இந்த மனிதரின் கண்களில் தெரிவது என்ன ?
ஆழ்ந்த சிந்தனையா ?
அல்லது எதிரே பேசுகிறவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை உன்னிப்பாக கவனிக்கும் நிலையா?
இப்படத்திற்கு ஆதாரமான புகைப்படத்தை பிரசுரித்த பத்திரிக்கைக்கு அந்த சமயம் பேட்டி அளித்துக் கொண்டிருந்தபடியால் இரண்டாவதே சரி.
கண்களில் தெரிகின்ற நிலைக் குத்தான பார்வையும், அதற்குத் துணை போகும் வகையில் அழுத்தமாக முகவாய்கட்டையை தாங்கும் கைகளும் மற்றும் கன்னத்தை அழுத்தி இருக்கும் விரல்களும் ஒரு நல்ல படத்தை முயற்சித்துப் பார்ப்பதற்கு போதுமான விஷயங்கள் என்று தோன்றியது.

முதலில் படம் முழுவதையும் வர்ண பென்சிலில் வரைந்து கொண்டு பின்னர் வர்ண அழுத்தம் தேவைப்படும் இடங்களில் பேஸ்டல் வர்ணத்தில் பூர்த்தி செய்தேன். அந்த வகையில் இது ஒரு mixed media படம் என்று சொல்லலாம். இதற்கானக் காரணத்தை கபில் தேவ் பற்றிய பதிவில் விளக்கி யுள்ளேன்.
(பிற்சேர்க்கையில் விவரம் அறிக)
சரி யாரிந்த மனிதர் என்று கேட்கிறீர்களா; இவர் பெயர் ராம் கோபால் வர்மா.
ராம்கோபால் வர்மா பற்றிய சிறு குறிப்பு
நிசப்த், ஜபர்தஸ்த், ராத், பூத்,சர்கார் ராஜ் போன்ற திகில் படங்களை ஹிந்தி திரைக்கு கொடுத்தவர்.நாற்பதுக்கும் மேலான ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களை தயாரித்திருக்கும் இவர் இயக்குனரும் ஆவார். அமிதாப், அபிஷேக் ஐஸ்வர்யா ராய் போன்றவர்களை வைத்து படம் எடுப்பது மட்டுமல்லாமல் அதிகம் அறிந்திராத கலைஞர்களையும் வைத்து படம் எடுப்பவர். ஹிந்தி திரை உலகில் மிக முக்கிய புள்ளிகளில் ஒருவர்.
பின் குறிப்பு:
வரைபடத்தை முறையாக பாதுகாக்காமையால் சில இடங்களில் மடிப்புகளும் சுருக்கங்களும் ஸ்கேனரிலும் விடாமல் ஒட்டிக்கொண்டு வந்துள்ளன. ஆகையால் உங்கள் படங்களை நல்ல முறையில் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை புரிந்து கொள்ளலாம் :))
பிற்சேர்க்கை :
வடுவூர் குமார் அவர்களின் பின்னூட்டத்தைக்கண்ட பின் அவர் சொல்வதில் உள்ள உண்மை புரிந்தது. உடனே என்னோட குறுக்கு மூளை சும்மா இருக்குமா ! எப்படி கஷ்டபடாமல் வர்ண அழுத்தத்தைக் கூட்டுவது என்று யோசித்தேன். அப்படியே பிக்காஸாவில் படத்தை திறந்து Auto contrast ஐ கூட்டிப் பார்த்தேன். ஓரளவு திருப்தியாக இருந்தது. உடனே வலையேற்றி விட்டேன். :)))
நன்றி குமார் !!