Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Thursday, August 27, 2026

அக்ரிலிக்கில் அமீஷ் வாழ்க்கை

 பென்சில்வேனியா பகுதியில் பயணிக்கும்  போதெல்லாம் அங்குள்ள பரந்த புல்வெளிகளையும் , பளிச்சென்ற வெள்ளை வர்ணம் பூசப்பட்ட வேலிகளிடையே மேயும் கால்நடைகளையும் ஒரு அழகிய வர்ண சித்திரமாக்கிப் பார்க்கும் ஆசை எழும்.

சாலையில் அங்கங்கே குதிரை வண்டிகளை தாண்டிச் செல்லும் போது அவைகள் அமீஷ் குடியினரை சேர்ந்தது என்றும் தெரிந்தது.

நவீன கலாச்சாரம், தங்களது  கூட்டுக் குடும்ப சமூக ஒற்றுமைக்கு ஊறு செய்யும் என்று அஞ்சி தங்களது தனித்துவத்தை  காப்பாற்றிக் கொள்ள சுய கட்டுபாடுகளை அனுசரித்து வருபவர்கள் அமீஷ் குடியினர்.

இவர்கள் 1760 களில்  ஜெர்மன், சுவிட்சர்லாந்து பகுதிகளிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள். விவசாயம், தோட்டக்கலை என மண்ணை நம்பி வாழ்பவர்கள்.

எவ்விதத்திலும் அரசாங்க சலுகைகளை நாடாமல், மின்சாரம், மோட்டர் வாகனங்களை பயன்படுத்தாது  இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையை கடைபிடிக்கின்றனர். 

ஆழ்ந்த கிருத்துவ நம்பிக்கை உடைய இக்குடியினர் பிற சமூகத்தினரோடு இணக்கமாகப் பழகினாலும் தமக்கென்று உள்ள வரையறையை தாண்ட மாட்டார்கள்.

எட்டாம் வகுப்பு வரையில் தமக்கென உள்ள பள்ளிகளில் படித்து பின்னர் தொழிற்கல்வியில் கவனம் செலுத்துகின்றனர். பதினேழாம் வயதை எட்டும் போது  அவர்களது இளைஞர்களுக்கு வெளி உலகோடு தொடர்பு கொண்டு அதை பற்றி அறிந்து கொள்ள நான்கு வருட வாய்ப்பு அளிக்கப்படுகிறது. 

இருபத்தியோராம் வயதில் அவர்கள் தமது சமூகத்தில் தொடர்வது பற்றி முடிவு செய்யவேண்டும்.  வெளியேற விரும்பினால் அவர்களுடன் தொடர்பு முற்றிலுமாகத் தவிர்க்கப்படுகிறது.  தொடர விழைபவர்கள் கட்டுப்பாட்டுகளுக்கு உட்பட்டு  நடக்க வேண்டும்.

சில  எழுதப்படாத விதிமுறைகள் :

1) இயற்கை விவசாயம். இரசாயன உரம், பூச்சிக்கொல்லிகள் அறவே கிடையாது.

2) பகட்டான ஆடை ஆபரணங்கள் கூடாது. செயற்கையான ஒப்பனைகள் கிடையாது. பெண்கள் தலைக்கூந்தலை  வெட்டாது, பின்னலாகப் பின்னிக் கொள்ள வேண்டும்.  அல்லது கொண்டையாக முடிந்து கொள்ள வேண்டும். 

3)ஆண்கள், திருமணத்திற்குப்பின்  தாடி வளர்க்க வேண்டும், மீசை கூடாது. 

4) மின்சாரசக்தி பாட்டரி மூலமாக பயன்படும் சில இயந்திரங்களை உபயோகிக்கலாம்.  உழுவதற்கும் அறுவடைக்கும் குதிரைகளே பயன்படுத்தப்பட வேண்டும்.

5) அரசியலில் ஈடுபடக்கூடாது.

வன்முறையற்ற ,பிற சமூகத்தினர் மீது ஆதிக்கம் இல்லா மனப்பான்மையோடு கட்டுப்பாடான  இவர்களின் வாழ்க்கை முறை உலகத்தில் அமைதியை விரும்புவர்களுக்கு  நல்ல உதாரணம்.

.


இந்த அக்ரிலிக் படம் வரைவதற்கு எந்த குறிப்பிட்ட புகைப்படத்தையும் ஆதாரமாகக் கொள்ளவில்லை. மனம் போன போக்கில் சிறிது சிறிதாக விவரங்களை கூட்டிக் கொண்டு போனதால் அதிக காலம் எடுத்துக் கொண்டேன்.

முக்கியமாக சூரிய ஒளியில்  நிழல் அமைப்பை முயற்சித்த போது குதிரையின் நிழலை வரைவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.

வேறுவழியின்றி AI -ன் உதவியை நாடினேன்.
மிகவும் திருப்திகரமாய் என்னுடைய பிரச்சனையை தீர்த்தது. அதன் பரிந்துரைப்படியே குதிரையின் நிழலை வரைந்து முடித்தேன்.

உயரமான தானிய சேமிப்பு கிடங்குகள், காற்றாலை,  குதிரை வண்டியில் அமீஷ் மக்கள் என ஓரளவு நமக்கு வெளியே காணக்கிடைக்கும் காட்சியை வரைய முயற்சித்திருக்கிறேன்.