அந்த வகையிலே முயற்சி செய்ததுதான் இந்த ஆப்பிள் பழங்கள். ஒரே வித்தியாசம் என் முன்னால் ப்ழங்கள் இருக்கவில்லை. ஒரு புகைப்படப் பத்திரிக்கையில் வெளி வந்திருந்த வண்ணப் புகைப்படந்தான் இருந்தது.
பேஸ்டல் வர்ணங்களை ஆரம்பித்திருந்த காலம். கீழ் பக்கத்தில் ஒரு சிறிய இடைவெளியில் கசியும் வெளிச்சம் மற்றும் அந்த வெளிச்சத்தின் வழியாக தெரியும் இலைகளின் காம்பு எனக்கு முக்கியமாகப் பட்டது. அதன் விளைவாக நிழலை அடர்த்தியாக்கப் போய் நிழலின் அடர்த்தி கொஞ்சம் ஓவராகவே போய் விட்டது. நிழலிலும் ஆப்பிள் காம்பு போலத் தெரிகிறதே ஆனால் மேலே உள்ள ஆப்பிளில் காம்பு எதுவும் காணப்படவில்லையே என்று குழப்பம் ஏற்பட்டது.
சற்று யோசித்தபின் அது பழங்களின் நடுவில் இருக்கும் இலையின் நுனி பாகமாக இருக்க வேண்டும் என்று தோன்றியது.
அதுக்குதான் சொல்றது ஈயடிச்சான் காப்பி அடிக்கக்கூடாதுன்னு. ஓவியப்பள்ளிக்கூடத்தில் செய்வது போல கண்ணு முன்னாலே வச்சு வரைஞ்சிருந்தா இந்த குழப்பம் வந்திருக்குமா ?:))
ஆப்பிளைப் பத்தி பேசும் போதெல்லாம் முன்னாள் தேர்தல் ஆணையர் டி.என் சேஷன் சொன்னதை படிச்சது ஞாபகம் வருது. ஷேக் அப்துல்லாவை கோடைக்கானலில் மனை சிறை வைத்திருந்த காலத்தில் சேஷன் திண்டுகல் கலெக்டர். ஷேக் அப்துல்லா ஆப்பிள் பழங்களை கேட்டார் என்று வாங்கிக் கொண்டு போய் கொடுத்தால் அதைப் பார்த்து ’எங்க காஷ்மீர்-ல ஆடு கூட தின்னாது உங்க ஆப்பிளை ’ என்று சொல்லி திருப்பி அனுப்பி விட்டாராம். அடேங்கப்பா அவ்வளவு விசேஷமானதா காஷ்மீர் ஆப்பிள் என்று தோன்றியது அப்போது. இப்போதும் என்ன வாங்கிற மாதிரியா விலை இருக்கு !
பார்த்தே சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்.