Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Friday, January 8, 2021

சித்திரமும் மவுஸ் பழக்கம் - 5 :

      வெகு நாட்களுக்குப் பின் இன்னொரு படத்தை கணினி மென்பொருளைக் கொண்டு  வரைய முயற்சி செய்தேன்  -Digital colouring. 

அதன் விளைவே கீழே காணும்  படம். பென்சிலால்  காகிதத்தில் வரைந்து பின்னர் ஒளிவருடி (scanner) மூலம் கணினிக்கு ஏற்றினேன். அதன் பின்னர் வர்ணங்களை மைக்ரோசாஃப்ட்  Paint 3 D மென்பொருள் கொண்டு பூசினேன்.  முழு படத்தையும் பதிவின் கடைசியில் பார்க்கலாம்.  சரி , யார் இவர் ?

 
சென்ற நுற்றாண்டில்  வாழ்ந்து  மக்களிடையே தர்மத்தின் அவசியத்தை போதித்த   மகான் ஸ்ரீ ஸ்ரீதர சுவாமிகளே இவர். 

இவரை தமிழ் நாட்டில் பலருக்கும் தெரியாது. ஸ்ரீ தத்தாத்ரேயரின் வழி அவதூதராகக் கருதப்படும் இவரது வரவு பற்றி பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஸ்ரீபாத ஸ்ரீவல்லப சரிதாம்ருதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக அத்தியாயம் நாற்பத்தியொன்றில் "ஸ்ரீதரன் என்ற மகாயோகியின் சீடர்கள் மூலம்  தன் பிறந்த ஊரான  பிதாபுரத்தில்  ஒரு சமஸ்தானம் எழுப்பப்பட்டு தன் பாதுகைகளை வைத்து பூஜிக்கப்படப்  போவதை   அறுநூறு ஆண்டுகளுக்கு  முன்பே ஸ்ரீபாத வல்லபர் சொல்லி வைத்திருக்கும் செய்தியை படிக்கலாம்..

   அவர் சொல்லியபடியே மஹான் ஸ்ரீதரின் சீடரான சஜ்ஜனகடா ஸ்ரீராமஸ்வாமியின் பெரு முயற்சியால் பிதாபுரத்தில் ஸ்ரீபாத வல்லபரின் சமஸ்தானம் 1960 களில் எழுப்பப்பட்டு  வெகு விமரிசையாக  இப்போது ஸ்ரீ தத்த ஆராதனை நடைபெற்று வருகிறது.  கீழே உள்ள காணொளியில் ஸ்ரீ ராமஸ்வாமி தன் குருவிற்கு குரு பூர்ணிமையன்று செய்யும் பூஜையை காணலாம். 


ஸ்ரீ ஸ்ரீதர சுவாமிகள் கர்நாடகாவில் குல்பர்கா அருகே சின்சோலி என்ற கிராமத்தில் டிசம்பர் 7 ஆம் தேதி 1908 வருடம் அவதரித்தார்.

    ரிஷிகேஷ் சுவாமி சிவானந்தா இவரைப் பற்றி சிஷ்யர்களிடம் குறிப்பிடும் போது “நான் மிகவும் கால்நடையாகவே  நாடெங்கும் சுற்றியிருக்கிறேன். ஸ்ரீதர சுவாமிகளைப் போல தேஜஸ்வியும் தபஸ்வியும் கண்டதில்லை. அவர் இயல்பிலேயே அகண்ட பிரம்ம நிஷ்டையில் உள்ள பூரண ஞானி.” என்று சொல்லியிருக்கிறார்.

     மா ஆனந்த மயி ஸ்ரீதர சுவாமிகளை சந்தித்தப்பின் “பரமார்த்தம் என்னும் சிகரத்தை அடைய மிக குறுகிய கஷ்டமான மலைப்பாதையில் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.ஸ்ரீதர சுவாமிகளோ ஏற்கனவே அதன் உச்சியை அடைந்து நிலைப்பெற்று விட்டவர்” என்பதாக அவருடைய அனுபவத்தைக் கூறியிருக்கிறார். 

 மகரிஷி இரமணர் காலமான பிறகு அவருடைய அணுக்கத் தொண்டரான பிரபாவதி ராஜே ஸ்ரீ ஸ்ரீதர சுவாமிகளை தரிசித்து ஆசிர்வாதம் பெற்ற பின் “ சுவாமிகள் முன்னிலையில் ஸ்ரீ இரமணரையே உணர்ந்தேன்” என்றார். 

   1958 December  4 தேதி  சென்னை வந்திருந்தபோது தாம்பரத்திற்கு அருகே ஒரு பள்ளியில் ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி (பெரியவா என்று அன்புடன் அழைக்கப்படும் பரமாச்சாரியார்) அவர்களை ஸ்ரீதரர் சந்தித்து அளவளாவினார். அவருடைய உரையின் மையக்கருத்தை பரமாச்சாரியரே தமிழில் எல்லோருக்கும் புரியும்படியாக விளக்கியபின் “நரன் நாராயணன் ஆக முடியும் என்பதற்கு ஸ்ரீ ஸ்ரீதர சுவாமிகளே ஒரு ஆதர்சமாகும்” என்று அவரின் தவ வலிமையைப் போற்றினார்.

     சமர்த்த ராமதாசரே தருமத்தை நிலைநாட்ட மீண்டும் அவதரித்துள்ளார் என்று பலரும் நம்பினர். அவர் பல ஆண்டுகள் வெளி உலக தொடர்பு இன்றி தனிமையில் தவமியற்றினார். 

   ஷிவமொக்கா அருகே வரதாபுரம் என்கிற அவருடைய ஆசிரமத்தை, ஸ்ரீ சத்யசாயி பாபா அவருடைய குழாத்துடன் அடைந்தபோது யாவரையும் நிசப்தத்துடன் இருக்கும்படி கூறி அங்கே தவமியற்றுபவர் சாட்சாத் பிரம்மாவே என்றுரைத்தார். ஸ்ரீதர சுவாமிகளும் சிறிது நேரம் வெளியே வந்து யாவரையும் ஆசீர்வதித்தார். 

 1927-ல் ராமநாமத்திலும், சுவாமி சமர்த்த ராமதாசரின் தாசபோதத்திலும் ஈடுபாட்டுடன் மேற்கொண்ட தவ வாழ்க்கை பெரும்பாலும் ராமதாசரின் சமாதியுள்ள ஸஜ்ஜனகடாவிலும் பின்னர் வரதாபுரத்திலும் கழிந்தது. 

ஸ்ரீ ஸ்ரீதர சுவாமிகள் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து சனாதன தருமத்திற்கு புத்துயிர் கொடுத்தார். கடைசி எட்டு ஆண்டுகள் தனிமையில் வரதாபுரத்தில் தவம் செய்து 19-4-1973 அன்று மஹாசமாதி அடைந்தார். 

 அவர் பன்மொழி புலமைபெற்றவர். வடமொழி,கன்னடம், மராத்தி, ஹிந்தி ஆங்கிலம் தெலுங்கு என எல்லா மொழியிலும் பேசி எழுதும் திறமை பெற்றிருந்தார். வடமொழி, மராத்தி கன்னடத்தில் அவர்கள் பல நூல்களை எழுதியுள்ளார்.  அவரைப் பற்றிய மேலும் தகவல்களுக்கு  இங்கே  சுட்டவும் .

                                                 (பெரிதாக்கிப் பார்க்க படத்தை சுட்டவும்)