Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Sunday, September 20, 2020

ஹயக்ரீவரும் குதிரை வீரனும்

    பேஸ்டல் வர்ணங்களை பழக ஆரம்பித்த காலத்தில் -சுமார் இருபது வருடங்களுக்கு முன் -பத்திரிகை ஒன்றில் வெளியான பரிசு பெற்ற புகைப்படத்தைப் பார்த்து ஒரு படம் வரைந்தேன். அதில் குதிரை வீரனின் முகம் தெரியாது அவனுடைய தலைக் கவசமும் இரண்டு கைகளும் மட்டும் தெரியும். ஏதோ குதிரையே ஹெல்மெட் மாட்டிக்கொண்ட மாதிரி ஒரு வினோதமான தோற்றம்.


   எனக்கு அப்படியே குதிரை முகம் உடைய பெருமாளான ஹயக்ரீவரே வருவது போலத் தோன்றியது. அதை ஒரு ஆரஞ்சு வர்ண ஹேண்டுமேட் காகிதத்தில் வரைந்துப் பார்த்தேன். சுமாராக வந்தது. பயிற்சிக்காகத்தானே! அதனால் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் மறந்தும் போனேன்.

சமீபத்தில் வேறு எதையோ தேடும்போது இந்த ஹயக்ரீவர் எதிரே வந்தார். அதையொட்டி ஹயக்ரீவ உபாசகரான பாண்டிச்சேரி டாக்டர் D  A ஜோசப்-பும்  நினைவுக்கு வந்தார். இன்று வைணவத்தில் மிக அருமையான விளக்கங்கங்களும் சொற்பொழிவுகளும் அடங்கிய அவருடைய இணையதளம்  ஆன்மீக அன்பர்களுக்கு மிகவும் பயனுள்ளது. அவருடைய முகப்புப் பக்கத்திலேயே லக்ஷ்மி ஹயக்ரீவர் விக்கிரகத்தை பதிந்திருக்கிறார்.

    ஹயக்ரீவர் வேதங்களை மது மற்றும் கைடபன் என்ற அரக்கர்களிடமிருந்து மீட்டுத் தந்தவர். சரஸ்வதி தேவி இவரை ஆராதித்தே வித்யைக்கு அதிபதியானாள் என்றும் புராணங்கள் சொல்லுகின்றன.  அவரைப் ஆராதித்த பெரும்பக்தர் வாதிராஜர். நாராயணன் குதிரை வடிவில் வந்து அவர் சமர்ப்பித்த நைவேத்தியத்தை தினமும் ஏற்று வந்த கதையை இவ்வலைப்பக்கத்தில் காணலாம்.

   இப்போது இன்னொரு குதிரை வீரனைப் பார்ப்போம். இது என் அம்மாவின் கைவண்ணத்தில்  உருவான குதிரை வீரன். இச்சிறுவனின்  வயது ஐம்பதுக்கும் மேலே!!!  எங்கள் தாயாருக்கு எப்போதும் புது முயற்சிகளில் அதிக ஆர்வம். இப்போதும் உண்டு. யூடியுப் பில் வரும் புது சமையல் குறிப்புகளை அலசி ஆராய்ந்து விடுவார். அப்போது புதிய தையல் மிஷின் வாங்கிய காலம். ஆர்வமும் நேரமும் இருந்தது. பல நாட்கள் நாங்கள் பள்ளியிலிருந்து திரும்பும் பொழுது தலையணை மேஜை விரிப்பு அல்லது என சகோதரியின் சட்டை பாவாடையில் பூக்கள் என எதையேனும் எம்பிராய்டரி  செய்து கொண்டிருப்பார். இப்போதும் அந்த தையல் எந்திரம் இருக்கிறது, ஆனால் பயன்படுத்துபவர் இல்லை.


    விளிம்புகளில் மடிப்பு வைத்து நீள் வட்ட வடிவத்தில் மிகவும் நேர்த்தியாக படைக்கப்பட்ட ஒரு மேஜை விரிப்பின்  நடுவில் அலங்கரிப்பவன் தான் அந்த குதிரைவீரன். இதை அவருக்கு ஒரு சர்பிரைசாக இருக்கட்டும் என்று வலையேற்றுகிறேன்.

  ஐம்பது ஆண்டுகளுக்கு முன்  தன்னுடைய படைப்பு இணையம் என்ற அமைப்பின் மூலம் உலகை வலம் வரும் என்று அவரால் நினைத்துக் கூட பார்த்திருக்க முடியாது.  அல்லது போன வருடம் கொரானாவைத்தான் நாம் யாராவது  எதிர்பார்த்தோமா?

ஹயக்ரீவனுக்கே வெளிச்சம்.