புகைவண்டியில் பயணிக்கும் நேரங்களில், கிராமப்புறத்து மக்கள் சிறு கைகுழந்தையுடன் ரயிலேறினால் முதலில் செய்யும் வேலை எதிரெதிர் பர்த்துகளுக்கிடையே ஒரு பெரிய துணியை தூளியாகக் கட்டி அதற்கு ஒரு இடத்தை உறுதிப்படுத்திக் கொள்வதுதான். பெரும்பாலும் அது தாயாருடையை பழைய புடவையாகவோ அல்லது போர்வையாகவோ இருக்கும்.
என்னுடைய தம்பி தங்கையையும் தூளியில் போட்டு நான் தூங்க வைத்த காலம் உண்டு. எங்கள் வீட்டுத் தூளியில் மேல் பாகத்தில் ஒரு இடைவளிக் கட்டை ஒன்று இருந்தது. அது குழந்தையை படுக்க வைக்கவும் வெளியே எடுக்கவும் வசதியாக இருந்து. அல்லாமல் அதை பிடித்துக் கொண்டு ஆட்டித் தூங்க வைக்கவும் உதவியாக இருந்தது.
சில வருடங்களுக்கு முன் ஒரு மலைப்பிரதேச சூழலில் பழைய ஓட்டு வீடு ஒன்றில் தூளியில் விளையாடுகின்ற சிறுவன் ஒருவனின் புகைப்படம் மனதை கவர்ந்தது. அதை என்னுடைய வரைபடப் புத்தகத்தில் வரைந்து பென்சில் வர்ணமும் பூசினேன். சுமாராக வந்தது. ஒரு சில தவறுகளும் இருந்தன.
இப்பொழுதெல்லாம் டிஜிடல் முறையில் சரிசெய்யக் கூடிய வாய்ப்பு இருப்பதால் அந்த படத்தை சுமாராக திருத்தி வர்ண அழுத்தத்தைக் கூட்டி ஒருவாறாக சரி செய்திருக்கிறேன்.
இந்த சித்திரம் சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னால் வரையப்பட்டது. அந்த சிறுவனின் உற்சாகத்தை படத்தில் காணமுடிகிறதோ இல்லையோ என்பதால் அதை ஒரு சிறிய கவிதை மூலம் முயற்சிக்கிறேன்
ஆச்சி கட்டிய புடவை இது
ஆச்சுதே தூளி என் தம்பிக்கு
தம்பியில்லாத நேரமிது
தடையில்லா பெரும்பொழுது
ஆன மட்டும் மிண்டிடு
ஆனந்த ஊசல் ஆடிடு.
(மிண்டுதல் = கால் விரலால் உந்துதல்
ஊசல் என்பது ஊஞ்சலுக்கான பழைய தமிழ் சொல். கவிதை வகையிலே ஊசல் கவிதை என்பதும் தமிழில் உண்டு )
No comments:
Post a Comment