1947-ல் இந்திய சுதந்திரம் இவரது இசையுடனே செங்கோட்டையில் பிறந்தது.
அவர் கால் வைக்காத முக்கிய தலைநகரங்களே உலகில் இல்லை எனலாம்.
இந்தியா அரசாங்கத்தின் மிகப் பெரிய விருதான பாரத் ரத்னா வழங்கப்பெற்று கௌரவிக்கப் பட்டவர்.
வேண்டிய அளவு செல்வம் சேர்ந்த போதும் தனிப்பட்ட வசதிகளை அவர் பெருக்கிக் கொள்ளவில்லை.
”பக்கத்து வீட்டிலே ரம்ஜான் அலி பக்கெட் பக்கெட்டாக தண்ணீரை ஊற்றி சூட்டைத் தணிக்க கஷ்டப்படும் போது எனக்கு ஏ.ஸி அறையில் தூக்கம் எப்படி வரும் ?” என்பாராம்.
காசி நகரத்து தெருக்களிலே சைக்கிள் ரிக்ஷாவிலேயே போய்வருவார். இசைக் கச்சேரிகளுக்காக எங்கு சென்றாலும் எளிமையான விருந்தோம்பலையே ஏற்றார். ஐந்து நட்சத்திர விடுதிகளை வெறுத்தார். எந்நேரத்திலும் வீடு தேடி வருபவர்களுக்கு் அவர் வீட்டில் உணவு இருக்கும்.
இவர் ஒரு குழந்தை உள்ளம் படைத்த கலைஞர். பணிவு குணத்திற்கு அவர் யாவருக்கும் எடுத்துக்காட்டு.
1971 -ல் நாட்டின் பெரும் கலைஞர்களைக் கூட்டி டெல்லி விஞ்ஞான் பவனில் ஒரு பெரும் இசைவிழா நடத்தியது அரசு. விழாவிற்கு பிறகு அதை ஏற்பாடு செய்தவர்களுக்கு பலரும் பாராட்டு கடிதம் எழுதி வாழ்த்து தெரிவித்தனர். அவற்றின் இடையில் உருது மொழியில் பணிவான ஒரு வேண்டுகோள் கடிதம்.
”ஐயன்மீர்! வரும் வருடங்களில் இவ்விழாவை வேறு ஏதேனும் அரங்கத்தில் வைத்துக் கொண்டால் சந்தோஷப்படுவேன். ஒவ்வொரு வரிசையிலும் பார்வையாளர்களின் முன் போடப்பட்டிருக்கும் மேஜைகள் கலைஞனுக்கும் இரசிகனுக்கும் உள்ள இடைவெளியை அதிகரிக்கிறது”
பிஸ்மில்லாக் கான் அவர்களின் அந்த கடிதத்தை கண்ட பின் விழா காமினி அரங்கத்திற்கு மாற்றப்பட்டது.
அவருடைய கண்களில் ஒரு முனிவனின் தவம் தெரியும். அவர் செய்தது இசைத் தவம். அதை ஓவியத்தில் பிடிக்க முயற்சித்தேன். மிகவும் கஷ்டமாய் போனது. காரணத்தை வெகு காலம் யோசித்தேன்.
கழுத்தை திருப்பியிருக்கும் விதமா?
மூக்கு தூக்கியிருக்கிறதா ?
நெற்றிக்கும் தொப்பிக்கும் உள்ள இடைவெளியா ? தாடியா ?
கடைசியாக எனக்குத் தோன்றியது அவருடைய கண்கள். அவருக்கு சற்றே பூனைக் கண்கள். பலமுறை திருத்தி ஓரளவு பூனைக்கண் போல கொண்டு வர முயற்சித்திருக்கிறேன்.
மிச்சத்தை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.