Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Thursday, April 29, 2010

சித்திரமும் மவுஸ் பழக்கம்

மாசம் ஒரு பதிவாவது பதியணும். கைவசம் வரைபடம் இருக்கு ஆனால் அதை ஸ்கேன் பண்ண முடியாத நிலை.
'டைம் ஈஸ் டிக்க்கிங் அவே' ...........
என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த நிலையில் " சார் கிச்சன் டேபிள் கப்போர்டு அரேன்ஜ்மென்ட் கொஞ்சம் சொல்லிடுங்க, எலக்ட்ரிகல் வைரிங் பண்ணனும்" அப்படீன்னு கான்ட்ராக்டர் கிட்டே இருந்து ஃபோன் வந்தது. நானிருப்பதோ வெளியூர். சரின்னு அவசர அவசரமா MS Paintஐ திறந்து அரைமணி நேரத்தில ரெண்டு படம் போட்டு அனுப்பினேன்.



அப்புறம் ஆற அமர அதை கொஞ்சம் நேரம் அழகு பார்த்துகிட்டே இருந்த போது அந்த அம்மா ஞாபகம் வந்திச்சு. அவங்க பேரு கேதரைன், நாடு அமெரிக்கா. Esnip வலைதளத்துல அவங்க இந்த MS Paint வைச்சு அமர்க்களம் பண்ணியிருக்காங்க பாருங்க!! அங்க போய் பார்த்தாதான் தெரியும் மவுஸுல அவங்க கை வண்ணம். ஒளியும் நெழலும், மலையும் நதியும், பூவும் புலியுமா என்னமா அசத்தியிருக்காங்க !

நம்ம பங்குக்கும் MS Paint-ல ஒண்ணு இருக்கட்டுமே-ன்னு இந்த மொக்கை இடுகை.

பின்குறிப்பு
கான்ட்ராக்டர் நான் போட்டனுப்பிச்ச படம் சரிபட்டு வராதுன்னு சொல்லிட்டு தன் நோக்கம் போலவே செய்யறதா கேள்வி :((

Sunday, March 28, 2010

காஞ்சித் தலைவன்

இந்த மஹானின் படத்தை வரைந்து பார்க்க வேண்டும் என்று பல நாட்களாக ஆசை இருந்தது. குறிப்பாக மணியம் செல்வன் அவரைப் பற்றிய ஒரு தொடரில் காஞ்சி பெரியவரின் வாழ்க்கை சித்திரமாக வரைந்த ஓவியங்கள் மனதில் இடம் பெற்றிருந்தன. அவை பெரும்பாலும் ஹாட்சிங் முறையில் வரையப்பட்டிருந்தன.

சில வருடங்களுக்கு முன் ஒரு பென்சில்-கறுப்பு வெள்ளை- வரை படம் முயற்சித்தேன். ஏனோ மனதிற்கு நிறைவாக வில்லை. மஹான்களுடைய அருள் இல்லாமல் அது முடியாது போலும் என்று நினைத்து விட்டு விட்டேன்.

போன வாரம் அவரது புகைப்படம் தாங்கிய ஒரு பத்திரிக்கை கண்முன்னே கிடந்தது. வாட்டர் கலர் பென்சிலும் கைவசம் தயாராக இருந்தது. கிடைத்த ஒரு அட்டையில் மள மள வென்று வரையத் துவங்கினேன். வழக்கம் போல் வர்ணப் பென்சில் எப்போதுமே ’டல்’ தான்.

அதற்காக வர்ணங்களை பென்சிலில் பூசிய பின் சின்ன பிரஷ்-ஐ தண்ணீரில் தோய்த்து சிறிது வாஷ் எஃபெக்ட் கொடுத்தேன். அது சற்று காய்ந்ததும் மீண்டும் வர்ணங்களை எங்கெங்கு தேவையோ அங்கே சற்று அழுத்தமாக வரைந்தேன். இப்போது முன்பை விட படம் சற்றே பளிச் என்று வந்தது. இதற்கு மேலும் ‘பளிச்’ செய்யப்போனால் கெட்டு போய்விடும் என்ற பயத்தில் அப்படியே விட்டு விட்டேன்.



பெரும்பாலானவர்கள் நன்றாக வந்திருக்கிறது என்று கூறிய தைரியத்தில் வலையேற்றத் துணிந்தேன்.

இம்முறை சற்று குரு அருள் துணை நின்றது போலும் . குறைகளுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும்.

பட்டினத்தார் பாடியது போல “.....எல்லாப் பிழையும் பொறுத்து அருள்வாய் கச்சி ஏகம்பனீரே”

Sunday, February 14, 2010

கொலுசு மாட்ட தெரியலை

காமிரா வாங்கிய புதுசு. அப்போதெல்லாம் இந்தியாவில கோடக், டப்பா காமிரா விட்டா கிடையாது. நான் வாங்கினது யாஷிகா,ஆட்டோ ஷட்டர் ஸ்பீட். வாங்கின சம்பளத்துக்கு கலர் ஃபிலிம் கொஞ்சம் கையை கடிக்ககூடிய நிலைதான். ஆனாலும் உற்சாகம் விடவில்லை. பலமுறை ரோல் ரோலாக வீணாக்கியதும் உண்டு. அப்பப்ப சில நல்ல படங்களும் அமைஞ்சு பல வருஷங்களுக்கு நினைவுல நிக்கிறத பார்க்கும் போது அது இப்ப பெரிசா தோணல.



அதனாலத்தான் அந்த படத்தையும் இணைச்சு இந்த முறை என்னோட வரைதிறன் முயற்சிய காட்டியிருக்கேன்.

பேஸ்டல் கலர் படம் போட ஆரம்பித்த காலம். அதனால தடுமாற்றங்கள் ரொம்பவே உண்டு. [இப்ப மாத்திரம் ரொம்ப ஸ்டெடியான்னு கேக்காதீங்க. இப்ப ரொம்ப முயற்சி செய்யறதே ரொம்ப கம்மி :( ]

குறிப்பா குழந்தையோட காலு கொலுசு என்ன பண்ணினாலும் சரியா வரலை. கொலுசு இந்த பாடு படுத்தினப்பறம் சோபா மெத்தை இன்னமும் பயமுறுத்திச்சு. அடடா ஆழம் தெரியாம காலவுட்டோமே அப்படீன்னு நானாவே ஒரு டிசைன் கற்பனை பண்ணி ஒரு வழியா முடிச்சாச்சுன்னு பேர் பண்ணிட்டேன்.

ஃபோட்டோவ விட வரைபடம் ரொம்ப பெரிசு. படத்தை பார்த்தாலே தெரியும். :))சட்டம் போட்டு அன்பளிப்பா கொடுக்கலாம்னு வரைஞ்சு, சரியா வராததுனால நானே வச்சுகிட்டேன்.

படத்திலிருப்பது என் சகோதரியோட மகள். நான்கு மாத குழந்தையாக இருந்த போது எடுத்த் படம். இன்றைக்கு ஒரு முழுநேர மருத்துவர். :))

Tuesday, January 12, 2010

இந்தியாவின் இரண்டு முகங்கள்

இந்தியாவுக்கு இரண்டு முகம் தானா? நூறுகோடி முகம் இல்ல அப்படீங்கறது காதுல விழுது. நான் வரஞ்சு வச்சிருக்கிற ரெண்டு முகங்களை சொன்னேன்.

இந்த இடுகையில் இரண்டு முகங்களை பார்ப்போம். ஆமாங்க, புது வருஷ போனஸ் ! :))

வழக்கமா ஒரு இடுகைக்கு ஒரு சித்திரம் காட்றதுதான் நம்ம பழக்கம். அடுத்த இடுகைக்கு ஸ்டாக் வேணுமே! :)

சில அற்புதமான மனிதர்களை நீங்க சந்திக்கணுங்கறதுக்காக போன பதிவுல சித்திரம் காட்டாததால அதுக்கும் சேர்த்து இப்போ ரெண்டு.

முதல்ல ஒரு ஷெர்பா முகம். ஷெர்பாக்கள் மலைஜாதி மக்கள் கடும் உழைப்பாளிகள். எவ்வளவு உயரம் வேண்டுமானாலும் சாமான்களைத் தூக்கிக் கொண்டு ஏறுவார்கள். பிராணவாயு குறைவினால் நமக்கு மூச்சுத் திணறினாலும் அவர்களுக்கு திணறாது என்றல்லாம் சொல்லக் கேட்டிருக்கிறேன். கடும்குளிர் காரணமாகவோ என்னவோ அவங்களோட கண்கள் இடுங்கி இருக்கும்.


”ஹாய்! லீஈஈ, அப்படீன்னா அந்த சைனாக்காரன் ’வாயெல்லம் பல்லா’ சிரிப்பான், அப்போ அவனோட கண்ணு காணாமப் போய்டும், அதை வேடிக்கைப் பாக்கறதுக்காகவே ஹாய் லீஈஈ அப்படீன்னு அப்பப்ப அவனை கூப்பிடுவேன்” என்று என்னுடைய பழைய பாஸ் வேடிக்கையாக சொல்வதுண்டு.

சீனதேசத்தவர்கள், ஷெர்பாக்கள், கூர்க்காக்கள் யாவரும் மங்கோல் இனத்தை சேர்ந்தவர்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

HB பென்ஸிலால் வரையப்பட்ட படம். ஹிந்து பத்திரிக்கையில் வெளியாயிருந்த அந்த மனிதனின் வர்ணப்படத்தை பாதுகாக்காமல் விட்டு விட்டேன். இருந்திருந்தால் அதுவும் ஒரு நல்ல பயிற்சியாக இருந்திருக்கும்.

---------------------------

சமீபத்துல விளம்பரம் ஒண்ணுல வந்திருந்த இந்த ராஜாஸ்தானத்து மனிதனுடைய முகமும் ’சித்திரமா வரை... வரை’-ன்னு தூண்டியது. கைக்கு கெடச்சுது பால்பாயிண்ட் பேனாதான். சான்ஸ் வுட்டா கெடைக்காது, ஏன்னா நானிருந்தது ஆசுபத்திரி வார்டு. சாப்பிட போயிட்டு வர்றதுக்குள்ள பேப்பர் அங்கேயே கிடக்குமா இல்லே வேறெ யாராவது தூக்கிட்டு போயிடுவாங்களான்னு தெரியாது. கடைசியிலே நான் பயந்த மாதிரியே ஆயிடுச்சு. நடுவிலே சின்ன ப்ரேக்ல எங்கேயோ போயிடுச்சு. ஒருவழியாக ஊகம் பண்ணி முண்டாசை முடிச்சாச்சு. ஆனாலும் முழு திருப்தி வரலை. போவட்டும், பத்தோட பதினொண்ணு :))


என்னதான் சொல்லுங்க படிக்காத ஜனங்கோளோட கடுமையான உழைப்பும் எளிமையும் தாங்க இன்னும் இந்த நாட்டை வாழவச்சுக்கிட்டு இருக்கு. அத இந்த ரெண்டு முகமே சொல்லுது.

Thursday, December 31, 2009

சித்திரமும் (நம்பிக்)கைப் பழக்கம்

இன்றைய இடுகையில் உங்களுக்கு, நான் எழுதிய சித்திரத்தைக் காட்டப் போவதில்லை. என்னையும் என் போன்ற பலரையும் வெட்கி தலைகுனியச் செய்யும் சில அற்புத கலாவிதர்களை அடையாளம் காட்டப் போகிறேன். என் வலைப்பூவின் தலைப்பையே இவர்கள் அர்த்தமற்றதாக்கி விட்டார்கள்.

அவர்களுக்கு நம்பிக்கை ஒன்றே துணை. சித்திரமும் (நம்பிக்)கை பழக்கம்

அவர்களை சந்திக்க இதோ இங்கே சுட்டவும் Mouth-Foot Painting Artists

கைகள் இன்றி, வாயினாலும் கால்களினாலும் இவர்கள் படைத்துள்ள காவியமாகும் ஓவியங்களை கண்டு களிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் சுயசார்புக்கான திட்டங்களில் பங்கேற்கலாம். அவர்களின் படைப்புகள் நாட்காட்டிகளாகவும், வாழ்த்துஅட்டைகளாகவும் விற்பனைக்கு உள்ளன. அவற்றை வாங்கி நமக்கு வேண்டியவர்களுக்கு அனுப்பி அவர்களின் உழைப்பின் மதிப்பை மக்கள் மத்தியில் பரவலாக்கலாம்.

புதிய ஆண்டு அனைவருக்கும் சிறப்பான ஆண்டாக திகழட்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

Friday, December 11, 2009

நீ எங்கே ...என் நினைவுகள் அங்கே !

இயற்கையின் விநோதங்களைக் கண்டு ஆச்சரியப்படாமல் இருக்கமுடியவில்லை. ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு விதமான ஆச்சரியம்.

இம்முறை எனது ஆச்சரியம் இந்த பறவை அமர்ந்திருக்கும் இடம்.

பூக்கொத்துகளின் நுனியில் அது அமர்ந்து யாருக்கோ
“நீ எங்கே ஏஏ..எஎ என் நினைவுகள் அங்கே !”
என்று டி.எம்.எஸ் குரல் கொடுப்பது போல தோற்ற மளிக்கிறது. ? :)))

அந்த ’யாரோ’ கீழே இலை நடுவே ஒளிந்து கொண்டு போக்கு காட்டுவது போல் காணப்படுகிறது. மெல்லிய கிளை நுனியில் பறவையை தாங்க வேண்டுமானால் அந்தப் பறவை எவ்வளவு சிறியதாக இருக்க வேண்டும் என்பதே என் ஆச்சரியம்.

ஒரு நிமிடத்துக்கு இருபதினாயிரம் முறை சிறகடிக்கும் தேன்சிட்டுப் பறவையின் அளவு நம் கட்டை விரல் அள்வு மட்டுமே!. [ இது தேன்சிட்டு அல்ல ]


இது நீர் வர்ணப் படம். பழைய காலண்டரில் வெளியானது. சிங்கிள் ஸ்ட்ரோக் முறைப்படி முயற்சி செய்யப்பட்டது. அதாவது பென்சில் ஸ்கெட்ச் இல்லாமல் நேரடியாக, இடத்திற்கு தகுந்த தடிமன் உள்ள ப்ரஷ்களை தேர்ந்து ஒரு போக்கிலேயே வரைவு மற்றும் வர்ணம் இரண்டையும் சாதிக்க வேண்டும்.

அப்படி ஒன்றும் சிரமமான வேலையில்லை என்பது புரிந்தது.

வரைதாள் நீரை உடனே உறிஞ்சிக் கொள்வதாய் இருந்தால் நலம். 1997-ல் வரைந்தது. சுமார் அரைமணி நேரத்தில் முடிந்தது என்று நினக்கிறேன்.
அளவு 30 cm x 20 cm.

Monday, November 9, 2009

ஆடும் தின்னாது உங்க ஆப்பிளை !

ஆரம்ப கால மாணவர்களுக்கு ஓவியப் பள்ளியில் கொடுக்கப்படும் முக்கியப் பயிற்சி ஜடப் பொருள்களை வரைவது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். (ஏன்னா நாந்தான் அங்கே காலை வச்சதில்லையே). அதிலும் ஒளி நிழல் வேறுபாடுகளை கொண்டு வருவது தான் தலையாயப் பாடமாம். பல பெரிய ஓவியர்கள் பூக்கூடைகள், பழக்கூடைகள், மேஜை மேல் சிதறிக் கிடக்கும் புத்தகங்கள், கசங்கி கிடக்கும் காகிதக் குப்பை போன்றவற்றைக் மிகவும் நுணுக்கமாக வரைந்திருப்பது கண்டு அதிசயித்து இருக்கிறேன். இப்போதும் அதிசயிக்கிறேன்.

அந்த வகையிலே முயற்சி செய்ததுதான் இந்த ஆப்பிள் பழங்கள். ஒரே வித்தியாசம் என் முன்னால் ப்ழங்கள் இருக்கவில்லை. ஒரு புகைப்படப் பத்திரிக்கையில் வெளி வந்திருந்த வண்ணப் புகைப்படந்தான் இருந்தது.



பேஸ்டல் வர்ணங்களை ஆரம்பித்திருந்த காலம். கீழ் பக்கத்தில் ஒரு சிறிய இடைவெளியில் கசியும் வெளிச்சம் மற்றும் அந்த வெளிச்சத்தின் வழியாக தெரியும் இலைகளின் காம்பு எனக்கு முக்கியமாகப் பட்டது. அதன் விளைவாக நிழலை அடர்த்தியாக்கப் போய் நிழலின் அடர்த்தி கொஞ்சம் ஓவராகவே போய் விட்டது. நிழலிலும் ஆப்பிள் காம்பு போலத் தெரிகிறதே ஆனால் மேலே உள்ள ஆப்பிளில் காம்பு எதுவும் காணப்படவில்லையே என்று குழப்பம் ஏற்பட்டது.

சற்று யோசித்தபின் அது பழங்களின் நடுவில் இருக்கும் இலையின் நுனி பாகமாக இருக்க வேண்டும் என்று தோன்றியது.

அதுக்குதான் சொல்றது ஈயடிச்சான் காப்பி அடிக்கக்கூடாதுன்னு. ஓவியப்பள்ளிக்கூடத்தில் செய்வது போல கண்ணு முன்னாலே வச்சு வரைஞ்சிருந்தா இந்த குழப்பம் வந்திருக்குமா ?:))

ஆப்பிளைப் பத்தி பேசும் போதெல்லாம் முன்னாள் தேர்தல் ஆணையர் டி.என் சேஷன் சொன்னதை படிச்சது ஞாபகம் வருது. ஷேக் அப்துல்லாவை கோடைக்கானலில் மனை சிறை வைத்திருந்த காலத்தில் சேஷன் திண்டுகல் கலெக்டர். ஷேக் அப்துல்லா ஆப்பிள் பழங்களை கேட்டார் என்று வாங்கிக் கொண்டு போய் கொடுத்தால் அதைப் பார்த்து ’எங்க காஷ்மீர்-ல ஆடு கூட தின்னாது உங்க ஆப்பிளை ’ என்று சொல்லி திருப்பி அனுப்பி விட்டாராம். அடேங்கப்பா அவ்வளவு விசேஷமானதா காஷ்மீர் ஆப்பிள் என்று தோன்றியது அப்போது. இப்போதும் என்ன வாங்கிற மாதிரியா விலை இருக்கு !

பார்த்தே சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்.