ஃபிளிக்கரில் கண்ட ஒரு மலைக் குன்றின் படத்தை பார்த்த போது அதை கணிணியில் சேமித்து வைத்துத்திருந்தேன். பின்னர் அதைப் பார்த்து ஒரு 25cm x12 cm அட்டையில் வர்ணப் பென்ஸிலை வைத்து வரைந்து பார்த்தேன். என்னதான் விரலால் ஸ்மட்ஜ் செய்தாலும் அங்கங்கே பென்ஸில் கோடுகள் குச்சி குச்சியாய் கண்ணை உறுத்தியது. இதற்கு நான் பயன் படுத்திய அட்டையும் ஒரு காரணமாயிருக்கலாம்.
அப்போது இதையே நீர் வர்ணத்திற்கு மாற்றிப் பார்த்தால் என்ன என்று தோன்றியது. ஒரு சின்ன ப்ரஷ்ஷில் நீரைத் தொட்டுக் கொண்டு வேண்டிய இடங்களிலெல்லாம் ஒரு வாஷ் கொடுத்தேன். இப்போது வர்ணங்களெல்லாம் கரைந்து ஒன்றோடொன்று கலந்து ஒரு புது தோற்றம் வந்தது. குறிப்பாக இந்த மாற்றத்தை குன்றின் பின் பக்கத்தில் இருக்கும் மலைப் பகுதியில் காணலாம்.
கணிணியில் சேமிக்கப்பட்டப் படத்தையும் ஸ்கேன் செய்த படத்தையும் அருகருகே காணும் வகையில் இணைத்து கீழே காட்டியுள்ளேன். நீர் வர்ணத்திற்கு மாற்றிய பிறகு வர்ணங்கள் மூலப் படத்தை ஓரளவு பிரதிபலிப்பதைக் காணலாம். கற்பாறைகளை வேண்டுமென்றே கான்ட்ராஸ்ட்டிற்காக கொஞ்சம் செவ்வர்ணமாக விட்டுவைத்தேன்.
இந்த வகை தொழில் நுட்பத்தில் இன்னொரு வசதி, நீர் காய்ந்த பிறகு மீண்டும் பென்ஸிலினால் இன்னொரு வர்ணத்தை தேய்த்து வர்ணத்தின் அடர்த்தியைக் கூட்டலாம். ஆனால் வர்ணம் அடர்த்தியான பிறகு அதை குறைக்க முடியாது. அதனால் படிப்படியாக அடர்த்தியை கூட்ட வேண்டும். பொதுவாக வெள்ளை வர்ணப்பென்ஸில் இந்த பெட்டிகளில் இல்லாமல் போவதே குறைக்க முடியாமல் போவதற்குக் காரணம்.
இந்த மலை மஹாராஷ்ட்ராவில் எங்கோ உள்ளது என்று படித்ததாக நினைவு. ஆகவே குன்றின் மேலிருப்பது குமரன் அல்ல. அனேகமாக அவன் அன்னை, சிவாஜி போற்றிய பவானி.