ஒரு சின்ன ப்ளைவுட்-ல் எப்போதோ வரைந்தது. ஆயில் வர்ணம் மங்கிப்போய் வானத்தில் பல ’பொத்தல்கள்’ விழுந்து ஒரு மாதிரியாக இருந்தது. அதை ஸ்கேன் செய்து கொஞ்சம் கணிணியின் பெயிண்ட் பிரஷ்-ல் சரி கட்டிய பின் தான் ’சரி எல்லோருக்கும் காட்டலாம்’ ங்கிற தைரியம் வந்தது.
ஹம்ஸம் அல்லது அன்னம் அப்படிங்கிற இந்தப் பறவை பற்றி நம்ம இதிகாசங்களில் கூட அடிக்கடி சொல்லப்படுது. ஆனா அது இப்ப நாம பார்க்கிற ஸ்வான் மாதிரி இருந்ததான்னு தெரியாது. கோவில் சிற்பங்களில், குத்து விளக்கில் காணப்படுகிற அன்னத்திற்கு மயில் மாதிரி உடல்,கால் தோகை, தலை மேல் கொண்டை எல்லாம் இருக்கும். ஆனால் அலகு மாத்திரம் கொஞ்சம் நீண்டு வாத்து அலகு மாதிரி இருக்கும்.
அன்னம் பிரம்ம தேவனின் வாகனம். தூய்மை,பற்றற்ற நிலை,பிரம்ம வித்தை மற்றும் எல்லா உயிர்களுக்குள் இயங்கும் பிராண சக்தியைக் குறிப்பதுன்னும் சொல்லுவாங்க. பறவைகளில் இது ஒன்றுதான் (?) நிலம் நீர் மற்றும் விண்ணில் சம அளவில் இயங்கக் கூடியதுன்னும் சொல்வதுண்டு.
அத்வைதத்தில் மிக உயர்ந்த பற்றற்ற நிலையை அடைந்தவரை குறிப்பிடும் போது பரமஹம்ஸர் என்று குறிப்பிடப்படுகின்றனர். காரணம், எவ்வளவு நேரம் நீரில் இருந்தாலும் ஒரு துளி கூட அது மேல ஒட்டாது. அது போல பரமஹம்ஸர்கள் எவ்வளவுதான் உலத்தாரோடு ஒட்டி உறவாடினாலும் அவர்கள் மனசி்லேயும் சிறிதளவும் பாதிப்பு இருக்காது.
சோஹம் சோஹம் (”நானே அது”) அப்படின்னு மனதில் சொல்லிக்கொண்டு மூச்சை கவனிக்கிற டெக்னிக் ஒண்ணு இருக்கிறதா சொல்வாங்க. அதுவும் இந்த ஹம் சா -ங்கிறதிலேந்து வந்ததுதான். அதனாலத் தான் அதை ப்ராணசக்தியோடு தொடர்பு படுத்தி சொல்றாங்க.
புத்த மதத்திலும் கூட....... ”தம்மாத்தூண்டு படத்த வரஞ்சுட்டு வுடற ரீலுக்கு அளவில்லையா ?” அப்படீன்னு யாரோ திட்றாங்க. அதனால இத்தோட நிறுத்திக்கிறேன்.
எல்லோரும் சந்தோஷமா தீபாவளி கொண்டாடுங்க. தீபாவளி நல்வாழ்த்துகள்
