Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Thursday, August 13, 2009

கொப்பரை மேல் வெளிப்படும் கலையார்வம்

கர்நாடகத்தில் விழாக்களில், குறிப்பாக திருமணங்களில், கைவினைக் கலைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவது இப்பொழுதும் பரவலாகக் காணப்படுகிறது. அதில் வகை வகையான மஞ்சள் பொட்டலங்கள், கொப்பரைக் கிள்ளல்கள் மிகவும் பிரபலமானவை. சுப சடங்குகள் நிறைவேறியதும் சுமங்கலிகள் அனைவருக்கும் மஞ்சளும் குங்குமமும் அடங்கிய சிறு பொட்டலங்கள் வினியோகிக்கப்படும். இந்த வழக்கம் நாசூக்கான பல வித உருவகங்களோடு கைவினைப் பொருளாக தத்தம் திறமைகளையும் ஈடுபாட்டையும் உற்சாகத்துடன் காட்டுவதற்கான சாதனம் ஆகியுள்ளது.

என்னை மிகவும் கவர்ந்தது கொப்பரைக் கிள்ளல் தான். சுமார் இருபது வருடம் முன்பு வரையிலும் அவரவர் குடும்ப உறுப்பினர்களாலே செய்யப்பட்டு வந்தது. தற்போது வணிக ரீதியாக கடைகளிலே கிடைக்கிறது. இதை ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் யாவரும் செய்கின்றனர். சில மாதிரிகளை இங்கே பாருங்கள்.




ஒரு கொப்பரைக்கு மூன்று முகங்கள். ஒவ்வொரு முகத்திலும் ஒரு படம் இருக்கும். ஏழுமலையான், சங்கு, சக்கரம் என ஒரு காம்பினேஷன்; சிவன் பார்வதி, நந்தி, ஒரு மலர் என்று இன்னொரு காம்பினேஷன் இப்படி எந்த பக்கத்தை திருப்பினாலும் ஒரு நல்ல வேலைப்பாடு கண்ணில் படும் படியாக வடித்திருப்பார்கள்.

கொப்பரையின் மேல் பக்கத்தில் உள்ள தோலை மெல்லியதாக சீவி எடுக்கும் போது அடிப்பாகத்தில் வெள்ளைப் பகுதி வெளிப்படும். தக்க வைக்கப்படும் தோலே படத்தின் வரைவடிவம் ஆகிறது. அடிப்பக்கமான வெள்ளை வர்ணம் பின்ணணி ஆகிறது.

தோலை மிக நுணுக்கமாக ஒரே அளவில் எடுக்க வேண்டும். படங்களில் மிக மெல்லிய கோடுகள் தெரியும்படி மற்ற பகுதிகளை கிள்ள வேண்டுமானால் எவ்வளவு ஜாக்கிரதையாக செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்ளலாம்.

புலிகளை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டது.

நானும் இதை முயற்சித்துப் பார்த்தேன். மிக மிக எளிமையான படத்தை (சிவலிங்கம், திரிசூலம்) வரைந்து கொண்டு ஒரு பிளேடின் நுனியால் கிள்ள ஆரம்பித்தேன். சிறிது நேரத்திலே எலி கொறித்தது போல் தெரிய ஆரம்பித்தது. மனம் தளராத விக்கிரமன் போல் மீண்டும் தொடர்ந்தேன். கிள்ளுவதற்காக பிளேடில் கொடுக்கப்படும் அழுத்தம் மறுபக்கத்தில் விரல் சதையையும் பதம் பார்த்தது. ரத்தம் வருவதுதான் பாக்கி. உப்பும் புளியும் உள்ள சாம்பார் (அ) ரசம் சேர்த்து சாப்பிடும் போது விரல் எரிச்சல் எடுத்தது.

ஒருவழியாக சிவலிங்கம் ஒரு வடிவம் பெற்றதும் திரிசூலத்திற்குத் தாவினேன். விரலைக் காப்பாற்றிக் கொள்ள பேனாக் கத்தியை வைத்து கிள்ளத் தொடங்கினேன். அதன் நுனி ப்ளேடை போல மென்மையாக இல்லாதததால் கிள்ளலும் வன்மையாகப் போயிற்று. வெள்ளை பின்ணணி குண்டும் குழியுமாக காட்சியளித்தது. அதைத் தான் கீழே பார்க்கிறீர்கள்:))


எப்படியோ ஒரு வழியாக திரிசூலமும் உடுக்கும் தெரியும்படியாகச் செய்து விட்டேன். உடுக்கு, கம்பத்தில் கட்டியிருக்கும் ஒலிபெருக்கி மாதிரி தெரியுது என்கிற கிண்டலையும் கேட்டாச்சு. :)))

தங்கமணி இந்த கொப்பரையை சமையலுக்கு எடுத்துக் கொள்கிறேன் என்று பலமுறைக் கேட்டும் மறுத்து வந்த நான் இப்போது கொடுத்து விடலாம் என்று நினைக்கிறேன்.

நமக்கு ஒரு இடுகைக்கான மேட்டர் முடிஞ்சுதே !

[இந்த இடுகை தர்ஷிணி அவர்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன் :) ]

8 comments:

goma said...

எதையும் செய்து பார்த்துவிட வேண்டும் என்ற உங்கள் ஆர்வத்துக்கு என் பாராட்டு...தொடர்ந்து முயன்றால் வெற்றி பெறலாம் .

KABEER ANBAN said...

நல்வரவு கோமதி

பாராட்டுகளுக்கு நன்றி.

பல சமயங்களில் குறிப்பிட்ட கைவினையில் உள்ள சிரமங்களை அறிந்து கொள்ள இது போன்ற முயற்சிகள் உதவுகின்றன. இதனால் அவர்களின் உழைப்பைப் போற்றும் மனப்பக்குவம் வருவது முக்கியமான பாடமாகும்.

நன்றி

மெளலி (மதுரையம்பதி) said...

நானும் முயற்சிக்க நினைக்கிறேன் 5-6 வருடங்களாக..:)

மெளலி (மதுரையம்பதி) said...

மேலே இருக்கும் தோலை நீக்க சரியான உபகரணத்தை கண்டுகொண்டீர்களானால், உங்களால் இன்னும் அருமையாகச் செய்ய முடியும் என்றே தோன்றுகிறது.

கோணி ஊசியை எடுத்துக் கொண்டு, அதன் முனையைத் தட்டையாக்கிக் கொண்டால் வசதியாக இருக்கும் என்று தோன்றுகிறது.

KABEER ANBAN said...

வாருங்கள் மதுரையம்பதி.
//கோணி ஊசியை எடுத்துக் கொண்டு, அதன் முனையைத் தட்டையாக்கிக் கொண்டால் வசதியாக இருக்கும் என்று தோன்றுகிறது//

கொப்பரை கிள்ளலில் தேர்ச்சி உள்ள நபர் ஒருவரை பின்னால் கேட்ட பொழுது விரல்களில் துணியை பாண்டேஜ் போல சுற்றிக் கொண்டு ப்ளேடினாலேயே செய்வதாகக் கூறினார்.

இதிலும் பல தொழில் முன்னேற்றங்கள் இருக்கக்கூடும். என் சந்தேகம் இதற்கும் டெம்பிளேட் உருவாக்கி இருப்பார்களோ என்பதுதான்.

சற்று உள்ளே புகுந்து விசாரித்தால் நுணுக்கங்களை தெரிந்து கொள்ளலாம்.

நன்றி

dharshini said...

முதலில் உங்களுடைய முயற்சிக்கு பாராட்டுக்கள் கபீரன்பன் சார்..
//[இந்த இடுகை தர்ஷிணி அவர்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன் :) ]//
ரொம்பவே பிடிச்சிருக்கு....

அவார்ட் எல்லாம் கொடுத்திருக்கீங்க... நன்றி...
சில நாட்கள் வெளியூர் சென்றிருந்ததால் கம்ப்யூட்டர் பக்கமே வரமுடியவில்லை...

Thenammai Lakshmanan said...

kabeeranban sir
im giving u the good artist award.
because in the first attenpt itself u made it
GR88888!!!!
udukkaiyum trishul im pramadam!

அன்புடன் அருணா said...

பொறுமைக்கு சபாஷ்!