Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Monday, June 22, 2020

சாப்பிட மட்டும் இல்லை தட்டு....

    சென்ற வருடம் டெலாவேரில்  என மகள் வீட்டிற்கு சென்றிருந்த போது ஒரு ஓவியக் கண்காட்சிக்குப் போனேன். ஓவியர்கள் அனைவரும் பொழுது போக்குக்காக வரைபவர்கள். அவர்களுக்கென்று சிறிய அமைப்பு ஏற்படுத்திக் கொண்டு அதன் மூலம் இக்கண்காட்சிகளை ஏற்பாடு செய்கிறார்கள். யார் வேண்டுமானாலும் உறுப்பினராகலாம். பெரும்பாலோனோர் மூத்த குடிமக்களே,அதிலும் பெண்கள் அதிகம்.  ஆயில் அல்லது அக்ரிலிக் வர்ண உபயோகமே அதிகம் காணப்பட்டது.



தன்னை என் சிஷ்யன் என்று சொல்லிக் கொள்ளும் திரு.மயூரசிம்ஹன் இந்த கண்காட்சியில் பல ஓவியங்களை விற்பனை செய்திருக்கிறார்.  ஓவியர்களின் கைவண்ணங்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு  விற்பனை வளாகத்தின் வராண்டாவின் தூண்களில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.  அதுவே பல கலைஞர்கள் கூடிப் பேச வாய்ப்பாகவும் அமையும்.  

வீட்டிற்கு வந்ததும் என் மகளிடம் எந்த வகையான வர்ணங்கள் அவளிடம் இருக்கிறது என்று விசாரித்தேன். ஒரு பெட்டி ஸ்டேட்லர் கருப்பு பென்சில்களும் அக்ரிலிக் வர்ணபெட்டியும் கொடுத்தாள். அக்ரிலிக்கான வரைதாள் அவளிடம் இருக்கவில்லை.  ஓரிரு நாள் கழிந்தது. வாரக் கடைசியில் சுற்றுலா போவதற்கான ஏற்பாடுகளின் போது கண்ணில் பட்டது பேப்பர் தட்டுகள்.

அடேடே, இது போதுமே என உடனே சொல்லியது மனம்.  ஏனெனில் பேப்பர் மேல் மிக மெல்லிய லாமினேஷன் பூச்சு அதில் திரவ பொருட்கள் ஊறாமல் இருப்பதற்காக கொடுக்கப்பட்டிருந்தது. அதுவே நம் அக்ரிலிக் வர்ண பூச்சுகளையும் ஊறாமல் தடுக்கும்.  உடனே செயலில் இறங்கினேன். அதன் விளைவு தான் கீழே இருக்கும் ஓவியங்கள். 









இது மிக எளிமையாக மட்டும் இருக்கவில்லை. பல புதிய கோணங்களில் உபயோகமானதாகத் தோன்றியது. 

1) படத்திற்கு சட்டம் போடத்தேவையில்லை. தட்டின் விளிம்புகளில் உள்ள டிசைனே ஒரு நிறைவைத் தருகிறது. இதை மனதிற்கேற்ப, படத்தின் தன்மைக் கேற்ப கடையில் தேர்வு செய்து கொள்ளலாம். 

2)  மிக லேசானது. அதனால் ஒரு ஸ்டிக்கர்-டேப்பை வைத்தே எங்கு வேண்டுமானாலும் மாட்டலாம். சுவரில் ஆணி அடிக்க வேண்டியதில்லை.

3) படங்களை ஒரு தட்டினுள் இன்னொரு தட்டு என்று அடுக்கி வைத்து, வேண்டும் பொழுது சுழற்சி முறையில் மாற்றிக் கொள்ளலாம். ஒரே படத்தை எப்போதும்  பார்க்கும்  மன அலுப்பு இருக்காது.

4.) துடைப்பதற்கு சுலபம். உடைந்து போகாது.

5) எல்லாவற்றிற்கும் மேலாக மிக மிக மலிவானது. அதனால் நம் வீட்டு குழந்தைகளை நிறைய வரைய சொல்லி, சுவரில் மாட்டி வருவோர் போவோருக்கெல்லாம்  காட்டி  உற்சாகப்படுத்தலாம்.

தண்ணீர் ஊறாத தட்டுகளையே  பயன்படுத்த வேண்டும். இது பாக்குமட்டை தட்டுகளை விட சற்று சுலபமானது. அதைப்பற்றி  முன்பே ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

குறிப்பாக பொழுது போக்கிற்காக வரையும் விருப்பம் உள்ளவர்களுக்கு மிக செலவில்லாத -அதே சமயம் எடுப்பான- ஒரு சிறந்த சாதனம் இந்த பேப்பர் தட்டுகள்.  சாப்பிட மட்டுமில்லை தட்டுக்கள்...படம் வரையக் கூடத்தான். 










No comments: