கட்டிடங்களை வரையும் போது மட்டும் 3D வடிவமைப்பு மிகச் சரியாக வரவேண்டும். இயற்கை காட்சிகளானால் அங்கே ஒரு புதரோ, மேகமோ மலையோ வரைந்து ஒப்பேற்றி விடலாம். ஆனால் கட்டிடங்கள் விஷயம் அப்படியல்ல. கொஞ்சம் பிசகினாலும் நன்றாகவே காட்டிக் கொடுத்துவிடும்.
அதற்குக் காரணம் இணைக்கோடுகள் படத்தில் இணையாக வராது. ஆனால் அவை இணைக்கோடுகள்தான் என்பதை நமது மூளை சொல்லுகிறது.படத்தில் தண்டவாளங்கள் தூரத்தில் இணைவதை போலக் கண்டாலும் இணையாது என்பது மூளைக்குத் தெரியும்.இதை vanishing point effect என்று கூறுவார்கள்.
பழைய கோவில்கள்,புராதன கட்டடங்கள் வரையும் போது இந்த வானிஷிங் பாயிண்ட் சரியாக அமையாவிட்டால் பார்ப்பவர்களுக்கு அதை சுட்டிக் காட்டத் தெரியாவிட்டாலும் ”என்னமோ சரியில்லை” என்று கூறுவார்கள். ஜன்னல்கள்,கதவுகள் விளிம்புகள் இப்படி ஒவ்வொரு சிறு விஷயத்திலும் அது சரியாக அமைய வேண்டும்.
பெங்களூரில் உள்ள ஜவஹர்லால் நேரு ஆராய்ச்சி மையத்தின் ஒரு புகைப்படத்தை கணிணியில் கண்டபோது அதன் ஒளி-நிழல் அமைப்பு, உள்ளும் புறமும் ஒரே சமயத்தில் காட்டப்பட்டிருந்தவிதம், நவீன வடிவமைப்பு எல்லாம் சேர்ந்து இந்தப் படத்தை வரையத் தூண்டியது.
Ink and color முறையில் வரைந்தது.
உட்பக்கமும் வானம் நோக்கிய ஒரு புல்தரை, வெளிப்பக்கமும் ஒரு புல்தரை. தூரத்தில் இருக்கும் திறந்த ஒரு கதவில்லா சாளரம். அதிலிருந்து பரவும் ஒளி, அங்கே ஒரு கல் பெஞ்சு, வெளிப்பக்கம் வளைந்து செல்லும் கல் கட்டிட வடிவமைப்பு, முகப்பில் ஒரு தகவல் பலகை இப்படி பல ருசிகரமான விவரங்கள் எப்படி வடிவெடுக்கும் என்பதை காணவே வரைந்து பார்த்தேன்.
கருப்பு வர்ண -நீரில் கரையாத- மையினால் படத்தை வரைந்து கொண்டு பின்னர் வர்ணம் தீட்டப்பட்டது.
வானிஷிங் பாயிண்ட் தெரிகிறதா சொல்லுங்கள் :)