Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Saturday, October 18, 2025

ஆனந்த ஊசல்

    புகைவண்டியில் பயணிக்கும் நேரங்களில்,  கிராமப்புறத்து மக்கள் சிறு கைகுழந்தையுடன் ரயிலேறினால் முதலில் செய்யும் வேலை எதிரெதிர் பர்த்துகளுக்கிடையே ஒரு பெரிய துணியை தூளியாகக் கட்டி அதற்கு ஒரு இடத்தை உறுதிப்படுத்திக் கொள்வதுதான்.  பெரும்பாலும் அது தாயாருடையை பழைய புடவையாகவோ அல்லது போர்வையாகவோ இருக்கும்.

    என்னுடைய தம்பி தங்கையையும் தூளியில் போட்டு  நான் தூங்க வைத்த காலம் உண்டு.  எங்கள் வீட்டுத்  தூளியில் மேல் பாகத்தில் ஒரு இடைவளிக் கட்டை ஒன்று இருந்தது.  அது குழந்தையை படுக்க வைக்கவும்  வெளியே எடுக்கவும் வசதியாக இருந்து. அல்லாமல் அதை பிடித்துக் கொண்டு ஆட்டித் தூங்க வைக்கவும் உதவியாக இருந்தது.

சில வருடங்களுக்கு முன் ஒரு மலைப்பிரதேச சூழலில்  பழைய ஓட்டு வீடு ஒன்றில் தூளியில் விளையாடுகின்ற சிறுவன் ஒருவனின் புகைப்படம் மனதை கவர்ந்தது.  அதை என்னுடைய வரைபடப் புத்தகத்தில் வரைந்து பென்சில் வர்ணமும் பூசினேன். சுமாராக  வந்தது. ஒரு சில தவறுகளும் இருந்தன.

    இப்பொழுதெல்லாம் டிஜிடல் முறையில் சரிசெய்யக் கூடிய வாய்ப்பு இருப்பதால் அந்த படத்தை சுமாராக திருத்தி வர்ண  அழுத்தத்தைக் கூட்டி ஒருவாறாக சரி செய்திருக்கிறேன்.



(படத்தை சொடுக்கி பெரிதாக்கிப் பார்க்கலாம்)

இந்த சித்திரம் சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னால் வரையப்பட்டது.  அந்த சிறுவனின்  உற்சாகத்தை படத்தில் காணமுடிகிறதோ இல்லையோ என்பதால் அதை ஒரு சிறிய கவிதை மூலம் முயற்சிக்கிறேன்

ஆச்சி கட்டிய  புடவை இது

ஆச்சுதே தூளி என் தம்பிக்கு

தம்பியில்லாத நேரமிது

தடையில்லா பெரும்பொழுது

ஆன மட்டும்  மிண்டிடு

ஆனந்த ஊசல் ஆடிடு.

(மிண்டுதல் = கால் விரலால் உந்துதல்

ஊசல்  என்பது ஊஞ்சலுக்கான பழைய தமிழ் சொல்.  கவிதை வகையிலே ஊசல் கவிதை என்பதும் தமிழில் உண்டு )

Sunday, September 7, 2025

அடுத்து முயன்றாலும் ஆகும் நாளன்றி....

    சுமார் 25 வருஷங்களுக்கு முன்னால்  ஃபிளிக்கர்( Flicker) வலைதளத்தில் கண்ட ஒரு அழகான புகைப்படத்தைக் கண்டு ஆயில் பெயிண்டிங் ஒன்றை விலையுயர்ந்த கான்வாஸ் ஒன்றில் ஆரம்பித்தேன். அப்போதெல்லாம் 512 k modem Pentium III கணினி தான். பெருவழிப்பாதை எனப்படும்  Broad Band எல்லாம் வெறும் பேச்சளவில் இருந்தது.

ஆயில் பெயிண்டிங் உலர்வதற்கு நேரம் எடுத்துக் கொள்வதால் அதை விறுவிறுவென்று தொடர முடியவில்லை. இதனிடையே வேலை பளு, ஊர் மாற்றம், புதுக் கணினி வாங்குதல் போன்ற காரணங்களால் அந்த படம் காணாமல் போய் விட்டது. முடிக்கப்படாத அந்த கான்வாஸும்  எங்களுடனேயே பல ஊர்களுக்கும் பயணித்தது. அவ்வப்போது கண்ணில் படும்போது  'இதை முடிக்க வேண்டும்' என்ற எண்ணம் தோன்றும்.

காலசுழற்சியில் பல வேகமான மாறுதல்கள்.  கணினி மென்பொருள் வளர்ச்சியினாலும் புதுப்புது கண்டுபிடிப்புகளாலும்  டிஜிடல் வரைதலில் நாட்டம் அதிகமாகி  தூரிகை பிடித்து படம் வரைதல் பல வருடங்களாக இல்லாமலே போயிற்று. சென்ற மாதம் இந்த அரைகுறை படமுள்ள  கான்வாஸ் மீண்டும் கண்ணில் பட்டு ஒரு குற்ற உணர்ச்சியை தூண்டியது.


அந்த ஒரிஜினல் படம் இருந்தாலல்லவா படத்தை முடிக்க முடியும்? இது எந்த ஊர், எந்த நாடு என்று தெரியாத நிலையில் இணையத்தில் தேடுவது எப்படி?

புது மென்பொருட்களில் கூகிள் லென்ஸ் என்று ஒன்றுள்ளது.  அதில் என் அரைகுறை வரைபடத்தை படம் பிடித்து அதை தேடச் சொன்னேன். பல ஐரோப்பிய நாடுகளின் படங்களுக்கு இடையே நான் தேடிய படத்தை போலவே ஒன்று  இருந்தது.  அதை Lanterman's Mill என்று குறிப்பிட்டிருந்தது. அந்த பெயரை வைத்து தேடியபோது  நூற்றுக்கணக்கான  புகைப்படங்களை  பல கோணங்களிலும் பல பருவங்களிலும் அள்ளித் தந்தது.  இதுவே நான் தேடிய இடம், படம்.  

உடனே  விரைவில் காயக்கூடிய  அக்ரிலிக் வர்ணப்பெட்டியை எடுத்து பெயிண்டிங்கை ஒருவாறு முடித்தேன்.

(கான்வாஸ் அளவு 18 x 16 inches)

மேலே காணும் படம்  நீரின் ஆற்றலால் இயங்கும் ஒரு எந்திர அரவை ஆலை. இது இப்பொழுதும்  செயல்பாட்டிலுள்ள 170 வருட  பழைய அரவைக் கூடமாகும்.   ஆனால் தற்போது ஒரு காட்சியகமாகவும், கல்விச் சுற்றுலா தலமாகவும் அமெரிக்காவின் ஓஹாயோ மாகாணத்தில் உள்ளது.

நீரினால் சுழலும் டர்பைன் கட்டிடத்தின் உட்பகுதியில் உள்ளது.  ஆற்றில் ஒரு தடுப்பு சுவர் கட்டப்பட்டு (check dam) நீரின் ஒரு பகுதி  டர்பைனுக்காகத்  திருப்பி விடப்படுகிறது. 

மிகுதியான பெருக்கையே தடுப்புச் சுவரை  தாண்டி வரும் நீர் வீழ்ச்சியாக வெளியே காண்கிறோம். கட்டிடத்தை ஒட்டிக் காணப்படும்  சிறிய வீழ்ச்சியே உள்ளே டர்பனை சுழலச் செய்து வெளியேறுகின்ற நீராகும்.  பொதுவாக வருடம் முழுவதும் இயங்கும் விதமாக கணக்கிடப்பட்டு தடுப்புச் சுவரின் உயரம் தீர்மானிக்கப்படுகிறது. இதனால் ஆற்றில் நீரின் வரத்து குறையும் பருவங்களில்  வெளியே பெருகி வழியும் நீர் குறையுமே ஒழிய இயந்திர இயக்கத்திற்கு தேவையான நீர் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

இதே முறையை கடைபிடித்து தற்காலத்தில் மின் உற்பத்தி செய்யும் கூடங்கள் (mini hydro electric units) நம் நாட்டிலும் பல மாகாணங்களில் பரவலாக செயல்பட்டு வருகின்றன.

இந்த தொழில்நுட்ப விவரமெல்லாம்  படத்தை வரைய ஆரம்பித்த காலத்திலேயே முடித்திருந்தால் தெரிந்து கொண்டிருப்பேனா என்பது சந்தேகமே. 

எல்லாத்துக்கும் ஒரு வேளை வரணும்.

அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி

எடுத்தக் கருமங்கள் ஆகா- தொடுத்த 

உருவத்தால் நீண்ட உயர்மரங்க ளெல்லாம்

பருவத்தால் அன்றி பழா                   

அப்படீன்னு சும்மாவா சொல்லி வைச்சிருக்காங்க ஔவையார் !

Monday, March 17, 2025

ஒரு கரி ஈடழித்து உரித்தனை.....

 சில வருடங்களுக்கு முன்  ஹளேபீடு சென்றபோது உலக புகழ் பெற்ற அந்த சிற்பங்களை நிறைய படம் எடுத்து வைத்திருந்தேன்.

சமீபத்தில் தேவாரப் பாடல் ஒன்றில்  "யானையின் தோல் அழல் திகழ் மேனியில் அணிந்தவனே"  என்ற வரிகள் ஹளேபீடில் கண்ட ஒரு சிற்பத்தை நினைவு படுத்தியது. 

நிழல் திகழ் மழுவினை! யானையின் தோல்

அழல் திகழ் மேனியில் அணிந்தவனே!

கழல் திகழ் சிலம்பு ஒலி அலம்ப, நல்ல

முழவொடும் அருநடம் முயற்றினனே!

முடிமேல் மதி சூடினை! முருகு அமர் பொழில் புகலி

அடியார் அவர் ஏத்து உற, அழகொடும் இருந்தவனே!

டிஜிடல் வரைவு முறையில்  இது வரை எந்த சிற்பத்தையும் வரைந்ததில்லையாதலால் இதை முயற்சிக்கலாம் என்று தோன்றியது. அதன் விளைவாக வரைந்ததே கீழே உள்ள படம்.


(Click the picture for enlarged view)

 கஜ சம்ஹார மூர்த்தி என்று வணங்கப்படும்  சிவனை  "கரி உரித்த சிவன்" என்று சைவ சமயம் போற்றுகிறது.   ஆனையின் தலைமேல் சிவன் நடனம் புரிகிறான். வழக்கமாக காணப்படும் நான்கு கைகளுக்கு பதிலாக எட்டு கைகள். அவைகளில் நடுவே உள்ள நான்கும் ஆயுதம், சூலம், திருவோடு, உடுக்கைகளுடன் சிவ சின்னமாகத் திகழ்கின்றன. முன்னிரண்டு கைகள் நாட்டிய பங்கியில் ஆடலழகை சிறப்பிக்கின்றன. மேலிரண்டு கைகள் தோலை உரித்து போர்வையாக போர்த்திக் கொள்ளும் வகையில் சித்தரிக்கப்படுகின்றன.  இதனால் இவர் அஷ்டபுஜ கஜசம்ஹார மூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார். 

சிற்பத்தின் அழகை அப்படியே வடிவெடுப்பது மிகவும் கடினமானதை ஒட்டி மென்பொருள் மூலம் இன்னொரு முயற்சியை கையாண்டேன். அதை சுருக்கமாக சொல்ல வேண்டுமானாலதை நகலெடுத்தல் ( Tracing technique) எனலாம்.

ADOBE, KRITA போன்ற  மென்பொருட்களில் இதற்கான வசதி இருக்கிறது. நாம் எந்த படத்தை நகலெடுக்க வேண்டுமோ அதை அடிப்படை சித்திரமாக வைத்துக் கொண்டு அதன் மேல் பிரதிக்கான லேயரை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதன் மேல் நமக்கு வேண்டிய வர்ணத்தில் வரி வடிவமாக வரைந்து  கொண்டு அடிச் சித்திரத்தை பின்னர் டிலீட் செய்து விட வேண்டும்.

இதற்கு மேல் விளக்க முற்பட்டால் சாதாரண வாசகர்களுக்கு   குழப்பம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். 

நான் நகலெடுக்க பயன்படுத்திய மென்பொருள் KRITA. பின்னர் வர்ணம் பூச  Paint 3D. 

கஜசம்ஹார மூர்த்திக்கு மாயவரம் அருகே உள்ள திருவழுவூரில் பிரத்யேக கோவில் உள்ளது.  மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை சொடுக்கவும்.

தலைப்பு : இதே கதையை குறிப்பிட்டு சிவனைப் போற்றும் சம்பந்தரின் திருவெழுக்கூற்றிருக்கை யில் வருகின்ற வரி