்க முழுக்க பென்சிலை சுரண்டி எடுத்த கரிப் பௌடர், இரப்பர் அழிப்பான் மற்றும் விரல்ககளால் விரவுதல் செய்து வரையப்பட்டிருக்கிறது.

கற்றுக்கொண்ட முக்கிய பாடம் என்னவென்றால் மிக மிக மெல்லிய கரி பூச்சு கூட சுற்றி இருக்கும் பகுதிகள் அழிப்பானால் அழிக்கப்படும் பொழுது எடுப்பாகத் தெரிகிறது. அதனால் ஒளியின் மிக குறைந்த அளவு வேறுபாடுகளையும், தோல் சுருக்கங்களையும் வெளிக்கொணர முடிகிறது.

உபயோகப்படுத்தப்பட்ட பென்சில் (நேரடி பயன் பாடு மிகக்குறைவே) 2B.

கூடிய விரைவில் இதையே வர்ணத்தில் செய்ய முயற்சிக்கிறேன்.

எப்பப் பார்த்தாலும் பழைய படங்களையே போட்டு கொண்டிருப்பது என்னமோ போலிருந்தது. அதனால்தான் இம்முறை பிரத்யேகமான புத்தம் புது படம் :))

Saturday, May 9, 2009

இயற்கை வளைவு

செய்வதற்கு குறிப்பாக வேலை ஏதுமின்றி அமர்ந்திருந்த போது எதிரே கிடந்த பத்திரிக்கையில் வெளியாகியிருந்த புகைப்படம் ஆர்வத்தைத் தூண்டியது.

இது ஒரு ink & watercolor படம்.

கறுப்பு மையினால் லைன் டிராயிங் முடித்து பின்னர் நீர்வர்ண பென்சில்களால் அங்கங்கே கற்களின் பரிமாணம் தெரியும் வண்ணம் ஆரஞ்சு, மஞ்சள், நீலம், பச்சை வர்ணங்களை தேய்த்தேன்.
கடைசியாக வர்ணங்கள் ஒன்றோடு ஒன்று கரைந்து இணையும் வகையில் சிறிது நீரில் தோய்த்த பிரஷ்ஷினால் ஒரு பூச்சு கொடுத்தேன். ஓரிரு தினம் அதை இப்படி அப்படி வைத்து அழகு பார்த்தபின் அது எங்கே போயிற்று என்பது பற்றி நினைவு கூட இல்லாமல் மறந்து போனேன்.

சமீபத்தில் வேறு எதையோ தேடிக்கொண்டிருந்த போது திடீரென்று இது கண்ணில் பட்டது.

”எனக்கு உன் வலைப்பூவில் இடம் கிடையாதா” என்று கேட்பது போல் தோன்றியது :))

இந்த வளைவு எங்கே இருக்கிறது எவ்வளவு பெரியது என்ற விவரங்கள் இல்லாமல் எப்படி பிரசுரிப்பது என்று யோசித்தேன்.

தேடுவதில் சில நாட்கள் சென்றது. நான் நினைத்தது போல் ஆப்பிரிக்காவில் இல்லாமல் இது வட அமெரிக்காவில் உள்ள இயற்கை வளைவு ஆகும். உலகத்திலே மிகப்பெரியது எனலாம். 52 அடி உயரம் உடையது. காற்றின் அரிப்பால் இங்குள்ள செம்பாறைகளில் குடைவுகள் உண்டாகி ஏற்பட்டிருக்கும் வளைவு இது.

உடா (Utah) மாகாணத்தில் காணப்படும் 500 க்கும் மேற்பட்ட இயற்கை வளைவுகளில் இது மிகவும் பிரசித்தமானது. இதன் பெயர் Delicate Arch. அங்கே இந்த பகுதி பாதுகாக்கப்பட்ட இயற்கை சரகமாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டு பேணப்படுகிறது.

எப்போதாவது வாய்ப்பு கிடைச்சா போய் பார்க்க ஆசைதான் :))