Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Saturday, March 21, 2020

தென்னாட்டுடைய சிவனே போற்றி

     இன்று (21/03/2020) சனிபிரதோஷமாயிற்றே சிவ தரிசனம் மிக விசேஷம் என்று அருகிலுள்ள சிவன் கோவிலுக்கு சென்றால் கொரோனா வைரஸ் காரணமாக 31 மார்ச் வரையிலும் பொது ஜன தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அறிவிப்பு பலகை சொல்லியது.

 சிவத் தியானம் செய்வது சிறப்பு என்பதால் சிவனைப் பற்றிய பதிவு ஏதாவது போடலாமே என்று தோன்றியது. உடனே  நினைவுக்கு வந்தது சென்ற வருடம் வரைந்த சிவபெருமானின் நடனங்களில் ஒரு விக்கிரக வடிவம். இந்த விக்கிரகத்தை, என் மைத்துனர் வீட்டில் எதிரில் வைத்துக் கொண்டு வரைந்தேன்.

           சித்திரத்தை பின்னர் ஒளிவருடி (scan) செய்து மடிக் கணினிக்கு ஏற்றி அதன் பின் வர்ணம் பூசினேன். அதற்கு பயன் படுத்திய மென் பொருள் Paint 3 D. இது விண்டோஸ் 10 -ல் கிடைக்கிறது

இது எந்த நடனம் என்பதை தேடித் தேடி ஒரு முடிவுக்கும் வராமலே வலையேற்றுகிறேன். நான் ஊர்த்தவ தாண்டவம் என நினைத்தேன். ஆனால் பெரும்பாலான சித்திரங்களில் அவர் காலை முன்பக்கத்திலேயே ஊர்த்தவ முகமாக தூக்கியிருக்கிறார். யாரோ சிலை செய்பவர் வலைப்பக்கத்தில் இது ஆனந்த தாண்டவம் என்றிருந்தது. நமக்கு பழக்கமான சிதம்பரத்து நடராஜனின் ஆட்டமும் ஆனந்த தாண்டவம் என்று சொல்லப்படுகிறது.



                              ( படத்தை சொடுக்கினால் பெரியதாகத் தெரியும்)
எதுவானால் என்ன?  அவருடைய ஆட்டம் அண்ட சராசரங்களை ஆட்டுவிக்கிறது.  ஒவ்வொரு அணுவிலும் உள்ள ஆட்டமும்  அவனது ஆட்டமே என்பதை இன்றைய அறிவியல் அறிஞர்களும் ஒப்புக் கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

அவருடைய கூத்தை  நேரிலே காணும் பாக்கியம் பெற்ற திருமூலரின்  வரிகளை நினைவில் கொணர்ந்து அவன் அருளை வேண்டி கொரோனாவிலிருந்து அனைவருக்கும் விடுதலை வேண்டுவோம்.


வேதங்கள் ஆட மிகு ஆகமம் ஆட
கீதங்கள் ஆடக் கிளரண்டம் ஏழாடப்
பூதங்களாடப் புவனம் முழுதாட
நாதன் கொண்டாடினான் ஞானானந்தக் கூத்தே

காளியோடு ஆடி கனகாசலத்து ஆடி
கூளியோடு ஆடி குவலயத்தே  ஆடி
நீடிடைய நீர் தீக் கால்  நீள் வானிடை ஆடி
நாளுற அம்பலத்தே ஆடும் நாதனே

அணுவில் அணுவினை ஆதிபிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறு இட்டு 
அணுவில் அணுவினை அணுக வல்லார்கட்கு
அணுவில் அணுவினை அணுகலும் ஆகும்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி ; என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
                                                                
                                                               திருச்சிற்றம்பலம் 


1 comment:

SASIKALA DHANASEKARAN said...

ஓம் நமசிவாய