கோவையிலிருந்து குருவாயூர் திருச்சூர் செல்ல விரும்புவோர் பாலக்காடு வெளிப்பாதையில் சென்று விட வாய்ப்புகள் அதிகம். அப்படி செல்லாது சற்று உள்ளே சென்றால் ஒரு அழகிய கோட்டையைக் காணலாம். இதை திப்புசுல்தான் கோட்டை என்றும் ஹைதர் அலி கோட்டையென்றும் கூறுகின்றனர்.
பொதுவாகவே கோட்டை என்றால் கவனிப்பாரற்று இடிபாடுகள் நிறைந்ததாகக் காணப்படும் என்ற என் எண்ணம் இந்த கோட்டையை கண்டதும் மாறியது. இதற்காக இந்திய தொன்பொருள் மேம்பாட்டுக் கழகம் (ஆர்கியாலிஜிகல் ஸர்வே ஆஃப் இண்டியா) பாராட்டப் படவேண்டும்.
1766ல் ஹைதர் அலியால் கட்டப்பட்டக் கோட்டை பல கடுமையான போர்களை கண்டது. ஆங்கிலேயருக்கும் ஹைதர் அலி மற்றும் அவன் மகன் திப்புவுக்கும் இடையே பலமுறை கைமாறியது. இன்று இதனுள்ளே சில அரசாங்க அலுவலகங்கள், ஒரு அருங்காட்சியகம், சிறைச்சாலை என பல நடவடிக்கைகளுக்கு மையமாகி இருக்கிறது. கோட்டையின் வெளியே அகழிகள் மிக சுத்தமாகக் காணப்பட்டது. சுற்றிலும் புல்தரை பூங்கா என சுற்றுலா வருகையாளர்களை கவரும் வகையில் பராமரித்து வருகின்றனர்.
இந்த படம் ஃப்ளைவுட் பலகையில் ஆயில் வர்ணத்தில் வரையப்பட்டது. மேல் பக்கத்திலிருந்து கீழே வந்திருக்கும் போகன்வில்லா என்னுடைய சேர்க்கை. உண்மையில் அங்கே ஒரு பெரிய மரத்தின் கிளைகள் தாழ்வாக வந்து கோட்டையின் மேல்பக்கத்தை மறைத்துக் கொண்டிருந்தது. அது போலவே பாலத்தின் இருதூண்களும் நன்றாக தெரியும்படி வெளிர்நிறமாக மாற்றினேன். புகைப்படத்தில் அவை கோட்டையின் பின்னணியில் மறைந்து விட்டிருந்தன.
அந்த மரத்தை கூகிள் செயற்கைக்கோள் படத்தில் குறிப்பிட்டுக் காட்டியுள்ளேன். அதிலே அந்த மதில் சுவர் பாலம் இவற்றையும் காணலாம். சுற்றிலும் அகழி நீரால் சூழப்பட்ட எவ்வளவு அழகாக அமைக்கப்பட்டக் கோட்டை இது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
போய்க் காண ஆசையாயிருக்கிறதா? இங்கே இநத சலனப் படத்தின் இணைப்பில் கோட்டைக்குள்ளே ஒரு சுற்று சுற்றி வரலாம்
4 comments:
ஓவியம் அழகு... ஆயில் வர்ணத்தில்...
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தர்ஷிணி.
அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...
ரொம்ப நன்றாக வரைகிறீர்கள்!
Post a Comment