பள்ளிகூடத்தில எங்க வாத்தியாரு ஒருத்தரு சொன்னது அப்படியே மனசுல நின்னிடிச்சு.
”உபயோகமில்லாதவன்னு ஒருத்தனும் கிடையாது உபயோகமில்லாத பொருள்-ன்னு ஒண்ணும் கிடையாது.வேணும்னா நமக்கு பயன்படுத்திக்கத் தெரியலேன்னு வைச்சுக்கலாம்”
அப்போதிலிருந்து யாராவது ஏதாவது வேஸ்ட்டானப் பொருளை வச்சு இதை செய்யறாங்க அதை செய்யறாங்கன்னு தெரிஞ்சா அதை ரொம்ப ஆர்வமா பார்த்து, இல்லே படிச்சு தெரிஞ்சுக்குவேன்.
ஒரு தடவை உடைஞ்சு போன சிலேட்டு துண்டு கொஞ்சம் மனுசனோட மூக்கு மாதிரி தோணிச்சு. எங்கம்மா ஏதோ பத்திரிக்கையில வந்த ஒரு கட்டுரையில ஒரு பெண்மணி முட்டை மேல பெயிண்டிங், பழைய துணியில கைப்பை, சிலேட்டுல சிற்பம் எல்லாம் செய்யறாங்கன்னு எப்பவோ படிச்சு சொன்னது ஞாபகம் வந்திருச்சு. அதனால இதை வச்சு எதையாவது செய்யலாமேன்னு நினைச்சேன். சொன்னதுக்கும் நான் செஞ்சதுக்கும் கிட்டத்தட்ட ஏழு எட்டு வருஷ இடைவெளி.
ஒரு சின்ன கத்தி எடுத்து அதை கொஞ்சம் கொஞ்சமா ராவி மூக்குக்கு கீழே வாய்,முகவாய், கழுத்து எல்லாம் வர்ற மாதிரி செஞ்சேன். அப்புறம் தலைப்பக்கத்தை ஜடாமுடிபோல கத்தியோட கூர் பகுதியால கீறிவிட்டேன். முடிமேல ஒரு சின்ன வளைசல் கொடுத்து ஒரு பிறைச் சந்திரன். திருநீறு, கங்கை,கண்,கழுத்தில பாம்பு எல்லாமும் சிம்பிள் கீறல்கள்தான்.
இது சிவன்.கடைசியா நைஸான உப்புத்தாள் வச்சு ஓரத்தையெல்லாம் மழுங்க தேய்ச்சு விட்டேன். அவருடைய தலையில ஒரு சின்ன துளையை போட்டப்புறம் வால்-ஹாங் சிவனாயிட்டார்.
பல ஊர் மாற்றல்கள், வீடு மாற்றல்களுக்கிடையில் அதை பத்திரமா பாதுகாத்தது எங்கம்மாதான். குழந்தைகள் மேல உள்ள பாசம் அப்படி செய்ய வச்சது போலிருக்கு. அதனாலத்தான் முப்பது வருஷத்துக்கு பிறகும் அதை எல்லோருக்கும் காமிக்கிற மாதிரி ஒரு சூழ்நிலை உருவாயிருக்கு. நல்லாயிருக்குன்னு நீங்க நெனச்சா அதோட முழு பெருமையும் அவங்களுக்குதான்.
சிவனார் கொடுத்த தைரியத்தில, சும்மா கிடந்த ஒரு முழு சிலேட்டையே எடுத்து குழலூதும் கிருஷ்ணரா செதுக்கிப் பார்த்தேன். மோசமில்லைன்னு எல்லோரும் சொன்னாங்க. இதுக்கு தேவைப்பட்டது ஒரு அகலமான திருப்புளி. அதுதாங்க ஸ்க்ரூடிரைவர். முளையைத் திருப்புவதற்காக பயன்படுத்தப்படும் உளி போன்ற அடிப்பக்கம் உடையது. அழகான செட்டிநாட்டு சொல்வழக்கு.
திருப்புளி வைத்து சுரண்டினால் சுற்றிலும் சிலேட் தூள் பறக்க, ”வெளியே போய் சுரண்டுடான்னு’ திட்டு வாங்கி வராண்டாவில் கிரிகெட் காமெண்ட்ரி கேட்டுக் கொண்டே சுரண்டி முடிச்சேன். இதிலே கவனிக்க வேண்டியது சுரண்டுற ஆழம் ஒரே அளவா இருக்கணும். ஒரு இடத்துல அதிகம் ஒரு இடத்துல கொறஞ்சு போகாம இருக்கணும்.
சிலேட் மேல் பகுதி ஒரே அளவு கறுப்பாக இல்லாமல் திட்டுத்திட்டா இருந்ததால கிருஷ்ணரையும் மாட்டையும் பார்த்தால் ல்யூகோடெர்மா வந்த மாதிரி இருந்தது.அப்போ தம்பி ஒரு ஐடியா குடுத்தான். ”ப்ளாக் கலர் ஷூபாலிஷ் தேச்சு விடு”. சரின்னு பாலிஷ் எடுத்து நல்லா அழுத்தி தேய்ச்சு ஒருவாட்டி ப்ரஷ்னால பளபளபாக்கி அந்த குறையையும் அட்ஜஸ்ட் பண்ணியாச்சு.
கடைசியா திரும்பவும் நடுவில வர்ற கோடுகளையெல்லாம் கீறி ஓரளவு ஆமா இது கிருஷ்ணர்தான்-ன்னு ஒத்துக்கற மாதிரி செஞ்சு வச்சேன்.
இப்போ படம் பிடிச்சப்பறம் பாத்தா இன்னொரு தடவை பாலிஷ் போடணுமோன்னு தோணுது. முப்பது வருஷம் ஆயிடுச்சே!!
6 comments:
ஆகா, அருமை!
அடடா..... எப்படித்தான் இப்படி அருமை.
கிருஷ்ணர் நளினமா இருக்கார். விரல்கள், இடை நிக்கும் போஸ், தலை அலங்காரம் எல்லாம் பார்த்தால் ஒரு இளம்பெண் நிற்பதுபோல் இருக்கு.
புல்லாங்குழலும் பசுவும் இருப்பதால் கிருஷ்ணர்தான்னு நம்மபும் முடியுது:-))))
அருமையா இருக்குப்பா.
நான் ஒரு பதிவில் போட்டுருந்த படத்தின் நினைவு வருது. குழலூதும் கண்ணனும், பின்னால் குழலிசையில் மயங்கி நிற்கும் மாடும்.
ப்ரிட்டிஷ் 'ராஜ்' காலத்துப் பதக்கம். ஆண்ட்டீக் நகைகள் பட்டியலில் இருக்கு. எப்படியோ என்னிடம் வந்து சேர்ந்துட்டார் கண்ணன்.
நன்றி ஜீவா, துளசி மேடம்.
அந்த கிருஷ்ணர் படத்தை எதை ஆதாரமா வச்சு வரைந்தேன் என்பதை நினைவு படுத்தி பார்க்கிறேன்; ஹூஉம் ஞாபகம் வரமாட்டேங்குது. ஒரு வேளை மேடம் உங்க ஆண்டிக் படத்துக்கு லிங்க் குடுத்தா விடை தெரியுமோ என்னவோ :)
ரொம்ப அழகாயிருக்குங்க....எங்கப்பாவும் இந்த மாதிரி நிறைய செய்வார். பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பொம்மைகள், படங்கள் என்று அவர் செய்யாதது இல்லை.
வாழ்த்துக்கள் சார்.
நன்றி மதுரையம்பதி சார்,
அப்பாவுடைய படைப்புகளை எதையாவது காப்பாத்தி வச்சிருந்தா அதை ஒரு பதிவா போடுங்களேன். வரும் தலைமுறைகளுக்கு ஆர்வமூட்ட அது தானே வேணும்.
நன்றி
அன்பின் கபீரன்ப
அருமை அருமை - முப்பதாண்டுகளுக்கு முந்தைய சித்திரங்கள். அம்மா, தம்பி ஆலோசனையில் உதித்த இளம்பெண் போன்ற இளம் கிருஷ்ணர் அருமை. சிலேட் என்பதை நம்ப முடியவில்லை.
நல்வாழ்த்துகள்
Post a Comment