Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Saturday, August 13, 2016

சித்திரமும் மவுஸ் பழக்கம்-4


சமீபத்தில் நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்டதன் பேரில் ஒரு பள்ளி மாணவர்களுக்கான கதைக்கு சித்திரம் வரைந்து கொடுத்தேன்.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதே அதன் தாத்பரியம்.

தம்பி மீது அபாண்டமாக பழி சுமத்திய அண்ணனுக்கு  அன்றே பள்ளியில் ஒரு அபாண்டமான பழி வந்து சேர்கிறது. தாயின் அன்பு போதனையால் அண்ணன் தவறை உணர்ந்து மன்னிப்பு கோருகிறான். இது தான் கதை.

இதற்கான படங்களை ஒரு காமிக் ஸ்டிரிப் வடிவத்தில் கறுப்பு வெள்ளையில் வரைந்து அனுப்பிய பிறகு அதற்கு  ஃபோட்டோ ஷாப்-பில் வர்ணம் பூசி பார்க்கலாமே என்று தோன்றியது. எனக்கு புதியது அதனால் ஆர்வம் அதிகம். அதில் பல ஜித்தர்கள் whatsapp--ல் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்.

இது வரை M S Paint-ல்  மட்டும்  கொஞ்சம் பழகியிருந்தேன். ஆனால் வித விதமான பிரஷ்கள், எளிமையான நுட்பங்கள், பல படங்களை ஒன்றாக்கி செய்யும் வித்தைகள் எல்லாவற்றையும் போட்டோ ஷாப்பில் செய்யலாம் என்று கேள்விப்பட்டு அதை ஒருவர் மூலம் என் கணினியில் தரவிறக்கம் செய்து கொண்டேன்.

முதலில் கறுப்பு வெள்ளைப் படம் :


பின்னர் இதே படத்தை பிரித்து தனித்தனி படங்களாக  ஃபோட்டோ ஷாப் மூலம்  வர்ணம் பூசினேன். அதன் விளைவு



ஓவியம் வரையத் தெரியாது  ஆனால் நல்ல வர்ண ரசனை உண்டு     என்பவர்களுக்கும் கூடவே பொறுமையும் இருப்பவர்களுக்கு  இது ஒரு நல்ல தொழில் நுட்பம். குறிப்பாக விளம்பரத்துறையில் இருப்பவர்களுக்கு இதன் தேவை அதிகம் என்று நினைக்கிறேன்.  


( click the pictures  in larger size)

எனக்கு இதில் தென்பட்ட வசதிகள் என்ன வென்றால்  சுலபமாக  வேண்டாத பகுதிகளை வெட்டி எடுப்பது, எல்லைகளை குறிப்பிட்டு அதனுள் வர்ணங்களை நிரப்புவது,  வர்ணத்தை வெவ்வேறு அடர்த்தியில் பூச முடிவது போன்ற இவ்வசதிகள் MS Paint -ல் கிடையாது. கூடவே cloning smudging  போன்ற வசதிகளும் உண்டு.

ஆனால் ஒரு கிரேயான் அல்லது வர்ண பென்சில் துணையுடன் 10 அல்லது 15 நிமிடங்களுக்குள் முடிய வேண்டிய காரியத்திற்கு மணிக்கணக்காக  மெனக் கெட வேண்டுமா என்று தோன்றுகிறது.

ஏதேனும் காரணத்தால் மூலப்பிரதி கெட்டுப் போயிருந்தால் அதை சீர்திருத்துவதற்கு இதைப் போன்ற மென்பொருட்கள் கண்டிப்பாக பயன்படும்.