சில வருடங்களுக்கு முன் ஹளேபீடு சென்றபோது உலக புகழ் பெற்ற அந்த சிற்பங்களை நிறைய படம் எடுத்து வைத்திருந்தேன்.
சமீபத்தில் தேவாரப் பாடல் ஒன்றில் "யானையின் தோல் அழல் திகழ் மேனியில் அணிந்தவனே" என்ற வரிகள் ஹளேபீடில் கண்ட ஒரு சிற்பத்தை நினைவு படுத்தியது.
நிழல் திகழ் மழுவினை! யானையின் தோல்
அழல் திகழ் மேனியில் அணிந்தவனே!
கழல் திகழ் சிலம்பு ஒலி அலம்ப, நல்ல
முழவொடும் அருநடம் முயற்றினனே!
முடிமேல் மதி சூடினை! முருகு அமர் பொழில் புகலி
அடியார் அவர் ஏத்து உற, அழகொடும் இருந்தவனே!
டிஜிடல் வரைவு முறையில் இது வரை எந்த சிற்பத்தையும் வரைந்ததில்லையாதலால் இதை முயற்சிக்கலாம் என்று தோன்றியது. அதன் விளைவாக வரைந்ததே கீழே உள்ள படம்.
சிற்பத்தின் அழகை அப்படியே வடிவெடுப்பது மிகவும் கடினமானதை ஒட்டி மென்பொருள் மூலம் இன்னொரு முயற்சியை கையாண்டேன். அதை சுருக்கமாக சொல்ல வேண்டுமானாலதை நகலெடுத்தல் ( Tracing technique) எனலாம்.
ADOBE, KRITA போன்ற மென்பொருட்களில் இதற்கான வசதி இருக்கிறது. நாம் எந்த படத்தை நகலெடுக்க வேண்டுமோ அதை அடிப்படை சித்திரமாக வைத்துக் கொண்டு அதன் மேல் பிரதிக்கான லேயரை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதன் மேல் நமக்கு வேண்டிய வர்ணத்தில் வரி வடிவமாக வரைந்து கொண்டு அடிச் சித்திரத்தை பின்னர் டிலீட் செய்து விட வேண்டும்.
இதற்கு மேல் விளக்க முற்பட்டால் சாதாரண வாசகர்களுக்கு குழப்பம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.
நான் நகலெடுக்க பயன்படுத்திய மென்பொருள் KRITA. பின்னர் வர்ணம் பூச Paint 3D.
கஜசம்ஹார மூர்த்திக்கு மாயவரம் அருகே உள்ள திருவழுவூரில் பிரத்யேக கோவில் உள்ளது. மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை சொடுக்கவும்.
தலைப்பு : இதே கதையை குறிப்பிட்டு சிவனைப் போற்றும் சம்பந்தரின் திருவெழுக்கூற்றிருக்கை யில் வருகின்ற வரி