அது என்ன ஜெஸ்ஸோ வாணி அப்படின்னு கேக்கறது காதில விழுகுது.
கடந்த பதினைஞ்சு நாளா ஒரே ஜெஸ்ஸோ ஜபம்தான் போங்க!
”கொஞ்சம் ஜெஸ்ஸோ கலக்கிக் குடுங்க”
“இன்னும் கூட ஜெஸ்ஸோ நல்லா போட்டிருக்கணும்”
“பிரஷ் காஞ்சுபோயிடுது. ஜெஸ்ஸோ வளைஞ்சு குடுக்க மாட்டேங்குது”
இதெல்லாம் தினம் நடக்கிற உரையாடல்.
ரொம்ப நாளா டிராயிங் ஸ்கூல்ல சேர்ந்து படிக்கலையேங்கற ஆதங்கம் இருந்தது.
சமீபத்தில ஒரு மைசூர் பெயிண்டிங் பயிற்சி வகுப்புகள் அரசாங்க ஆதரவுல பதினைந்து நாளைக்கு நடத்தினாங்க. “அப்பா நான் சேர்ந்துக்கறேம்பா, 750 ரூபா” அப்படின்னு மகள் கேட்டப்போ “அட! என்னை விட்டு நீ மாத்திரம் போயிடுவியா”ன்னு நானும் களத்துல இறங்கிட்டேன். அப்பாவும் பொண்ணும் ஒரே வகுப்பிலே! தினம் மூணு மணி நேரம்.
பிரஷ் அடிப்பலகை எல்லாம் நாம கொண்டு போகணும். பாக்கி சாமான் எல்லாம் அவங்களே குடுத்தாங்க. என்ன ஒண்ணு ! கையில ”திருவோடு”( செராமிக் டயில்) ஏந்திக்கிட்டு “கொஞ்சம் ப்ளூ குடுங்க, கொஞ்சமா எல்லோ குடுங்க” அப்படின்னு அடிக்கடி பிச்சையெடுக்க வேண்டியிருந்தது.
முதல்ல படம் ட்ரேஸ் பண்ணிக்கணும். அப்புறம் அவங்க ஒரு கோந்து கொடுப்பாங்க. அதை எங்கெல்லாம் தங்கம் வரணுமோ அங்கெல்லாம் பூசணும். அதுக்கு கம் அராபிக் அப்படின்னு சொல்றாங்க. அது ஒண்ணும் பெரிய விஷயமில்லை. ஆனா ட்ரேஸ் பண்ணி கோந்து பூசறதுக்கே முதல் நாள் சரியா போச்சு.
இரண்டாம் கட்டம் ஜெஸ்ஸோ. அதாவது Gesso. இது தான் ரொம்ப கிரிடிகல் சமாச்சாரம். எவ்வளவு கிரிட்டிக்கல்ங்கறது சொல்லாம விட்டதுனால படத்தை சொதப்பினவங்க ரொம்ப பேரு. அதுல நானும் ஒருத்தன்.
ஜெஸ்ஸோ ஏன் முக்கியம்னா, படத்துல நகை, சிம்மாஸனம், மண்டபம் போல தங்கம் வர்ற இடத்தில எல்லாம் முப்பரிமாண உணர்ச்சியை கொடுக்கிறதுக்கு அதுதான் அடிப்படை. சுண்ணாம்புத்தூள்-கம் அராபிக் ரெண்டையும் குழைச்சு கெட்டியா இருக்கிற சமாச்சாரம் அது. காஞ்சு போச்சுனா கல்லு மாதிரி ஆயிடும் அசைக்க முடியாது.
பல தாய்மார்கள் மருதாணி போட்டு பழகின கைகளோ என்னவோ ரொம்ப அழகா கெட்டியா டிசைன் டிசைனா போட்டிருந்தாங்க. எனக்கு அந்த கெட்டி சரிபட்டு வராததால அதை குறைக்க தண்ணிய தொட்டுத் தொட்டு போட்டேனா, காஞ்ச பிறகு எடுப்பாத் தெரியலை. “பரவாயில்லைவிடுங்க. அதுக்கு லைனிங் குடுத்துறலாம் அப்படின்னு ஆறுதல் சொன்னாங்க சிலர்.
நாலு நாள் இதிலேயே ஓடிப் போச்சு. அடுத்தது தான் க்ளைமாக்ஸ். தங்கம் பூசணும். கொஞ்சம் வசதிப் பட்டவங்க தங்க சருகு வாங்கி வந்து அதை அப்படியே ஜெஸ்ஸோ மேலே அழுத்தி பதிஞ்சாங்க. இதுக்கு தனியா கையிலேந்து 400 ரூபா செலவழிக்கணும்.
நானும் என்பெண்ணும் அவங்க குடுத்த தங்கப் பொடியிலே பிரஞ்ச் பாலிஷ் கலக்கி ஜெஸ்ஸோ மேலேயே அவங்க சொன்ன மாதிரி பூசி விட்டோம்.
”நீங்க சீக்கிரம் சீக்கிரமா தடவணும். பிரெஞ்ச் பாலிஷ் ஆவியாப் போயிடும். அப்புறம் தங்கம் கறுத்துப் போயிடும் ” அப்படின்னு அவங்க சொல்லப் போயி தடவின அவசரத்துல எங்கே பூசினோம், எதுக்கு பூசினோம் ஒண்ணும் புரியலை.
இதுல பலருக்கும் பல குழப்பங்கள். “அய்யய்யோ அது சாமியோட பின்னாடி இருக்கிற கையிங்க அங்கேயும் கோல்டு போட்டுட்டீங்களே” அப்படின்னு ஒரு கேஸ். இன்னும் சில பேர் அம்மனுக்கு தலைமுடி வர்ற இடத்துல தங்கமுடியாக்கி வச்சிருந்தாங்க.
ஒரு வழியா கிரிடிகல் ஸ்டேஞ் தாண்டி நமக்கு பழக்கமான வர்ணம் பூசுற வேலை
ஆரம்பிச்சுது. அவங்க சொன்ன எடத்துல சொன்ன வர்ணத்தை பூசினேன். நான் ரொம்ப கீழ்படிந்த மாணவன். எதிர் கேள்வியெல்லாம் கேட்க மாட்டேன். அப்புறம் ஒரு மூணு நாள் வகுப்புக்கு மட்டம். கீழ்படிதலுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை. அர்ஜெண்ட் வொர்க் வெளியூர் போகவேண்டியிருந்தது.
அப்புறம் சின்னச் சின்ன நுணுக்கமான காரியம். அவங்க அப்பப்போ யோசிச்சு புதுசு புதுசா ஐடியா குடுப்பாங்க. அதை செஞ்சுக்கிட்டே வரணும். இதிலே காத்துக்கிட்டு இருக்கிற நேரம்தான் ஜாஸ்தி. ஒருவழியா கரக்டா பதினைஞ்சு நாளில முடிச்சாச்சு.
நிறைய பேர் பத்து நாளிலேயே முடிச்சுட்டு போயிட்டாங்க. நாற்பது பேர் இருந்த
வகுப்பில கடைசி வரைக்கும் இருந்த பத்து (மக்கு) மாணவர்களில் நானும் ஒருத்தன். கடைசியா ஒரு சர்டிபிகேட்டும் குடுத்தாங்க. அதுல என் மகளுக்கு ஏக சந்தோஷம்.
என் மகள் வரைந்த பிள்ளையார். அதில ஜெஸ்ஸோ நல்லா எடுப்பா தெரியுது பெரிசாக்க்கிப் பாருங்க.
அனைவருக்கும் ஜெஸ்ஸோ ஆனைமுகத்தான் அருளும் ஜெஸ்ஸோ சரஸ்வதியின் அருளும் இந்த நவராத்திரியில் பொங்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
2 comments:
அப்பாவும் பொன்னுமா சேர்ந்து கலக்கியிருக்கீங்க...superb!
நல்வரவு ப்ரியா.
பாராட்டுக்கு நன்றி
Post a Comment