Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Tuesday, July 2, 2019

மேபிள் சருக்கரை சுவைத்துள்ளீர்களா?

இந்த பதிவில் இரண்டு விஷயங்களைப் பார்ப்போம். ஒன்று வலைப்பூவிற்கு சம்பந்த்தப்பட்ட சித்திரம். இரண்டாவது சித்திரத்திற்கு காரணமான பொருள்.

புதிதாக ஒரு கணினி வரைபட தகடு (graphic tablet) ஒன்றை வாங்கினேன்.  அதைப்பற்றிய சற்று விவரம் :

கணினியின் உதவியுடன் நான் பலநாட்களாக வரைபடங்களுக்கு வர்ணம் பூசி வந்தாலும் நேரடியாக படம் வரைவதில் அதிகம் வெற்றி பெறவில்லை. இதற்குக் காரணம்  காகிதத்தில் வரையும் போது பென்சிலில் கிடைக்கும் விரல்களின் வீச்சு (strokes) கணினியில் இல்லாமல் போனதால் தான். இது எனக்கு மட்டுமில்லை, உலகில் உள்ள ஓவியர்கள் அனைவரின் மனக்குறையாகவும் இருந்து வந்தது.

இந்த குறையை போக்குவதற்காக வந்ததே வரைபடத் தகடு.   இதில் நாம் Stylus  அல்லது எழுத்தாணி [இங்கே வரையாணி ]  கொண்டு கணினியுடன் இணைக்கப்பட்ட ஒரு தகட்டில் படம் வரையும் போது கணினியின் திரையில் படம் தெரிகிறது.  ஆனால் தகட்டில் ஏதும் இருக்காது !




நாம் தரும் அழுத்தத்திற்கு ஏற்ப கோடுகளின் பரிமாணமும் வர்ண அழுத்தமும் மாறுபட்டு தூரிகைளைக் கொண்டு வரையும் அனுபவத்தை தருகிறது. பல யூ டியூப் காணொளிகளில் அவற்றைக் காணலாம். இதற்கு பல வித மென்பொருட்களில் பயிற்சி வேண்டும்.  வரைப்படத்தகட்டின் வேலை வெறும் காகிதத்தையும் பென்சில் அல்லது தூரிகைகளின் இடத்தை நிரப்புவதுவே. 

நான் இதைப் பற்றி சிந்தித்ததற்குக்  காரணம் முக்கியமாக
1.எந்த அளவில் (Canvas size) வேண்டுமானாலும் படம் வரையலாம். அதற்கு வர்ணங்கள் வாங்காமலே வர்ணம் பூசலாம். 
2. பென்சில், சார்கோல், நீர்வர்ணம், ஆயில் வர்ணம், பேஸ்டல், அக்ரிலிக் என பலவகையான வர்ண முறைகளையும் முயன்று பார்க்கலாம்.
3. எத்தனை நாட்களுக்குப் பிறகும் சித்திரங்களை சரிசெய்யலாம். 
4..படத்தை வரைந்து முடித்த பிறகு அதை பாதுகாத்து வைப்பதற்கு (இடம் தேடி) சிரமப்பட வேண்டாம். 
5.எப்பொழுது வேண்டுமானாலும் எந்த அளவிற்கு வேண்டுமானாலும் கணினியிலிருந்து பிரிண்ட் செய்து கொள்ளலாம். அல்லது 
6 சட்டம் போட்டு சுவரில் மாட்டாமல் Slide Show ஆக நம் வீட்டு தொலைக்காட்சி திரையில் பிறருக்குக் காட்டலாம்.  சிறிய படமாயினும் திரையில் பெரிதாகத் தெரியும் !

     இப்படியாக, இதையும் சற்று பயின்றால் உபயோகமாக இருக்கும் என்ற எண்ணம்  சில நாட்களாகவே  மனதில் ஓடிக் கொண்டிருந்தது.  Wacom, Huion  என்கிற இரண்டு நிறுவனங்கள் இதில் பலத்த முன்னேற்றம் கண்டுள்ளன. இதில் Huion 610 என்னும்  தகடு சற்றே மலிவான விலையில் கிடைத்ததால் ($ 60) உடனே ஒன்றை வாங்கிவிட்டேன். இதற்கு ஏழெட்டு மாதங்களுக்கு முன் சுமார் ரூ.6500 க்கும் அதிகமாக இருந்தது.

அதில் வரையப்பட்ட முதல் பயிற்சிப் படம்தான் நீங்கள் இங்கே பார்ப்பது. இது கணினியிலே ஆரம்பிக்கப்பட்டு கணினியிலேயே முடிக்கப்பட்ட சித்திரம். 

    இதில் வரையப்பட்டுள்ள மரம் மேபிள் ( Maple).   மேபிள் மரம் குளிர் அதிகமாக நிலவும்  கனடா, வட அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் போன்ற  பூமியின் வட பாதியிலும் ஆஸ்திரேலியா போன்ற தென் பாதியிலும் அதிகமாக காணப்படுகிறது.  இது அப்பகுதிகளில் வசந்த காலத்தில் தளிர்விட்டு கோடையில் முழுவதும் பச்சையாக காட்சியளிக்கும். பின்னர் பருவமாற்றங்களுக்கு ஏற்ப இலைகள் பழுத்து மஞ்சள் ஆரஞ்சு பின்னர் சிவப்பு வர்ணத்திற்கு மாறி  பனி பொழியும் போது இலைகளை உதிர்த்து விடும். 


    சாலைகளில் இருபுறமும் இவைகள் காட்டும் வர்ணஜாலம் ஓவியர்களுக்கும் புகைப்பட ஆர்வலர்களுக்கும் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கும் கண்ணுக்கு விருந்தாகும். 10 மீ உயரத்திலிருந்து 30 மீ உயரம் வரை வளரும் இம்மரங்கள் இதற்காக எடுத்துக் கொள்ளும் காலம் 25லிருந்து 30 வருடங்கள் வரை ஆகும்.

   பனைமரத்தில் நுங்கு பிஞ்சை கீறி  பதநீரை வடித்தெடுப்பதைப் போல
மேபிள் சருக்கரை என்பது அதன் காய்கள் மூலம் பிரித்தெடுப்பது என்று நினைத்திருந்தேன். ஆனால் அது முற்றிலும் தவறு.

    மேபிள் அடிமரத்தை  துளையிட்டால் அதிலிருந்து இனிப்பான நீர் வடிகிறது. அது 2% சருக்கரை அளவு கொண்டது. அதாவது இதற்காக மரம் ஏறி இறங்க வேண்டியதில்லை.
   இதை நன்றாகக் காய்ச்சி பாகு வடிவில் விற்பதை ஒரு முக்கியத் தொழிலாக பலர் இந்நாடுகளில் செய்து வருகின்றனர். ஏறக் குறைய நம் நாட்டில் ரப்பர் தோட்டங்களில் ரப்பர் பாலை வடித்தெடுப்பது போலத்தான் இது.

மேபிள் மரம் நல்ல மரச்சாதனங்கள்,  இசைக்கருவிகள் தயாரிக்கப் பயன்படுகிறது.  கனடா தேசத்தின் கொடியில் இம்மரத்தின் இலையை பொறித்துள்ளனர். அந்நாட்டின் உயர்ந்த ராணுவபதக்கங்களிலும் இதன் இலச்சினை உள்ளதென்றால் இம்மரத்தை எவ்வளவு உயர்வாகப் போற்றுகின்றனர் என்பதை அறியலாம்.
.
இந்த மரம் இந்தியாவில் இருப்பதாக தகவல் இல்லை.

Thursday, May 16, 2019

மாயப்புள்ளி மறையுமிடம் எது?

Spot sketching என்பதற்கு தமிழில் சரியான வார்த்தை இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஒரு வேளை ‘நேரடி வரைவு (அ) வரைதல்” என்பது பொருத்தமாக இருக்கலாம்.

ஆனால் அதில் தேர்ச்சி பெற்ற கலைஞர்களுக்கு பஞ்சமில்லை. சில்பி போன்ற பெரும் ஓவிய விற்பன்னர்கள் தமிழகத்தில் எல்லா ஆலயங்களுக்கும் சென்று அற்புதமான ஓவிய களஞ்சியங்களை வழங்கியுள்ளனர்.

புகைப்படக்கருவிகள் முன்னேற்றமில்லாத காலத்தில் - ஐம்பது அல்லது அறுபது வருடங்களுக்கு முன்பு - அவர்களுடைய உழைப்பினால்தான் வெளிச்சமில்லாத கோவில் உட்பிராகரங்களின் சிற்ப அழகும் தூண்கள் தாங்கியிருக்கும் அழகிய விதானங்களின் சிறப்பும் பத்திரிக்கை வாசகர்களுக்கு தெரிய வந்தது.

அதை முயற்சி செய்து பார்ப்போம் என்று  சமீபத்தில் வரைந்தது தான் கீழே உள்ள படங்கள்.


அமெரிக்காவின்  ஃபினிக்ஸ் நகரில் உள்ள பெரும் கள்ளிகள் 300 முதல் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. மண் வளம் குறைந்த இந்த பாலைப் பகுதியில் முட்புதர்களும் இவ்வகை கள்ளிகளுமே வறட்சியைத் தாக்குப் பிடித்து இந்நிலத்தை சற்று பசுமையாக வைத்திருக்க உதவுகின்றன. அதனால் இங்கு வீடு கட்டி குடியேற வருபவர்களும் அவைகளை பாதுகாக்கின்றனர். இது என் மைத்துனர் வீட்டின் நீச்சல் குளம். அங்குள்ள பாறைகளையும் கள்ளி முட்புதர்களை அப்படியே வைத்துக்கொண்டு அழகை கூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டது மனதைக் கவர்ந்தது.

நோட்டில் வரைந்த பென்சில் வரைபடத்தை  அலைபேசியின் ஸ்கேனர் மூலம் கணினிக்கு மாற்றி பின்னர்  Paint 3D மூலம் வர்ணம் பூசினேன்.

இயற்கை காட்சிகளை வரைவதற்கும் கட்டிடங்களை வரைவதற்கும் பெருத்த வேறுபாடு உண்டு என்பதை ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டு இருந்தேன்.

இது முக்கியமாக மாயப்புள்ளி ( vanishing point ) ஓவியம் வரைபவர்க்கு சரியாக பிடிபடவில்லை என்றால்  படம் தாறுமாறாகப் போய்விடும்.

அவர் வீட்டுக் கட்டிடத்தின் வெளி வராண்டாவைத் தேர்ந்தெடுத்து  அதை வரை புத்தகத்துள் அடக்க முயற்சித்தேன். அதன் விளைவே கீழேயுள்ள கறுப்பு வெள்ளை வரைபடம்.






வளைந்து செல்லும் விதானத்தின் முப்பரிமாண காட்சியே இதை வரைந்து பார்க்கத்தூண்டியது.  முக்கியமாக தூண்களின் நிலைகளும் அவற்றிற்கிடையே உள்ள இடைவெளியையும் புகைப்படத்தின் துணையில்லாமல் வரைவது என்பது பெரும் சவாலாகவே இருந்தது.

படத்தை வரைந்த பின் அதை மைத்துனருக்குக் காட்டியபோது சிறிது நேரம் உற்றுப்பார்த்து “அங்கே ஒரு  ஃபேன்  தொங்குமே அதைக் காணோமே” என்றார். “அது தூணுக்குப் பின்னால்  மறைஞ்சு இருக்கு” என்று விளக்கினேன். பின்னர் அவருடைய திருப்திக்காக வர்ணம் பூசும் போது  மின்விசிறியின் இறக்கைப் பகுதிகளை காட்டியிருக்கிறேன்.

உங்களுக்குத் தெரிகிறதா? 

மேலே காணும் படத்தில் மாயப்புள்ளி மறையும் இடம் எது?




Saturday, February 23, 2019

பனை ஓலையில் சித்திரங்கள்-ஒடிஷா

சமீபத்தில் பூரி ஜகன்னாத் தரிசனத்திற்கு ஒடிஷா சென்றிருந்தேன்.  அதையொட்டி அருகிலுள்ள கோனாரக் சூரியன் கோவில், சில்கா கடற்பகுதி என்று சிறிது சுற்றினோம். அப்போது எனக்குப் பிடித்தது பிப்பலி என்ற கிராமப் பகுதியில் பல நூறு குடும்பங்கள் பல தலைமுறைகளாக தொடர்ந்து செய்து வரும் கைவினைப் பொருட்களாகும்.

இதில் குறிப்பிடத்தக்கது பனை ஓலையில் அங்குள்ள மக்கள் வரைந்து வரும் ஓவியங்கள் ஆகும். சிறிய ஓலைகள் பலவற்றை கூட்டி பெரிய பெரிய ஓவியங்களை வரைவது வேறெங்கும் காணமுடியாத தனிச் சிறப்பு.

ஏன் பனை ஓலைகள் ? காலங்காலமாக பதப்படுத்தப்பட்ட  பனை ஓலைகளிலேயே  அனைத்து நூல்களும் எழுதப்பட்டு வந்தது.  அவற்றை கறையான் அத்துப் பூச்சி முதலியவை தாக்காதவாறு மஞ்சள், வேப்பெண்ணெய் போன்ற காப்பு முறைகளையும் முன்னோர் அறிந்திருந்தனர். இதனால் பல நூற்றாண்டு காலம் இவைகள் சேதமுறாமல் பயனளித்தன.
இதனால் ஓவிய ஆர்வம் உள்ள மனிதன் பனை ஓலைகளிலும் தன் முயற்சியைக் காட்டத் தவறவில்லை.  நான் கண்டவற்றை காணொளியாக பதிவு செய்து அதை பின்னர் தொகுத்து யூட்யூபில்  வலையேற்றிருக்கிறேன்.  பன்னாட்டவருக்கும் நம் நாட்டின் பாரம்பரியம் தெரியட்டுமே என்று ஆங்கிலத்தில் விளக்கமும் சேர்த்திருக்கிறேன். அதை நீங்களும் கீழே கண்டு மகிழலாம். ஓவிய நுணுக்கத்தை பாரட்ட வேண்டுமானால் முழுத்திரை வடிவில் காண வேண்டும்.



எவ்வளவு தொன்மையான கலை! பாகவதக் கதைகளை இந்த ஓலகள் மூலம் சித்திரக் கதைகளாக சொல்லும் பழக்கம் அந்த காலத்திலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது. காமிக்ஸ் என்று புதிதாக வந்தது போல் நினைக்கின்றனர் பலர். இதிலும் பாரதம் முன்னோடியாக இருந்திருக்கிறது என்பதற்கு இந்த ஓவியச் சுவடிகளே சாட்சி.

இந்த பதிவிற்கு என் பங்கையும் எதையாவது சேர்க்க வேண்டுமே!

எனக்கு பனையோலை கிடைக்கவில்லை, பாக்குப்பட்டை கிடைத்தது. Disposable plates செய்யப்படும் இந்த பாக்குப்பட்டையால் செய்யப்பட்ட ஒரு 8”x6" டிரே ஒன்று வீணாகப் போவதைக் கண்டேன். அதன் விளிம்புகள் முறையாகக் கத்தரிக்கப்படாததால் தரக் கட்டப்பாட்டு இலாகா அதை கழிவாக ஒதுக்கி விட்டிருந்தனர்.  அதில் ஒரு எளிமையான ஓவியம் ஒன்றை அக்ரிலிரிக் வர்ணம் கொண்டு தீட்டினேன்.  பச்சை, சிவப்பு, நீலம் மூன்றும் பளிச்சென்று வரவேண்டும் என்பதற்காக  கடலோரத்தில் குடைபிடித்திருக்கும் ஒரு (ஆப்பிரிக்க) பெண்மணியின் படத்தை தீட்டினேன்.

தூக்கிப் போடக் கிடந்த  ஒரு பொருள் இப்போது  வரவேற்பறை காட்சிப் பெட்டிக்குள் சேர்ந்து விட்டது.



தற்செயலாக இந்த படத்தை பார்த்த போது இதில் பஞ்ச பூத தத்வங்களுக்கும் மனித உடலுக்கும் உள்ள தொடர்பு என்னையறியாமலே வெளிப்பட்டுள்ளதோ என்று வியக்க வைத்தது.  மேலும் விவரங்களுக்கு அரவிந்த அன்னையின் இந்தக் கட்டுரையில் விளக்கத்தைக் காணவும்.